நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, டிசம்பர் 24, 2023

தமிழமுதம் 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 8
ஞாயிற்றுக்கிழமை

 குறளமுதம்

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.. 32
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்  கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மா வாய் பிளந்தானை மல்லரை மாட்டிய 
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.. 8
**

கீழ்த் திசையில் வானம் வெளுத்துக் கொண்டிருக்கின்றது.. மேய்வதற்காக எருமைகளும் தொழுவத்தில் 
இருந்து புறப்பட்டு விட்டன..

கன்னியர் பலரும் நோன்பு நோற்கும் இடத்திற்குப்  போய் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களைத் தடுத்து நிறுத்தி உன்னைக் கூவி அழைப்பதற்காக இங்கே
வந்திருக்கின்றோம்..

கண்ணன் -
குதிரையாக வந்த அசுரனைப் பிளந்தவன்.. 
மல்லர்களை வீழ்த்திக் கொன்றவன்.. 
தேவாதி தேவனாகிய அவனைத் தொழுதால்
நம்முடைய குற்றங்குறைகளை ஆராய்ந்து, 
நம்மிடம் இரக்கம் கொண்டு அருள் புரிவான்..

குதூகலம் உடையவளே எழுந்திருப்பாயாக!..
**

திருப்பாசுரம்


வெள்ளநீர் பரந்து பாயும்  விரிபொழில் அரங்கந் தன்னுள்
கள்ளனார் கிடந்த வாறும்  கமலநன் முகமும் கண்டு
உள்ளமே வலியைப் போலும்ஒருவனென் றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்துன்  கள்ளத்தே கழிக்கின் றாயே!.. 895
-:  தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்
திருத்தாண்டகம்


ஓசை ஒலியெலாம்  ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம்  ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி


முந்திய முதல்நடு இறுதியு மானாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி
அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.. 8
-: மாணிக்கவாசகர் :- 
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 13 - 14


பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.. 13

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.. 14
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

நேற்று வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4:00 மணியளவில் தஞ்சை திவ்யதேச மாமணிக் கோயில்கள் மூன்றிலும்  பக்தர் வெள்ளத்திடையே பெருமாள் எழுந்தருளினார்..

சென்ற ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும்  வைபவத்தைத் தரிசிக்கும் பேறு பெற்றேன்.. 

அனைத்தும் எம்பெருமான் திருவருள்..














ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. நேற்று வைகுண்ட ஏகாதசி சமயம் குடந்தைப் பயணம்.  எனினும் ஒப்பிலியப்பனை தரிசிக்க நேரமில்லை!  மனதால் துதித்து திரும்பினோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறுமுறை வந்து தரிசனம் செய்யுங்கள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்.. ..

      நீக்கு
  2. வைகுண்ட ஏகாதசி தரிசனம் அருமை. படங்கள் மூலம் நானும் தரிசனம் செய்து கொண்டேன். பதிகம், பாசுரங்களை பாடி தரிசனம் செய்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..