நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 06, 2024

தல விருட்சம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 24  
வியாழக்கிழமை

தலவிருட்சங்கள்

உடையான் சிறப்பு ஊர்க்கும் உண்டு என்பர் ஆன்றோர்..

சைவ சமயத்  தலங்களில் விளங்குகின்ற மரங்களும் செடி கொடி புல் வகைகளும் சிறப்பு உடையவை..

நிழல் மரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்.. 

வீழி, பூளை, துளசி, எருக்கு - எனும் சிறு செடிகளும் முல்லை வகைக் கொடிகளும் 
கோரை, தர்ப்பை எனும் புற்களும் சிவ வழிபாட்டில் பேறு பெற்றவை..

தில்லை, கடம்பவனம், திருநெல்லிக்கா, திருநாவலூர், திருமாந்துறை என,
தல மரங்களின் பெயராலேயே  க்ஷேத்திரங்களும் விளங்குகின்றன..
 ..

இருப்பினும் இப்பதிவின் வழியாக திருத்தலங்களில் விளங்குகின்ற விருட்சங்களைப் பற்றி மிக மிக சுருக்கமாகக் காண்போம்..


தில்லை :
கோயில் எனப்படுகின்ற திருச்சிற்றம்பலத்தின்  (சிதம்பரம்) தலத்துக்கு உரியது..


வில்வம் (கூவிளம்) :
திரு ஐயாறு, திருப்பழனம்,
திருக்கண்டியூர் வீரட்டம், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருசக்கரப்பள்ளி,  திருக்குடந்தை கீழ்க்கோட்டம் (குடந்தை நாகேஸ்வரன் கோயில்), திருக்குடந்தைக் காரோணம் (குடந்தை வியாழ சோமேசர் திருக்கோயில்) திருநெடுங்களம் - இன்னும்,
நூற்றுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது..

அகில்
திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில்..


அத்தி :
திரு ஒற்றியூர்,   திருஆப்பாடி முதலிய திருக்கோயில்களில்  தலமரமாக விளங்குவது அத்தியாகும்..


அரசு :
திரு ஆவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம், திருஆவூர், திருஅரசிலி ,திருவியலூர், 
திருவெண்காடு, திருச்சுழியல்  முதலிய சிவத்தலங்களில் தலமரமாக அரசமரம் விளங்குகிறது..



ஆல் :
திருஅன்பில் ஆலந்துறை, 
திருப்பழுவூர், திரு ஆலம்பொழில்,  திருக்கச்சூர் ஆலக்கோயில்,
திருப்பூந்துருத்தி, திருஆலங்காடு, திருப்புள்ளமங்கை,  திருவெண்காடு,   திருக்காளத்தி , திருத்தலையாலங்காடு  முதலிய தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது..

ஆத்தி :
திருச்சிற்றேமம் (சித்தாய்மூர்)
 திருச்செங்காட்டங்குடி முதலிய திருக்கோயில்களில் ஆத்தி தலமரமாக உள்ளது.. 


சண்பகம்:
திரு தென்குடித்திட்டை (தஞ்சை) திருச்சிவபுரம், திரு இன்னம்பர் ( இன்னம்பூர்) மற்றும் சில தலங்களுக்கானது.. இந்தத் தலங்களில்  சண்பக மரம் தற்போது இல்லை என்பது வருத்தத்துக்குரியது

இலந்தை :
திருக்கீழ்வேளூர், திருநணா, திருவெண்பாக்கம்  (இக்கோயில் பூண்டி நீர்த்தேக்கத்தினுள் இருக்கின்றது) முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது..


மா :
திரு கச்சி ஏகம்பம், திரு பாமணி, திருமாந்துறை, திருநாகை -
தலங்களின் தலமரமாக விளங்குகின்றது..

இலுப்பை :
திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு) திரு கொடிமாடச் செங்குன்றூர் ( திருச்செங்கோடு)
திருக்கோயில்களில் இலுப்பை மரம் தலமரமாக உள்ளது..


எலுமிச்சை :
திருமாகறல் , திருஅன்னியூர் (பொன்னூர்)   திருக்கோயில்களில் தலமரம் எலுமிச்சை ..

கடம்பு :
திருக்கடம்பந்துறை, திருக்கடம்பூர், திருஆலவாய் (கடம்பவனம் - மதுரை) ஆகிய திருக்கோயில்கள் கடம்ப மரத்தை தலமரமாகக் கொண்டவை..


கொன்றை (ஞாழல்) :
திருப்பந்தணைநல்லூர், திரு அதிகை வீரட்டம், திருவெண்காடு, திருக்கோலக்கா, திருமணஞ்சேரி இன்னும் பல
திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது...

உத்தாலம்:
திருத்துருத்தி (குத்தாலம்) தலத்தின் தலவிருட்சம்..

சந்தனம் : ஸ்ரீ வாஞ்சியம் தலத்தின் தலவிருட்சம்..


வேம்பு : திரு புள்ளிருக்கு வேளூர் (வைத்தீசுவரன் கோயில்) தலத்தின் தலவிருட்சம்..

வன்னி : திருக்காட்டுப்பள்ளி, திரு தஞ்சபுரி (தஞ்சாவூர்) திருகருந்திட்டைக்குடி,  (கரந்தை), திருக்கோட்டூர், திருக்கொள்ளிக்காடு, திருவன்னியூர், திருமணஞ்சேரி, திருமறைக்காடு, திருஅகத்தியான்பள்ளி (அகஸ்தியம்பள்ளி) - இன்னும் பல திருக்கோயில்களில் தலமரமாக வன்னி விளங்குகிறது...

பலா
திருக்குற்றாலம் தலத்தின் தலவிருட்சம்..

பாதிரி :
திரு ஆரூர் மூலத்தானம், திருப்பாதிரிப்புலியூர் கோயில்களில் தலமரமாக விளங்குகின்றது..


நாவல்
திரு ஆனைக்கா, திரு நாவலூர் திருக்கோயில்களில் தலமரமாக விளங்குகின்றது..

மூங்கில் :
திருநெல்வேலியின் தலவிருட்சம்..


நெல்லி :
திரு நெல்லிக்கா, திரு பழையாறை - தலங்களின் தல விருட்சம்..


பனை : திருப்பனந்தாள், திருப்பனங்காட்டூர் - தலங்களின் தல விருட்சம்..


வாழை :
திருப்பைஞ்ஞீலி, திருச்சோற்றுத்துறை தலங்களின் தல விருட்சம்..


தென்னை : குரங்காடுதுறை ( திருவையாறு) தலத்தின் தல விருட்சம்..


துளசி : திருவிற்குடி (திரு ஆரூர்) தலத்தின் தலவிருட்சம்..


தர்ப்பைப்புல் : திரு நள்ளாறு தலத்தின் தலவிருட்சம்..

கோரைப்புல் : திருச்சாய்க்காடு தலத்தின் தலவிருட்சம்..

அடும்பங்கொடி


அடம்பங்கொடி : உவரித் தலத்தில் தல விருட்சம்.. இதன் கீழிருந்து தான் சுயம்பு லிங்க ஸ்வாமி தோன்றியதாக ஐதீகம்..


வெள்ளெருக்கு : திரு எருக்கத்தம்புலியூர், திருமங்கலக்குடி -
தலங்களின் தலவிருட்சம்..

இந்நாட்டுக்குள் கொள்ளையிட வந்தவர்கள், நம்மைப் பார்த்து - மண்ணக் கும்புட்றான்.. மரத்தக் கும்புட்றான்.. - என்று இழித்துப் பழித்து பேசிய பின்னும் -

சில தலங்களில் மரங்களையே மூல மூர்த்தியாக மக்கள் வணங்கி நலம் பெற்று  நிற்கின்றனர்..
 
மண்ணும் மருந்து
மரமும் மருந்து!.
இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்!.

எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி
கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி. 6/5/1
-: திருநாவுக்கரசர் :-
சில குறிப்புகள் திருப்பாடல்
 நன்றி பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. அந்தந்த தலங்களுக்குச் செல்லும்போது பார்த்து வணங்குவதுண்டே தவிர, இன்ன கோவிலுக்கு இன்னின்ன மரம் தலவிருட்சம் என்று நினைவில் நிற்பதில்லை.  நல்ல தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  2. தலவிருட்சம் பற்றிய தகவல்கள் அருமை.

    பன்னிரு திருமுறை பாடலை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. தலங்களும் தலவிருட்சங்களும் நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..