நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 09, 2024

அடும்பு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 27
ஞாயிற்றுக்கிழமை


கடம்பங்கொடி - என இணையத்தில் தேடிய போது - அது, " அடம்பங்கொடி " என்று சொல்லி விக்கி வழியாக தேவாரத் திருப்பாடலையும் கொடுத்து அருளினார் ஸ்வாமி..


எந்த ஸ்வாமி?..


எங்கள் சொந்த 
ஸ்வாமி!..
உவரி ஸ்ரீ சுயம்பு லிங்கஸ்வாமி..

அடும்பு கடற்கரையில் படந்திருக்கும் கொடித் தாவரம்..

இதன் உள்ளிருந்து தான் சுயம்புலிங்க ஸ்வாமி தோன்றினார் என்பது ஐதீகம்..

கடற்கரைக் கோயிலான இங்கு நன்னீர்க் கிணறுகள் நான்கு உள்ளன.. 

ஒரு கிணறு மட்டும் ஸ்வாமிக்கு..

நாடார் உவரி எனப்படும் இத்தலம் திருச்செந்தூர் - கன்யாகுமரி நெடுஞ்சாலையில் உள்ளது. 

திருச்செந்தூரிலிருந்து 40 கிமீ தூத்துக்குடியில் இருந்து 70 கிமீ. கன்யாகுமரியில் இருந்து 52 கிமீ திருநெல்வேலியில் இருந்து திசையன் விளை வழியாக 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது..

கோயிலின் தலைவாசலைக் கடந்து உள்ளே சென்றால் வழக்கம் போல பலிபீடம் கொடி மரம் அதிகார நந்தி..

மூலஸ்தானத்தில்  ஸ்ரீ சுயம்புலிங்க ஸ்வாமி..
திருக்கோயிலில் மூலஸ்தானத்தைத் தவிர எந்த சந்நிதியும் கிடையாது..

விநாயகருக்கான சந்நிதி கூட
 கோயிலின் வெளிப்புறம் கன்னி மூலையில் தான்..

திருக்கோயிலின் வெளியில் - வலப் புறத்தில் கன்னி விநாயகருக்கான தனிக் கோயில் உள்ளது. 

மூலஸ்தானத்திற்கு இடப்புறமாக ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் சந்நிதி.. இவள் பத்ரகாளியாகத் திகழ்கின்றாள்..

மூலஸ்தானத்தின்
வலப்புறத்தில் பின்னம் எனக் கருதப்பட்டு உயிர்ப்புடன் திகழ்கின்றவள்..

இடப்புறத்தில்
சிவணைந்த பெருமாள்..  திருக்கரத்தில் தண்டம் ஏந்தி - கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார்.

பக்கவாட்டில் தனிச் சந்நிதியில் ஸ்ரீ முன்னோடியார் பரிவாரங்களுடன்.. 

அதற்கடுத்தபடியாக வட புறத்தில் தனி மண்டபத்தில் குல தெய்வமாகிய  ஸ்ரீ மாடஸ்வாமி.. 

ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடசாமி, ஸ்ரீ இசக்கியம்மன் ஆகியோர் தத்தமது பரிவாரங்களுடன்..

இப்பொழுது மூலஸ்தானம் உடைய பெருமானுக்கு புதிதாக ராஜ கோபுரம் எழுப்புகின்ற திருப்பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது..

விநாயகர் கோயிலுக்குப் பின்புறத்தில் தேவியருடன் வன்னியடி ஸ்ரீ தர்ம சாஸ்தா... 

வைகாசி விசாகத்திலும் தைப்பூசத்திலும் திரு விழாக்கள்.. 
ஆவணி இரண்டாம் செவ்வாய் அன்று நடுப்பகலிலும் நள்ளிரவிலும் ஸ்ரீ பிரம்மசக்தி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ மாடசாமி மூவரும் கோலாகலத்துடன் அழைக்கப்படுவர்.. 

திருவீதி சுற்றி வந்து ஸ்வாமிகள் அருள் வாக்கு உரைப்பதைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்கில் கூடிக் கிடப்பர்..

கொடுநோய்க்குப் பிறகு சாமி அழைத்து பெருந்திருவிழா நடத்துதற்கு ஏகப்பட்ட இடையூறுகள்..

ஆயினும், சென்ற ஆண்டு இரண்டு நாள் தங்கி விட்டு வந்தோம்..

மார்கழியின் முப்பது நாட்களும் ஸ்வாமியின் மீது சூர்ய ஒளி படர்கின்ற தலம் இது..






அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை ஆகுமே.. 5/84/6
-: திருநாவுக்கரசர் :-


திருப்பாடலில் அடும்பு மலர் ஈசனுக்கு உரியது என்று குறிக்கின்றார் - ஸ்வாமிகள்..

கடம்பங்கொடி தேடிச் சென்ற எனக்கு - " அடம்பங்கொடி " - என்று விக்கி வழியாக 
விவரித்தருளினார் ஸ்வாமி.. 

இதன் பிறகே அடம்ப மலர் தேவாரத்தில் பயின்று வருவதைக் கண்டறிந்தேன்..

இதற்கு மேல் நான் சொல்வதற்கு என்ன இருக்கின்றது!..

அட்ட மாமலர் சூடி அடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும்
இட்டமாக இருக்கும் இடம் ஈதே.. 5/9/4
-: திருநாவுக்கரசர் :-

கருங்கடக் களிற்றுரிக் கடவுள திடங்கயல்
நெருங்கிய நெ டும்பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம்புணர்ந்
திருங்கடல் அடைகரை இடம்வலம் புரமே.. 7/72/6
-: சுந்தரர் :-

திருமறைக்காடு மற்றும் திருவலம்புரம் இரு தலங்களும் கடற்கரைத் தலங்கள் என்பது சிந்திக்கத் தக்கது..

திருப்பாடல்கள்
 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. படங்களை ரசித்தேன். விவரங்கள் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  2. அடம்ப மாமலர் இடம் பெற்ற தேவார பாடலக்ளிய பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    உவரி கோயிலின் சிறப்புகளை பற்றி அறிந்து கொண்டேன், நன்றி.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அடம்ப மலர் கடற்கரைகளில் கண்டிருக்கிறோம். அவற்றின் தேவாரப் பாடல்களை இன்றுதான் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..