நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 12, 2024

ஒளிச்சுடர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்
இப்படியொரு பதிவினை எழுதுதற்கு எனைத் தூண்டிய ஈசனுக்கும் அன்பின் நெல்லை அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

விவரங்கள் இணையத்தில் திரட்டப்பட்டவை
 நன்றி விக்கி


ஸ்ரீ ராமானுஜர் - 
ஆதிசேஷனின் அவதாரம் என்பர்..  

சித்திரை மாதம் திருவாதிரை
வளர்பிறை, பஞ்சமி  நாளில் வியாழக்கிழமை (04.04.1017) அன்று ஸ்ரீபெரும்புதூரில் கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு மகனாக அவதரித்தார் ஸ்ரீ ராமானுஜர்.. 

திருக்கச்சி நம்பிகளின் சுயநலமற்ற தொண்டில்  மகிவுற்ற அத்திகிரி அருளாளப் பெருமான் திருக்கச்சி நம்பியிடம் உரையாடும் வழக்கம் இருந்தது...

இதன் அடிப்படையில் திருக்கச்சி நம்பிகளைக் குருவாகக் கொண்டு அவரிடம் பயின்று வந்த நேரத்தில் ராமானுஜரின் மனைவியால் வைஸ்யரான  திருக்கச்சி நம்பிகளுக்கு மதிப்புக் குறைவு ஏற்பட்டது..

வாசல் வழிநடையில் வைத்து அவருக்கு அன்னம் பாலிக்கப்பட்டதை அறிந்த ராமானுஜர் தாங்கொணா வேதனை அடைந்தார்...

பின்னொரு சமயம் பசித்து வந்த ஏழை அந்தணர்க்கு பழைய சோறும் இடவில்லை - ராமானுஜரின் மனைவி..

ராமானுஜரின் மனைவியான தஞ்சம்மாள் அக் காலத்தில் நிலவிய ஆச்சார விதிகளைப் பின்பற்றியவர்.. 

இவரால் மற்றொரு சமயம்
வைணவரான பெரிய நம்பிகளின் மனைவிக்கும்  மனக்குறை ஏற்பட்டது..

பெரிய நம்பிகளிடம் -  உபதேசம் பெற்று வந்த நிலையில் ஒருநாள் ராமானுஜர் ஸ்ரீ பெரும்புதூர் சென்றிருந்தார்..

அப்போது பெரிய நம்பிகளின் மனைவியிடத்தில் ராமானுஜரின் மனைவி பேதமுற நடந்து கொண்டதைத்  தொடர்ந்து
பெரிய நம்பிகளும் அவர் மனைவியும் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.. 

ராமானுஜருக்கும் அவருடைய மனைவிக்கும் மாறுபட்ட கருத்துகள்.. இப்படியான இல்லறம் தனது வாழ்க்கை நோக்கத்தில் குறுக்கிடுவதை உணர்ந்த ராமானுஜர் தனது மனையாளை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டு இல்லறத்தைத் துறந்து சன்னியாசியானார்..

திருக்கோஷ்டியூர் நம்பி அவர்களைக் குருவாகக் கொண்டு அவரிடம் மந்திர உபதேசம் பெறுவதற்கு பலமுறை முயன்றார்..

ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்ததன் பலன் பதினெட்டாவது சந்திப்பில் கிடைத்தது. 

கடும் அலைக்கழிப்புக்குப் பின், இந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது என்ற நிபந்தனையுடன் எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜருக்கு
உபதேசித்தார் திருக்கோஷ்டியூர் நம்பி..

உபதேசம் பெற்ற மந்திரத்தினால்  - தான் மட்டும்  வைகுந்தம் செல்வது முறையல்ல..  - என்று எண்ணிய ராமானுஜர், குருவுக்குக் கொடுத்த வாக்கினை மீறி, 

தான் நரகம் சென்றாலும் -  மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்ல வேண்டும்.. அனைவரும் அந்தப் பேற்றினைப் பெற வேண்டும்  - என்று ஆசை கொண்டார்..

திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின் மீதேறி நின்றார்.. 

மக்கள் அனைவரும் கேட்கும்படிக்கு,
ஓம் நமோ நாராயணாய!..
என்று  உரத்த குரலில் கூவியருளிய பெருந்தகை ஸ்ரீ ராமானுஜர்...

வைணவத்தில் ஜாதி பேதம் எதுவும் இல்லை எனச் சொல்லி, தாழ்ந்த குலத்தினர் என்று அக்காலத்தில் சொல்லப்பட்டவர்களின் தோள் மீது கை போட்டுக் கொண்டு, வீதியில் நடந்து வந்திருக்கின்றார் ..
 
இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு சோழநாட்டின் அரியணை ஏறிய குலோத்துங்க சோழன் (1070 - 1122) ஸ்ரீராமானுஜருக்கு பல தொல்லைகள் கொடுத்தான்..இவனே  கிருமி கண்ட சோழன் என்கின்றனர்..

இதனால், ஸ்ரீ ராமானுஜர், தமிழ்நாட்டை விட்டு கர்நாடக தேசத்தின் மேல்கோட்டை கிராமத்திற்குச் சென்றார்..

இங்கே, பன்னிரண்டு வருடம்  இருந்துள்ளார்..

அவரது முயற்சியால் மண்ணில் புதையுண்டிருந்த   செலுவ நாராயணர் (செல்வ நாராயணர்) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விஷ்ணு வர்த்தன்  உதவியுடன் புனர் நிர்மாணம் செய்து “திருநாராயணபுரம் ” - என அழைக்கும்படி அருளினார்..

அச்சமயம் தொலைந்து விட்டதாக சொல்லப்பட்ட இக்கோயிலின் உற்சவ மூர்த்தி,

டெல்லியை ஆண்டு வந்த முகலாய மன்னனின் அரண்மனையில் இருப்பது தெரிந்து அங்கு சென்று பார்க்க, 

பெருமாள் விக்ரகத்துடன்  இளவரசி  விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வருகின்றது..

ஸ்ரீ ராமானுஜர் அந்தப் பெண்னிடம் பெருமாளைத் தரும்படி கேட்க அவள் மறுத்து விடுகின்றாள்..


ஸ்ரீ ராமானுஜர் பெருமாளைப் பார்த்து, “ செல்லப்பிள்ளை வா.. " - என்றழைக்க பெருமாளும், கொலுசு ஒலிக்க நடந்து ராமானுஜரிடம் வந்ததாக சொல்லப்படுகிறது.

பெருமாளைப் பிரிந்து இருக்க முடியாத இளவரசியும்  சில மாதங்களில் மேலக் கோட்டைக்கு வந்து விட்டதகவும்  அதன் பின்னர் அவள் ' துலுக்க நாச்சியார் '  என்று அழைக்கப்பட்டு இங்கேயே ஐக்கியமாகி விட்டாள்.. 

ஸ்ரீ செல்வ நாராயணர்
மேலக்கோட்டை 
திருநாராயண புர ஆலயத்தில் மூலவர்  திருநாராயணன், சங்க சக்ர, கதை,  தாங்கியபடி   நின்ற திருக்கோலம், 
மேற்கே திருமுக மண்டலம்.. ஸ்ரீ பாத பீடத்தில் பீபீ நாச்சியார் (வெள்ளி கவசத்துடன்)..

உற்சவ மூர்த்தியான செல்லப் பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து  ஸ்ரீ ராமானுஜர் மீட்டுக் கொண்டு வரும்போது -  வழியில் எதிர்ப்பட்ட கொள்ளையர் கூட்டத்திடம் , இப்பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் ஸ்ரீ ராமானுஜரையும் காத்து நின்றனர்.. 

இதற்கு நன்றி நவிலும் வண்ணம் ஸ்ரீ ராமானுஜரின் ஆணைக்கிணங்க, இன்றும் தேர்த்திருவிழாவிற்கு அடுத்த  மூன்று நாட்கள்  “ திருக்குலத்தார் உற்சவம் ” - என, வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது..
 
திருநாராயணபுரத்தில், ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் வந்த புண்ணியர் ஸ்ரீ ராமானுஜர்.. 


தாழ்த்தப்பட்ட  மக்களிடம் இரக்கம் கொண்டு அவர்களைத் ' திருக்குலத்தார் ' என்றழைத்த பண்பாளர்..

மக்களிடம் பேரன்பு கொண்டு நிகழ்த்தப்பட்ட மெய்யான புரட்சி இதுவே..

ஸ்ரீ ராமானுஜர் திருவேங்கடவனின் தரிசனத்திற்கு வந்தபோது
திருப்பதியில் ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயில் (1130)  கட்டப்பட்டது..

ஸ்ரீ ராமானுஜர் திருமலையின் புனிதம் கருதி பாதம் பதித்து நடக்காமல் தவழ்ந்தே மலையேறினார். 

வழியில்  செங்குத்தான
ஓரிடத்தில் அவருடைய முழங்கால் முறிந்தது. அந்த இடமே முழங்கால் முறிச்சான்..

இந்த இடத்தில் ஸ்ரீ
 ராமானுஜருக்கு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது..

ஸ்ரீ ராமானுஜர் திருமலைக் கோயிலின் பூஜைகளில் சடங்கு சம்பிரதாயங்களைச்  செய்துள்ளார்.  

ஸ்ரீ ராமானுஜர் ஏற்படுத்திய நடைமுறைகள் இன்றளவும் திருமலைக் கோயிலில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன..

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீரங்கத் திருத்தலத்தில்  இருந்தபோது ஸ்ரீ ரங்கநாதர் கோயிலின்  பூஜைமுறைகளில்  செய்த சீர்திருத்தங்களே  இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றன..

திருமாலிருஞ்சோலையில் நூறு தடா அக்கார அடிசிலும் நூறு தடா வெண்ணெயும் அமுது செய்வித்ததனால்  சூடிக்கொடுத்த சுடர்க் கொடியாளின் திருவாயால் அண்ணா!.. - என அழைக்கப்பட்டவர்.. 


தமது நூற்று இருபதாம் வயதில் திருநாடு எய்தினார்..

நின்றவண் கீர்த்தியும் நீள்புனலும் நிறை வேங்கடப்பொற்
குன்றமும் வைகுந்த நாடும் குலவிய பாற்கடலும்
உன்றனக்கு எத்தனை இன்பந்தரும் உன் இணை மலர்த் தாள்
என்றனக்கும் அது  இராமாநுச இவை ஈந்தருளே.. 76
 -: ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி :-
 (நன்றி திவ்யப்ரபந்தம்)

ஸ்ரீமதே ராமானுஜாய நம:

ஓம் நமோ நாராயணாய
***

6 கருத்துகள்:

  1. இந்தக் காலத்திலும் தீண்டாமைக் கொடுமைகளும், சாதி வித்தியாசங்களும் பார்க்கப் படுகின்றன. ராமானுஜர் இருந்திருந்தால் என்ன சொல்வாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்ல் முடியும்?.. காலம் விட்ட வழி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஸ்ரீ ராமானுஜரின் வரலாறும், படங்களும் மிக அருமை.
    ஸ்ரீராமானுஜர் வகுத்து கொடுத்த பூஜை முறைகள் தான் கடைபிடிக்க படுகிறது காலம் காலமாக.
    ராமானுஜர் திருவடிகளுக்கு வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராமானுஜர் திருவடிகளுக்கு வணக்கம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  3. அருமையான பதிவை இன்று கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு வணக்கம்..

      ஸ்ரீ ராமானுஜர் திருவடி போற்றி..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..