இன்று மாசி மகம்...
திருக்குடந்தை மாநகரின் திருக்கோயில்கள்
கோலாகலம் கொள்ளும் நாள்...
சென்ற மகாமகத் தரிசனத்தின் போது
எழுதிய பதிவு மீண்டும் இன்று..
***
நேற்று வியாழக்கிழமை (18/02)..
விடியற்காலையில் துயிலெழுந்து, நீராடி -
திருவிளக்கேற்றி வணங்கியபின் -
மகாமகத் திருக்குளத்தை நோக்கி முதலடி எடுத்து வைத்தோம்..
என் மகனுடன் நானும் என்மனைவியும்..
நெடுஞ்சாலைக்கு வந்து சேர்ந்த சிறுபொழுதில் -
கும்பகோணம் செல்லும் பேருந்து..
கூட்டம் அதிகமில்லை.. ஆயினும், அமர்வதற்கு இடமில்லை..
சிலர் நின்று கொண்டே பயணிக்க - எனக்கு கடைசி இருக்கையில் இடம் கிடைத்தது..
எங்களுக்கு சந்தேகம்.. இந்தப் பேருந்து குடந்தை நகருக்குள் செல்லுமா?..
நடத்துனர் கூறினார் - அங்கே சென்றால் தான் தெரியும்!..
தாராசுரத்தைக் கடந்ததும் - புறவழிச்சாலையில் திருப்பி விடப்பட்ட பேருந்து - மேலக்காவிரி வழியாக பாலக்கரையைக் கடந்து மருத்துவமனை சாலையில் சென்று நான்கு சாலை சந்திப்பு வழியாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது..
அந்த இளங்காலைப் பொழுதில் - அங்கிருந்து நடந்து மகாமகத் திருக்குளத்தின் கீழ்க்கரையை அடைந்தோம்..
ஆரவாரமான மகிழ்ச்சி ததும்பிய முகங்களே எங்கெங்கும்..
மழலையர் முதல் முதியோர் வரை மாமாங்கம் காண்பதற்கு வந்திருந்த கோலாகலம்..
குளக்கரையில் புராதனமான அரச மரத்தடி விநாயகர் திருக்கோயில்..
அருள்தரும் ஐங்கரனை வலம் வந்து பணிந்தோம்..
நல்லபடியாக மகாமகத் தீர்த்தமாடி - இறைவழிபாடு செய்திட துணையாய் வருக!.. - என வேண்டிக் கொண்டு,
மகாமகத் திருக்குளத்தின் படிக்கட்டுகளில் இறங்கினோம்..
கடைசி படிக்கட்டில் நின்றபடி தீர்த்தத்தைத் தொட்டு வணங்கி -
கண்களில் ஒற்றிக் கொண்டு திருக்குளத்தின் நீரினுள் இறங்கினோம்..
என்ன ஒரு ஆனந்தம்.. பரவசம்!..
விவரிக்க வார்த்தைகளில்லை!.. வார்த்தைகளே இல்லை!..
ஸ்ரீ அபிமுகேசர் திருக்கோயில்
|
திருக்குளத்தின் கீழ் கரையிலிருந்து எதிர் கரை..
|
எண்திசைகளையும் கைகூப்பி வணங்கிய பின் - தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து அர்க்கியம் வழங்கினோம்..
திருக்குளத்தினுள் அவ்வளவாக கூட்டமில்லை..
பரவலாக - முழங்கால் அளவுக்கு நீர் மட்டம் இருந்தது..
ஆயினும், சுற்றிலும் மக்கள் திரள்..
திருக்குளத்தினுள் - கீழக்கரையில் உள்ள தீர்த்தக் கிணறுகளில் நீர் தெளிப்பான்கள் (Sprinkler) பொருத்தப்பட்டுள்ளன..
பத்தடி உயரத்தில் இருந்து சுற்றிலும் நீர் பீய்ச்சியடிக்கப்படுகின்றது..
தலைக்கு மேல் - நீர் தூறலால் மக்களுக்கு உற்சாகம்..
ஆனாலும், தீர்த்தக்கிணறுகளில் நீர் எடுப்பதற்கு முட்டிக் கொள்கின்றார்கள்.. மோதிக் கொள்கிறார்கள்..
வளர் இளம் பிள்ளைகளும் வயோதிகப் பெருமக்களும் நிறைந்திருக்கும் இடத்திலும் முரட்டுத் தனமான செயல்பாடுகள்..
அந்த வகையில் இரண்டு கால் மிருகம் ஒன்றினை நேரில் கண்டேன்..
அதனையெல்லாம் தவிர்த்து விட்டு நமக்கான குறிக்கோளினை எய்துவதே நலம்.. என, அடுத்தடுத்த தீர்த்தக்கிணறுகளில் நீராடி முடித்தோம்..
திருக்குளத்தின் மேல்கரையில் நின்றபடி - திருநீறு தரித்து மீண்டும் வணங்கி கரையேறினோம்..
இவ்வண்ணமாக - மீண்டுமொரு மகாமகம் காண்பதற்கு,
எல்லாம் வல்ல எம்பெருமான் நல்லருள் நல்குவானாக!..
கரையேறிய மக்கள் அனைவரும் வடக்குப் புறமாக திருப்பி விடப்பட்டனர்..
இதனால் - ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலின் முன் கடும் நெரிசல்...
கூட்டத்தைத் தவிர்த்து - வட புரமாக சுற்றியபடி மீண்டும் மகாமகத் திருக்குளத்தின் கீழ்க்கரைக்கு வந்து ஸ்ரீஅமிர்தவல்லி உடனாகிய அபிமுகேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம் செய்தோம்..
பின் அங்கிருந்து வந்தவழியே திரும்பி நடைபயணம்..
அடுத்து - பாதாள காளியம்மன் தரிசனம்..
அருகில் ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்.. திருக்கோயிலுக்குள் செல்ல இயலவில்லை.. கோபுர தரிசனம் மட்டுமே..
அடுத்து - உச்சிப் பிள்ளையார் தரிசனம்..
அங்கெல்லாம் நெரிசல் தான்..
அருகிலுள்ள உணவகத்தில் காலைச் சிற்றுண்டி..
ஸ்ரீ சார்ங்கபாணி திருக்கோயில்
|
ஆராவமுதன் ஸ்ரீ சார்ங்கபாணியின் திருக்கோயில்..
திருக்கோயிலின் தேர் திருவிழாவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தது..
பல்லக்கில் அன்னை மகாலக்ஷ்மி வீதி வலம் எழுந்தருளியிருந்தாள்..
அன்னையைத் தரிசனம் செய்தபடி - திருக்கோயிலினுள் புகுந்து பெருமாள் தரிசனம்..
மக்களை வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தனர்..
சற்று தாமதம் ஆனாலும் நெரிசல் நெருக்கடி ஏதுமில்லை..
அடுத்து, ஸ்ரீதேனார்மொழியாள் சோமசுந்தரி உடனாகிய சோமேஸ்வரர் திருக்கோயிலில் தரிசனம்..
ஸ்ரீ வியாழ சோமேசர் திருக்கோயில்
|
ஸ்ரீ சோமேசர் கோயிலில் இருந்து பெருமாள் ராஜகோபுரம்
|
சோமேசர் திருக்கோயிலின் பின்புறம் பொற்றாமரைக் குளம்..
அகலம் குறைவான படித்துறையில் மக்கள் நெரிசல்..
பாதுகாப்புப் பணியிலிருக்கும் காவலர்கள் பலமுறை சொன்னாலும் மக்கள் கேட்பதாக இல்லை..
பொற்றாமரைக் குளத்தில் மூழ்கிக் குளித்து விட்டு - கரையேறி,
ஸ்ரீ மங்களாம்பிகை உடனாகிய ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயிலினுள் நுழைந்தோம்..
ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்
|
மிகுந்த ஜனத்திரள்.. ஆனாலும், இனிமையான மகிழ்ச்சியான தரிசனம்..
கும்பேஸ்வரர் திருக்கோயிலில் சற்று நேரம் ஓய்வெடுத்த பின் அடுத்து சென்ற திருக்கோயில் -
ஸ்ரீ சரநாராயணப்பெருமாள் திருக்கோயில்..
பெருமாளின் தசாவதாரங்களும் திகழ்கின்றன இந்தத் திருக்கோயிலில்..
இந்தத்திருக்கோயிலில் இப்போதுதான் தரிசனம் செய்கின்றேன்..
பரபரப்பான கடைதெருவில் ஸ்ரீ சக்ர படித்துறையை நோக்கி நடந்தோம்..
அப்போது, மாலை 3.30..
வழியில் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில்..
கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது
திரும்பி வ்ரும்போது தரிசிக்கலாம் என்று - ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயிலைக் கடந்து -
கங்கையினும் புனிதமாய காவிரிக்கரையை நோக்கிச் சென்றோம்..
ஸ்ரீ சாரங்கபாணியும் ஸ்ரீ சக்ரபணியும் தீர்த்தவாரி நிகழ்த்தும் -
ஸ்ரீ சக்ர படித்துறையில் நீராடி அர்க்கியம் வழங்கினோம்...
குறுகலான படித்துறை.. ஆதலால் ஓரளவுக்கு நெரிசல்..
திருவிழாவின் முதல் நாளில் மகாமகக் குளக்கரையில் ஏற்பட்ட சிறு பிரச்னையால் -
அங்கேயும், பொற்றாமரைக் குளக்கரையிலும் சக்ரப் படித்துறையிலும் பெண்கள் உடை மாற்றுவதற்காக மறைவிடங்கள் அமைக்கப்பட்டு அங்கெல்லாம் பெண் காவலர்கள் பணியில் இருந்தார்கள்..
காவிரியில் நீராடிய பின் -
ஸ்ரீ சுதர்சனவல்லி ஸ்ரீ விஜயவல்லி சமேத ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயிலில் தரிசனம்..
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில்
|
பெருமாள் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்..
பெருமாளின் பின்புறமுள்ளது அறுகோண சக்கரம்!..
சிறப்பான அலங்காரத்தில் கண் நிறைந்த தரிசனம்..
திருவிழா ஆரவாரங்கள் ஓய்ந்தபின் இன்னொருமுறை தரிசிக்க வேண்டும்..
இத்தனை காலம் - இத்திருக்கோயிலைத் தரிசிக்க இயலாததை நினைத்து வருந்தினேன்..
மாடக்கோயில். கட்டுமலையின் மீதிருக்கின்றது சந்நிதி..
ஸ்ரீ சார்ங்கபாணியின் திருக்கோயிலைப் போலவே - தக்ஷிணாயன, உத்ராயண வாசல்கள்..
ஸ்ரீசக்ரபாணியின் சந்நிதிக்கு வடபுறமாக தனி சந்நிதியில் -
தாயார் ஸ்ரீ விஜயவல்லி!..
காலகாலமாக மூடிக் கிடந்ததால் மண்மேடாகிப் போனது கிழக்கு வாசல்..
அதனால் - சந்நிதித் தெரு ஐந்தடி அளவிற்கு உயர்ந்திருக்கின்றது..
சமீபத்தில் நடந்த குடமுழுக்கின் தொடர்பாக கிழக்கு வாசல் மீண்டும் திறக்கப்பட்டு மண் மேடு அகற்றப்பட்டுள்ளது..
உயரமான தெருவிலிருந்து - திருக்கோயிலுக்குள் சரிவாக புதிய பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றார்கள்..
ஸ்ரீ சக்ரபாணி திருக்கோயில் தரிசனத்திற்குப் பின் -
அதே தெருவில் திரும்பி வந்தபோது மணி 4.30..
அப்பொழுதும் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமியின் திருக்கோயில் நடை அடைத்துக் கிடந்தது..
அருகிலிருந்த கடையில் விசாரித்தபோது - கோயில் திறப்பதற்கு ஐந்தரை மணியாகும் என்றார்..
ஊரெல்லாம் கோயில்கள் திறந்திருக்க - இந்தக் கோயில் மட்டும் அடைத்துக் கிடந்தது..
அடுத்த தரிசனம்..
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்..
தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக விளங்கிய
ஸ்ரீ கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் கட்டப்பெற்றது - குடந்தை ஸ்ரீராமஸ்வாமி திருக்கோயில்..
ஸ்ரீ ராமஸ்வாமி திருக்கோயில்
|
திருக்கோயிலின் முன் மண்டபத்திலுள்ள சிற்பங்கள் மிகச் சிறப்பானவை..
சீரும் சிறப்பும் மிக்க ஸ்ரீ ராம பிரானின் தரிசனம் கண்டு
கொடி மரத்தின் அருகில் விழுந்து வணங்கிய வேளையில் -
மாலைப் பொழுது மயங்கிக் கொண்டிருந்தது..
தஞ்சைக்கு திரும்ப வேண்டும்..
ஒரு சில இடத்தில் அருந்திய (Filter) காபி மட்டும் தான்!..
மதிய உணவு உண்ணவில்லை..
செருப்பில்லாமல் நடந்ததால் கால்கள் மட்டும் சற்று வலித்தன..
தஞ்சை செல்லும் பேருந்து இவ்வழியே வருமா?.. - என்ற சிந்தனையுடன் நடந்தபோது -
தஞ்சைக்கு செல்லும் நகரப்பேருந்து வந்து கொண்டிருந்தது..
மகாமக நெரிசலிலும் - அந்தப் பேருந்தினுள் அமர்ந்து கொள்ள இடம் கிடைத்தது..
முன்னிரவுப் பொழுதில் நல்லபடியாக இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம்..
இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படங்கள் அனைத்தும் எனது கைவண்ணம்..
இன்னும் எடுத்திருக்கலாம்..
கூட்ட நெரிசலான இடங்களில் ஆண்களும் பெண்களுமாய்...
வீண் பிரச்னைகள் - தேடிவரக்கூடும்..
மீண்டும் ஒரு நல்லதொரு பொழுது.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்..
இன்னருள் புரிந்தனன் எம்பெருமான்..
அவ்வண்ணமே அனைவருக்கும் ஆகுக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***
மீண்டும் படித்து தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
அருமை ஐயா...
பதிலளிநீக்குகோவில் தரிசனங்கள் பெற்றோம்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமகா மகம் தரிசனம் அருமை.
பதிலளிநீக்குஅனைத்து கோவில்களையும் நானும் தரிசனம் செய்தேன்.
நன்றி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குமிக அருமையான தரிசன நிகழ்வுகளைக் கண்ணெதிரே படத்திலும் விளக்கமாகவும் கொடுத்திருக்கிறீர்கள். இதில் சோமேஸ்வரர் கோயிலுக்கும் அபிமுக்தேஸ்வரர் கோயிலுக்கும் போனதில்லை, மற்றக் கோயில்கள் அடிக்கடி பார்த்தவையே. ராமசாமி கோயிலின் பிரகாரங்களின் ஓவியங்களை ஒரு முறை படங்களாக எடுக்க வாய்ப்புக் கிடைத்தது. நல்லதொரு பதிவு. விரைவில் திருக்கயிலை செல்லும் வாய்ப்பும் கிட்டட்டும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஎன்னுள்ளும் கயிலாய தரிசனம் காண ஆபலுண்டு...
எல்லாவற்றுக்கும் அவனருளே துணை
தங்கள் வாழ்த்துரைக்கு நன்றியக்கா..
அருமை. முன்னர் படித்திருக்கிறேனா தெரியவில்லை. அண்ணனுடன் அண்ணி கண்டு மகிழ்ந்தேன். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில கோவில்களுக்கு நானும் என் குடந்தை விஜயத்தில் சென்று வந்துள்ளேன்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
ஆவ்வ்வ் துரை அண்ணன் எங்கள் புளொக்கில் சொன்னதும், இங்கு ஓடி வந்தேன், முதல் படத்தில அம்மனையும் சிவனையும் பார்த்ததும், இதைத்தான் சொல்லி என்னை ஏமாத்திப் போட்டார்ர் எனக் கவலையோடு போஸ்ட்டை முழுவதும் படிச்சேனா.. ஆஆஆஆஆஆ துரை அண்ணனும் கலா அண்ணியும்..
பதிலளிநீக்குஅதுசரி என்ன அது ஒருக்கால் இடதுபக்கம் நிற்கவிட்டு, ஒருக்கால் வலது பக்கம் நிற்கவிட்டுப் படமெடுத்திருக்கிறீங்க:)) புது ஸ்டைல் போலும் ஹா ஹா ஹா..
அன்பின் அதிரா..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நேற்றைய மாசி மகத்துக்கான போஸ்ட் மிக அழகு, கோயில் போகாவிட்டாலும் தரிசனம் கிடைச்சு மகிழ்கிறேன்.
பதிலளிநீக்குநேற்று ஊருக்குப் போன் பண்ணினேன் மாமா மாமிக்கு, அவர்கள் சொன்னார்கள்.. மாசி மகம்.. கோயிலுக்குப் போய் வந்தோம் என.
அன்பின் அதிரா..
நீக்குதங்களது மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான மகத்திரு நாள் காட்சிகள். தங்கள் மனைவியைக் கண்டதில் மிகுந்த மகிழ்ச்சி.
பதிலளிநீக்குநன்னீராடி, இத்தனை கோயில்களையும் தரிசித்தது மன நிறைவு,
சார்ங்க்பாணியின் தாயார் கோமளவல்லி தானே.
அவர் படிதாண்டாப் பத்தினி என்பார்களே.
என்ன அழகான உத்சவ மூர்த்தி. எங்கோ இருக்கும் எனக்கும் தரிசனம் கொடுத்தாளே அன்னை. நன்றி துரை.
சக்கிரபாணி கோவில் மிக அழகான அமைப்பு. மேட்டில் ஏறி இறங்கியது நினைவில் இருக்கிறது.
நீங்கள் தரிசனம் செய்த ராமசாமி கோயில் என் நெஞ்சுக்கு நெருக்கமானது.
சொல்ல முடியாத மகிழ்ச்சியை உங்கள் பதிவு கொடுத்தது.
வாழ்க நலம்.நன்றி.
தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குஅன்றைக்குக் கேட்டபோது சாரங்கபாணி கோயில் என்று அங்குள்ளவர்கள் சொன்னது நினைவில் இருக்கிறது...
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றியம்மா..
சிறப்பான தரிசனம். மீண்டும் படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்பின் வெங்கட்..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...