நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 21, 2018

மங்கல மார்கழி 06

ஓம்

தமிழமுதம்

தற்காத்துத் தற்கொண்டாள் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.. (056) 
-: :-

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 06



புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஏந்திழையீர்..
எங்கும் விடியல் வந்தது..
எழுவீராக!...

பொழுது புலர்ந்ததென்று
புள்ளினங்கள் கூவுகின்றனவே!..

கூவுகின்ற புள்ளினங்களுக்கெல்லாம்
அரசனான கருட பட்சியைத்
தனது ஆளாகக் கொண்ட
தயாபரனின் திருக்கோயில் நடைதிறக்கப்பட்டதென
வெண்சங்கு ஆர்ப்பரித்து முழங்குகின்றதே!..

அந்தப் பேரொலி
செவிகளுக்குள் ஏறவில்லையா!...

திருப்பாற்கடலில் 
துயிலாமல் துயில் கொண்டிருக்கின்ற
இந்தத் தூயவன் அல்லவோ

பூதகியின் வஞ்சனைப் பாலுடன்
அவளது உயிரையும் குடித்தவன்...

அதை அறிந்தும் அறியாத மூடனாக
மாயச் சக்கரத்தை ஏவிக் களித்திருந்த
கம்சனின் கணக்கு தவிடு பொடியாகும்படிக்குத்
அதனைத் துகளாக்கியவனும்
இவனே அல்லவோ!.....

இந்த மாயவனை அல்லவோ
ஞானியரும் யோகியரும்
நெஞ்செனும் பெருங்கோயிலில்
பூஜித்து மகிழ்கின்றனர்!..

அவர்தம் நெஞ்சகத்திலிருந்து எழும்
ஹரி ஓம்.. எனும் பெருமுழக்கம்
செவிக்குள் புகுந்திட
உள்ளம் குளிர்கின்றதே!...

அந்த ஆனந்த வெள்ளத்துள் ஆழ்ந்திட
வாரீர் தோழியரே!... 
***

தித்திக்கும் திருப்பாசுரம் 


ஸ்ரீ சௌந்தர்ராஜப் பெருமாள்
திருநாகை.. 
பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணைமேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண்வளரும் செங்கண்
அடலோத வண்ணர் அடி.. (2097)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***  

இயற்கையின் சீதனம் 

மா


நல்ல நாள் பெரிய நாள்.. என்றால் வீட்டு நிலையில்
தோரணமாகக் கட்டப்படுவது மாவிலை!..

கிராம மக்களின் வாழ்வில்
உற்ற தோழனாக தோழியாக
ஒட்டி உறவாடுவது - மா!..

அரும்பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது..
  மாந்தளிரைக் காய வைத்துப் பொடியாக்கி
பல் தேய்த்தால் பற்களின் கறையெல்லாம் காணாமல் போய்விடும்...

மாந்தளிரைப் பறித்து ரெண்டு குவளை தண்ணீரில்
கொதிக்க வைத்து வடிகட்டி வெதுவெதுப்பாக குடித்தால்
வயிற்றிலுள்ள கிருமி எல்லாம் ஒழிந்து விடும்..
ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்படும்!...


வேப்பிலையைப் போல
மா இலையும் கிருமி நாசினி..
கிருமிகளை அழிப்பதில் அதற்கு நிகர் அதுவே...

செம்புக்குள் தண்ணீர் நிரப்பி அதில் நாலு மா இலையப் போட்டு
வைத்தால் அது புண்ணிய தீர்த்தம்..

மாம்பட்டை, கருவேலம்பட்டை, ஆலம்பட்டை, கல் உப்பு
எல்லாவற்றையும் காய வைத்து இடித்துத் தூளாக்கி
சலித்து எடுத்தால் - இயற்கையான பற்பொடி...
இதற்கு நிகர் வேறு இல்லை...

காய்ந்த மாம்பூவுடன் வேப்பம் பூவையும் உலர்த்தி
மழைக் காலத்தில தணலில் சாம்பிராணி மாதிரி தூபம் போட்டால் கொசுக்கள் எல்லாம் தொலைந்தே போகும்....

மாம்பூ ரசம் வயிற்றுப் போக்கை நிறுத்தும்...
மாம்பூவைக் கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால்
பல்வலி, வாய் நாற்றம் போகும்...

அந்த காலத்தில் மனைப்பலகை, நாற்காலி, கட்டில் எல்லாம் பெரும்பாலும் மாம்பலகையில் தான் செய்யப்படும்...
காரணம் - உடம்புக்குக் குளிர்ச்சியைத் தரும்..
உடல் குளிர்ந்திருந்தால்
மனதிற்கு அமைதி.. நமக்கு லாபம்..

நமது நாட்டுக்கு உரியது - மா...
அதுவும் தமிழகத்துக்கே உரியது...

ஆங்கிலத்தில் மா மரத்துக்குப் பெயர் கிடையாது...
அதனால் மாங்காய்.. என்பதை மேங்கோ.. என்று ஏற்றுகொள்ள
அரபியோ அப்படியே மாங்கா... என ஏற்றுக் கொண்டது..

அந்தக் காலத்தில் மாந்தோப்புக்குள் 
வீடு கட்டி நோய் நொடியின்றி வாழ்ந்தார்கள்...

ஆனால்,
இன்றைக்கு வெட்டவெளிகளில்
வீட்டைக் கட்டிக் கொண்டு
மருத்துவமனைகளில்
காலங்கழிக்கின்றார்கள்...
*** *** ***

சிவ தரிசனம்
திரு நாகப்பட்டினம்


இறைவன் - ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ நீலாயதாக்ஷி

தல விருட்சம் - மா 
தீர்த்தம் - புண்டரீக தீர்த்தம்..

அகத்திய மாமுனிவருக்கு
திருமணக் காட்சி நல்கிய
திருத்தலங்களுள் இதுவும் ஒன்று..

ஸ்ரீ முசுகுந்த சக்ரவர்த்தி பிரதிஷ்டை செய்த
சப்த விடங்கத் தலம்..
சுந்தர விடங்கர்..

சிவராத்திரியின் நான்காம் காலத்தில்
நாகராஜன் இங்கே வழிபட்டு
வழிபட்டு சாபம் நீங்கினன்...

கடலில் கிடைத்த தங்க மீனை
ஈசனுக்கு என்று அர்ப்பணித்த
அதிபத்த நாயனார் வாழ்ந்த திருத்தலம்...

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்
இங்கே திருப்பதிகம் பாடி
பொன் முத்து முதலான அணிமணிகள்
பட்டு வஸ்திரங்கள்
வெள்ளைக் குதிரை ஆகியவைகளை
ஈசனிடமிருந்து பெற்றனர்...
***    

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்


ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகை 

வெம்பனைக் கருங்கை யானை வெருவ அன்றுரிவை போர்த்த
கம்பனைக் காலாற் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும்
உம்பனை உம்பர் கோனை நாகைக் காரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ண நாமுய்ந்த வாறே.. (4/71)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 06



பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்துஎம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

14 கருத்துகள்:

  1. காலை வணக்கம். இதோ... தமிழில் மூழ்கி வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. இவ்வளவு பயன்கள் இருப்பதால்தான் அது மா இலையோ!

    பதிலளிநீக்கு
  3. ஹரி, சிவன் இருவருமே இன்று நாகையிலிருந்தா? நம்ம கேஜிஜி ஊர்!

    பதிலளிநீக்கு
  4. மாவிலையின் சிறப்புக்களோடும், கேஷவின் ஓவியத்தோடும் விஷ்ணு, சிவன் தரிசனம்! திருநாகைக்காரோணத்தில் இருந்து. அழகுத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மாவிலையைச் சர்க்கரை நோய்க்குக் கஷாயம் வைத்துக் குடித்திருக்கோம். பின்னர் மரங்கள் அக்கம்பக்கம் கட்டிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களின் சிமென்ட், கல், ஜல்லி போன்றவற்றால் பாழ்பட்டுப் பட்டுப் போய்விட்டன. மூன்று மரங்கள்! :(

    பதிலளிநீக்கு
  6. மா இலையின் பயன்கள் சிறப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  7. தமிழமுதம், அருளமுதம் எல்லாமே அருமை என்றால் மாவிலைச் சிறப்பும் பயன்களும் அறிந்தோம் அண்ணா..

    மாந்தளிர், வேப்பந்தளிர் இரண்டுமே சர்க்கரை நோய்க்காக சாப்பிட்டதுண்டு. ஆனால் பல ஊர்கள், வீடுகள் என்று மாறியதில் கிடைக்காமல் விட்டுப் போச்சு...தொடர முடியாமல். அப்புறம் சென்னையில் மாமியார் வீட்டில் இந்த இரு மரங்களும் உண்டு என்பதால் சாப்பிட்டதுண்டு. இப்போ பங்களூர்.....அருகில் மரங்கள் இருந்தாலும் வேம்பு, மா இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் அற்புதம், மாவிலையின் பயன்கள் அருமை.
    நாகைக்கரோணம் தரிசனம் செய்து 1ஒ வருடம் ஆகிறது.
    இன்று மீண்டும் தரிசனம் நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மா பற்றிய விளக்கம் அருமை ஜி
    அரபியில் மாம்பழத்தை அம்பா என்றும் சொல்வார்கள் ஜி.

    பதிலளிநீக்கு
  10. அருமையான பாடல்களைக் கண்டேன். மனம் நிறைவுற்றேன். எங்கள் பிளாக் தளத்தில் தங்களின் பதிவினைக் கண்டேன். உங்களுக்கு என்றும் இறைவன் துணை நிற்பான். உங்கள் எழுத்தும் துணை நிற்கும். நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
  11. ஆண்டாள் கைவிடமாட்டாள்.

    கைவிட மாட்டான் கனக சபேசன்... காத்திருப்பான்... கண்ணால் பார்த்திருப்பான்.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக் தளத்தில் சொன்னதை படித்து மனம் வேதனை பட்டது.
    மனதை தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் இறையருள் காக்கும் உங்களை.

    நாளை பொழுது நல்ல பொழுதாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான தரிசனம் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..