நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 16, 2014

திருவேதிகுடி - 1

திருமண வரம் அருளும் திருத்தலம்.

இறைவன்  - ஸ்ரீவேதபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்கையர்க்கரசி
தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் -  வேத தீர்த்தம்

வேதி - பிரம்மன். பிரம்மன் பூசித்த தலம். ஆதலின் வேதிகுடி என்ற திருப்பெயர். பின்னும் வேதங்கள் ஒருங்கு கூடி வழிபட்டதனாலும் வேதிகுடி கூறுவர்.

பலகாலமாக உள்ளன்புடன் தன்னை வழிபட்ட அன்பர் ஒருவரின் பொருட்டு வாழை மடுவில் ஸ்வாமி  சுயம்புவாக வெளிப்பட்டருளினார்.

அத்தன்மையால் - வாழைமடு நாதர்  என்றும் திருப்பெயர்.

ராஜகோபுரத்திற்கு வெளியே தனியானதொரு திருமண்டபத்தில் கம்பீரமாக ஸ்ரீநந்தியம்பெருமான் விளங்குகின்றனர்.

அம்பிகை ஸ்ரீமங்கையர்க்கரசியின் திருச்சந்நிதி, திருக்கோயிலுக்கு முன்பாக - வெளியில் வலப்புறம் அமைந்துள்ளது. 

சர்வ மங்கலங்களுக்கும் காரணியாகிய அம்பிகைக்கு - ஆடி, தை மாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழும்.  சந்தனக் காப்பு அலங்காரத்தில்  விளங்குவாள்.

மகாமண்டபத்தில் உள்ள வலம்புரி விநாயகர் - வேதவிநாயகர் எனப்படுகிறார்.

இறைவன் அருளிச் செய்யும் நான்கு வேதங்களையும் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் அற்புதமாகக் காட்சித் தருகிறார்.


இருபுறமும் சிவலிங்கங்களுடன் விளங்கும் - மூலஸ்தானத்தின் உள்ளே -

நானிருக்கக் கவலை ஏன்!.. 

- என்பது போல,  தேஜோமயமாகத் திகழ்கின்றார் - ஸ்ரீ வேதபுரீஸ்வரர்.

வருடந்தோறும் பங்குனி மாதம்  13,14,15 - ஆகிய மூன்று நாட்களில் சூரிய பூஜை நிகழும் திருத்தலம் - திருவேதிகுடி.

காலைக் கதிரவன் - தன் இளங்கதிர்களால் மூலஸ்தானத்தில் அருட்பெருஞ் சோதியாக விளங்கும் ஐயனின் திருப்பாதக் கமலங்களை வணங்கி மகிழ்கின்றான். 

ஞானசம்பந்தப் பெருமானும் , திருநாவுக்கரசரும் தரிசித்த திருத்தலம்.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகத்தின் ஏழாவது  திருப்பாடல் -   மகத்தான பாடலாகும்.

உன்னிஇரு போதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்கஅருளித்
துன்னியொரு நால்வருடன் ஆல்நிழல்  இருந்த துணைவன் தன்இடமாம்
கன்னியரொடு  ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலம்மிக
மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையர்இயற்றுபதி வேதிகுடியே.  (3/78/7)

இந்தத் திருப்பாடலை - திருமண வயதினர் -  நாளும் பாராயணம் செய்ய, திருமணம் விரைவில் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

திருப்பதிகத்தின் பயன் கூறும் போது -

திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் திருவடித் தாமரைகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்ந்து எல்லா மங்கலங்களையும் எய்தி - மறுமையில் இந்திரலோகத்தில் இருந்து அரசாள்வர். ஆணை நமதே!..

- என்று அருள்கின்றனர். 

ஞானசம்பந்தப்பெருமான் ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று.

நான்முகன் இத்திருத்தலத்தில் பெருமானைப் போற்றி வணங்கியதை,

செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு வேதிகுடி {4/90/3} 

- என்று குறிப்பிட்டு அருள்கின்றார் - திருநாவுக்கரசர்.  

திருச்சுற்றில் ஸ்ரீலட்சுமி நாராயணர் சந்நிதி உள்ளது. அருகிலேயே வணங்கிய கோலத்தில் ஸ்ரீஆஞ்சநேயர். 

மேலும், நூற்றெட்டு லிங்கங்களுடன் சப்தஸ்தான லிங்கங்களும்  தக்ஷிணா மூர்த்தி, சுப்ரமணியர், துர்க்கை, மகாலக்ஷ்மி, நடராஜர் - திருமேனிகளும் திகழ்கின்றன. 

திருக்கோஷ்டத்தில்  - 

வலப்புறம் அம்பிகை. இடப்புறம் ஈசன். 

பின்புலத்தில் ரிஷபம்!.. அபூர்வத் திருக்கோலம். 

 அழகான அர்த்தநாரீஸ்வர திருமேனி!.. 

அந்த சிற்பத்தின் அழகைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் - 

அதைச் சிதைத்த கொடூரம் தான் என்னே!..

குறிப்பதற்கு மனம் வரவில்லை. 
மிகவும் வலிக்கின்றது.

புராதனமான திருக்கோயில். 

கவனிப்பாரற்ற நிலையில் இருக்கின்றது. 

சோழ மன்னர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்ட வேலிக் கணக்கான விளைநிலங்கள் இருந்தும் -

பலன்கள்  சென்றடைந்த இடம் எது?..  தெரிய வில்லை.

கலைக் கோயிலான இத்திருக்கோயிலில் நிறைய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. அவை  முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்தவை என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

கல்வெட்டுச் செய்திகள் மூலம் - ''வேதிகுடி மகாதேவர்''  என்றும், ''பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்'' என்றும் குறிக்கப்படுவதை அறிய முடிகின்றது.

சோழ நாட்டின் மகோன்னதமான சிற்பிகளின் கை வண்ணத்தில் - உன்னத கலைப் படைப்புக்களாக விளங்கும் அரிய சிற்பங்கள் பல ஜீரணமான நிலையில் இருக்கின்றன.



 ஆயினும், அருட்கடலாகத் திகழும் ஐயனும் அம்பிகையும் அல்லலுற்று வருவார் தமக்கு அனைத்து நலங்களையும் வாரி வழங்கி அருள்கின்றனர்.

அன்பர்களின் பெருமுயற்சியால் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து - மார்ச் பத்தொன்பதாம் நாள் திருக்குடமுழுக்கு நிகழ இருக்கின்றது.

சித்திரை மாதத்தில் திருஐயாற்றிலிருந்து, ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் - அறம்வளர்த்த நாயகியுடனும், ஸ்ரீ நந்திகேஸ்வரர்  சுயசாம்பிகை தேவியுடனும் எழுந்தருளும் சப்தஸ்தான திருத்தலங்களுள் இது மூன்றாவது திருத்தலம் ஆகும்.

தஞ்சாவூர் - திருவையாறு  வழித்தடத்தில்  உள்ளது  கண்டியூர்.

கண்டியூரில் ஸ்ரீபிரம்மசிரக்கண்டேஸ்வரர் திருக்கோயிலை ஒட்டினாற்போல வீரசிங்கன்பேட்டை செல்லும் சாலையில் மூன்று கி. மீ. தொலைவில் உள்ளது - திருவேதிகுடி.

ஞானசம்பந்தப்பெருமான் அருளிய திருப்பதிகத்தின் ஏழாவது  திருப்பாடல் -   மகத்தான பாடலாகும்.

இந்தத் திருப்பாடலை - திருமண வயதினர் -  நாளும் பாராயணம் செய்ய, திருமணம் விரைவில் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

அதற்கு - நாங்களே சாட்சி!.. 
பிப்ரவரி ஒன்பதாம் நாள் நிகழ்ந்த திருமணமே காட்சி!..

என் மகளுக்கு - நல்ல வரன் தேடி - பொருத்தமாக ஏதும் அமையாமல் - மனம் வருந்திய போது - நடந்தது என்ன!..

அந்த இனிய நிகழ்வுகளுடன் அடுத்த பதிவில் சந்திப்போம்!..

அன்று நிகழ்ந்தவை அனைத்தையும் 
எம்பெருமானும் மங்கையர்க்கரசியும் நிகழ்த்தினர்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

12 கருத்துகள்:

  1. திருவேதிக்குடி இறைவனின் திருவிளையாடலைப் படிக்க ஆவல் .அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சிதைந்திருப்பதைப் பார்க்கும் போது மனம் வலிக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தைப் பார்த்தபோது அப்படியே
      உள்ளம் நொறுங்கிப் போனது..
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  2. அரசின் கண்ணில் இவையெல்லாம் படாதோ...?

    கோயிலின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      நமது கலைச் செல்வங்களின் மீது பற்றும் பாசமும் வரவேண்டுமே!..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  3. இனிய நிகழ்வினை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  4. அருமையான கோவில். சிதிலமடைந்து இருக்கும் சிலை பார்த்து மனதில் வலி.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு
  5. அன்பின் கலை..
    தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..
    தங்களின் வரவு நல்வரவாகுக!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா21 மார்ச், 2014 22:06

      நன்றிங்க அய்யா ,,,,நம்மளையும் அம்மா அப்பா கோவில் குளத்துக்கு போக சொல்லுறாங்களே .....ரொம்ப நன்றிங்க அய்யா தொடருங்கள்

      நீக்கு
  6. வ்ருடங்கள் பல ஆகிவிட்டன, இந்த கோவில் தரிசனம் செய்து. கோவில் கோபுரத்தில் செடி முளைத்து இருப்பது மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.
    மகளுக்கு வரம் கொடுத்த தெய்வம் படித்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கோயிலின் நிலை கும்பாபிஷேகத்தினால் சீரடையும்..
      அரசுக்கும் மக்களுக்கும் கலைச்செல்வங்களைக் -
      கட்டிக் காக்கும் எண்ணம் வரவேண்டும்.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..