நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை
திருவள்ளூர் அருகேயுள்ள தொட்டிக்கலை என்ற ஊரில்  வாழ்ந்த சுப்ரமணிய தம்பிரான் ஸ்வாமிகள் இயற்றிய நூல் சுப்ரமணியர் திருவிருத்தம்..
தம்பிரான் ஸ்வாமிகள்
முருகப்பெருமானைப் போற்றி திருவிருத்தம் பாடி, தொழுநோயாளி ஒருவரது நோய் தீர்த்துடன் தம் வாழ்வில் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்தியவர் என்ற குறிப்புகளும் கிடைத்துள்ளன..
காலம் 180 ஆண்டுகளுக்கு முன்..
அத்தகைய விருத்தத்தில் இருந்து சில திருப்பாடல்கள்..
ஜோதி தொலைக் காட்சியில்  பாடலைக் கேட்டு மயங்கி தேடி எடுத்து தந்திருக்கின்றேன்..
மாமேவு நவரத்ந கேயூர மணிமகுட
மன்னிப் பொலிந்த முடியும்
வச்சிர நுதற்றிலக வெண்ணீறும் ஓராறு
வதனவிம் பத்தி னழகும்
பாமேவுபத்தற்கு மடைதிறந் தன்பொழுகு
பன்னிருவி ழிக்கருணையும்
பகரறிய பழமறை பழுத்தொழுகு சிறுநகைப்
பவளஞ்சி றந்தவாயும்
காமேவு கரகமலபந்தியுஞ் சேவலுங்
கனகமயிலுங் கிண்கிணிக்
காலுமுந் நூலும்வடி வேலுமென் மேலுமெக்
காலுந்துலங்க வருவாய்
தாமோதராநந்த கோவிந்த வைகுந்த
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (1)
கண்கொண்ட பூச்சக்கர வாளகோளத்தை யொரு
கதிகொண் டெழுந்துசுற்றிக்
ககனகூடந் தடவியுக சண்டமாருதக்
காலொடு சுழன்றுபின்னி
விண்கொண்ட மேகபடலத்தைச் சினந்துதன்
மெய்யன்ப னெனவுகந்து
விட அரவின் மகுடமொடு சடசடென வுதறிநடு
மேருவொடு பாய்ந்துகொத்தித்
திண்கொண்ட வல்லசுரர் நெஞ்சுபறை கொட்டத்
திடுக்கிட விடுத்து மோதிச்
சிறைகொண் டடித்தமரர் சிறைகொண்ட ணைத்திலகு
திறைகொண்ட மயில்வாகனா
தண்கொண்ட நீபமலர்மாலையணி மார்பனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (2)
துன்னு கயிலாசகிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலைமலைவான்
சோலைமலை மேவிய விராலிமலை மன்னிய
சுவாமிமலையுஞ் சிறந்த
சென்னிமலை வேளூர்கடம்பவன மேலவயல்
திருவருணையின் கோபுரம்
திருவாவினன்குடி பரங்கிரி திருத்தணி
சிவாசலந் திருவேரகம்
இந்நில மதிக்குந் திருச்செந்தின் முதலான
எண்ணப்படாதகோடி
எத்தலமு நீகருணை வைத்துவிளை யாடல்வித
மெத்தனையெனச் சொல்லுவேன்
தன்னைநிக ரொவ்வாத பன்னிருகை வேலனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே.. (3)..
-:  சுப்ரமணிய தம்பிரான் :-
  விருத்தம் முழுதும் கேட்பதற்கான இணைப்பு :
 நன்றி இணையம்
முருகா முருகா
ஓம் நம சிவாய ஓம்
**



ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
பதிலளிநீக்குசரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம்; குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்...
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
முருகா சரணம்
முருகா சரணம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சுப்பிரமணிய விருத்தம் பற்றியும், தம்பிரான் சுவாமிகள் பற்றியும் இன்று விளக்கமாக தெரிந்து கொண்டேன். விருத்தத்தை பக்தியுடன் பாடியும் பார்த்தேன். அழகான சொற்களுடன் அமையப்பட்ட முருகனது விருத்தத்தை செவ்வாயன்று படிக்கத் தந்தமைக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி. முருகா சரணம். 🙏.
.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
விருத்தத்தையும் கேட்டுப் பாருங்கள்..
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றியம்மா
முருகா சரணம்