நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 22, 2023

சக்தி லீலை 8

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 5
ஞாயிற்றுக்கிழமை

மங்களகரமான நவராத்திரியின்
எட்டாவது நாள்
 
பல்வேறு சிறப்புகளை உடையது எட்டு எனும் எண்..


எட்டெட்டு பதினாறு திருக்கரங்களுடன் மகிடாசுரனை வதம்  செய்து அவன் தலை மீது தாள் பதித்து நின்ற பின்னும் கோபம் அடங்காமல் அந்தரி நீலி அழியாத கன்னிகையாய் கொதித்து நின்ற துர்கையை -
அன்புடன் நோக்கி - 

" நன்று புரிந்தனை தேவி!.. " - என்று அன்பு மீதூற மொழிந்து ஆரத் தழுவிக் கொண்டார் எந்தையும் எம்பிரானும் ஆகிய சிவபெருமான்..

இதை திருநாவுக்கரசர் போற்றிப் புகழ்கின்றார் இப்படி!..

போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும் வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும் பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும் நாகஈச் சரவ னாரே.. 4/66/8

இவ்விதமே
பின்னொரு சமயத்தில் -
சும்பநிசும்பர்களை வெட்டிப் பிளந்து அசுர  சடலங்களின் மேல் கூத்தாடிய பின்னும் கோபம் குறையாமல் கொதித்து வந்தனளாம் - காளி!.. 

அவளது கோபம் குறையுமாறு திருநடனம் ஆடி  அம்பிகையைக் குளிர்வித்தார் எம்பெருமான்.. - என்பது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் திருவாக்கு..


கொதியினால் வரு காளி தன் கோபங்
குறைய ஆடிய கூத்துடை யானே
மதியிலேன் உடம்பில் அடு நோயால்
மயங்கினேன் மணியே மணவாளா
விதியினால் இமையோர் தொழுதேத்தும்
விகிர்தனே திரு ஆவடுதுறையுள்
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.. 7/70/4
-: சுந்தரர் :-


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 66
-: அபிராமி பட்டர் :-

தீமைகளை எதிர்ப்பதிலும் அழிப்பதிலும் பெண்கள் துர்க்கையாய் காளியாய்த் திகழ்ந்திட வேண்டும் என்பது திருக்குறிப்பு..

ஸ்ரீ துர்கா திருமறைக்காடு
வீரமும் தீரமும் நம்முடன் பிறந்தவை.. அவை உள்ளத்திலும் உடலிலும் பொலிந்திட வேண்டும்..

உண்மையில் நம்முடைய புலன்களே நமக்கு எதிரானவை.. அவற்றையே வெற்றி கொள்ள வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு..

ஆர்ப்பரித்து நிற்கின்ற எதிரியை எதிரிகளை வாள் முதலான ஆயுதங்களால் அடக்கி வென்று விடலாம்..

நாமாகி - நம்முள்ளே நின்று நம்மை நடத்துகின்ற ஐம்புலன்களை  எவ்விதம் வெல்வது?..

அதற்குத் தான் அறிவும் ஞானமும்!..

ஞானமும் கல்வியும் நல்லருட் செல்வமும்
- என்பார் கவியரசர்..

அப்படியான 
மனோபக்குவத்தை அருளிட வேண்டும் என
ஜகன் மாதாவாகிய ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை 
வாணி சரஸ்வதியை  - வாழ்த்தி வணங்கிடுவோம்..


பெருந்திருவும் சயமங் கையும் ஆகி என்பேதை நெஞ்சில்
இருந்து அருளும் செஞ்சொல் வஞ்சியைப் போற்றில் எல்லா உயிர்க்கும்
பொருந்திய ஞானந்தரும் இன்பவேதப் பொருளும் தரும்
திருந்திய செல்வம்தரும் அழியாப் பெருஞ்சீர் தருமே..
-: கவிச்சக்கரவர்த்தி கம்பர் :-

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்பு வில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!..
-: அபிராமி பட்டர் :-
**
ஓம் துர்கா பரமேஸ்வர்யை நம: 
 ஓம் ஞான சரஸ்வத்யை நம:

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய  திருச்சிற்றம்பலம்
***

18 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    இன்றைய நவராத்திரி பதிவும் அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது அழகான படங்களில் அன்னையை தரிசித்து அன்னையைப் பற்றிய விபரங்கள் என அத்தனையும் படித்தேன்.

    /நல்லதொரு மனோபக்குவத்தை அருளிட வேண்டும் என
    ஜகன் மாதாவாகிய ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை
    வாணி சரஸ்வதியை - வாழ்த்தி வணங்கிடுவோம்../

    ஆம்.. சகல வரங்களும் தந்தருளும் அன்னையை போற்றி துதிபாடி வணங்கிடுவோம் . அருமையான பக்திப் பகிர்வுக்கு தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகல வரங்களும் தந்தருளும் அன்னையை போற்றி துதித்து வணங்கிடுவோம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  2. பதிவு மிக அருமை. மிக ரசித்தேன்.

    போகமார் பாடலின் கடைசி வரியில் தட்டச்சுப் பிழை இருக்கிறது. அரவனாரே பகுதி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ச அதிகம் இருக்கிறதோ?  இப்படி இருக்கலாமோ..

      ...நாகஈச்ச ரவ னாரே 

      நீக்கு
    2. ஆனால் நெல்லை, இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்? இதெல்லாம் மனனமா உங்களுக்கு?

      நீக்கு
    3. பாடலுக்கு அர்த்தத்தையும் மனதில் ஓட்டிப் பார்ப்பேன். அர்த்தம் புரியவில்லை என்றால் கூகிளில் தேடுவேன். படிக்கும்போதே சில வார்த்தைகளில் தவறு இருக்கிறது என்று தோன்றும்.
      நாக நாண் உடையார் போலும் நாக ஈச்வரனாரே என்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

      நாக ஈச்ச அரவனாரே என்று வந்தாலும் அர்த்தப் பிழை இருப்பதுபோலத் தோன்றுகிறது

      நீக்கு
  3. சிறப்பு. தேவியை வணங்கி நலம் பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  4. எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டு விட்டது..

    நெல்லை அவர்களுக்கு நன்றி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  5. ஓம் சக்தி ஓம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி ஓம்
      வையகம் வாழ்க..

      மகிழ்ச்சி.. நன்றி ஜி..

      நீக்கு
  6. பதிவு மிக அருமை. பகிர்ந்த பாடல்களும், படங்களும் மிக அருமை.
    உலக மாகிற நாடகமேடையில் தன்னுடன் லீலை புரிய எத்தனையோ வேஷங்ககளில் எத்தனையோ தடவை சக்தி வருகிறாள். நவராத்திரியில் சக்தி லீலைகளை படிக்க உங்கள் மூலம் அருள்புரிகிறாள்.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  7. மகிசாசுரவர்த்தினி பாதம் போற்றி வணங்கினோம்.

    நவராத்திரி போற்றும் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  8. பதிவும் பகிர்ந்த பாடல்களூம் அருமை. எழுத்துப்பிழை, பொருள் பிழையைக் கண்டு பிடித்த நெல்லையாருக்குப் பாராட்டுகள்> அம்பிகையின் அருளால் அனைவருக்கும் அனைத்து நலங்களூம் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..