நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், அக்டோபர் 11, 2023

மருந்து 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 24 
 புதன்கிழமை

திருப்பதிகப் பாடல்கள்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..

நம்மைச் சூழ்கின்ற நோய்களுக்கு - இறைவனே அருமருந்து!.. என்று அடையாளம் காட்டுகின்ற வகையில் அப்பர் பெருமான் அருளிச் செய்துள்ள திருப்பாடல்கள் சிலவற்றை இன்றைய பதிவில் காண்போம்..

திருக்கோளிலி
திருக்கோளிலி
(திருக்குவளை)

ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
ஸ்ரீ வண்டமர்பூங்குழலி

விண்ணுளார் தொழுது ஏத்தும் விளக்கினை
மண்ணுளார் வினை தீர்க்கும் மருந்தினைப்
பண்ணுளார் பயிலும் திருக்கோளிலி
அண்ணலார் அடியே தொழுது உய்ம்மினே. 5/57/2


கோயில்
தில்லை திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ திருமூலநாதர்
ஸ்ரீ உமையாம்பிகை

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையுந் திசைகள் எட்டுந்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 6/1/4

திரு புள்ளிருக்கு வேளூர்


ஸ்ரீ வைத்யநாதர்
ஸ்ரீ தையல்நாயகி

பேரா யிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8


கச்சி ஏகம்பம்

ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர்
ஸ்ரீ காமாட்சியம்மன்

வருந்தவன்காண் மனமுருகி நினையா தார்க்கு
வஞ்சன்காண் அஞ்செழுத்து நினைவார்க் கென்றும்
மருந்தவன்காண் வான்பிணிகள் தீரும் வண்ணம்
வானகமும் மண்ணகமும் மற்று மாகிப்
பரந்தவன்காண் படர்சடையெட் டுடையான் தான்காண்
பங்கயத்தோன் தன்சிரத்தை யேந்தி யூரூர்
இரந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
ஏகம்பன் காண் அவன் என் எண்ணத் தானே.6/64/9


திரு நாரையூர்

ஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர்
ஸ்ரீ திரிபுரசுந்தரி

புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் தன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் தன்னை
நாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே.
 6/74/5

திரு வாய்மூர்

ஸ்ரீ வாயமூர்நாதர்
ஸ்ரீ பாலின்நன்மொழியாள்

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. 6/77/8

திரு ஓமாம்புலியூர்

ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர்
ஸ்ரீ புஷ்பலதாம்பிகை

அருந்தவத்தோர் தொழுதேத்தும் அம்மான் தன்னை
ஆராத இன்னமுதை அடியார் தம்மேல்
வருந்துயரந் தவிர்ப்பானை உமையாள் நங்கை
மணவாள நம்பியை என் மருந்து தன்னைப்
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
பொழில் கெழுவு தரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளியெஞ் செல்வன் தன்னைச்
சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே. 6/88/6


திருநாவுக்கரசர்
திருவடிகள் போற்றி
*
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. பொருந்தா ஆசைகள் பலவற்றால் இன்னலுற்று அதன் விருந்தாய் வரும் துன்பங்களுக்கு மருந்தாய் நிற்பவன் தாள் பணிவோம். வருந்தா வாழ்க்கை வளம்பெற்று என்றும் நலந்தா நலந்தா என்று இறைஞ்சி நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கவிதையான கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. எல்லாம் வல்ல வைத்திய நாதனை நலம் வேண்டி வணங்கி வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. ஆமாம், உண்மை இறைவனே அருமருந்து.
    அப்பார் பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    பிணிக்கு மருந்தாவான். நம் கவலைகளை போக்கும் அருமருந்து.
    போற்றி வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. இறைவனே அருமருந்து.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருக்குவள போனோம். இந்த விபரங்கள் தெரியாமலே!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..