நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 14, 2013

பொங்கல் திருநாள்


பொங்கல் நல்வாழ்த்துகள்!...


அன்றைக்கு நாடு முழுவதும் விவசாயமும் அதனைச் சார்ந்த தொழில்களுமாகத்தான் இருந்தது. சாகுபடி காலத்தில் நாடு செழிக்கவும் நல்ல மழை பொழியவும், கன்னிப் பெண்கள் மார்கழியில் நோன்பைக் கடைப்பிடித்தார்கள். மார்கழியில் நோற்ற நோன்பினை தை  முதல் நாளில் முடிப்பார்கள். 

அறுவடையில் நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக இந்த பூமித்தாய்க்கும், வானில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் கதிரவனுக்கும்,

 ஆடி மாதம் முதற்கொண்டு துணைக்குத் துணையாய் நின்று தோள் கொடுத்த கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உழைத்துச் சம்பாதித்த பச்சரிசியில் பொங்கல் வைத்துப் படைத்து வழிபட்டனர். 

பொங்கல் திருநாள்  என்பதே இயற்கை வழிபாடு தான்.

இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களாக  மாறியது என்கின்றனர்.

பொங்கலன்று அதிகாலையில் அனைவரும்  எழுந்து நீராடி, முதல் நாளே சுத்தப்படுத்தி  ஆயத்தமாக வைத்திருந்த வீட்டு முற்றத்தை பச்சரிசி மாவினால் கோலம்  இட்டு அலங்கரிப்பர்.

தலை வாழையிலையில் பச்சரிசியுடன் புத்தம் புதிய காய்கறிகளையும்  வாழைப்பழங்களையும் வெல்லக்கட்டிகளையும் பசு நெய்யினையும் வைத்து புதிய பானைக்கு மஞ்சள், இஞ்சிக் கொத்துகளைக் கட்டி மங்கலகரமாக திலகமிடுவர். குடும்பத்தில் உள்ள எல்லாரும் கூடியிருக்க வயதில் மூத்த பெண்கள்  முன்னின்று மஞ்சளிலோ பசுஞ்சாணத்திலோ பிள்ளையார் பிடித்து குங்கும திலகம் இட்டு அருகம்புல் சாற்றி  ,  

குத்து விளக்கினை ஏற்றி குல தெய்வத்தையும் கதிரவனையும் மனதார வணங்கி தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி நெஞ்சுருகி நின்று வழிபட்டு நல்ல விறகுகளைக் கொண்டு அடுப்பில் நிறைத்து புதுப் பானையில் அறுவடையாகி வந்த புது அரிசியினை இட்டு, முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். பாரம்பரியமாக சர்க்கரைப் பொங்கலுடன் வெண்பொங்கலும் சமைப்பர்.

பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத்தில் கணவன், மனைவி மக்களுமாக எல்லாரும் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி மகிழ்வர். பொங்கலை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புறுவர். இது காலகாலமாக விளங்கி வரும் தமிழ் பண்பாட்டின் அடையாளமாகத்  திகழ்கின்றது எனில் மிகையில்லை. இருப்பினும்,

இந்த ஆண்டு காவிரியில் நீர் பற்றாக்குறை. தமிழகத்தில் பருவமழை தவறி விட்டது. வேதனைக்குரிய விளைவாகி விட்டது.  மேலும் இளம்பெண்கள் மீதான மிக மோசமான வன்கொடுமைகள் - மனதளவில் எல்லாரையும் மிகவும் பாதிப்படைய வைத்துள்ள நிகழ்வுகள் தலைநகர் தில்லியிலும் தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடந்துள்ளன. 

காலம் தான் கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் மனதினைத் தரவேண்டும்.  இனி வருங்காலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் யாருக்கும் நேராதிருக்க இறையருளைச் சிந்திப்போம்.  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ... நல்ல வழி பிறக்கட்டும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..