நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 02, 2013

திருப்பாவை - 18

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 18
உந்து மத களிற்றன்
உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடை திறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார்விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!.... 


(யாருக்கும் அடங்காது) உந்தி நடக்கும் தன்மையினை உடையது மதயானை . அந்த யானையும் அன்பெனும் அங்குசத்துக்கு அடங்கும்... அப்படிப்பட்ட யானையின் பெருஞ்சிறப்பைனை உடையவனும்  

ஒருபோதும் குறையாத பெருந்திறல் நிறைந்த - வலிமை பொருந்திய தோள்களை  உடையவனுமாகிய   எங்கள் பெருந்தலைவன் - 

நந்தகோபனுடைய  அன்புக்குரிய  மருமகளே!...நப்பின்னையே!... 

ஏறு தழுவிய ஏந்தல் எங்கள் கண்ணனைத் தழுவிய ஏந்திழையே!...கண்ணனின் காதல் துணையே!..நிறைந்த மலர்களால் நறுமணம் கமழும் கார்குழலீ!.... நின் திருக்கரங்களால்    திருக்கதவினைத்   திறக்கலாகாதா?..... 
 சேவல்கள் எல்லாம் விழித்து எழுந்து கூவுகின்றனவே!...சேவல்கள் மட்டுமா!...

பலவிதமான பறவைகளும் விழித்துக் கொண்டனவே!... அவைகளுடன்,


பல்கால் குயிலினங்கள்
"குக்..கூ..'  என குயில்களும் மாதவிப் பந்தல் எனும் மல்லிகைப் பந்தலின் மீது அமர்ந்து கொண்டு கீதம் இசைக்கின்றனவே..... கேட்கவில்லையா!...    

"மாயனே, மாதவா, ஜனார்த்தனா, சக்ரபாணீ ''  என்று மைத்துனன் நம்பி மதுசூதனன் பேர் பாடி -  உன் வாசலுக்கு வந்திருக்கின்றோமே!....  

பூம்பந்து என சிவந்த மென்மையான விரல்களால் திருக்கதவின் தாழினை - மெல்ல - திறக்கக்கூடாதா!...  

செந்தாமரை மலர் போன்ற திருக்கரங்களில் மங்களகரமாக சங்கு வளையல்கள், முத்து வளையல்கள் என நிறைய அணிந்திருக்கின்றாய்.. அவைகளும் சும்மாயிராமல், சலசல - எனக்  குலுங்கி - சிணுங்கி - உன்னுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றன. 

எம்பாவாய்!...நப்பின்னாய்!...வளையோசையுடன் வா... 

... வந்து  - உள்ளக் களிப்புடன் கதவைத் திற!...

உன் உள்ளத்துள் - உள்ள -  களிப்புடன் கதவைத் திற!...

எம் உள்ளமும் கள்ளக் கண்ணனைக் கண்டு களிப்பெய்திடக் கதவைத் திற!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..