நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 27, 2012

திருப்பாவை - 12


ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாசுரம் - 12 
கனைத்த இளங் கற்றெருமை
கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்!
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!


எம் பாவாய்!...நற்செல்வனின் தங்காய்!...

உங்கள் வீட்டு இளம் எருமை  - தன் கன்றின் பசியினை நினைத்து இரங்கிய மாத்திரத்தில் அதன் பெருத்த மடியில் சுரந்த பால் - வாங்கக் குடம் இன்றி - அப்படியே தரையில் பொழிவதையும்,  மடியினின்று பொங்கி வழிந்தோடிய பாலால் கொட்டில் முழுதும் சேறாகி விட்டதையும்  எழுந்து வந்து பார்!.... 

மார்கழி மாதப் பனிப் பொழிவு எங்கள் தலை முழுதும் படிந்து விட்டது. உன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பதனால் அல்லவா இந்தக் கதி!

( நற்செல்வனின் அன்புத் தங்கையே!...உன் பொருட்டும் மாயக் கண்ணனின் பொருட்டும் இதை எல்லாம் பொறுத்துக் கொள்கின்றோம்!)
மனத்துக்கினிய இராமன்
தென் இலங்கைக் கோமானாகிய இராவணனை - அவன்  தகாதன செய்ததனால் - சினமுற்று அழித்த இராமனை, மன்னு புகழ் கோசலை தன் மைந்தனை, மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாமல் கிடக்கின்றாய்!...

இனியும் துயில் நீங்கி எழாமல்..... இதென்ன பேருறக்கம்!....அண்டை அயலார் எல்லாம் விழித்துக் கொண்டார்கள்....  
 
நீ இப்படி உறங்கிக் கிடப்பதை அவர்கள் அறிந்தால் ஏளனம் செய்ய மாட்டார்களா?....

நற்செல்வனின் அன்புத் தங்கையே!...நங்கையே!...எம் பாவாய்!...எழுந்திராய்!...
நன்றி - ரதி, தேவி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..