நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 11, 2026

கோடை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 சனிக்கிழமை

இன்னும் சில நாட்களில் சித்திரை... 
 
கோடை வந்து விட்டது....

வாட்டி வதைக்கும் வெயிலில் நாட்களைக் கடந்தாக வேண்டும்... சில ஒழுங்குமுறைகளை மேற்கொண்டு நமது பொழுதையும் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்...

வெயிலை வீணாக்காமல் உழைப்பவரும் அலைபவரும் பலர்.. 
அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
தற்காத்துக் கொள்ளல்  வேண்டும். சீரான நிழலை உடன் பேண வேண்டும்...

ஆரோக்கியமானவற்றைப் பருக வேண்டும்... உண்ண வேண்டும்...

இந்த அளவில் இன்றைய பதிவு..


இளநீர் - இயற்கையின் கொடை... உடல் சூட்டைக் குறைத்து நலம் பல சேர்க்கும்... (வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுவதால் இவற்றின் விலை தாறுமாறாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது..)

பதநீர் /நுங்கு - 
இவையும் இயற்கையின் கொடையே... உடல் உஷ்ணத்தைக் குறைத்து நலம் பல சேர்ப்பவை..

தர்பூசணி  -  நீர்ச் சத்து மிக்கது... உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. முலாம் பழமும் உகந்ததே...

எலுமிச்சை - கனி வர்க்கத்தில் தலை சிறந்தது... உடலுக்குப் பல வகையிலும் சிறந்தது... நாரத்தையும் ஏற்புடையதே... பழத்தைப் பிழிந்து நீருடன் கலந்து பருகுவதே சாலச் சிறந்தது... வேறு கலப்பு எதுவும் வேண்டாம்...


சாத்துக்குடி - எலுமிச்சம் பழத்துக்கு இணையானது... நா வறட்சியைத் தவிர்க்கும். ஆரஞ்சும் இதன் வகையே..

வெள்ளரி - நீர்ச் சத்து மிக்கது.. உடல் வறட்சியைத் தவிர்க்கும்.. உப்பு, மிளகாய்த்தூளில் புரட்டித் தின்பதைத் தவிர்க்கவும்..

மோர்
வீட்டில் தயாரிக்கப்படுகின்ற தயிரும் மோரும் தலை சிறந்தவை..
இயற்கையாகத் தயாரிக்கப்படும் இவற்றுக்கு ஈடு இணையில்லை.. 

மோரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிவது, பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொட்டுவது,  வற மிளகாயுடன் தாளிதம்  செய்வது போன்ற சேட்டைகளைத் தவிர்ப்பது நலம்...

தண்ணீர் - மண் பானையில் வெட்டி வேர் துணுக்குகளுடன் வைக்கப்பட்ட சுத்தமான நீர் அமுதத்திற்குச் சமம்...

கோடையில் மா, பலா போன்ற பாரம்பரிய பழங்களுடன் இதர பழங்களும் சரியான அளவில் நல்லவையே..

குச்சி ஐஸ்,  கோன் ஐஸ்,  குலுப்பி ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் -  இவற்றோடு கூடிய உடன் பங்காளிகளான  ரோஸ் மில்க், பாதாம் கீர் இவற்றை விட்டு நீங்குவார்  எவரும் இலர்... 

எனவே,
இவற்றைப் பற்றி  சொல்வதற்கு ஒன்றும் இல்லை..

நான் மேற்படி ஐஸ் விஷயங்களைக் கருத்தில் கொள்வதேயில்லை...

வண்ண மயமான இரசாயனத் திரவங்கள் உடலுக்கு ஊறு விளைவிப்பவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

தகுந்த
முன்னேற்பாடுகள் இருப்பின்
கோடையும் இனிதே!.
குதுகலிப்போம்..

வாழ்க நலம்
***

6 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    கோடைக்கான வழிமுறைகள் - அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. சென்னையில் சென்ற வாரம் 120 ரூபாய்க்கு பாட்டிலில் (குளிர்சாதனத்தில் இருந்த) பதனி சாப்பிட்டேன். நல்ல ருசி. அந்தக் கடையில் பனை பொருட்கள் நிறைய வச்சிருந்தாங்க. அப்போ நினைத்துக்கொண்டேன், இதையெல்லாம் பண்ணறவ்ங்கள்ட பத்து பைசாக்கு வாங்கி, இங்க பத்து ரூபாய்க்கு விக்கறாங்கன்னு. பெங்களூர்ல நான் நுங்கு வாங்கிச் சாப்பிட்டேன் (5 நுங்கு 50 ரூபாய்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் ஆச்சர்யம் ஒன்றும் கிடையாது....
      எல்லாம் வியாபாரம் தான்...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      நன்றி..

      நீக்கு
  3. சித்திரை வெயிலுக்கு அருமையான இயற்கை வழங்கும் பானங்கள்.

    நாங்களும் நாள் ஒன்றுக்கு ஒரு பானம் வீட்டில் தயாரித்து குடிக்கிறோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..