நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 16, 2025

கன்னிப் பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 3
வியாழக்கிழமை


கன்னிப் பொங்கல் என்பதே இற்றை நாளின் காணும் பொங்கல்..

காணும் பொங்கலைக்  கணுப் பண்டிகை என்றும் வழங்குவர். 

இந்நாளின் நோக்கம்  உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதலும் பெரியோர்களிடம் நல்வாழ்த்துகளைப் பெறுதலும் ஆகும் . 

அன்றைய கலாச்சாரத்தின்படி இளம் பெண்கள் அம்மன் கோயிலின் வாசல், கோயிலைச் சார்ந்த தோப்புகள் இங்கெல்லாம் கூடி பெரியோர் வழி காட்டுதலின்படி
பொங்கல் வைத்து மகிழ்வர்..
இதுவே கூட்டாஞ்சோறு என்று பேசப்படுவது..

இப்படி கன்னியர் திரண்டிருக்கும் தோப்புகளுக்குள் ஆண்களுக்கு அனுமதியே கிடையாது..

அங்கே கோலம் வரைதல், நூலிழை கொண்டு பின்னல் வேலை செய்தல், பூ தைத்தல், வளை பந்து எறிதல்  எல்லாவற்றுக்கும
 மேலாக சீராக சமைத்தல் என்ற பங்கெடுப்புகள்..

இந்தப் பக்கம் கோயில் திடலில் - 
விடலைகளுக்கும் இளைஞர்களுக்கும்
பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் - காளை மறித்தல் , கல்யாணக் கல் தூக்குதல், கயிறு இழுத்தல், உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் போன்றவை ..

கால ஓட்டத்தில் பட்டிமன்றம், கவியரங்கம், கோலப்போட்டி
என, பல்வேறு அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் சேர்ந்து கொண்டன..

இது கன்னியர்க்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் உரிய முக்கியமான நாள் ஆகும்... 


மூத்தவர்களிடம் ஆசி பெறுவதும் சுமங்கலிப் பெண்களிடம்  மஞ்சள் கிழங்கினைக் கொடுத்து வாங்கிக் கொள்வதும் மரபு..
இப்படி வாங்கிய மஞ்சளைக் கல்லில் இழைத்து  முகத்தில் பூசிக் கொள்வதனால் தாலி பாக்கியம் நீடிக்கும் என்பது மரபு..

சமயம் சார்ந்த  சில சமூகங்களில் உடன் பிறந்த சகோதரர்கள் நலமுடன் வளமுமாக வாழ்வதற்கு என, சகோதரிகள் பிரார்த்தனை செய்து
கணுப்பிடி நோன்பு என்று இந்நாளில் அனுசரிக்கின்ற்னர்..

சில நாட்களாக எல்லா தொ. காகளிலும் பொங்கல் விழா என்ற பேரில் மங்கையர் நெற்றியில் திலகம் இன்றி - தலை விரி கோலமாகக் குதிப்பதும் மதிப்பு மரியாதை இன்றிப் பேசுவதும் காட்டப்படுகின்றன.

இது இந்த மண்ணின் மரபே அல்ல..

இப்படியான
 தலைவிரி ஆட்டங்கள் கல்லூரிகளில் கலை என்றே நடத்தப்படுவது வெகு சிறப்பு..

இந்த நாளில் அன்பு நிறை குடும்பங்கள் பலவற்றிலும் - பல விதமான சித்ரான்னங்கள் பலகாரங்களுடன்  குடும்பமாக கோயில் முற்றங்கள்
ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்கு சென்று, மகிழ்ச்சியாக உற்சாகமாக பொழுதைக் கழித்து விட்டு வருவது வழக்கமாகி இருக்கின்றது. 

பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்...
-: கோதைநாச்சியார் :-

அனைவரும்
இன்புற்று வாழ்க

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    காணும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இன்றைய பதிவு அருமை. காணும் பொங்கலுக்கு நீங்கள் தந்த பாரம்பரியமான விளக்கங்களை படித்து ரசித்தேன். மஞ்சள் பூசி, நீராடி மங்கல குங்குமம் வைத்து என இப்போதெல்லாம் கதைகளில்தான் எழுத வேண்டும். அப்படியான கதைகளையும் படித்து ரசிப்பவர்கள் அரிதுதான்.

    பதிவில் படங்களும் எழுதிய பழமை பொருந்திய விஷயங்கள் அடங்கிய பதிவும் மிக நன்றாக உள்ளது. மிகவும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. சம்பிரதாயங்கள் நடந்தாலும் நடக்கும் நாட்கள் கொஞ்சம் மாறுபடுகின்றன.  என் நண்பர் வீட்டில் இன்று காலை சீக்கிரமே கண்விழித்து படம் அனுப்பினார்.  என்னவென்று கேட்டால் அவர் அம்மா சூரியனுக்கு பொங்கல் வைத்து இன்று வழிபடுவதாக சொன்னார்.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் காணும்பொங்கல் வாழ்த்துகள்.

    காணும்பொங்கல் பற்றிய அந் நாளைய பழக்க வழக்கங்களை நன்றாகத் தொகுத்து தந்துள்ளீர்கள்.

    இந் நாளைய சீர்கேடுகள் சொல்லியுள்ளீர்கள் கவனத்தில் கொள்வார்களா? இளம் தலை முறை.

    பதிலளிநீக்கு
  4. காணும் பொங்கல் செய்திகள், படங்கள், விவரங்கள் அருமை.

    காணும் பொங்கல், எங்கள் ஊர் பக்கம் "சிறு வீட்டு பொங்கல்" என்று சிறு பெண்கள் செய்வார்கள் .

    தம்பி, தங்கைகள் வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றார்கள்.
    இப்போது நான்கு நாள் பண்டிகை ஒரே நாளில் முடித்து கொள்கிறோம். போகி பண்டிகைக்கு அப்புறம் மூன்று பண்டிகைகளை ஒரே நாளில்.தை பொங்கல், மாட்டுப்பொங்கல், சிறுவீட்டுப்பொங்கல் (காணும் பொங்கல்) எல்லாம் .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..