நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 21, 2013

நந்தி திருக்கல்யாணம்

ஸ்ரீ நந்திகேஸ்வரர்  - சுயசாம்பிகை தேவி திருக்கல்யாணம்!...

நாம் சிவாலயங்களுக்குச் செல்லும் போது முதலில் விநாயகப்பெருமானை வணங்குகின்றோம். அடுத்து வணங்கி அனுமதி கேட்பது அதிகார நந்தி எனும் ஸ்ரீநந்தியம்பெருமானிடம். இவருடைய அனுமதியுடன் தான் நாம் சிவதரிசனம் செய்கின்றோம் என்பது மரபு. அத்தனை பெருமை இவருக்கு!...அதனால் தான் சிவபெருமானே முன் நின்று இவரது திருமணத்தை நடத்தி வைத்தார்!...


ஒருமுறை திருக்கயிலை மாமலையில் எம்பெருமானுக்கும் அம்பிகைக்கும் பணி புரிந்து கொண்டிருந்த நந்தியம்பெருமானுக்கு தாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன - என்று ஒரு ஆவல் தோன்றியது. நந்தியின் உள்ளக்கிடக்கையை உணர்ந்து கொண்ட ஈசனும் அம்பிகையும்  ''.. அவ்வாறே ஆகுக!..'' என்று அருள் புரிந்தனர். 

அப்போது நந்தி -  ''ஸ்வாமி!... தங்களுடைய அடிமையாய்த் தொண்டு செய்யும் எனக்கு இப்படி ஒரு எண்ணம் எப்படித் தோன்றியது!... ஏன் தோன்றியது?... எனக்கு யாரைத் தெரியும்?... தங்களைப் பிரிந்து எப்படிச்  செல்வேன்!... எங்கு செல்வேன்!.. என்னைப் பொறுத்தருளுங்கள்!...'' என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார். 

அதைக் கண்டு நெகிழ்ந்த பரம்பொருள் - '' அஞ்சற்க!...  தர்மத்தை புத்திரனாகப் பெற வேண்டி கங்கையினும் மேலான காவிரிக் கரையில் எம்மை நோக்கித் தவம் செய்யும்   சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் உன்னை ஆட்கொள்வோம்...'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதன்படி, திருவையாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர்  செய்த  தவம் நிறைவேறும் வேளையும் வந்தது.

''..சிலாத முனிவரே!... நீர் இதுகாறும் தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!..'' என அவருக்கு அசரீரியாக அறிவிக்கப்பட்டவுடன், பெரு மகிழ்ச்சியடைந்த சிலாதர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாகபூமியை உழுதிட  பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது. 

ஆவலுடன் முனிவர் பெட்டகத்தை திறந்திட அதனுள் கோடி சூர்யப்ரகாசம் என - நந்தீசன் திருமகனாகத் தோன்றினார். அப்போது பூமியெங்கும் சுகந்த மணம் வீசியது. பன்னீர் மழையாகப் பெய்தது. நந்தீசனின் நட்சத்திரம் பங்குனி மாத திருவாதிரை.  அன்றே நந்தீசனுக்கு சிவாகமச் செல்வனாக அபிஷேகம் செய்து வைத்தார் இறைவன்.

இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட - சிலாதர் கலங்கினார். காரணம் -  இறைவன் ஆணைப்படி நந்தீசனின்ஆயுள் பதினாறு வருடங்கள் தான் என்பதால். கலங்கி வருந்திய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்த நந்தீசன், தவத்தைச் செய்து சிவத்தை அடைய விரும்பினார். 

தந்தையின் அனுமதி பெற்று கடும் விரதங்களுடன் சிவதியானத்தில் ஈடுபட்டார். திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்று எண்ணாயிரங்கோடி முறை பஞ்சாட்சர மகாமந்திரத்தை உச்சரித்து சிவசக்தி தரிசனம் பெற்றதுடன் ஜபேசன் என,  திருப்பெயரும் சூட்டப்பட்டார்.

அப்போது - மந்திர ஜபம் செய்தபோது கழுத்தளவு நீரில் நின்றிருந்ததால் - மீன்களால் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடாக இருந்த அவருடைய உடலைக் கண்டு உமையம்மை உள்ளம் உருகினாள். அன்னையின் மனம் கசிந்தது.  அதனால் -

அம்பிகையின் திருத்தன பாரங்களிலிருந்து வெள்ளமென பால் பொங்கிப் பிரவகித்து - நந்தீசனின் உடலை நனைக்க நந்தியம்பெருமான் முன்னை விட பேரழகுப் பிரகாசமான - திருமேனியினைப் பெற்றனர். சகல தேவர்களும் பூமாரி பொழிய சிவபெருமான் - நந்தீசனை - சிவகணங்களின் தலைவன் என்று பட்டாபிஷேகம் செய்து வைத்தார். 

பொற்பிரம்பினையும் மான், மழுவையும் சந்திர கலையினையும் அருளினார். அத்துடன் நெற்றிக் கண்ணையும் வழங்கி '' அதிகார நந்தி '' எனும் பெரும் பதவியினை அருளி நந்தீசர் மீது பொன் மாரி பொழிந்தார். 

இந்த வேளையில் சிலாத முனிவர் சிவபெருமானைப் பணிந்து - ''...ஐயனே!.. என் மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன்.. அருள் புரிக.. ஸ்வாமி!...'' என்று தன் ஆவலை வெளியிட்டார். உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது. பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!...

'' எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்.. '' என்று சிவபெருமானுக்கும் மகிழ்ச்சி. 

''...காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் என் அன்பன் வியாக்ரபாதரின் மகளை மணம் பேசுக!... நாம் ஐயாற்றிலிருந்து வந்து மணவிழாவினை நிகழ்த்துவோம்!...'' என்று திருவாய் மலர்ந்தருளினார். அம்பிகைக்கு ஆனந்தம். வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நடை பெறுகிறது  என்று!.. அப்புறம் என்ன!.. ஊரெங்கும் கொண்டாட்டம் தான்!..

நந்தீசன் - கிரீடமும் பொற்பிரம்பும் தாங்கியவராக வெள்ளைக் குதிரையில் ஆரோகணித்து உடன் வர - சிலாத முனிவருடன் மற்ற முனிவர்களும் திரண்டு, திருமழபாடிக்குச் சென்றனர். விஷயத்தை முன்பே உணர்ந்திருந்த வியாக்ர பாதர்  அன்புடன் அனைவரையும் வரவேற்று உபசரித்தார். 

வியாக்ரபாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு அழைத்து மாலை அணிவித்து வரவேற்றான். இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக,  பசி தாளாது அழுதபோதுதான் ,  ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்தார். 

தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டி -  '' கொடுத்து வைத்தவள் நீ!..'' - என்றனர். தாய் வழி வந்த நாணத்தால் முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசை.

நீட்டி முழக்க அவசியமின்றி, பார்வதி பரமேஸ்வரர் தம் சுவீகார புத்திரரும் சிலாதமுனிவரின் அன்பு மகனும் ஈசனிடம் சகல வரங்களையும் பெற்றவரும்  திருக்கயிலாயத்தில் அதிகார நந்தி எனும் பெரும்பதவி வகிப்பவருமான, ஜபேசன் எனும் திருநந்திதேவருக்கு - 

வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ரபாதரின் அன்பு மகளும் உபமன்யுவின் பிரிய சகோதரியுமான  சுயசாதேவி எனும் சுயம்பிரகாசினி தேவியை மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரங்கூடிய சுபயோக சுபதினத்தில் திருமாங்கல்யதாரணம் செய்வது என இருதரப்பாரும் ஏகமனதாக நிச்சயித்து தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

சிவகணங்கள் சூழ்ந்து வர -  திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில்  மங்கல முழக்கங்களுடன் திருமழபாடிக்கு எழுந்தருளிய அறம்வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் - விநாயகரும் வேலவனும் அருகிருக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க அக்னி சாட்சியாக பஞ்சபூத சாட்சியாக ஸ்ரீநந்திகேஸ்வரருக்கும் சுயசாம்பிகை தேவிக்கும் திருமண வைபவத்தினை  நடத்தி வைத்து அருளினர். 

இந்த ஆனந்த வைபவம் - மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்யதாரணம் நிகழ்ந்தேறிய அளவில், மணமக்களை எல்லோரும் பணிந்து வணங்கி இன்புற்றனர். 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவியுடன் - வளர்த்த தாய்தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய  அறம்வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள் செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார். 
 
ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த எல்லாரும் மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர். தாமே மணமக்களை அழைத்து வருவதாக அறம்வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் - அவர்களுக்கு வாக்களித்தனர். அதன்படி சித்திரையில் வெட்டிவேர் பல்லக்கில் மணமக்களுடன் ஏழு ஊர்களையும் சுற்றி வந்து எல்லோருக்கும் நல்லருள் புரிந்தனர். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டி, திருக்கயிலை மாமலையில்-

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவியுடன் சிவசாயுஜ்யம் பெற்றனர். 

நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர்
பொற்றடம் புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம்மான் அருளால் பிரம்பு கைப்
பற்றும் நந்தி பரிவொடு காப்பது.   

சிவராஜதானியாகிய திருக்கயிலை மாமலையில் ரிஷப முகத்துடன் அதிகார நந்தி எனத் திருத்தோற்றங்கொண்டு வலது திருக்கரத்தினில் மழுவும் இடது திருக்கரத்தினில் மானும் ஏந்தியவராக மற்ற திருக்கரங்களில் திருக்குறிப்பும் பொற்பிரம்பு தாங்கியபடி திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்.

*  *  *

இந்த அளவில் - என் தந்தையினும் தந்தையாய், எங்கள் குலதெய்வமாய் விளங்கும் - 

''ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவி '' திருமண வைபவம் சிந்திக்கப்பட்டது. 

நந்தீசர் திருமண வைபவத்தினை படித்தவர்க்கும் சிந்தித்தவர்க்கும் மனை மங்கலம் சிறக்கும் என்பது திருக்குறிப்பு!...


திருமணத்தடை உள்ளவர்கள் நந்தியம்பெருமான் திருக்கல்யாணத்தைத் தரிசித்தால், தடைகள் உடைபட்டு,  நல்ல இடத்தில் திருமணம் கைகூடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால்தான், " நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம் நடக்கும்'' என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.  

திருமணத் தடை மட்டுமல்ல... இல்லத்தில் தடைபட்டு நிற்கும் எல்லா சுப காரியங்களுக்காகவும், வியாபார விருத்திக்காகவும், தீராத நோய் தீர்வதற்கும், கடன் சுமை குறைவதற்கும், கல்வியில் முன்னேற்றம் காணவும், நல்ல வேலை கிடைக்கவும் -   நந்தியம்பெருமானின் திருக்கல்யாண வேளையில் வேண்டிக் கொள்ளலாம். 

இத்திருமண உற்சவம் கோலாகலமாக, திருமழபாடியில் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறுகிறது.  திருமண உற்சவத்தில் திருமழபாடியைச் சுற்றியுள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூரை வலம் வரும் விழாவும் நடைபெறும்.

திருமழபாடி - அப்பர், சம்பந்தர், சுந்தரர்  மூவராலும் திருப்பதிகங்களைப் பெற்ற திருத்தலம். தஞ்சை - அரியலூர் நெடுஞ்சாலையில், திருமானூரை அடுத்து உள்ள ஊர்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமழபாடிக்கு சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன. தவிரவும் திருச்சி மற்றும் அரியலூரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

காவாய் கனகத் திரளே போற்றி!... 
கயிலை மலையானே போற்றி!..போற்றி!..

திருச்சிற்றம்பலம்!... 

2 கருத்துகள்:

  1. அன்பின் துரை செல்வராஜு

    நந்தி - திருக்கல்யாணம் - பதிவு அருமை - நீண்டதொரு பதிவினில் பல பத்திகளில் எழுத்துகள் சரியாக வராத காரணத்தினால் படிக்க இயலவில்லை. மொத்தத்தில் பதிவின் பொருள் புரிந்தது.

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!..
      இந்த பதிவினைப் பற்றிய குறைபாடு இப்போது தான் தெரிகின்றது.
      எனினும் வாசித்து மகிழ்ந்து கருத்துரை வழங்கியமைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..