நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 3
செவ்வாய்க்கிழமை
நெல்லும் அரிசியும்..
பாரம்பரியத் தமிழர்களின்
அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாதவை ..
வாழ்வின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை நெல்லும் அரிசியும்..
புது நெல்லை வாழையிலையில் பரப்பி அதன் மீது பூரண கும்பம் வைத்து வழிபடுவது மரபு..
இதையே பச்சரிசி கொண்டு யாக பூஜை நிகழ்த்துவர்..
தஞ்சை வட்டாரத்தில் கோயில் குடமுழுக்கின் போது மேலிருந்து புது நெல்லைத் தூவி மக்களை ஆசீர்வதிக்கின்றனர்..
அரிசியே பிரதானம்..
கல்யாணம் தொட்டு பெரிய காரியம் வரை..
அரிசியே மங்கலம்..
நமது ஹிந்து சம்பிரதாய சடங்குகளில் காப்பரிசி என்று செய்வர்.. என்ன அர்த்தம்?..
காப்பரிசி - காப்பு அரிசி..
அரிசியே காப்பு - பாதுகாப்பு..
தஞ்சையில் இருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் தென்குடித் திட்டையைக் ( குரு ஸ்தலம்) கடந்ததும் ஒரு ஊரின் பெயர் - அன்னப்பன்பேட்டை..
இந்தப் பக்கம் தஞ்சை கண்டியூர் கடந்ததும் திருச்சோற்றுத்துறை..
அங்கே தாமிரபரணிக் கரையில் திருநெல்வேலி..
நெல் அரிசி அன்னம் - இவை வாழ்வியல்..
கைக்குத்தல் அரிசியை உட்கொண்ட வரையில் பாரம்பரியத் தமிழகம் ஆரோக்கியமாகத் தான் இருந்தது..
இன்றைய நாட்களில்
உணவு என்றாலும் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாத பொருள்களில் நவீன வெள்ளை அரிசிக்கு மூன்றாவது இடம் ..
நெற்பயிர் - நீர் வளமுடைய பூமியில் தழைப்பதாகும்..
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது நெல் வேளாண்மை..
வேளாண்மை என்றாலே நெல் சாகுபடி தான்..
உணவுக்காக அதிக அளவில்
பயன்படுத்தப்படும் தானியம் அரிசியே..
பொதுவாக ஆடிப் பட்டத்தில் நாற்றங்கால் அமைத்து நடவு நட்டால் தை முதல் வாரத்தில் அல்லது மூன்றாவது வாரத்தில் கதிர்கள் முதிர்ந்து விடும்
நாற்றங்காலின் காலம் 23 முதல் 26 நாட்கள் (ஏறக்குறைய 4 வாரங்கள்)..
இதற்குப் பின் இந்த நாற்றுகளைப் பறித்து பண்படுத்தப்பட்டிருக்கும் வேறிடத்தில் நட்டு - நீர், எரு முதலானவைகளுடன் பராமரித்துப் பாதுகாத்து நெற்பயிரில் கதிர்கள் தோன்றியதும் தக்கபடி அறுவடை செய்து களத்தில் கதிர்களை அடித்து நெல்லைப் பிரித்து காற்றில் தூற்றி தூசிகளை நீக்கி சுத்தமான நெல்மணிகளை பக்குவமாக மூட்டைகளில் நிரப்பிக் கட்டி உரிய இடத்தில் சேர்ப்பதற்கு வணிக முறையில் உற்பத்தி என்று சொல்லப்பட்டாலும் - அது தமிழ் வாழ்வியல் முறையில் பாரம்பரியம்.. கலாச்சாரம்..
1965 - 72 களில் என்னுடன் படித்த சக மாணவ மாணவியர் காலையில் வயலில் இயன்ற உழைப்பை நல்கிய பிறகே பள்ளிக்கு வருவர்.. மாணவ மாணவியரில் 99 சதவீதத்தினர் விவசாய குடும்பத்தினரே...
எனது ஆசிரியர்கள் பலரும் விவசாயிகளே..
அவர்களிடம் இருந்தே பல வகையான தரவுகளையும் கற்றுக் கொண்டேன்..
அந்த கால கட்டத்தில் பெரு நகர் ஒன்றின் மாணவர் கல்வித் தரத்தைப் பற்றி பேசப்பட்ட செய்தி..
" How you got milk?. "
என்று கேட்டதற்கு
" From vending machine!.. "
என்று சொன்னார்களாம்..
உலர்ந்த நெல் - மர உரலில் இடப்பட்டு மர உலக்கையால் குத்தப்படும் போது உமி அரிசி எனப் பிரிந்து விடுகின்றது.. பின் முறங்களில் இட்டுப் புடைக்கப்படும் போது உமி நீங்கி சுத்தமான அரிசி கிடைக்கின்றது.. சுத்தம் செய்து எடுக்கப்பட்ட அரிசியை சேமித்து வைக்கின்ற கலன்கள் குதிர்கள் எனப்பட்டன..
அறுவடை செய்யப்பட்ட நெல்லைச் சேமித்து வைக்கின்ற கலன்களுக்கும் குதிர்கள் என்றே பெயர்..
நெல்லையும் வயலையும் அதன் சிறப்புகளையும் பல்வேறு விதமாக நமது புலவர்கள் பாடி வைத்துள்ளனர்..
வேளாண்மை தொடர்பான நூற்றுக் கணக்கான பழமொழிகள்.. தமிழ் வழிக் கல்வி குறைவதால் அவற்றில் பாதிக்கும் மேல் வழக்கொழிந்து விட்டன..
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை விவசாயம் விவசாயிகள் வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் இனிய பாடல்களும் வெளியாகியிருக்கின்றன...
இப்போது அத்தி பூத்தாற்போல ஏதோ ஒரு சில..
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பழைய சாகுபடி முறை:
(ஆனி - ஆடி) ஆடிப்பட்டத்தில் துவங்கி புரட்டாசி - ஐப்பசியில் அறுவடை... 120 நாட்கள்.. இது குறுவை... குறுகிய காலப் பயிர்..
ஆடி - ஆவணியில் துவங்கி மார்கழி - தை யில் அறுவடை. 130 – 135 நாட்கள் மற்றும் 150 நாட்களைக் கொண்டது சம்பா பட்டம்..
ஐப்பசி - கார்த்திகையில் தொடங்கி பங்குனி - சித்திரையில் அறுவடை..இது பின் சம்பா.. இப்பருவமும் 130 - 135 நாட்கள் மற்றும் 150 நாட்களைக் கொண்டது..
தை மாத அறுவடைக்குப் பின் முந்தைய தாள்களில் துளிர்த்து வருவதே தாளடி.. வேறொன்றும் பெரிதாகச் செய்ய வேண்டியது இல்லை.. ஆடு மாடுகளிடம் இருந்து பாதுகாத்து விட்டால் கிடைத்த வரைக்கும் ஆதாயம்..
பிந்தைய சம்பா பட்டத்தையே தாளடி என்று சொல்கின்றார்கள்..
மழைக்குப் பின் அதிக நீர் தேவையில்லாத ஈரப் பதமுள்ள பகுதிகளில் மார்கழி - தை யில் துவங்கி சித்திரை வைகாசியில் அறுவடை .. 120 நாட்கள் .. இது மானாவாரிப் (நவரை) பட்டம்..
தை மாத அறுவடைக்குப் பின் முந்தைய பயிர்களின் அடித்தாள்களில் இருந்து மீண்டும் பயிர் தழைக்கின்றது.. இதைத் தக்கபடி பாதுகாத்தால் மூன்று மாதங்களில் ஓரளவுக்கு வீடு வந்து சேரும்..
இந்த வருடம் காவிரியில் நீர் ஓட்டம் குறைந்து மார்கழி - தை யிலேயே ஒடுங்கி விட்டது..
கார்த்திகையிலேயே காவிரியில் நீர் பற்றாக்குறை..
சாகுபடி வேலைகளுக்குள் அரசியல் புகுந்து கொண்டதால் ஆட்கள் கிடைப்பதில்லை..
தொட்டதற்கும் இயந்திரங்கள் வேண்டி இருப்பதால் செலவிற்கும் வரவிற்கும் ஒத்து வருவதில்லை..
வந்த வரைக்கும் ஆதாயம் என்று வயல்வெளிகள் விற்பனையாகி விடுகின்றன..
அந்த நகர் இந்த நகர் என்று பற்பல பெயர்களில் வீட்டு மனைகளாகி விடுகின்றன..
தண் செய் எனப்பட்ட தஞ்சை சுற்றிலும் காலி மனைகள் ஆவதைப் பார்க்கும் போது மனம் வலிக்கின்றது..
தஞ்சையின் நன்செய் நிலப்பரப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைகின்றது என்பது வேதனையான உண்மை..
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ..
என்பது கோளறு திருப் பதிகத்தில் ஞானசம்பந்தப் பெருமானின் திருக்குறிப்பு..
செந்நெல்லும் கரும்பும் சோலைகளும் நிறைந்து விளைந்தாலே செம்பொன் எங்கும் நிறையும் என்பது பெருமானின் திருவாக்கு..
இன்று அவ்வாறு இல்லாமல் போனது எதனால்?..
செந்நெல்
என்று - தேவாரத் திருப்பதிகங்கள்
பலவற்றில் பயின்று வந்தாலும்
முத்தாக மூன்று
திருப்பாடல்கள்
இன்றைய பதிவில்..
**
தென்குடித்திட்டை
முன்னை நான்மறையவை முறைமுறை குறையொடும்
தன்ன தாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்து அடி வருட நல்
செந்நெல் ஆர் வளவயல் தென்குடித் திட்டையே..3/35/1
-: திருஞானசம்பந்தர் :-
திருக்கோளிலி
(திருக்குவளை)
முன்னமே நினையா தொழிந்தேன் உனை
இன்னம் நானுன சேவடி ஏத்திலேன்
செந்நெல் ஆர்வயல் சூழ் திருக்கோளிலி
மன்னனே அடியேனை மறவலே..5/57/1
-: திருநாவுக்கரசர் :-
திருத்தினை நகர்
(தீர்த்தநகரி)
தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
தவம் முயன்று அவமாயின பேசிப்
பின்னலார் சடை கட்டி என்பு அணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரித்து நிற்க
முன்னெலாம் முழு முதலென்று வானோர்
மூர்த்தி ஆகிய முதல்வன் தன்னைச்
செந்நெல் ஆர்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே.. 7/64/7
-: சுந்தரர்:-
தேடலில் துணை
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
நன்றி
வேளாண் துறை
தஞ்சாவூர்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
ஆழ்ந்ததொரு பெருமூச்சை உண்டாக்கும் செய்திகள். பதிவில் உங்கள் உழைப்பு தெரிகிறது. அதுவும் அலைபேசியிலேயே கைவலியுடன் தட்டச்சி.....
பதிலளிநீக்குநான் வளர்ந்த நாட்களில் கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டவைகளை வேளாண் துறையின் தகவல் குறிப்புகளுடன் தந்திருக்கின்றேன்..
நீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
தங்களது தகவல்கள் பிரமிக்க வைத்தது ஜி.
பதிலளிநீக்குதங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி..
மிக அருமையான பதிவு, படங்களும் செய்திகளும் பதிகமும் அருமை.
பதிலளிநீக்குதஞ்சை வளம் நாளுக்கு நாள் குறைந்து வருவது வருத்தமே! எல்லோருக்கும் வீடு வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அனைவருக்கும் உணவு வேண்டும் என்ற நினைப்பு வரும் போது என்ன செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
பதிகங்களை பாடி வனங்கி கொண்டேன்.
அன்னலட்சுமி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க அருள்புரிய வேண்டும்.
// எல்லோருக்கும் வீடு வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் உணவு வேண்டும் என்ற நினைப்பு வரும் போது என்ன செய்வார்கள் என்று நினைக்கிறேன்.///
நானும் இப்படித்தான் நினைக்கின்றேன்..
தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
'செந்நெல் ஆர்வயல் சூழ் " படிக்கவே இனிக்கிறது. . ...வயிறும் நிறைகிறது அந்தக்கால மண்பானை நெல் அவித்து இடித்து ,கைக் குத்து அரிசியும் ,மண் பானை மணக்கும் சிவப்புச் சோறும் நினைவில்....
பதிலளிநீக்குவயல் நிலங்கள் காணாமல் போவது கவலையே.