நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 15, 2024

சொல்மாலை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 2 
திங்கட்கிழமை

சென்ற ஆண்டு 
உடல் நலிவுற்று இருந்த போது 
புனையப்பட்ட சொல் மாலை... 
இதனை இப்போது சமர்ப்பிப்பதில் 
மகிழ்ச்சி எய்துகின்றேன்..
 

மணி மாடசாமி என
அணிகொண்ட அருள் தீபம்
பணிகின்ற நெஞ்சினில்
பிணிதீர்க்கும் ஒளிதீபமே.. 1

கொடி மாடசாமி என
மடிகாக்கும் மணிதீபம்
தடி கொண்டு தடை நீக்கி
குடிகாக்கும் சிவதீபமே..2

படிவாசல் வந்தார்க்கு
விடிவெள்ளி எனவந்து
பிடிசோறு தந்தருளும்
முடிகொண்ட குலதீபமே.. 3

சித்ரம் எனும் ரூபத்தில்
ஆனந்தத் திருமூர்த்தி
உக்ரகாளி அவள்தந்த
பாலன் அல்லவோ..4

திக்கெலாம் நீ காக்க 
திருவடிகள் போற்றி ஐயா
தீமைகளை நீ தீர்க்க
திருப்பெயர் போற்றி  ஐயா..5


ஆறளவு நூறளவு
அருள்கின்ற தளவாய்நீ
பூ அளவு என்றாலும்
பொன்னளவு தரும் சாமியே.. 6

மந்திரமும் தந்திரமும்
நலந் தரும் தவமணி
யந்திரமும் சுந்தரமும்
சுகந் தரும் சிவமணி நீ..7

அஞ்சுகிற முகம் கண்டு
ஆதரிக்க வாருமே
துன்பங்கள் தொலைந்திட
துணையாகி வாரும் ஐயா..8


பேச்சியம்மன் பேர் இருக்க
பேய் பிணிகள் சிதறுமே
இசக்கியம்மன் அருகிருக்க
இன்னல் அகன்றோடுமே..9


குமரியின் எல்லையில்
கொடி கொண்டு நின்றாலும்
குரல் கேட்டு குறை 
தீர்க்கும் தெய்வமகனே..10

முத்தையன் கோயிலில்
முறை காக்கும் முன்னரசு
முன் நின்று முறை சொல்ல
குறை தீர்க்கும் தென்னரசனே.. 11

ஆற்றாது அழுதார்க்கு
அருள்காட்டும் நல்லரசு
துன்புற்று தொழுதார்க்கு
துணையாகும் வல்லரசுநீ..12

வேட்டைக்குச் செல்கின்ற
வித்தகனை நான் பாடி
கோட்டைக்குள் வந்தேனே
வாழ்வெனும் ஒளிதேடி.. 13

நாயகனே உன் வாசல்
தாயகம் என்றிடக்
குறையென்று ஏதும் இல்லை
பகையென்று ஏதும் இலையே..14

குன்றாத குணம் தந்து
குறையாத நலம் தந்து
நானென்று முன்நின்று
என்றென்றும் காப்பாற்றுமே 15


வந்தாரை வரவேற்று
வழிகாட்டும் ஜோதிமணி
நடைவழியில் துணையாகி
நலங்காட்டும் ஞானமணிநீ..16


ஆதிசிவ சக்திமகன்
அலங்காரத் திருக்கோலம்
ஆதரவும் ஆறுதலும்
அருளான எழிற்கோலமே .. 17

எங்கெங்கும் திகழ்கின்ற
எங்கள் குல நாயகனே
மங்கலங்கள் தருகின்ற
மலரடிகள் போற்றி ஐயா.. 18


அன்பென்னும் ஆதரவில்
ஐம்புலனும் வாழுமே
ஆசையுடன் வாரும் ஐயா
அருள்தரவே வாரும் ஐயா..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. அருளுவதில் ஐயனுக்கு தடையிருக்காது பொருள்கொண்ட பாமாலை படித்துணர்ந்தபின்னே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. மணி மாடசாமி பாமாலை அருமை. பிணிகளை போக்கி அன்பும், ஆதரவும் தர வேண்டும்.
    புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ அருள் தர வேண்டும்.
    அலங்கார திருக்கோலம் படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///புத்தாண்டில் அனைவரும் நலமுடன் வாழ அருள் தர வேண்டும்.///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  3. அருமையான பாமாலை படித்து இன்புற்றோம்.

    அவனருள் அனைவர்க்கும் கிடைக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..