நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 08, 2022

நாவல் பழம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நாவலந்தீவு..

வைதீகச் சடங்குகளின்  சங்கல்ப மந்திரங்களில் ஜம்பு த்வீபே, பரத கண்டே"
என்றெல்லாம் சொல்வார்கள்..
பாரத மண்ணிற்கு வேத காலத்தில் வழங்கப்பட்ட  பெயர் - ஜம்புத்வீபம்.. 


தமிழில் நாவலந்தீவு..
ஜம்பு என்றால் நாவல் பழம்.. நாவல் மரங்கள் எங்கெங்கும் நிறைந்து இருந்ததால் நாவலந்தீவு.. 

சங்க இலக்கியங்கள் பலவும் நாவலந்தீவு என்று பேசுகின்றன..

நாவலந்தீவகத்தினுக்கு நாதர் ஆன காவலரே ஏவி விடுத்தாரேனும்.. (6/98)

- என்றும்,

நாவலம் பெருந்தீவினில்
வாழ்பவர் வந்து வணங்கி.. (5/52)

- என்றும், 
அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிட்டுச் சொல்கின்றார்..

நாவலந்தேயம் என்பதும் சொல்வழக்கு.. 

ஸ்ரீவிநாயகப் பெருமானுக்கு நிவேதனம் செய்யப்படும் பழங்களுள் இதுவும் ஒன்று..

ஔவையாருக்கு முருகப் பெருமான் நாவற்பழம் கொடுத்த சம்பவம் அனைவருக்கும் தெரியும்..

மணிமேகலை அமுதசுரபியை பெற்றதும் முதல் கவளத்தைக் கொடுத்தது தீராப் பசிப்பிணியுடன் தவித்திருந்த காயசண்டிகை எனும் கந்தர்வப் பெண்ணுக்கு.. 

இவள் - முனிவர் ஒருவர் தான் உண்பதற்கு என்று வைத்திருந்த நாவல் பழத்தைக் கணவனின் சொல்லையும் மீறி - காலால் சிதைத்ததற்காக சாபம் பெற்றவள்..

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகிய திருவானைக்காவின் தல மரம் நாவல்.. 

கையிலாய தரிசனத்திற்குச் சென்ற முனிவர் ஒருவருக்குப்  பிரசாதமாக இறைவன்
நாவல் பழத்தைக் கொடுத்தார்..  கயிலாயத்தில்
நாவல் பழத்தின் விதையை
உமிழ்வதற்கு அஞ்சிய முனிவர் அப்படியே பழத்தை விழுங்கி விட்டார்.. அது முனிவரின் உச்சந்தலை வழியே  முளைத்துவிட்டது.. "இனி நான் செய்வது என்ன?.." - என்று  முனிவர் கேட்டபோது இறைவன் கூறினான் - 

" காவிரிக் கரையில் தவம் இருக்கவும்!.. " - என்று..


அவ்வாறே முனிவர் தவமிருந்தபோது முனிவரின் தலையில் முளைத்த விதை பெரிய விருட்சமாகி விட்டது..
பின்னாளில் அந்த நாவல் மரத்தின் நிழலில் தான் அம்பிகை சிவபூஜை செய்து தவமிருக்க வந்தாள்..


அந்த மரத்தின் சருகுகள் சிவலிங்கத்தின் மீது விழாமல் இருப்பதற்காக சிலந்தி ஒன்று லிங்கத்திற்கு மேலாக வலை ஒன்றினைப் பின்னி வைத்தது.. சிவலிங்கத்திற்கு மேலாக சிலந்தி வலைக்குள் சருகுகள் சிக்கி கொண்டு இருப்பதைக் காணச் சகிக்காத யானை ஒன்று அதை பிய்த்துப் போட்டது..

சிலந்திக்கும் யானைக்கும் மோதல் உண்டாயிற்று.. துதிக்கையினுள் புகுந்து கடித்து வைத்தது சிலந்தி.. விஷத்தின் வேகத்தினால் யானை தரையில் மோதிக் கொண்டு வீழ்ந்து இறந்தது.. யானை மோட்சம் எய்தியது.. சிலந்தியோ சோழர் குலத்தில்  மன்னனாகப் பிறந்தது..

அறுபத்து மூவருள் ஒருவராகிய
கோச்செங்கணான் என்ற அந்த மன்னர் பிறந்ததே ஒரு திவ்ய சரித்திரம்.. அதை மற்றொரு சமயத்தில் பார்க்கலாம்...

எழுபத்தெட்டு மாடக்கோயில்களை
கோச்செங்கட் சோழர் கட்டியதாக அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுகின்றார்.. இந்த மன்னர் பிரான் பிறப்பதற்கான காரணம் - நாவல் மரம்..

நாவல் மரம் தல விருட்சமாக விளங்கும் இன்னொரு தலம் திரு நாவலூர்.. இவ்வூரில் தான் ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தோன்றினார்..

இப்படியான பல சிறப்புகளை உடைய நாவல் பழம் பழுத்து உதிரும் காலம் இது..

அன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு - நவீன சாக்லேட்டுகள் விற்பனைக்கு வராத காலத்தில் பள்ளிப் பிள்ளைகள் விரும்பித் தின்பவற்றுள் நாவல் பழமும் ஒன்று..

அந்நாளில் பள்ளிக் கூடங்களுக்கு அருகில் ஐந்து பைசாவிற்கும் பத்துப் பைசாவிற்கும் சிரிப்பாய் சிரித்துக் கிடந்த நாவல் பழத்திற்குள் ஒரு மருத்துவம் ஒளிந்து கொண்டிருப்பது அவ்வளவாக யாருக்கும் தெரியாது..

நாவல் பழத்தின் ஜம்போலின் எனும் மூலக்கூறு - நாம் கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுகளை உட்கொண்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரையை நிர்வகிக்கின்றது என்பதைக்  கண்டறிந்துள்ளனர்..
நாவல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது.. நாவல் பழத்தின் கொட்டையும் புற்றுநோய் தடுப்பாக விளங்குகின்றது என்பது சிறப்பு அம்சம் ..

வீட்டுக்கு வீடு சர்க்கரை நோயாளிகள் என்றாகி விட்ட இந்த கால கட்டத்தில் அந்த ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் - 
இங்கே தஞ்சையில் ஒரு கிலோ நாவல் பழம் இருநூறு ரூபாய்.. சிங்காரச் சென்னை போன்ற பெரு நகரங்களில் என்ன விலைக்கு விற்கின்றார்களோ!..

அப்போதெல்லாம் பள்ளியில் சக தோழியருக்காக நாவல் மரத்தில் ஏறி பழங்களைப் பறித்துத் தருபவன் மகா வீரன்.. அந்த சாகசத்தில்  மரத்திலிருந்து விழுந்து கை கால்களில் அடிபட்டுக் கொள்வதோடு வீட்டில் உதை வாங்குவதும் உண்டு.. இருந்தாலும் கடைக்கண் பார்வை - அது ஒன்று போதுமே!..


நேற்று மருத்துவ ஆலோசனைக்குச் சென்று விட்டு வரும்  வழியில் கால் கிலோ வாங்கியதற்காக இந்த 
நாவல் பழ புராணம்..
*
நாவல் பழம் வாழ்க..
இயற்கை மருத்துவம் வாழ்க..
***

24 கருத்துகள்:

  1. நல்ல விவரணம்.  நாவல் பழத்தை வைத்து ஒரு நாவலே எழுதலாம் போல...  கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் ஆழ்வார்க்கடியான் பார்த்துக் கொண்டிருக்கும்போது மக்கள் "நாவலோ நாவல்..  நாவலோ நாவல்" என்று கூவுவார்கள் என்று .எழுதி இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நாவலோ நாவல்" என்று கூவுவது ஒருவரை விவாதத்துக்கு அழைப்பதற்கும், அவரை வென்ற பின்னர் நாவல் மரக்கிளையை நட்டுவிட்டுப் பிறரிடம் அறிவித்து மேலும் யாரானும் இருக்காங்களா என அறிவதற்கும். பொன்னியின் செல்வனில் கூட ஆழ்வார்க்கடியான் சைவர்களோடு விவாதிக்கும் சம்யம் இப்படிக்கூவுவதாகக் கல்கி எழுதி இருப்பார். மணிபல்லவம் என்னும் நா.பார்த்தசாரதி எழுதின நாவலிலும் அடிக்கடி வரும். கதாநாயகனின் நண்பனின் தங்கை முல்லை தன் காதலனிடம் தான் தோற்றதை எண்ணி வருந்தும்போது அனைவரிடமும் வெற்றி பெற்று நாவலோ நாவல் எனக் கூவியவள் தன் காதலனிடம் தோற்றுவிட்டதை மறைமுகமாக அறிவிக்க நாவல் மாக்கிளையை அகற்றுவாள். இது நாவலின் கடைசி அத்தியாயம்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      மேலதிகச்செய்திகள் சிறப்பு.. மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  2. நாவல் பழத்தை விட அதன் விதையில்தான் சர்க்கரைக்கான மருத்துவ குணம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  எங்கள் வீட்டில் என் சகோதரிகளுக்கு நாவல் பழம் பிடிக்கும்.  எனக்குப் பிடிக்காது. (எனக்குதான் நல்லதே பிடிப்பதில்லையே..!!) பழத்தின் சாறு வெள்ளை சட்டையில் பட்டால் கறையாகி விடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாவல் பழத்தை விட அதன் விதையே மருத்துவ குணம் மிக்கது.. உண்மை..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் வாழ்த்துரைக்கு கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. சின்ன வயசில் நாவல் பழம் சாப்பிடக் கொள்ளை ஆசை. அப்பா கிருஷ்ண ஜயந்திக்கும், பிள்ளையார் சதுர்த்திக்கும் மட்டுமே வாங்குவார். சுமார் பத்துப்பழங்கள் இருக்கும். அதைப் பங்கிடும்போது பெண் என்பதால் எனக்கு 2 அல்லது 3 தான் கிடைக்கும். அண்ணா தம்பிக்கு ஆளுக்கு நான்கு! அதுக்கே அடிச்சுப்போம். பின்னர் வந்த நாட்களில் வடக்கேயும் சரி, தமிழகத்திலும் சரி நாவல் பழங்களை வாங்கிச் சாப்பிடுபவர்களைப் பார்த்து வாய் பிளந்தது உண்டு. இப்போ நாவல் பழம் சாப்பிட முடியாது. காசியில் விட்டுவிட்ட பழம் அது. எங்களுக்குப் புரோகிதம் செய்து வைத்தவர் நாவல் பழம் முக்கியமான பழம் என்பதால் அதையே விடச் சொன்னார். நாவல் பழப் புராணம் அருமை. நாவல் கொட்டையிலும் மருத்துவத் தன்மை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      மலரும் நினைவுகளைத் தந்ததற்கும்
      அன்பின் கருத்துரைக்கும் நன்றியக்கா..

      நீக்கு
    2. இயற்கை மருத்துவத்தை வழிபாட்டு முறையுடன் கொடுத்ததே நமது தர்மம்

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நாவல் பழத்தை பற்றிய புராணம் மிக நன்றாக உள்ளது. நாவல் பழம் வரலெட்சுமி விரதத்திற்கும், கிருஷ்ண ஜெயந்திக்கும் விநாயக சதுர்த்தி பூஜைகளுக்கும் வாங்குவோம். கிருஷ்ணருக்கு உகந்த பழம் என்பதால் இந்தப்பழம் பூஜை யில் கண்டிப்பாக இல்லாமல் போகாது. இதன் மருத்துவ குணங்களைப்பற்றி அறிந்து கொண்டேன். இங்கும் கிடைக்கிறது. இப்போது சீசன் அல்லவா? வாங்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      விரதங்களுக்கு உகந்த பழம் இது.. உள்ளத்திற்கும் உடலுக்கும் ஒருசேர நன்மை..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. நாவல்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும் நேற்று கடையில் பார்த்து விலை கேட்டேன் கிலோ 140 ரூபாய் கால் கிலோ கேட்டேன் தருவதற்கு நேரமாகிறது.

    ஆனால் ஈ அதிகமாக மொய்த்தது கழுவி சாப்பிடலாம் என்றாலும் மிகவும் கசிந்த பழம் ஆகவே வாங்காமல் வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் விலை 160 ரூபாய்

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      ஈ மொய்த்த பழங்களைத் தவிர்த்தது நல்லதே..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி ஜி..

      நீக்கு
    3. //விலை 160 ரூபாய்//

      பேசி வைத்துக் கொண்டு விற்கின்றார்கள் ஜி..

      எப்படியோ..
      நமக்கு நல்லது..

      நீக்கு
  6. நாவ பழ விவரங்கள் மிகவும் நன்று. இதற்கு இப்படியான புராண வரலாறு இருக்கிறது என்பதும் இப்போதுதான் தெரிகிறது.

    நேற்று நம் வீட்டில் நாவல்பழம். மிகவும் பிடிக்கும். சர்க்கரைவியாதிக்கு நல்லது குறிப்பாக அதன் கொட்டைகள் என்று சொல்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இயற்கை நலம் பேணுவோம்..

      அன்பின் கருத்துரைக்கு நன்றி சகோ..

      நீக்கு
  7. செந்நாரைம, ஜம்பு நாரை என்றும் வழங்கப்படுகிறது என்பதற்கான காரணம் இப்போது புரிந்தது. என் பதிவில் அது எதனால் என்று கேட்டிருந்தேன்.

    ஜம்பு - நாவல்பழம். இந்த நாரையின் நிறம் சூரிய ஒளியில் நாவல்பழ நிறம் பளிச்சென்று தெரிவதால் என்று புரிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      மேலதிக செய்திகளுக்கும்
      அன்பின் கருத்துரைக்கும் நன்றி சகோ..

      நீக்கு
  8. நாவல் பழ புராணகதைகள் நன்றாக இருக்கிறது.
    சுட்டபழம் வேண்டுமா,?சுடாதபழம் வேண்டுமா? என்று முருகன் பாட்டியிடம் கேட்டதை மறக்க முடியுமா?
    நாவல்பழம் விலை அதிகம். முன்பை விட இப்போது நன்றாக கிடைக்கிறது.
    எங்கள் குடியிருப்பு வளாகத்தில் இரண்டு நாவல் மரம் இருக்கிறது. பறவைகள் தான் கொத்தி கீழே போடுகிறது.
    மருத்துவரை பார்த்து வந்தது அறிந்தேன், நலமாகி வருவீர்கள் என்று நினைக்கிறேன்.

    இளமைகால நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நாவல் பழத்தை மறக்கத் தான் முடியுமா?..

      அன்பின் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி..

      நீக்கு
  9. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

      நீக்கு
  10. நாவல் பழ புராணம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..