நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 03, 2022

திருவிளையாடல்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சாய்ந்த கொண்டையும் திரு
முடிச் சாத்தும் வாள் வயிரம் வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் 
வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும் ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப.. 2836.
- திருவிளையாடற்புராணம்.

ஒரு புறமாகச் சாய்ந்த கொண்டையுடன் தலைப் பாகை கட்டி ஒளி மிகுந்த வைரங்களைப் பதித்த கண்டிகைகள் வீர வளைகள் குண்டலங்கள் ஆகிய ஆபரணங்களை அணிந்தவனாக வினைகளைத் தீர்க்கும் திருநீற்றினை மூன்று கீற்றுகளாக நெற்றியில் இட்டுக் கொண்டு வெள்ளிய மேலாடையுடன் கவசமும் தரித்து மெய்ப்பொருளை ஆராய்ந்து அறிந்த தொண்டர்களின்
உள்ளத்தினின்று நீங்காது வீசும் அழகினைப் போல - குதிரைச் சேவகனாகி வந்தான்..

வந்தவன் யார்?..

எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமான்!..

யாருக்காக வந்தான்.. எதற்காக வந்தான்?..

பாண்டிய நாட்டின் முதலமைச்சர் திருவாதவூரிடம் பேசிக் கொண்டபடிக்கு வெளிதேசத்துப் புரவிகளைக் கை மாற்றிக் கொடுப்பதற்காக திருமுடிச்சாத்து எனும் தலைப்பாகையுடன் குதிரைச் சேவகனாக சாய்ந்த கொண்டையுடன் மதுரையம்பதிக்கு வந்ததாக திருவிளையாடற் புராணம் இயம்புகின்றது..


றைவனே குதிரைச் சேவகனாக வருகின்ற அளவுக்கு  திருவாதவூரர் பெரிய ஆளா?..

ஆமாம்.. பின்னாளில் இறைவன் இவரை த் தேடிவந்து ஆட்கொள்ள இருப்பதை அறிந்திராத அரிமர்த்தன பாண்டியன் இவரது ஊரான திருவாதவூருக்கே சென்று தக்க மரியாதைகளுடன் மதுரைக்கு அழைத்து வந்து  தனது அமைச்சர் குழாத்தினுக்கு முதல்வர் என்று ஆக்கி வைத்தான்.. அதற்கான காரணம் வாதவூரர் கற்றிருந்த கல்வி!.. 

ஆய கலைகள் அனைத்தினையும் அவர் ஓதி உணர்ந்தபோது அவருடைய வயது பதினாறு..


அதனால் தான்,

வார்கடல் உலகினில் 
யானை முதலா எறும்பு ஈறாய
ஊனமில் யோனியின் உள்வினை பிழைத்தும்
மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் 
இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈரிரு திங்களிற் பேரிருள் பிழைத்தும்
அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களின் ஊறலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டுத் திங்களிற் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும்
தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்...




- என்று, கர்ப்பத்தில் உயிர்க்கும் சிசுவின் நிலைகளை தெய்வத்திற்கு வழி காட்டும் பனுவலில் பாடி வைக்க முடிந்தது..

அது மட்டுமா!..

இறைவனின் தன்மையைக் கூறும்போது -

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
இல்நுழை கதிரில் துன்அணுப் புரையச்
சிறிய வாகப் பெரியோன்..


அண்டத்தில் பெருக்கமாகி நூற்றொரு கோடிக்கும் மேற்பட்டு நின்று  விளங்குபவை எல்லாம் ஒளித் துகள்களாகத் தெரியும்படிக்கு பிரம்மாண்டமானவன் இறைவன் என்று போற்றுவதோடு வான மண்டலத்தையும் அளக்கின்றார்..

நாடு பிடிக்க வந்தவர்கள் நம்மை அடிமை கொண்டு அவர்களது அறிவை இங்கே கடை விரிப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முகில்கள் திரள்வதையும் மழை பொழிவதையும் நீர் வளத்தையும் நில வளத்தையும் பாடிப் பரவியிருக்கின்றார்..

இயற்கை கூர் நோக்கல் அவர்தம் திருவாசகத்தில் விரவிக் கிடக்கின்றது..

இதற்கிடையில் ,
இறைவன் பாண்டியனுக்குக் கை மாற்றிக் கொடுத்த குதிரைகள் அன்று காலைப் பொழுது வரை நரிகளாக இருந்தவை என்பதும் அன்று இரவு அவை மீண்டும்  நரிகளாகி அங்கிருந்த பழைய குதிரைகளைக் கடித்து வைத்து விட்டு ஓடிப் போனதும் அதன் பிறகு அரச நிதிக்குவையை மோசம் செய்தார் என - வாதவூரரை பாண்டியன் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தி
வைகையின் சுடு மணலில் தள்ளிப் புரட்டியதும் 


அதன் பொருட்டு  வைகை நதியில் வெள்ளம் ஏற்பட்டு கரை உடைத்துக் கொண்டதும் அதனை அடைப்பதற்கு வேலையாளாக வந்த இறைவன் வந்தியம்மையிடம் கூலியாக பிட்டு வாங்கி உண்டு விட்டு வேலை செய்யாமல் படுத்துத் தூங்கி விட்டு பாண்டியனிடம் பிரம்படி பட்டு அதன் வலியை அனைவரும் அனுபவிக்கும்படி செய்ததோடு மன்னனுக்கும் மற்றவர்க்கும் உண்மையை உணர்த்தி வந்தியம்மைக்கு முக்தியளித்து விட்டு தன்னுரு கரந்ததும் பற்பல தத்துவங்களைச் சொல்லுகின்ற திருவிளையாடல்கள்..

பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந் துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன் மேனி பாடுதுங்காண் அம்மானாய்..
*

உலகியலில் -

இளங்கன்னியரின் கூர்த்த நயனக் கொள்ளையில் இருந்தும்

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏற்றிக் கொண்டவர்களிடம் இருந்தும்

தத்தம் மதங்களே சிறந்து அமைவதாக அரற்றிக் கொண்டு அலைந்து திரிந்த பல்வேறுபட்ட சமயவாதிகளிடம் இருந்தும் - 

இன்னும் பலவற்றில் இருந்தும் தப்பிப் பிழைத்து செந்நெறியாகிய சிவநெறியில் நின்றவர்..

அதனால் அன்றோ -
அவருக்குக் குருவாக குருந்த மரத்தின் கீழ் இறைவன் வந்தமர்ந்து தடுத்தாட்கொண்டு
அருளினன்..

இப்படியான பெருமைகளை உடைய 

ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் ஈசனோடு ஜோதியாய்க் கலந்த நாள் இன்று..


இன்று ஆனி மகம்..
ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமானது திருவடிகளைத் தலைமேற்கொண்டு போற்றி வணங்குவோம்..


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவ பதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவ தினியே..

ஸ்ரீ மாணிக்கவாசகர் 
திருவடிகள் போற்றி போற்றி!..
*

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

17 கருத்துகள்:

  1. சிறப்பான பதிவு.  மிகச்சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாடலில் இருந்தே கருவின் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையைச் சொல்லியதும் புரிந்து கொள்ள முடிகிறது. அது போல அண்டப் பகுதியின் உண்டைப் பெருக்கம் அண்டம் விரிவடைவதைப் பற்றி கூறியிருப்பதையும் கருந்துளை பற்றிய ஆய்வில் இதையும் ஒப்பீடு செய்திருப்பார்கள்.

    பதிவு அருமை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. விரிவான கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன. சிவ தரிசனம் பெற்றுக் கொண்டேன். ஸ்ரீ மாணிக்கவாசகரின் தேவார பாடல்களும், கதைகளும் படித்துக் கொண்டேன்.

    அவர் இறைவனுடன் இரண்டற கலந்த இந்நாளில் அவர் திருவடிகளை போற்றுவோமாக.... அடியார்களை வணங்கி பணிவதே ஆண்டவனை பணிவதற்கு சமம் என்ற கூற்றை மறவாது இன்றைய தினத்தில் நல்ல பதிவை தந்த தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீ மாணிக்க வாசகரைப் போற்றுவோம்..

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. இறைவனின் திருவிளையாடல்களை தங்களால் அறிந்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி ஜி ..

      நீக்கு
  5. ஆனி மகத் திருநாள் வாழ்த்துகள்.
    'நரிகள் பரிகளாயின 'என சிறுவயதில் படித்தபோது மிகுந்த வியப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. அருமையான பதிவு. இன்னிக்கு இங்கேயும் மக நக்ஷத்திர வழிபாடு என்பதால் நிவேதனங்கள் பண்ணி விநியோகம் செய்து முடித்து உட்காரும்போது மணி ஒன்றாகி விட்டது. ஆதலால் காலையிலிருந்து இணையத்தில் உட்காரவே முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  7. கருவின் நிலைகள் குறித்த பாடலை என்னால் அதன் வண்ணத்தின் கலவை காரணமாகப் படிக்க முடியலை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...
      தற்போது தங்கள் வசதிக்கு வண்ணங்களை மாற்றி விட்டேன்.. சுட்டிக் காட்டியதற்கு நன்றியக்கா..

      நீக்கு
    2. இது படிக்க வசதியாக இருந்தது. மிக்க நன்றி. _/\_

      நீக்கு
    3. மகிழ்ச்சி.. நன்றியக்கா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..