நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 05, 2019

ஏழூர் தரிசனம் 9

திருப்பழனத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்கெல்லாம் திருஐயாற்றுக்கு வந்து சேர்ந்து விட்டோம்...

எப்போதும் தெற்கு வாசல் வழியாகத்தான் திருக்கோயிலுக்குள் நுழையும் வழக்கம்...

ஏனெனில் தெற்கு வாசலில் 1300 ஆண்டுகளுக்கு மேலாக - திருநாவுக்கரசர் காலத்திலிருந்து புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தில் குங்கிலியம் இட்டு ராஜகோபுரத்தின் மேற்புறம் ஸ்ரீ ஆட்கொண்டார் என விளங்கும் துவார பாலகரை வணங்கி விட்டுத் தான் கோயிலுக்குள் நுழைவது..

இது தான் இங்கு சம்பிரதாயம்...


ஸ்ரீ ஆட்கொண்டார் ஸ்வாமி  
ஸ்ரீ ஆட்கொண்டார் - யம பயம் நீக்குபவர்...
துவாரபாலகர் .. எனினும் சிவாம்சம் பெற்றவர்..
அதனால் தான் இவருக்கு முன்பாக நந்தி விளங்குகின்றது..


காவிரியின் பூசப் படித்துறை 
தெற்கு வாசலுக்கு நேராக 200 மீட்டர் தூரத்தில் காவிரி..
புஷ்ய மண்டபம் எனப்படும் பூசப் படித்துறை..

காசிக்குச் சமமான திரு ஐயாற்றின் காவிரியில்
நீத்தார் கடன்கள் நிறைவேற்றப்படும் இடம் இது தான்...


கிழக்கு ராஜகோபுரம் 
குங்கிலியக் குண்டம்.. தாள்களையும் உள்ளே போடுவதால் பற்றிக் கொண்டு எரிகின்றது
1300 ஆண்டுகளுக்கு மேலாக - புகைந்து கொண்டிருக்கும் குண்டத்தை அமைத்தவர் குங்கிலியக் கலய நாயனார்...

இவர் திருக்கடவூரைச் சேர்ந்தவர்...
சிவனடியார்களுக்கு அமுது செய்விப்பதுடன் திருக்கோயில்களில் குங்கிலியத் தூபம் இடும் திருப்பணியையும் செய்தவர்...

அதனால் பெருஞ்செல்வத்தை இழந்து வறுமையுற்றவர்...

குடந்தையிலிருந்து அணைக்கரை செல்லும் வழியிலுள்ள
திருப்பனந்தாள் எனும் திருத்தலத்தில் -

தடாதகை என்னும் சிறுபெண் சிவபூஜை செய்து சிவலிங்கத்திற்கு மாலை அணிவிக்கும்போது ஆடை நழுவ பரிதவித்துப் போனாள்...

கையில் எடுத்த மாலையைக் கீழே வைப்பதா?.. அபசாரமாயிற்றே!..

கண் இமைக்கும் பொழுதில் ஈசன் எம்பெருமான் சிரம் தாழ்த்தி
அந்தப் பெண்ணின் கையிலிருந்த மாலையை ஏற்றுக் கொண்டான்..

அப்போது சரிந்த பாணம் அதன் பிறகு நிமிரவில்லை...
நிமிர்த்த முயன்றோரெல்லாம் தோற்றுப் போயினர்...

செய்தியறிந்த குங்கிலியக் கலயர் கோயிலுக்கு வந்து பட்டு நூலின் ஒரு முனையை சிவலிங்கத்தின் பாணத்திலும் மறுமுனையை தன் கழுத்திலும் கட்டிக் கொண்டு இழுக்க பாணம் பழைய நிலையை அடைந்தது...

அத்தகைய சிறப்புடையவர் குங்கிலியக் கலயர்...

திருப்பூந்துருத்தியைப் போலவே திருக்கடவூரிலும்
அப்பர் பெருமானும் ஞானசம்பந்த மூர்த்தியும் ஒருங்கே தரிசனம் செய்துள்ளனர்...

அப்போது - அப்பெருமக்கள் இருவருக்கும் குங்கிலியக் கலயர்
அமுது செய்வித்திருக்கின்றார் என்பது இன்னொரு சிறப்பு...

இத்தன்மையராகிய குங்கிலியக் கலயர் அமைத்தது தான்
திரு ஐயாறு கோயில் வாசலில் உள்ள குண்டம்...

மழைக்காலத்தில் குண்டத்தின் மீதாக கீற்றுப் பந்தல் அமைத்திருப்பர்..

சாரல் தூறல் விழுந்தாலும் குண்டம் புகைந்து கொண்டு தான் இருக்கும்...

அத்தகைய தெற்கு வாசல் சாலையை தற்காலிக ஒரு வழிப் பாதையாக காவல் துறையினர் ஒழுங்கு செய்திருந்தனர்...

திருநெய்த்தானத்திலிருந்து வரும்போதே இதைக் கவனித்திருந்ததால்
நேராக கீழைக் கோபுர வாசலுக்குச் சென்று விட்டோம்...

ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்தி விட்டு
பஞ்சநதீஸ்வரத்துள் புகுந்தோம்...

வெளியூர் பக்தர்களால் நிறைந்திருந்தது திருக்கோயில்...

ஆங்காங்கே சித்ரான்னமும் குடிநீரும் வழங்கிக் கொண்டிருந்தார்கள்..

தேவார பாராயணங்களும் சிவகண வாத்திய முழக்கங்களும்
மெய்மறக்க செய்து கொண்டிருந்தன...

பெண்கள் பலரும் திருக்கோயில் வளாகத்தைத் துப்புரவு செய்து கொண்டிருந்தனர்...

பெருந்திரளாக மக்கள் இருந்தாலும் ஸ்வாமி தரிசனம் செய்வதில் தாமதம் இல்லை...



மேல்தள அமைப்புடன் கூடிய திருமாளிகைப் பத்தி  
ஐயாறப்பர் மூலஸ்தானம் - சண்டேசர் சந்நிதி - மேலை ராஜகோபுரம்  
செம்பொற்சோதியாகிய ஐயாறப்பரை வணங்கி - திருச்சுற்றில் வலம் வந்தோம்..

குடும்பம் குடும்பமாக - ஏராளமான சிவ தொண்டர்கள்...
இந்த சப்தஸ்தான விழாவினைத் தரிசிப்பதற்காகவே வந்தவர்கள்...

இவர்கள் எல்லாம் மறு நாள் காலையில் அனைத்துப் பல்லாக்குகளும்
இங்கு கூடுவதைக் கண்டு களிப்பதற்காக காத்திருக்கின்றார்கள்...

மக்களின் விழா என்பது இது தான்!.. - என்று மனதில் தோன்றியது..

அப்படியே வெளியே வந்து கிழக்கு முகமாக எழுந்தருளியிருக்கும்
அன்னை அறம் வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்தோம்...

கொடி மரத்தடியில் வீழ்ந்து வணங்கி விட்டு இல்லம் நோக்கிப் புறப்பட்டோம்...

குடமுருட்டியைக் கடந்து வரும் பல்லக்குகள்  
இன்றைய பதிவில் முன்பொருமுறை நான் எடுத்த படங்களுடன்
சிவனடியார் திருக்கூட்டத்தினர் வழங்கிய படங்களும் இடம் பெற்றுள்ளன...

இது வரையிலும் ஏழூர்களுக்கு எங்களுடன் பயணித்த
அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஒவ்வொரு பதிவினிலும் அன்புடன் வழங்கிய கருத்துரைகளுக்கு
தக்க சமயத்தில் பதில் அளிக்க தவறியிருக்கின்றேன்..

அதற்காக பொறுத்தருள்க...
இங்குள்ள சூழல் அப்படியாக அமைந்து விடுகின்றது!..



இதோ... மாலை மயங்கி விட்டது...
திருக்கோயில் வளாகத்தில் பிரகாசமான மின் விளக்குகள் ஒளிர்ந்தன...
அந்த வேளையில் திருக்கோயிலில் படமெடுக்க இயலவில்லை...

ஏழூர் மக்களும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரு திருவிழா...
இந்தக் கோலாகலங்களைக் காண்பதற்காக வெளியூர்களில் இருந்தும் மக்கள்..
ஒருவரையொருவர் பார்த்திராவிட்டாலும் பாசம் தவமும் முகங்கள்..
அன்பின் உபசரிப்புகள்.. அன்னதான விசேஷங்கள்...

இத்தனைக்கும் காரணம் நந்தீசன் சுயம்பிரகாஷிணி திருமணம்..

இதனை திருநெய்த்தானத்து திருப்பதிகத்தில்
நந்திக்கு அருள் செய்தாய் நீயே!.. - என்று அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்...

சப்தஸ்தான திருத்தலங்கள் அனைத்தையும்
அப்பர் பெருமான் தரிசனம் செய்து திருப்பதிகம் அருளியுள்ளார்...


வேந்தாகி விண்ணவர்க்கு மண்ணவர்க்கு நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம மலர்க்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில்
காந்தாரம் இசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாம் என்றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே!.. (1/30)
-: திருஞான சம்பந்தர் :-

ஞான சம்பந்தப்பெருமான் தமது திருப்பதிகம் முழுதும்
காவிரியையும் அதன் வளங்களையும் மக்களின் நலன்களையும்
புகழ்ந்து பாடியருள்கின்றார்..

இந்த நலங்களும் வளங்களும் நிலைக்க வேண்டும்
என்பதற்காகத் தான் ஐயாறப்பரும் அறம்வளர்த்த நாயகியும்
நந்தீசன் - சுயம்பிரகாஷிணியை அழைத்துக் கொண்டு 
ஊர் சுற்றி வருகின்றார்களோ!..  
  ***

ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெல்லாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ..(6/38)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

13 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    //எப்போதும் தெற்கு வாசல் வழியாகத்தான் //

    புதிய தகவல். நான் ஒரேமுறைதான் சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. குங்கிலியக் கலயர் சிறப்புகள் அறிந்தேன்.​ அழகிய படங்களுடனும், அறியாத தகவல்களை தந்தமைக்கு நன்றி. வேலை முதல் கடமை. எனவே பதில் அளிக்க முடியாததில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பதிவு. நேரில் தரிசனம் செய்த மகிழ்வு.
    குங்கிலியக்கலய நாயனார் வரலாறு, பாடல்கள் என்று மிகவும் அருமை.
    வரவேண்டும் வரவேண்டும் தாயே! ஒருவரம் தர வேண்டும் தரவேண்டும் நீயே! என்ற பாடல் மனதில் வந்து போகுது.
    அறவளர்த்த அம்மா! பர்வதவர்த்தினி நாட்டு மக்களுக்கு நல்லது செய் அம்மா.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  5. இன்றைய தரிசனக்காட்சிகள் நன்று வாழ்க நலம் ஜி

    பதிலளிநீக்கு
  6. நிறைவான பயணம் உங்களுடன். மகிழ்ச்சி. வழக்கம்போல விழா நிகழ்விடங்களுக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. குங்கிலியக் கலயர் செயல் மிகவும் சிறப்பு...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா அந்த மேல கோபுரம் படம் அட்டகாசம்.

    எல்லா படங்களும் செமையா இருக்கு.
    1300 வருடங்களுக்கும் மேலாகப் புகைந்து கொண்டிருக்கும் என்றால் எப்போதுமே புகைந்து கொண்டே இருக்குமோ. இந்தப் படம் முன்னரே வந்துருக்கோ அண்ணா..

    கோபுரம் படமும் செமையா இருக்கு . காவிரி ஆஹா!! என்ன அழகா இருக்கு நீர் பார்க்கும் போது...

    கடைசிப் படம் அழகான தரிசனம் அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. படங்கள் எப்போதும்போல் அருமை.

    நாம பக்தியிலும், நம்முடைய சோம்பேறித்தனத்தினால், பிளாஸ்டிக் கவரோடு கற்பூரத்தை எரிப்பதும், குங்கிலியக் குண்டத்தில் தாள்/பிளாஸ்டிக்கை எரிப்பதுமாக இருக்கிறோமோ?

    பதிலளிநீக்கு
  10. மதத்துக்கு எதிரான போக்கு நம்ம ஊரில் தொடர்ந்துகொண்டே இருந்தால், பாரம்பர்ய விழாக்கள் தொடருமா?

    பதிலளிநீக்கு
  11. ஏழூர் தரிசனம் - உங்கள் மூலம் எங்களுக்கும்.

    ஒரே ஒரு முறை இந்த திருவையாறு கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். படங்கள் பார்த்தபோது நான் எடுத்த படங்களும் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  12. படங்கள் எல்லாமும் வழக்கம்போல் அருமை. குங்கிலியக் குண்டத்தை மக்கள் பாழ் செய்யாமல் இருக்க வேண்டும். :( ஐயாறப்பன் தரிசனமும் கிடைத்து நீங்கள் சௌகரியமாக ஊர் போய்ச் சேர்ந்ததும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. திருத்தோணிபுரத்தில் பண்டரங்கக்கூத்து எனக் கேள்விப் பட்டிருக்கேன். இங்கேயுமா? திரிபுர சம்ஹாரத்தின் பின்னே ஆடியது தானே பண்டரங்கக்கூத்து?

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..