நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 20, 2024

ஆரோக்ய லக்ஷ்மி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 8
செவ்வாய்க்கிழமை


ஆரோக்ய லக்ஷ்மி..

 - என்று அறிவுறுத்தியதோடு அன்றைக்கு தினசரி வாழ்வில் பழக்கியும்  வைத்தார்கள்..

இப்போது அப்படியெல்லாம் இல்லை..

சராசரி மனித வாழ்வில் அனைத்தும் கோளாறு.. கோளாறு தான்..

உண்ணுகின்ற உணவில் இருந்து உடுக்கின்ற உடுப்பு மற்றெல்லாமுமே நமக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கின்றன..

உடுக்கின்ற உடுப்புகளைப் பற்றி வேறொரு நாளில் பேசுவோம்..

நோயற்ற தன்மையையே ஆரோக்கியம் என்றனர்..

ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யம் தேஹி - என்பது பிரார்த்தனை..

கழுபிணி இலாத உடலும் - என்று அபிராம பட்டர் வேண்டுவது இதைத்தான்..

கழுபிணி இலாத உடலுக்கு என்ன செய்ய வேண்டும்?..

உணவுப் பழக்கத்திலும் அதனை ஒட்டிய வாழ்விலும் ஒழுங்கு வேண்டும்.. அதனைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்..

பழைமை மாறாமல்  தயாரிக்கப்படும் வெண்ணெய் நெய் இவைகளே நமக்கு நல்லது..


நாட்டுப் பசுக்களிடம் இருந்து பால் கிடைக்கும் வாய்ப்பிருக்கும் போது வெண்ணெய் நெய் இவைகளை நாமே உருவாக்கிக் கொண்டால் மிகவும் நல்லது..


" நெய்யில்லா உண்டி பாழ் " என்பது ஔவையார் திருவாக்கு..

புரோட்டீன் -
நமது உடல் முழுவதும் -  எலும்பு, தசை, தோல், முடி ஆகியவற்றில் திசுக்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும்..  

பருப்பு புரதச் சத்து நிறைந்தது.. அதனுடன் நெய் சேரும்போது அமிர்தம்..

குழந்தைக்கு நெய் பருப்பு சோறு தான் அமுதூட்டலில் தொடக்கம்..

நோன்பு காலத்தில், " நெய் உண்ணோம்.. " என்று சொல்கின்ற கோதை நாச்சியார் - நோன்பு நிறைவேறும்  திருநாளில் -

பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்ந்து மகிழ்ச்சி அடைகின்றாள்..

" கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே.. "

- என்று சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் நாகப்பட்டினத்தில் ஈசனிடம் வேண்டிக் கொள்கின்றார்..

இப்படியான பழம் பெருமையுடைய நெய்  தற்காலத்தில் பகையாகி விட்டது.. 

உழைக்கின்ற உழைப்பிற்கு நெய்யும் பருப்பும் ஆதார சக்திகள்..

நெய்யை பகையாக்கி விட்டார்கள்.. பருப்பை விலக்கி விட்டார்கள்..

இன்று உடல் நலத்திற்கென செயற்கை புரோட்டீன் மாவுகள் ஆடல் பாடல்களுடன் சந்தைக்கு வருகின்றன..

கறி எனும் சொல் மிளகைக் குறிப்பது.. சங்க நூல்களில் பயின்று வருகின்றது..

பின்னாளில் இதன் பொருள் சிதைவுற்றது..

இன்றைக்கு கறி என்பது இறைச்சியைக் குறிப்பதற்கு ஆகின்றது..

ஆயினும்  மட்டன் சிக்கன் எனும் தூய தமிழ்ச் சொற்களையே தமிழர்கள் அதிகம் பயன்படுத்தி அகமகிழ்கின்றனர்..



செக்கில் ஆட்டி எடுக்கப்படும் (எள் கடலை) எண்ணெய்களை நேரிடையாகப் பார்த்து வாங்குவது நமக்கும் நமது சந்ததியர்க்கும் நல்லது..


நாட்டுப் பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் வீட்டில் அரைத்த மஞ்சள் தூள் (அரை டீ ஸ்பூன்) சிறிதளவு போட்டு அவ்வப்போது குடிப்பது நல்லது..

சிறு பூண்டை நாட்டுப் பசுவின் பாலில் வேகவைத்து வாரத்தில் நாலு நாள் குடிப்பதால் இரத்த நாளங்களில் கொழுப்பு கரைகின்றது.. இதயத்தின் வேலை இலகுவாகின்றது..


அரைச்சு அரைச்சு
எடுத்ததடி மாவு அதைத்
தின்னு தின்னு
வயித்துக்குள்ள நோவு.


ஒன்றுமே இல்லாத ஒன்று என்றால் அது மைதா..

இதுதான் இன்றைய
பரோட்டா, பிசுக்கட் மாதிரியான லொட்டு லொசுக்கு எல்லாவற்றுக்கும் 
அடிப்படை..

தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்துத் தடவி விளம்பரங்களை ஒட்டி - சுவர்களை அலங்கோலம் செய்யலாம்..

இறுகப் பிசைந்து இப்படியும் அப்படியுமாக விசிறி அடித்து விளக்குமாற்றால் வெளுக்கப்பட்ட கல்லில் போட்டுப் புரட்டி எடுத்தால் - ஏதோ ஒரு மசாலா வாடையுடன் வயிற்றுக்குள்ளும் தள்ளி விடலாம்..

இப்படியான மைதா (All purpose flour) - அடுக்களையில் இருந்து முற்றாக வெளியேற்றப்பட்டால் மிகவும் நல்லது..

பரோட்டா சாப்பிட விருப்பம் எனில் - வீட்டிலேயே கோதுமை மாவில் பரோட்டா செய்வதற்கு பழகிக் கொள்வது நல்லது..

கோதுமைப் பண்டம் எதுவானாலும் வாரத்தில் ஓரிரு முறை போதும்..

அவ்வப்போது சிறுதானியங்களைப் பயன்படுத்தவும் மறந்து விடாதீர்கள்...

கூடுமானவரை வற்றல் மிளகாய் / பொடி தேவையைக் குறைத்துக் கொள்வது நல்லது.. 

இதே போல ஜீனியை (சீனி) குறைத்துக் கொள்வதும் மிக மிக நல்லது..

இஞ்சி, பட்டை அல்லது புதினா நாட்டுச் சர்க்கரையுடன் மூலிகைத் தேநீராக அருந்துங்கள்.. 

வெறும் தேநீர், காஃபி, கார்பனேட் பானங்கள் அதிகமாக வேண்டாம்..

கீரை வகைகள் கிடைக்கும் காலத்தில் குறிப்பாக
முடக்கத்தான், பொன்னாங்கண்ணி ஆகியன கிடைக்கின்ற காலத்தில் தாராளமாக சாப்பிடவும்..

நமது வட்டாரத்தில் இரசாயன உரங்கள் பூச்சிக் கொல்லிகள் தவிர்த்து காய்கறிகள் சாகுபடி செய்வோரை விற்பனை செய்வோரை அறிந்து அவர்களை ஆதரியுங்கள்..

அதற்கான தருணம் இது..

இரசாயனத்தில் விளைந்தவற்றைத் தவிர்க்க முற்படும் போது நம்முடைய சந்ததிகளின் வாழ்த்துகள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை..

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்..
-: திருக்குறள் :-

நம்முடைய நலம்
நம்முடைய கையில்
நாளும் வாழ்க
நன்றென வாழ்க..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. உபயோகமான தகவல்கள். அன்றைய வாழ்க்கைமுறை இத்தகைய உணவு முறையை கடைப்பிடிக்க பெரிதும் உதவின.  இன்றைய வாழ்க்கைமுறை தலைகீழாய் மாறி நிற்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்லவேளை, ஆண்டாள் காலத்தில் பிரியாணி இல்லை.  இல்லாவிட்டால் அதுபற்றி பாடல்கள் புனையப்பட்டிருக்கும்!

    பதிலளிநீக்கு
  3. உபயோகமுள்ள குறிப்புகள். இன்றைக்கு பலருக்கும் இறைச்சி மோகம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.
    மகரிஷி அவர்கள் அடிக்கடி சொல்வது தூய உணவு, குற்றமற்றஉணவு
    உண்ணும் போது உயர்ந்த நினைவு இருந்தால் உணவால் வரும் கெடுதல்கள் இல்லை.

    நெய்யை உறுக்கி, மோரை பெருக்கி, நீரை சுருக்கி என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். தினம் நெய்யை உறுக்கி கொஞ்சம் ஊற்றிக் கொள்ள வேண்டும். தயிரை கடைந்து வெண்ணெய் எடுத்த மோரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
    நீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

    நாம் இப்போது கெட்டி தயிர் தான் போட்டுக் கொள்கிறோம்.பல வீடுகளில் வெண்ணை வாங்கி உருக்குவது இல்லை, உருக்கிய நெய் பாட்டிலில் வருவதை வாங்கி வைத்து கொள்கிறார்கள்.
    நீங்கள் சொல்வது போல நம்முடைய நலம் நம் கையில் , பிறகு ஆண்டவன் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பதிவின் விளக்கமாய் படங்கள் அழகாக உள்ளது. நல்ல பயனுள்ள தகவல்கள். உணவிலிருந்து ஆரம்பிப்பதுதான் உடல்நல குறைபாடுகள். அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அதனால்தான் "உணவே மருந்து" என ஆன்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.இப்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களில், "உணவுடன் மருந்து" என்றாகி விட்டது.

    நீங்கள் சொல்வதனைத்தும் கடைப்பிடித்தால், நோயற்ற வாழ்வை காணலாம். தாங்கள் தந்த செய்திகள் நம் சந்ததியினருக்கும் பயனுள்ளதாக அமையும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. ஆரோக்கியம் பற்றி நல்ல பல தகவல்கள். கடைப்பிடித்தால் நலமே.

    'உணவே மருந்து' என்று முன்னோர் கூறியதை நினைவில் கொள்ளாததால் வந்த வினைதான் .

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..