நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 08, 2019

ரயிலே... ரயிலே..

ஜிகு ஜிகு ரயிலே..
ஜிகு ஜிகு ரயிலே..
ரயிலே.. ரயிலே.. ரயிலே..


கூஊ.. ஊஊ.. ஊஊ..

விடியற் காலை வெள்ளி முளைக்க
காதுக்கருகில் ரயில் சத்தம்
ரயிலின் சத்தம் கேட்கும் மனதில்
மலரும் கவிதையின் முத்தம்...

அத்தை மகள் அவள் ராசாத்தி
அவள் வருவாள் முல்லைப் பூச்சூட்டி
அவளுடன் வருவாய் ரயிலே ரயிலே
மனம் ஆசை கொண்டாடிடும் குயிலே..


கூஊ.. ஊஊ.. ஊஊ..


தந்திக் கம்பியில் கருங்குருவி அது
யாரை எண்ணிப் பாடுது...
காட்டெருமை அது ரயிலைக் கண்டு
கனைத்துக் கொண்டே ஓடுது..

கரிப்புகை தூசி கண்ணில் விழுந்தால்
கண்ணீர் இல்லை சந்தோஷம்
காட்சிகள் எல்லாம் காணக் காண
நெஞ்சம் முழுதும் உல்லாசம்..

குழந்தை என்ன கிழவன் என்ன
ரயிலைக் கண்டால் ஆனந்தம்...
அதிலும் அந்த ஜன்னல் ஓரம்
கிடைத்தால் பெரும்பேர் ஆனந்தம்..

சேற்றில் ஆடும் நாற்றில் கூடும்
காற்றும் நெஞ்சில் மோதிடும்..
ஆற்றின் பாலம் அதிரும்படிக்கு
ரயிலும் இசையுடன் ஓடிடும்..

சிவப்புக் கையை வழியில் காட்டிட
சிணுங்கிக் கொண்டே நின்றிடும்...
கையும் இறங்கிட குதுகலம் கொண்டு
திகு திகு என்றே கிளம்பிடும்...


கூஊ.. ஊஊ.. ஊஊ..


சுண்டலும் வடையும் கடலையும் முறுக்கும்
ரயிலொடு வருகிற வழித்துணை...
கும்மோணம் காபி மாயவரம் தோசை
பேரளம் வடைக்கு ஏதுஇணை

தஞ்சாவூர் கதம்பம் சந்தன மாலை
தாம்பரம் வரைக்கும் பேசிடும்..
அன்புள்ள மனங்கள் ரயிலில் கலந்து 
ஆனந்தம் எங்கும் வீசிடும்...

கூஜாவில் தண்ணி பிளாஸ்கில காபி
தோளிலே பையும் தொங்கிடும்..
வசந்தியும் சுகந்தியும் வந்திடும் ரயிலில்
சந்தோசம் என்றும் தங்கிடும்..

கூட்டம் நெரிசல் பெட்டி படுக்கை
ஆயினும் சண்டைகள் எதுவுமில்லை
இறங்கும் இடமேவந்தால் புன்னகை
மனதில் நிம்மதி குறைவதில்லை..


தூரத்துச் சாலையில் பேருந்து வேகம்
ஓங்கிய ஒலியுடன் ரயில் ஓடும்
அடைபட்ட சாலையில் பேருந்து நிற்க
சந்தோஷம் ரயிலில் வழிந்தோடும்...

வயலும் வரப்பும் தோப்பும் துரவும்
ரயிலின் பின்னே விரைந்தோடும்..
ஓடும் ரயிலில் தூரங்கள் குறைய
தோகையின் நினைவே நிழலாடும்...

கோயில் குளங்கள் கோபுரம் கண்டால் 
ஹரஹர சிவஎன்று கும்பிடுவார்..
குலமும் இனமும் இங்கே இல்லை
என்றே நல்லவர் நம்பிடுவார்...

பாதாளம் புகுந்து மேல்வந்து எழும்பிடும்
ரயிலும் வந்தது நமக்காக..
ஆனாலும் அந்த ஆனந்தம் இல்லை
மனந்தான் ஏங்குது அதற்காக..

ஜிகுஜிகு என்று ஓடிய ரயிலில்
பாடிய நாட்களை எண்ணுங்கள்...
வந்தது நலமே.... வாழ்ந்தது நலமே...
மனதினில் நிம்மதி கொள்ளுங்கள்...

ஜிகு.. ஜிகு.. ரயிலே.. 
ரயிலே.. ரயிலே
கூ ஊ.. ஊஊ.. ஊஊ..
***

சில தினங்களுக்கு முன்பாக ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள்
தமது தளத்தில் வழங்கிய இரயில் பயணம் என்ற பதிவின்
விளைவு தான் இந்தப் பாடல்...

வாழ்க நலம்
ஃஃஃ

20 கருத்துகள்:

  1. இரயிலைக்குறித்த பாடல் அருமை ஜி குழந்தைகள் பாடத்தில் சேர்க்கலாம் போலயே...

    பதிலளிநீக்கு
  2. வரிகள் அருமை... மிகவும் ரசித்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ரயிலில் பயணிப்பதுபோலவே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. விடுமுறை வந்து விட்டால் ரயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்து விடுவார்கள்.
    ரயில் கவிதை மிக் அருமை. என் பதிவு உங்களை கவிதை எழுத வைத்து விட்டது மகிழ்ச்சி. நன்றி.

    வந்ததும், நலம் தான், வாழ்ந்ததும் நலம் தான். மனதில் நிம்மதி கொள்வோம்.
    அருமை அருமை.

    ரயில் ஓடும் போது யாரை பார்க்க போகிறமோ அவர்களின் முகம் மனகண்ணில் வந்து எப்போது காண்போம்! ரயில் விரைவாக சென்றாலும் உருட்டிக்கிட்டு வரான் என்று சொல்லுவார்கள்.

    அதுவும் பிடித்தமான் அத்தை மகள் வரும் ரயில் என்றால்
    எவ்வளவு வேகமாய் ரயில் வந்தாலும் அதன் வேகம் குறைவாய் தான் தெரியும்.

    கோவில் குளம், உறவினர், நட்பு, சுற்றுலா செல்லும் காலம் இது.
    ரயில் பயணத்தில் இருக்கிறார் ஸ்ரீராம். கீதாசாம்பசிவம் விமானமா? ரயிலா தெரியவில்லை விடுமுறையில் பயணம் மேற் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

    தங்களது பதிவைக் கண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டேன்...

    அப்போதெல்லாம் ரயில் பயணங்கள் இனிமையாகவும் எளிமையாகவும் இருந்தன...

    இன்றைக்கு சீட்டு கிடைத்து விட்டால் போதும் என்றிருக்கிறது...

    பயணங்களில் இருக்கும் நண்பர்களை வாழ்த்துவோம்....

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி... நன்றி....

    பதிலளிநீக்கு
  6. இந்த ரயில் பயணங்கள் எங்களுக்கெல்லாம் கிடைத்தன.
    மூன்றாம் வகுப்புப் பயணம். அம்மா அருமையாக எடுத்து வரும் சாப்பாடு. ஜன்னலோரத்தில் எப்பொழுதும் மேகங்களோடு ஊடி வரும் நிலா..
    திண்டுக்கல் சிறுமலைப் பழம்,மணப்பாறாய் முறுக்கு,
    திருச்சி வறுத்த முந்திரிப்பருப்பு,
    சர்ரே கண்ணசந்தால் விழுப்புரம் காப்பி, விருத்தாசலம் கோவில் கோபுரம்,
    மதுராந்தக ஏரி, செங்கல்பட்டு பசும்வயல்கள்.
    எல்லாம் கனவாகி மங்கித் தெரிகின்றன குளிரூட்டப்பட்ட கண்ணாடி வழியே.

    அந்த நாட்கள் பொன்னான நாட்கள்.நன்றி செல்வராஜு துரை,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா...
      அழகிய கருத்துரையாக இனிய ரயில் பயணத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்...

      இனியொரு காலம் வராது என்பது மட்டும் உண்மை ....

      தங்களது மலரும் நினைவுகள் அருமை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. ரயில் பயணம்.... ஆஹா அருமையாக பாடல் எழுதி இருக்கிறீர்கள்.

    இன்றைக்கு என் பக்கத்திலும் ஒரு ஜன்னலோர இரயில் பயணம் தான் ஆனால் வித்தியாசமான பயணமாக!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்....

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. அழகான வரிகள் ஐயா! மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    துரை அண்ணா ரயில் பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் வரிகள் அப்படியே பலதிய நினைவுபடுத்தின. அதுவும் ஜன்னல் சீட்டுதான் வேண்டும். இரவுப் பயணம் என்றாலும் எனக்கு ஜன்னல் வழி பார்த்து வருவது ரொம்பப் பிடிக்கும். துராத்தே தெரியும் சிறிய ஊர்கள் விளக்குகள்...ஆங்காங்கே தெரியும் மின் மினிப் பூச்சிகள். நிலவு ஒளியில் தெரியும் ஆறு குளம் ஆஹா!!! மிகவும் பிடிக்கும்.

    இன்று வெங்கட்ஜி தளத்திலும் அவரது ரயில் பயணம் குறித்து ஆனால் அது கொஞ்சம் கஷ்டமான பயணம்.

    உங்கள் வரிகள் அனைத்தும் அருமை மிக மிக ரசித்தேன் அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கீதா சொல்லியிருப்பது போல்
      ரயிலில் இரவு நேரப் பயணம் அலாதியானது...

      ஜன்னலின் ஓரமாக அந்த நிலவொளியை ரசித்தபடியான பயணம் - ஆகா... அருமை...

      இனிய கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. காட்டெருமை கத்தும். கனைப்பது கழுதை என்று சொல்லவந்தேன். பிறகுதான் எனக்கு ஞாபகம் வந்தது,

    "கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி, நினைத்து முலை வழியே நின்று பால் சோர" என்று திருப்பாவையில் சொல்லப்பட்டிருப்பது.

    ஜிகுஜிகு என்று ஓடிய ரயிலில் ---- நான் சிறுவயதில் புகைவண்டியில் (கரி) பயணம் செய்தபோது, ஜன்னல் பக்கம் தலையை வைத்துக்கொண்டால், வண்டி ஓடும் திசையிலே பார்த்தால் கண்ணில் கரித்தூள்தான் விழும். இதுல எங்க தென்றல்?

    ரசித்த நடை.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  11. ஆகா...
    திருப்பாவையும் உடன் வருகிறதா!...

    ஞானசம்பந்தப் பெருமானும் எருமையின் கனைப்பைக் கூறுகின்றார்...

    அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  12. அந்தக்காலக் கரிவண்டியா இப்போ? எல்லாம் டீசல் அல்லது மின்சாரம் தான். ஆனாலும் ரயில் பயணம் அலுக்கத் தான் இல்லை. என்றாலும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நிற்கையில் கீழே இறங்கிக் காஃபியோ அல்லது அங்கே பிரபலமான தின்பண்டமோ வாங்கிச் சாப்பிட்ட காலமெல்லாம் மலை ஏறிப் போயாச்சு! இப்போ காஃபி என்னும் பெயரில் சூடான சர்க்கரை நீர்! தேநீரும் அதே கதி தான்! உணவு வாய் வைக்க முடியவில்லை. ஆனால் பயணங்களின் சௌகரியங்கள் மட்டும் கூடி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  13. கவிதை மிக அழகு, அருமை. எனக்கு உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் கொத்தமங்கலம் சுப்பு அவர்களையே நினைவூட்டுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..