நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஏப்ரல் 06, 2019

ஏழூர் தரிசனம் 10

ஏழூர் தரிசனத்தில் எங்களுடன் பயணித்த
அன்பு நண்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஒவ்வொரு பதிவினிலும் அன்புடன் வழங்கிய கருத்துரைகளுக்கு
தக்க சமயத்தில் பதில் அளிக்க தவறியிருக்கின்றேன்..

அதற்காக பொறுத்தருள்க...
இங்குள்ள சூழல் அப்படியாக அமைந்து விடுகின்றது!..



சென்ற வருட சப்த ஸ்தான தரிசனம் நல்லபடியாக அமைந்ததற்கு
அறம்வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பனின் திருவருளே காரணம்...

திருச்சோற்றுத்துறையை தரிசனம் செய்து திரும்புவோம்!.. - என்று, எண்ணியிருந்த என்னை - 

என் மகன் வாயிலாக எல்லாத் தலங்களுக்கும் அழைத்து தரிசனம் காட்டிய அன்பினை என்னவென்று சொல்லுவேன்!...

ஆக, திருச்சோற்றுத்துறையிலிருந்து தான் 
எங்களது சப்த ஸ்தான தரிசனம் தொடங்கியது...

ஆனாலும் முறையான தரிசனம் என்பது -

திருஐயாற்றில் தொடங்கி திருப்பழனம் திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் -மீண்டும் திருஐயாறு என்று முடிவது...

அப்போதெல்லாம் திருஐயாற்றிலிருந்தே பல்லக்குகளுடன் பலநூறு மக்கள் நடந்திருக்கின்றனர்...

ஆனால் இப்போது அந்த நடைமுறை பெரும்பாலும் மாறி விட்டது...

திருப்பழனத்திலிருந்து பல்லக்குகள் புறப்பட்டு திருச்சோற்றுத்துறையை அடையும் முன்பாகவே மக்கள் திருநெய்த்தானத்தை அடைந்து விடுகின்றனர்...

சொந்தமாக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதிலேயே ஏழூர்களுக்கும் பயனிக்கின்றனர்..

மூத்த குடிமக்கள் ஆட்டோக்களில் வலம் வருகின்றனர்..

இதைத் தவறென்று சொல்வதா.. சரியென்று சொல்வதா.. தெரியவில்லை..

இந்த வலைக்குள் நானும் அகப்பட்டேனே!...

இதெல்லாம் அவரவர் சூழ்நிலை - என்று வைத்துக் கொண்டாலும்
சம்பிரதாயம் என்ற ஒன்று இருக்கின்றதே!..

இதனை நாம் தானே காப்பாற்றியாக வேண்டும்...

ஆனாலும் அனைத்துப் பல்லக்குகளும் திருஐயாற்றை அடையும் போது
ஆயிரக்கணக்கான மக்களால் திரு ஐயாறு திணறித்தான் போகின்றது..




பண்டரங்கக் கூத்துடன் ஐயாறப்பர் யாதாஸ்தானம் ஏகிய பின்னர்
பலமணி நேரம் ஆகின்றது கூட்டம் கலைவதற்கு!...

பாரம்பர்யத்தை விட்டுக் கொடுக்காமல் தான் இருக்கின்றனர் - என்பதில் 
மனமும் மகிழ்ச்சியில் துள்ளுகின்றது...





ஆயினும் - இன்னொருமுறை
திருஐயாற்றில் இருந்து பல்லக்குகளைத் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று மனம் வேண்டிக் கொள்கின்றது..

அப்போது தான் ஆங்காங்கே திருக்கோயில்களில் நடைபெறும் சம்பிரதாயங்களைக் கவனிக்க இயலும்..

ஆயுளையும் ஆரோக்யத்தையும் நல்கி அம்பிகையும் ஐயனும் தான் அருள்புரிய வேண்டும்...






இன்றைய பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் 
முந்தைய ஆண்டின் சப்தஸ்தான நிகழ்வுகள்...
படங்களை வழங்கிய சிவனடியார் திருக்கூட்டத்தினர்க்கு நன்றி...

இத்தனை பதிவுகளையும் மனமுவந்து வாசித்து 
கருத்துரை வழங்கி உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி..

இவ்வேளையில் -
நேற்றைய பதிவுக்குக் கருத்துரை வழங்கிய
ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள் நினைவுப் பேழையை மீட்டி விட்டார்கள்..

அறம் வளர்க்கும் அம்மா!.. - என்றபாடல் நினைவுக்கு வந்தாக சொல்லியிருந்தார்கள்..

1968/69 என்று நினைவு..

திருச்சி வானொலியில் காலை ஆறு மணியிலிருந்து ஆறரை மணி வரைக்கும் ஒலிபரப்பும் பக்திப் பாடல்களின் ஊடாக இந்தப் பாடலை முதன் முறையாகக் கேட்டேன்..

அடுத்தடுத்து கேட்டதும் மனதில் அப்படியே பதிந்து விட்டது..

வரவேண்டும்.. வரவேண்டும் தாயே!.. - என்னும் இப்பாடலைப் பாடியவர்கள் தேரழுந்தூர் சகோதரிகள் ...

இந்தப் பாடலைப் பற்றித் தேடியபோது -
அனுவின் தேன் துளிகள் தளத்தில் அன்பின் ஸ்ரீராம் அவர்கள் மூலமாக - இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் திரு. வரதராஜன் .. என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்...

இசை குன்னக்குடியார் என்பதாக நினைவு...

மங்களகரமான அந்தப் பாடல் இன்றைய பதிவில்!...

ஸ்ரீ தர்மசம்வர்த்தனி..
வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
வரவேண்டும் வரவேண்டும் தாயே!...

அறம் வளர்க்கும் அம்மா...
அறம் வளர்க்கும் அம்மா பர்வத வர்த்தனி 
அறம் வளர்க்கும் அம்மா பர்வத வர்த்தனி - திரு
ஐயாறு தனில் மேவும் தர்மசம்வர்த்தனி!..

வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
 


தானெனும் அகந்தை தலைக்கு ஏறாமல்
தாழ்ந்த நிலையிலும் தர்மம் மாறாமல்
வான்புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே!..

வரவேண்டும்.. வரவேண்டும் தாயே..
வரவேண்டும் வரவேண்டும் தாயே - ஒருவரம்
தரவேண்டும் தரவேண்டும் நீயே...
***


தானலாது உலகம் இல்லை சகமலாது அடிமையில்லை
கானலாது ஆடல் இல்லை கருதுவார் தங்களுக்கு
வானலாது அருளும் இல்லை வார்குழல் மங்கையோடும்
ஆனலாது ஊர்வதில்லை ஐயன் ஐயாறனார்க்கே..(4/40)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. சப்தஸ்தானம் கோவில்கள் பார்க்க வேண்டும் எனத் தோன்றி இருக்கிறது. அவன் அருள் புரிய வேண்டும்.

    படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங்.

    பாரம்பர்யம் கெட்டுப்போகிறதே என்கிற உங்கள் கவலை நெகிழ்ச்சியூட்டுகிறது. ஒவ்வொரு ஊறாகச் சேரும் கூட்டம் திருவையாறில் மொத்தமாகக் கூடும்போது ஊர் திணறிப்போனாலும், அப்போது சிரமப்படும் மக்கள் அதைச் சிரமமாக உணரவும் மாட்டார்கள். அடுத்த வருடம் இந்நாளுக்காகக் காத்திருக்கவும் செய்வார்கள்!

    பதிலளிநீக்கு
  3. உங்கள்மூலம் நாங்களும் பல்லக்கு, அம்மையப்பரை படங்களை தரிசனம் செய்துகொண்டோம். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. "அறம் வளர்க்கும் அம்மா" இந்த வரிகள் வரும் பாடலைப் பாடியவர்கள் தேரழுந்தூர் சகோதரிகள்.

    "வரவேண்டும் வரவேண்டும் தாயே... ஒரு வரம் ஒரு வரம் தரவேண்டும் தரவேண்டும் நீயே..." என்கிற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் மா. வரதராஜன். அப்பாவின் நெருங்கிய நண்பர்.

    குடும்பத்துக்கே நெருங்கிய நண்பர். என் திருமணத்துக்கும் வந்திருக்கிறார். திருவாரூரை சொந்த ஊராகக் கொண்டவர். அப்பாவிடம் "சகாப்தநாயகன் சன்னதியில்" என்கிற தொடரை எழுதி வாங்கி அவர் பெயரில் அப்போது வெளிவந்த ஜவஹரிசம் என்கிற பத்திரிகையில் வெளியிட்டவர்!

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை
    சிறு வயதில் ஒவ்வொரு வருடமும் எழூர் திருவிழாவிற்குச் செல்வதுண்டு
    நினைவுகள் மனதில் வலம் வருகின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. இன்று தரிசனம் மிக அருமையாக இருந்தது.
    படங்களும் செய்திகளும் சப்தஸ்தானம் திருவிழாவை பார்க்க விரும்புகிறது.
    வரவேண்டும் வரவேண்டும் தாயே பாடல் வானொலிபாட்டை பதிவு செய்து வைத்து இருக்கிறோம். நேற்று அந்த பாடலை பதிவில் போடலாம் என்று பார்த்தால் தேரழுந்தூர் சகோதரிகள் பாடல் கிடைக்கவில்லை, வேறு யார் யாரோ பாடியதுதான் கிடைத்தது அது அவ்வளவு ரசிக்கும் படியாக இல்லை.

    ஸ்ரீராம் மூலம் இன்னும் செய்திகள் அறிந்து கொண்டேன்.

    நவராத்திரிக்கும் எங்கள் வீட்டில் சகோதரிகள் எல்லோரும் இந்த பாடலை பாடுவோம். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  7. வான்புகழ் வள்ளுவன் வகுத்த நல்வழியில் இந்த் வையகம் வாழ்ந்திட அருள் புரிய வேண்டும் இந்த காலக் கட்டத்தில் அதை அம்மா செய்தாள் நன்றாக இருக்கும்.
    நான் பதிவு செய்த பாடலை பகிர முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தையே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்... நன்றி அம்மா...

      நீக்கு
  8. சப்தஸ்தான தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். பல்லக்குடன் நடந்து செல்வது மிகவும் சிறப்பு. தொடர்ந்தும் செல்லலாம். பல்லக்குகளே மோட்டார் வாகனத்தில் செல்லும் காலமிது.

    பதிலளிநீக்கு
  9. தங்களோடு நாங்களும் பயணித்து, தரிசித்தோம் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  10. சப்தஸ்தான தரிசனம் அருமையாகக் கிடைத்தது. பாரம்பரியம் ஆங்காங்கே தொக்கி நிற்பதற்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும். திருமதி கோமதி அரசு மூலம் உங்களுக்குப் பல பாடல்கள் கிடைப்பதால் அவற்றின் பலன் எங்களுக்கும் கொஞ்சம் கிடைக்கிறது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடு புல்லுக்கும் ஆங்கே பொசிந்தாற்போல்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..