நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 22, 2015

மார்கழித் தென்றல் - 06

குறளமுதம்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.. (0416)
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 06

திவ்ய தேசம் - நாமக்கல்
(அபிமான திருத்தலம்) 



எம்பெருமான் - ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி



தாயார் - ஸ்ரீ நாமகிரித் தாயார்

ஸ்ரீ நரசிங்க மூர்த்தி வீராசனத்தில் அமர்ந்த திருக்கோலம்
மேற்கு நோக்கிய திருமுக மண்டலம்..

ஸ்வாமியின் வலது திருக்கரம்  
குருதிச் சிவப்பான கறையுடன்
காணப்படுகின்றது.



கூப்பிய கரங்களுடன் ஸ்ரீ நரசிங்கப் பெருமானை சேவிக்கும் 
ஸ்ரீ ஆஞ்சநேயர் மிகுந்த வரப்ரசாதி..

வெட்டவெளியே விதானமாக
பதினெட்டு அடி உயரத்துடன் ஆயிரம் ஆண்டுகளைக் 
கடந்தவராகத் திகழ்கின்றார்..
* * * 

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம்
***

திருப்பாவை மற்றும் திருவெம்பாவையின் திருப்பாடல்கள் ஒவ்வொன்றும் - ஏலோர் எம்பாவாய்!..  - என நிறைவடைகின்றன..

ஏலோர் எம்பாவாய்!.. - என்பதன் பொருள் என்ன என்று,  முன்பதிவு ஒன்றில் ஐயா GMB அவர்கள் கேட்டிருந்தார்கள்..

அவர்களுக்கு பதிலுரைக்கத் தாமதமாகி விட்டது..

காரணம் - இதுதான்!..

மூன்று நாட்களுக்கான பதிவுகளை முன்னதாகவே ஆயத்தம் செய்து வைத்துக் கொண்டிருக்கின்றேன்..

ஏலோரெம்பாவாய்..

ஏலோர் எம்பாவாய்..

ஏல் - ஓர் - எம்பாவாய்..

இதனை - இவனை -  ஏற்றுக் கொண்டு ஆய்ந்து தெளிவாய்.. என்தோழி!.. 

-  என்பது திருப்பாடலின் பயன்..

முதலில் - 

ஏல் - என்றால் ஏற்றுக் கொள்வாயாக..

தென் மாவட்டங்களிலும் தஞ்சையின் சில பகுதிகளிலும் இன்றும் இச்சொல் பேச்சு வழக்கில் உள்ளது..

இது உனக்கு ஏலுமா!.. = இதை ஏற்றுச் செய்ய உனக்கு இயலுமா!..

ஏலாதா?.. = இயலாதா?..

ஔவையார் - ஏல் எனும் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்..

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது..

அடுத்தது -

ஓர் - எனில் ஆய்ந்து தெளிதல்..

சிவபுராணத்தில் -
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!.. - என்பார் மாணிக்கவாசகர்..

ஆய்ந்து தெளிவடையாதார் உள்ளத்திற்கு மறைவான ஒளியாக இருப்பவனே!.. - என்பதாகும்..

திருநாவுக்கரசரும் - 
ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே!.. (6/63) என்று, திருப்பழனத் திருப்பதிகத்தில் ஈசனைப் போற்றுகின்றார்..

ஓர்தல் எனவும் ஓர்ந்து எனவும் திருக்குறளில் பயின்று வருகின்றது..

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாய்ப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு.. (0357)

ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து செய்வ ஃதே முறை.. (0541)

ஓர்மையோ!.. ஓர்மையுண்டோ!.. 
- என்றெல்லாம் இன்றளவும் கவின் மலையாளம் பேசிக் களிக்கின்றது..

ஆனால், 

நாம்தான் -  நல்ல தமிழ்ச்சொற்களை அழித்துக் கொண்டிருக்கின்றோம்..
ஆறு, குளம், ஏரி, கண்மாய்களைப் போல!..

எளியேன் எனக்குத் தெரிந்ததை சொல்லியிருக்கின்றேன்..
பெரியோர்கள் - ஆய்ந்து தெளிந்து - கொள்க..

* * *

சிவதரிசனம்

திருத்தலம் - திருச்செங்குன்று 

- திருச்செங்கோடு -



திருமூலத்தானத்தினுள் 
அம்மையும் அப்பனும் 
ஏக உருவில் திகழும் திருத்தலம்..
அம்பிகை -  ஸ்ரீ பாகம்பிரியாள்

தீர்த்தம் - தேவதீர்த்தம்
தலவிருட்சம் -  இலுப்பை.

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் அருள
விஷக்காய்ச்சல் ஒழிந்த தலம்..

திருச்செங்கோடு - மலை உச்சியில்
சிவாலயத்துடன்
செங்கோட்டு வேலவன் திருக்கோட்டமும்
ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலும்
இலங்குகின்றன..


செங்கோட்டு வேலவனின் பெருமை
அளவிடற்கரியது..

வலத்திருக்கரத்தில் வேலும்
இடது திருக்கரத்தில் சேவலும் விளங்குகின்றன..

சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்!..
என்று, 
இளங்கோவடிகள் 
திருச்செங்கோடனைச் 
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்..

திருச்செங்கோடனின் பேரழகைக் கண்டு மகிழ்வதற்கு
 நாலாயிரம் கண்களை - நான்முகன் படைக்கவில்லையே!..
என, வருந்துபவர் அருணகிரிநாதர்..

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு 
மேலான தேவனை மெய்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே!.. 
-: கந்தரலங்காரம் :- 
* * *

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிச்செய்த
திருக்கடைக்காப்பு

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீறுரு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே!.. (1/107) 
* * * 



ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த
திருவாசகம்

திருப்பள்ளி எழுச்சி
ஆறாம் திருப்பாடல் 

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார்
பந்தணை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பறுத்து எம்மை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!..

திருவெம்பாவை
(11 - 12)

மொய்யார் தடங்கண் புக்கு முகேர் என்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்!..

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ப அரவஞ்செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. நாமக்கல் சென்றுள்ளேன், திருச்செங்கோடு இதுவரை செல்லவில்லை. வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன். திருப்பாவை, திருவெம்பாவை படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,
    ஆஹா அருமையான விளக்கம்,

    படங்கள் அனைத்தும் அழகு,

    பாடல்கள் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. ஏலோர் “ கருத்து தெளிவித்தலுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி மார்கழித் தென்றலின் 6-ம்நாள் பதிவு திருப்பாவை, திருவெம்பாவையுடன் நன்று தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..