வைகை மாநதியில் வெள்ளம்..
நின் பொருளைப் பழுது செய்தான் என எண்ணி - நீ தண்டித்த திருவாதவூரன் பொருட்டு!..
எம்பெருமானே!.. என்னைப் பொறுத்தருளுங்கள். தலையாய அமைச்சருக்கு இன்னல் விளைத்த என்னை மன்னித்தருளுங்கள். உண்மையை ஓர்ந்து உணராத உன்மத்தனாகிப் போனேன்..
- என ஈசனைப் போற்றிப் புகழ்ந்தார் மாணிக்கவாசகர்.
மாணிக்கவாசகப் பெருமானை அணுகி -
தில்லையில் மணிவாசகப் பெருமானின் குருபூஜை சிறப்புடன் நிகழ்கின்றது!.
பாறைகளில் வைகையின் நீர் பட்டுத் தெறித்த காலம் போக -
வைகையின் நீர் பட்டு - பாறைகள் தெறித்துக் கொண்டிருந்தன இப்போது!..
மதுரையம்பதி இதுவரையிலும் கண்டதேயில்லை - இப்படியொரு பெருக்கை!..
விழுது விட்டு வேரோடித் தழைத்திருந்த விருட்சங்கள் கூட சருகுகளைப் போல - வைகை வெள்ளத்தில் மிதந்து போய்க்கொண்டிருந்தன..
ஆயிரக்கணக்கான மக்கள் பரபரப்புடன் வேலை செய்து கொண்டிருக்க -
அவன் ஒருவன் மட்டும் ஆடினான்.. பாடினான்.. அங்குமிங்கும் ஓடினான்..
வைகையின் வெள்ளம் இன்னும் வடியவில்லை..
ஊர் மக்கள் ஒன்றாகக் கூடி - கரையடைக்க முயன்றும் முடியவில்லை..
என்ன ஊழ்வினையோ.. யார் செய்த தீவினையோ?..
மக்கள் பரிதவித்த வேளையில் - இவன் மட்டும் எந்த பதற்றமும் இல்லாமல்!..
எப்படியிருக்க முடிகின்றது?.. ஒருவேளை அயலானோ.. அந்நியனோ?..
அவன் - அயலானும் அல்லன்.. அந்நியனும் அல்லன்!..
கயல்விழியாள் அங்கயற்கண்ணம்மையின் அன்புக் கணவன் என்பதையும்
சென்னியில் வெண்பிறை சூடிய சோமசுந்தரப் பெருமான் என்பதையும்
நானிலத்தில் நல்லார் அனைவருக்கும் நல்லன் என்பதையும் -
அங்கிருந்த பெருங்கூட்டத்துள் எவரும் உணர்ந்தார்களில்லை.
அவன் செய்கையினால் சினம் கொண்டாலும் -
அவனிடம் சென்று ஏனென்று கேட்பதற்கு எவருக்கும் மனம் இல்லை!..
அவனிடம் சென்று ஏனென்று கேட்பதற்கு எவருக்கும் மனம் இல்லை!..
இப்படியொரு சுந்தரத் திருமுகத்தைத் தென்னவன் நாடெங்கும் கண்டிலமே!.. இவன் கூலியாளே அல்லன்!.. குறைதீர்க்க வந்த கோமகன் போல் அல்லவோ விளங்குகின்றான்.. ஆனாலும் - அவனுடைய செய்கை சிறுபிள்ளையைப் போலல்லவோ இலங்குகின்றது..
அத்தனை பரபரப்புக்கிடையேயும் அருகிருந்தோர் அயர்ந்து போயினர்!..
இவன் யாருக்காகக் கரை அடைப்பவன்?..
பிட்டு விற்கின்றாளே - வந்தியம்மை!.. அவளுடைய ஆளென்று தன்னைப் பதிவு செய்து கொண்டதைக் கண்டேன்!..
ஒருபாவமும் அறியாதவள் வந்தியம்மை.. அவள் பேரைக் கெடுக்க வந்தனன் போலும்!..
வந்தியம்மைக்குப் பேர் கொடுக்க வந்தவன் அவன் என்பதை அறியவில்லை யாரும்!..
குறுக்கு நெடுக்காக ஓடிய குறும்புக்காரன் வந்தியம்மையிடம் வந்து நின்றான்..
ஏற்கனவே பேசி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கிணங்க தன்னிடமிருந்த உதிர்ந்த பிட்டு தனை - வாஞ்சையுடன் வட்டிலில் வைத்துக் கொடுத்தாள் வந்தியம்மை.
தேங்காய்ப் பூவையும் பனஞ்சர்க்கரையையும் அதன் மேலே தூவினாள்..
இன்று ஏன் எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகின்றன.. - என்பதை வந்தி சிந்திக்க வில்லை..
எப்படியோ - நம்முடைய பங்கு அடைபட்டால் போதும்.. கரையடைக்கும் கடன் தீர்ந்தால் போதும்!..
எல்லாக் கடனும் தீர்ந்தே போனதை அறியவில்லை - வந்தியம்மை..
சுருக்க வேலைய முடிச்சிடு.. என் ராசா!..
ஆகட்டும் பாட்டி!.. - தலையசைத்தான் - இளங்காளையாய் வந்திருந்த ஈசன்.
வயிறு நிறைந்தது.. ஆனால் வந்த காரியம் இன்னும் நிறையவில்லை..
நீரின் வேகத்தில் இழுத்துச் செல்லப்படாது - நின்று கொண்டிருந்த மரத்தைக் கண்டான்..
அரைக்கு அசைத்துக் கொண்டிருந்த அழுக்குப் பழந்துணியை அவிழ்த்து உதறியபடி - அந்த மரத்தின் கீழ் தலை சாய்த்து - கண்ணயர்ந்தான்..
என்ன ஒரு ஆளுமை!.. இத்தனை பேர் வேலை செய்து கொண்டிருக்க .. இவன் மட்டும்!..
டேய்.. யாரங்கே!.. - தலையாரி கத்தினான்.
ஓடி வந்தான் கங்காணி..
யாரடா.. இவன்?..
வந்தியின் ஆள்.. நாழிகைப் பொழுதாயிற்று.. இன்னும் ஒரு கூடை மண் கூட கொட்டினான் இல்லை. வந்தியின் பங்கை இவன் அடைக்காததால் அடைபட்ட பங்கையும் அரித்துக் கொண்டு ஓடுகின்றது வைகை!..
தலையாரி - யாரையோ தேடிக் கொண்டு ஓடினான்..
அடுத்த சில நொடிகளில், பரிவாரங்கள் புடை சூழ -
ஆங்கே வந்தான் - அரிமர்த்தன பாண்டியன்.
தலையாரியும் தண்டலரும் சொன்னது உண்மைதான்!..
நற.. நற.. - என்று பற்களைக் கடித்துக் கொண்டான்..
அவன் கையில் இருந்த பொற்பிரம்பு சுழன்றது.
உறங்கிக் கிடந்த இளைஞனை நோக்கி வீசினான்.
அடுத்த நொடி - அங்கே பல்லாயிரமாய் கூக்குரல்கள்..
இளைஞனின் மேல் பட்ட அடி - அனைவரது முதுகிலும் பட்டது.
இளைஞனின் மேல் பட்ட அடி - அனைவரது முதுகிலும் பட்டது.
அம்மா!.. யார் என்னை அடித்தது..
என்னையும் அடிக்கத் துணிவுண்டோ எவர்க்கும்?.. - என, மன்னன் திகைத்துத் திரும்புவதற்குள்..
விழித்தெழுந்த இளைஞன் - தன் காலால் மண்ணை எற்றி விட்டு மறைந்தான்.
அந்த நொடியில் வைகையின் வெள்ளம் அடங்கியது. எங்கும் ஆனந்த கூச்சல்.
அதிர்ந்தான் அரிமர்த்தன பாண்டியன்.
அதேவேளையில் வானில் இருந்து பூமாரி பெய்தது. திருக்கயிலாய சிவ கணத்தாரின் பஞ்ச வாத்தியங்கள் முழங்கின.. தேவ துந்துபிகள் ஒலித்தன.
வந்தியம்மையை சிவ கணங்கள் வரவேற்று விமானத்தில் அழைத்துச் செல்வதையும் கண்டான்.
அஞ்சி நடுங்கிய அரிமர்த்தனன் அயர்ந்து வீழ்ந்தனன். அப்போது -
யாம் - குதிரைச் சேவகனாக வந்தோம்.. வைகையை பெருகி வரச்செய்தோம்.. வந்தியம்மையின் பிட்டுக்காக கூலியாளாக வந்தோம்..
இத்தனையும் உன்னால் துன்பமடைந்த திருவாதவூரன் பொருட்டு!..
நின் பொருளைப் பழுது செய்தான் என எண்ணி - நீ தண்டித்த திருவாதவூரன் பொருட்டு!..
புண்ணிய மறையோர் குலத்தில் பிறந்திருந்தும் - எண்ணரிய நிதிக்குவியல் தனை - காலம் பார்த்துக் கவர்வதற்கோ நீர் அமைச்சர் ஆகியது!?.. - என்று உன்னால் பழிக்கப்பட்ட திருவாதவூரன் பொருட்டு!..
அறத்தின் வழி நின்று நீ ஈட்டிய செல்வத்தினைக் கொண்டு நமக்கும் நம்மைச் சேர்ந்த அடியார் தமக்கும் திருவாதவூரன் நன்மைகளைச் செய்தனன்.
அத்தன்மை உடைய திருவாதவூரனின் பெருமையை நீ அறிக!..
திருவாதவூரன் - இந்த மண் விளங்க வந்த - மாணிக்கவாசகன்!..
எம்பெருமானே!.. என்னைப் பொறுத்தருளுங்கள். தலையாய அமைச்சருக்கு இன்னல் விளைத்த என்னை மன்னித்தருளுங்கள். உண்மையை ஓர்ந்து உணராத உன்மத்தனாகிப் போனேன்..
பொருளே பெரிதென்ற புல்லுணர்வால் - புண்ணியராகிய திருவாதவூரரைப் புண்படுத்தி விட்டேன்.. அவரிடமிருந்து செல்வத்தைக் கவர்வதற்காக - அடிசுடும் மணலில் நிறுத்தி அநீதி செய்து விட்டேன்..
என் பாவ அழுக்கைத் தொலைப்பதற்கன்றோ வைகை பெருகி வந்தது..
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்பது தமிழ்.. அந்தத் தமிழ் அரசோச்சும் மதுரையின் மன்னனாக இருந்தும் மதி மயங்கிப் போனேன்!..
நல்லாராகிய திருவாதவூரர் தம் தன்மையால் அல்லவோ - நானும் இந்நாட்டு மக்களும் சிவதரிசனம் கண்டோம்..
எம்பிழைகளைப் பொறுத்தருளுங்கள் பெருமானே!..
- என, ஈசனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்..
- என, ஈசனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்..
அரிமர்த்த பாண்டியனின் - விழிகளில் வைகையின் வெள்ளமென நீர் வழிந்தது.
தன் பிழையுணர்ந்த பாண்டியன் - மாணிக்கவாசகப் பெருமானை - தங்கப் பல்லக்கில் இருத்தி - சிறப்பு செய்து மகிழ்ந்தான்.
மதுரையம்பதிக்கு அருகில் உள்ள திருவாதவூர் எனும் திருத்தலத்தில் தான் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது.
சம்புபாதாச்ருதர் - சிவஞானவதி அம்மையார் என்போர் - தந்தையும் தாயும்..
பதினாறு வயதிற்குள் , அனைத்தும் அறிந்து ஞானச்சுடராக விளங்கியவர்.
விஷயமறிந்த அரிமர்த்தன பாண்டியன் - அவரை விரும்பி அழைத்து - தலைமை அமைச்சராக அமர்த்தி அரசவைக்கு அழகு சேர்த்துக் கொண்டான்.
ஆனால் அவர் மனம் அதில் நிறைவடையவில்லை.
தலைமை அமைச்சராக இருந்தும் அவருடைய மனம் தகவுடைய அறவழியில் இருந்தது.
கருவூலத்தின் பெருஞ்சாவி அவருடைய கையில் இருந்தும் - நாட்டம் எல்லாம் - ''..பிறவியின் பயனை அடைதற்குரிய வழி என்ன!..'' என்பதிலேயே இருந்தது.
இளங்குதிரைகள் வேண்டும் என்று விரும்பிய மன்னனின் ஆணையை ஏற்றுக் கொண்டு - கீழைக் கடற்கரையை நோக்கிப் புறப்பட்டு வந்த திருவாதவூரரை -
திருப்பெருந்துறை எனும் தலத்தில் - குருந்த மர நிழலில் ஞானகுருநாதனாக வீற்றிருந்த சிவபெருமான் ஆட்கொண்டார்.
அதன் பிறகு - திருப்பெருந்துறையில் நின்று விளங்குமாறு திருக்கோயிலைக் கட்டினார். திருமடங்கள், நந்தவனங்கள் அமைத்தார். மாகேசுவர பூசை பல நிகழ்த்தினார்.
குதிரை வாங்குவதற்குக் கொணர்ந்த பொருள்கள் அனைத்தையும் கோயில் பணிகளுக்கே செலவிட்டார்.
திருப்பெருந்துறையில் நிகழ்ந்தவற்றை - மன்னனிடம் விவரித்தனர்..
விளைவு - நரிகள் பரிகளாகின..
இறைவன் திருவாதவூரருக்காக,
சாய்ந்த கொண்டையுந் திருமுடிச்சாத்தும் வாள்வைரம்
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக்
காய்ந்த புண்டர நுதலும் வெண்கலிங்கமுங் காப்பும்
ஆய்ந்த தொண்டர்தம் அகம்பிரி யாதழகெறிப்ப..
குதிரைச் சேவகனாக - பரிமேல் அழகனாக மாமதுரையின் மாட வீதிகளில் வலம் வந்தான்!..
அதன் பிறகு நிகழ்ந்தவை அனைத்தும் திருவிளையாடலே!..
வந்தியின் கடனை அடைக்க வந்த வள்ளல் -
மாணிக்கம் விற்ற மதுரையில் - உதிர்ந்த பிட்டுக்கு மண் சுமந்தான்.
அதோடல்லாமல் வேலைக்களத்தில் விளையாடிக் களித்ததற்காக அரசனிடம் பிரம்படியும் கொண்டான்!..
பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்!..
பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்
கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலி மதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதுங்கான் அம்மானாய்!..
- என ஈசனைப் போற்றிப் புகழ்ந்தார் மாணிக்கவாசகர்.
இறையருளின் படி தலயாத்திரை மேற்கொண்டு உத்தரகோச மங்கை என்னும் திருத்தலத்தில் அஷ்ட மா சித்திகளையும் பெற்றனர்.
பின்னும் சோழ நாட்டின் பல தலங்களையும் தரிசித்தார். திருஅண்ணாமலை திருக்கழுக்குன்றம் ஆகிய பதிகளில் இருந்து பல அருட் செயல்களை நிகழ்த்தி தில்லையம்பதியினை அடைந்தார்.
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் வடக்கு திருவாசல் வழியாக பெருமான் , திருக்கோயிலுக்குள் சென்றதாக நம்பிக்கை.
தில்லையில் திருக்குடில் அமைத்து நல்லறம் புரிந்தார் - மாணிக்கவாசகர்.
இவ்வேளையில் ஒருநாள் -
உலகம் உய்யும் பொருட்டு எல்லாம்வல்ல எம்பெருமான் -
அறவாழி அந்தணராக வந்து மணிவாசகப் பெருமானை அணுகி நின்றான்.
பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி மாணிக்க வாசகரிடம் கேட்டுக் கொண்டான்.
சுவாமிகளும் - தாம் பாடிய அனைத்தையும் மீண்டும் சொல்லியருளினார்.
வந்திருந்த அந்தணர் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி - ''..பாவை பாடிய திருவாயால் கோவை பாடுக!..'' - என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படியே மாணிக்கவாசகர் திருக்கோவை அருளிச் செய்தார்.
அந்தணர் அதையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்து மறையவும் - தன்னைத் தேடி வந்து ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்துஆனந்தக் கண்ணீர் வடித்து வணங்கிப் போற்றினார்.
விடியற்காலையில் பொன்னம்பலத்தின் வாசற்படியினில் -
திருவாதவூரன் சொல்லக் கேட்டு எழுதிய திருச்சிற்றம்பலமுடையான் திருச்சாத்து!..
- எனும் திருக்குறிப்புடன் ஓலை சுவடிகளைக் காணப் பெற்ற தில்லைவாழ் அந்தணர்கள் வியப்புற்றனர்.
மாணிக்கவாசகப் பெருமானை அணுகி -
''..இதன் பொருளை விளக்க வேண்டும்!..'' எனக் கேட்டுக் கொண்டனர்.
சுவாமிகள் தன் குடிலிலிருந்து திருக்கோயிலுக்கு வந்தார்.
''..தில்லைச்சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே - இதன் பொருள்!..''
- என்றருளியபடி அம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்தனுடன் இரண்டறக் கலந்தார்.
அருள் வாதவூரருக்கு செப்பிய நாலெட்டில் தெய்வீகம்!.. - என்கின்றது பழந் தமிழ்ப் பாடல் ஒன்று.
அதன்படி அவருக்கு முப்பத்திரண்டு வயதென உணர முடிகின்றது.
ரிஷப வாகனத்தில் மாணிக்கவாசகர் |
மாணிக்கவாசகர் சிவசாயுஜ்யம் பெற்ற நாள் - ஆனி மகம்!..
தில்லையில் மணிவாசகப் பெருமானின் குருபூஜை சிறப்புடன் நிகழ்கின்றது!.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் - மாணிக்க வாசகர் ரிஷப வாகனராக திருவீதி வலம் வந்தருள்கின்றார்
சிவாலயங்கள் தோறும் மாணிக்க வாசகப் பெருமானைப் போற்றி வணங்கித் தொழுகின்றனர் - இறையன்பர்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி!..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..
- எனும் மாணிக்க வரிகள் அவர் அருளியவை.
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!..
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்!..
- என்பது தொல்மொழி.
திருவாசகத்தில் பிரபஞ்ச ரகசியங்களை விவரிப்பதுடன் மானுட கருப்பையில் கரு உருவாகும் விதத்தினையும் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்.
மகாஞானியாகிய மாணிக்கவாசகர் முதல் மந்திரியாக இருந்து வழி நடாத்திய நாடு - நம்முடையது!..
இறைவனின் திருவடிகளைப் பற்றிக் கொள்வதை பெருமான் கூறுகின்றார்!..
எப்படி?..
இதோ இப்படித்தான்!..
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே..
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கும்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னை சிக்கெனப் பிடித்தேன்!
எங்கெழுந்தருளுவது இனியே!...
* * *
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க..
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
* * *
மிகவும் அருமையாக அழகாக பகிர்ந்துள்ளீர்கள் ஐயா... பரவசப்பட்டேன்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்களின்வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
தங்களின் நடை அற்புதம் ஐயா
பதிலளிநீக்குநன்றி
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
கேட்ட கதை, படித்த செய்தி. ஆனால் தங்கள் பதிவு மூலம் வெளிப்படும்போது வித்தியாசமான முறையில் மனதில் பதிந்துவிடுகிறது.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்களின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..
அருமையான பதிவு ஜி பிரமாண்டமானதும்கூட.... விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டேன்.. மகிழ்ச்சி.. நன்றி..
தெரிந்த கதையானாலும் தாங்கள் சொன்ன விதம் அருமை, வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குதங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..
நீக்குஆன்மிகக் கதை சொல்லி எனப் பெயர் சூட்டலாமா உங்களுக்கு. அழகு தமிழில் அறிந்த கதைகளை அருமையாச் சொல்லிப் போகும் விதம் பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குஏதோ என்னளவில் தெரிந்ததை எழுதுகின்றேன்..
தங்களின் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகாய் விளக்கியுள்ளீர்கள் ஐயா நன்றி
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
திருச்சிற்றம்பலம்.வந்தேன்.படித்தேன்.உய்ந்தேன்
பதிலளிநீக்குநன்றி
அன்பின் ஐயா..
நீக்குதங்களுக்கு நல்வரவு..
தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..
மாணிக்கவாசரைப் பற்றி அறிந்திருந்தாலும், தங்கள் அழகு தமிழ் நடையில் இன்னும் பல அறிந்து கொண்டோம்.....பாடல்களுடன்.....நீங்கள் ஆன்மீக உரை ஆற்றலாம் ஐயா! நிச்சயமாக பலருக்கும் நல்வழி காட்டும் குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு.....
பதிலளிநீக்குஅன்புடையீர்.
நீக்குபெரிய வார்த்தைகளைச் சொல்கின்றீர்கள்.. அதற்கெல்லாம் பெருஞ்சிறப்புடைய பலர் இருக்கின்றனர்.. நான் எளியன்..
தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..