நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 05, 2014

ஆசிரியர் தினம்



நற்பண்புகளையும் நல்லொழுக்கத்தினையும் வளர்த்தவர்கள்.
தேசப் பற்றினையும் தெய்வ பக்தியினையும் விதைத்தவர்கள். 
ஆசிரியப் பெருமக்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்!.. 


எதிர்பாராத விதமாக அந்த காட்டாற்றில் அதிக தண்ணீர் - இருகரைகளிலும் சலசலத்தபடி!.. 

ஒவ்வொரு விநாடியும் நீரின் அளவும் வேகமும் கூடிக் கொண்டிருந்தது.

பரிசல்கள் ஆற்றங்கரை மேட்டில் கவிழ்த்துப் போடப்பட்டிருக்கின்றன. பரிசல் ஓட்டுபவர்களையும் காணவில்லை.

தாமதம் செய்வது ஆபத்து என்ற நிலையில் அந்த வயோதிகரும் அவரை அடுத்திருந்த இளைஞனும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு ஆற்றில் இறங்கிய வேளையில் - சற்றுதொலைவில் அபயக்குரல்!..

ஐயா.. என்னைக் காப்பாற்றுங்கள்!..

திகைத்து நின்றனர் இருவரும்.

அந்த வயோதிகர் -  பலகலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்த ஆச்சார்யர். அருகிருக்கும் இளைஞன் அவருடைய மாணாக்கன். 

இளம்பெண் ஒருத்தி ஓடி வந்து நின்றாள்.

பதற்றம் பயம்  - முகத்தில் விரவிக் கிடந்தது.

என்னம்மா!.. உனக்கு என்ன பிரச்னை?.. ஏனிப்படி பதட்டத்துடன் ஓடி வருகின்றாய்?.. - குரு பரிவுடன் வினவினார்.

ஐயா!.. நான் அக்கரை கிராமத்தைச் சேர்ந்தவள். உறவினர் வீட்டுக்கு வந்தேன். எனது போதாத காலம் ஆற்றில் வெள்ளம் வருகின்றதாம். ஓடக்காரர்கள் சொன்னார்கள். நான் அவசரமாக எனது கிராமத்திற்குச் செல்ல வேண்டும். ஓடக்காரர்கள் மனம் கல்லாய்ப்போனது. பெரிய மனதுடன் என்னையும் தங்களுடன் அக்கரைக்கு அழைத்துச் செல்லவேண்டும். என்றும் நன்றி மறவேன்!..

அம்மா!.. நானோ வயதானவன். இவனோ பிரம்மச்சர்ய நிலையில் இருப்பவன். நாங்கள் உனக்கு எவ்விதத்தில் உதவுவது என்று தெரியவில்லையே!..

ஐயா!.. தங்களைக் கண்டபோதே நான் என் துன்பமெல்லாம் மறந்தேன். அபலைக்கு உதவுங்கள்!.. - எனக் கண்ணீருடன் கை கூப்பினாள்.

தர்மசங்கடமான நிலை. அதற்குள் நீரின் மட்டம் உயர்ந்திருப்பதைக் கண்ட மாணாக்கன்  - 

ஸ்வாமி!.. தாமதிக்க நேரமில்லை. பெண்ணே.. இதோ என் தோளில் அமர்ந்து கொள்!.. -  என்று பரபரப்புடன் கூறியவாறே அவளைத்  தோளில் தூக்கிக் கொண்டான்.

மறு தோளில்  - குருநாதரை சுமந்து கொண்டான். சுரைக் குடுக்கையைப் போலிருந்தார் குருநாதர்.

மாணாக்கன் தைரியமாக ஆற்றில் இறங்கினான்.

கழுத்தளவு நீரிலும் கலங்காதவனாக நீரின் வேகத்துடன் போட்டி போட்டுக் கொண்டு தோள்களில் இருந்த இருவருடன் - பத்திரமாகக் கரை சேர்ந்தான்.

கரையில் - குதித்து இறங்கிய அந்த இளம்பெண்  ஆனந்தக் கண்ணீர் சிந்தியபடி மீண்டும் மீண்டும் கரங்குவித்து வணங்கியபடி விடை பெற்றாள்.

மறுதோளிலிருந்து மெல்ல இறங்கிய குருநாதர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

அவரைத் தொடர்ந்தான் மாணாக்கன். ஒரு நாழிகையாயிற்று.

வழியில் தென்னந்தோப்பினை ஒட்டியவாறு ஒரு கல் மேடை. 
அதைக் கண்டதும் குருநாதருக்கு கால் வலித்தது. வேறு வழியின்றி அதில் அமர்ந்தார். 

மாணாக்கன்  - குருநாதரின் காலடியில் அமர்ந்தான்.

ஆனாலும் நீ செய்தது மிகப் பெரும் பிழை!..

அதைக் கேட்டதும் விருட்டென எழுந்த மாணாக்கன் - பணிவுடன் கைகட்டி வாய் பொத்தியவாறு கேட்டான்.

பிழை என்ன செய்தேன்?.. பெரியீர்!..

என் அனுமதியின்றி - அந்த இளம் பெண்ணை  தோளில் தூக்கி வந்தாயே - அது தான் நீ செய்த பெரும் பிழை!..

மாணாக்கன் சொன்னான் - 
அவளை நான் அப்போதே இறக்கி விட்டு விட்டேனே!..

இவன் பதில் கூறுகின்றானா!.. கேள்வி கேட்கின்றானா!..
அமர்ந்திருந்த குருநாதர் - அதிர்ச்சியுடன் எழுந்து நின்றார்!..

மாணவனின்  விடைக்குள் கேட்காமல் கேட்ட கேள்வி ஒன்றும் இருந்தது.  
நீங்கள்  இன்னுமா அவளை மனதில் சுமந்து கொண்டு வருகின்றீர்கள்?..

மாணாக்கனின் விடைக்குள் வினா இருப்பதையும் அந்த சாமார்த்தியத்திற்குத் தம்மிடம் விடை இல்லாததையும் உணர்ந்து கொண்ட குருநாதர் தன் அன்பு மாணவனை அணைத்துக் கொண்டார்.

இப்போது இவ்விடத்தில் - யார் குரு?.. யார் மாணாக்கன்?..


ஆசிரியர் சொல்லிக் கொடுத்தவற்றை அப்படியே - தலைமேற்கொண்டு போகின்ற மாணாக்கனை விட - சூழ்நிலைகளை உத்தேசித்து குரு உபதேசித்த நல்லறிவின் மேற்சென்று சாதிக்கின்றவனே - தலை மாணாக்கன்!..

அப்படிப்பட்ட நல்லறிவினை எமக்குள் ஊட்டிய நல்லாசிரியர்களுக்கும் ஞானாசிரியர்களுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்கள்!..


பாடம் சொல்லிக் கொடுப்பதோடு நின்று விடாமல் பழக்க வழக்கங்களைச் சொல்லிக் கொடுத்தவர்கள்..
 
விருப்பு வெறுப்பு என்று எதுவும் இல்லாமல் நடுநிலையில் இருந்து - தன் முன்னிருக்கும் இளம் பிள்ளைகளுக்கு தான் பெற்ற நல்லறிவினை ஊட்டியதில் மற்றுமொரு தாய்!..

என் மாணாக்கன் தவறுகளில் இருந்து விடுபட வேண்டும் என்ற தணியாத ஆவலுடன் - கண்டித்தும் தண்டித்தும் நம்மை தரப்படுத்தியதில் மற்றுமொரு தந்தை!..

நல்லறிவினை ஊட்டிய நிலையில் -

இனி நீயே ஞானத்தினை உணர்ந்து கொள்!.. அது கிண்ணத்திலிருக்கும் தேனைப் போன்றது. மரத்தில் ஏறி தேனடையினை எடுக்கும் சிரமத்தைக் கூட நான் உனக்குத் தரவில்லை. ஆனால், அதனை நீதான் சுவைத்து உணர்ந்து கொள்ள வேண்டும் - தேனின் இனிப்பு என்பது எப்படியிருக்கும் என்பதனை!..

- என்று அடுத்த நிலைக்கு ஏற்றும் வேளையில், சுயம்பிரகாச நிலையில் குரு ஜொலிக்கின்றார்.

வால்மீகியுடன் லவன் குசன்
அதனால் தான் -

குரு பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வர
குரு சாக்ஷாத் பரப் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

- என்று வணக்கத்துடன் போற்றினார்கள்.

கல்விக்கூடங்கள் அதிகமானால் மனிதரின் தரம் மேம்படும் என்றனர். ஆனால் கல்வி கற்ற மக்களிடம் அறிவும்  நல்லொழுக்கமும் குணங்கள் குறைந்து வருவதாக பெரியோர்கள் கூறுகின்றனர்.

இன்றைக்கு - படித்தவர்கள் செய்யும் அட்டூழியங்கள் நாளும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஊடகங்களின் வாயிலாகப் படிக்கவும் கேட்கவும் பார்க்கவும் முடிகின்றது.

இந்நிலை மாற வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாகும்.

அது - நல்லாசிரியர்களினால் மட்டுமே ஆகக்கூடியது.



ஆசிரியராகத் தமது வாழ்வைத் தொடங்கி - நம் நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் தத்துவ மேதை டாக்டர்  S. ராதாகிருஷ்ணன் அவர்கள். 

நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தீட்டப்படுகின்றது!.. - என சிறப்பித்த அவரது பிறந்த நாளே ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னர் உள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!..  

- என்று கற்பித்தலின் மேன்மையினை மகாகவி புகழ்ந்துரைக்கின்றார்.

அப்படி மகாகவி புகழ்ந்துரைக்கும் முன்னரே -  

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!.. -  என வெற்றிவேற்கையில் தீர்க்கமாக உரைத்தவர் அதிவீரராம பாண்டியர்.

அவரே மேலும் கூறுகின்றார் - கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்!.. - என்று.
 
விஸ்வாமித்ரருடன் ராம லக்ஷ்மணர்

கற்றலும் கசடு அற மொழிதலும் கசடு அற நடத்தலுமே - கற்றவர்கள் தமது ஆசிரியருக்குச் செய்யும் மரியாதை!.. 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றையவை.  

- என்பது வள்ளுவப் பெருந்தகையின் திருவாக்கு. 

அத்தகைய கல்வியை நமக்கு அளிப்பவர்கள் ஆசிரியப் பெருமக்கள்!.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு 
புண்ணுடையர் கல்லாதவர்.

நம்மைக் கண்ணுடையராக வைத்தவர்கள் - ஆசிரியப் பெருமக்கள்!..

குரு சாந்தீபனி முனிவருடன் ஸ்ரீ கிருஷ்ணன்

நற்பண்புகளையும் நல்லொழுக்கத்தினையும் வளர்த்தவர்கள்..
தேசப் பற்றினையும் தெய்வ பக்தியினையும் விதைத்தவர்கள்..
ஆசிரியப் பெருமக்களைக் கை கூப்பி வணங்குகின்றேன்!.. 

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..

நாடு வாழ்க!..
நல்லாசிரியப் பெருமக்கள் வாழ்க!.. வாழ்க!..
* * *

9 கருத்துகள்:

  1. இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      இன்றைய நாளில் அன்பின் ஆசிரியர்களை நினைவு கூர்தல் ஆனந்தமே..
      ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  2. கதை நன்று.நல் ஆசிரியர் அமைவதும் இறைவன் கொடுக்கும்வரமோ. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் இனிய வருகைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி. மகிழ்ச்சி.

      நீக்கு
  3. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள் இன்றைய நாளில் எனது ஆசிரியர் திரு.குருந்தன் அவர்களை நினைவு கூர்கிறேன்,
    அனைவருக்கும் எமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் தின வாழ்த்திற்கு நன்றி ஐயா
    ஆசிரியர் தினத்தன்று தாங்கள் அலைபேசி வாயிலாக அழைத்து
    வாழ்த்துக் கூறியது மட்டில்ல மகிழ்வினை அளித்தது ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடன் உரையாடியதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  5. ஆசிரியர் தின சிறப்புப் பதிவு நன்று. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..