நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 27, 2014

ஸ்ரீவக்ர காளி

திருவக்கரை. 

ஸ்ரீகாளி உவந்து உறையும் திருத்தலங்களுள் ஒன்று. 

முன்னொரு காலத்தில்  - தாரகன் எனும் அரக்கன் விண்ணுக்கும் மண்ணுக்கும் பற்பல கொடுமைகளை அசுரர் குல வழக்கப்படி - செய்து கொண்டிருக்க, 

அஞ்சி நடுங்கிய உயிர்க் குலங்கள் எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைச் சரணடைந்தன.


ஒரு சமயம் - தட்சன் நடத்திய  யக்ஞத்தை அழிக்க வேண்டி பெருமானின் திருமேனியில் இருந்து ஸ்ரீ வீரபத்ரர் வெளிப்பட,

அம்பிகையின் கோபம் ஸ்ரீ பத்ர காளி என வெளிப்பட்டது. 

யாகம் அழிக்கப்பட்டதும் - ஸ்ரீ வீரபத்ரருடன் ஒடுங்கினாள்  ஸ்ரீ பத்ரகாளி. 
ஸ்ரீ வீரபத்ரர் - சிவபெருமானின் திருமேனியினுள் ஒடுங்கி சாந்தம் கொண்டார்.

அன்று தன்னுள் ஒடுங்கிய ஸ்ரீ பத்ரகாளியை - மீண்டும் சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.

இந்த வைபவத்தினை அப்பர் பெருமானும் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளும், மாணிக்க வாசகப் பெருமானும் திருமூலரும் - குறிப்பிடுகின்றனர்.

வல்லை வரு காளியை வகுத்து வலியாகி மிகு தாரகனை நீ
கொல் என விடுத்தருள் புரிந்த சிவன்!..
(3/69)

என்று திருக்காளத்தித் திருப்பதிகத்திலும் ,

சுரபுரத்தினைத் துயர்செய் தாரகன் 
துஞ்ச வெஞ்சினக் காளியைத் தருஞ்
சிரபுரத்துளான் என்ன வல்லவர் 
சித்தி பெற்றவரே!.. (3/110) 

என்று சீர்காழித் திருப்பதிகத்திலும் திருஞானசம்பந்தர் புகழ்கின்றார்.

ஸ்ரீ பத்ரகாளிதான் - ஐயனின் தாண்டவங்களுக்கு ஆதரவாக அமைகின்றனள். 

திருஆலங்காட்டிலும், தில்லை வனத்திலும் - ஐயன் காளியுடன் ஆடிய நடனத்தை அறியாதார் யார்!.. 

ஸ்ரீ பத்ரகாளி வழிபாடு மிகப் பழைமையானது.

தன் கணவன் - பழி சுமத்தப்பட்டு கொலைக்களத்தில் வீழ்த்தப்பட்டான் என்பதை அறிந்து கொதித்தெழுந்த கண்ணகி -

நீதி கேட்டு நெடுஞ்செழியனின் அவைக்கு வருகின்றனள். 

கண்ணகியின் வருகையை வாயிற்காவலன் - அரசனுக்கு அறிவிக்கும் போது,

தாருகன் பேருரங்கிழித்த பெண்ணும் அல்லள்!.. - என்று கூறுவதாக இளங்கோவடிகள்  இயம்புகின்றார்.

அத்தகைய ஸ்ரீ காளி பற்பல காலத்தும்  நன்மைகளைக் காத்து - தீமைகளைச் சாய்ப்பதற்குத் தோன்றியருள்வதாக புராணங்கள் பேசுகின்றன.  

அவ்விதமே - வக்ரன் எனும் அசுரனின் வன்கொடுமையை அழித்து ஒழித்த போது - ஸ்ரீவக்ரகாளி எனப் புகழப்பட்டாள்.

வக்ராசுரனை வதம் செய்தபின் அவள் அமர்ந்த திருத்தலம் - திருவக்கரை எனப்பட்டது.


பைதற் பிணக்குழைக் காளி - என அப்பர் பெருமான் வர்ணிக்கும் திருக் கோலம். 

வலது திருச்செவியில்  தெளிவாக விளங்குகின்றது சிசு . 
இது மகிஷாசுரனின் மனைவியின் கர்ப்பத்தில் தங்கிய மாய சிசு. 

இதனை ஸ்ரீ பேச்சியம்மன் தன் திருக்கரத்தினால் நீக்கி - அன்னை காளியிடம் கொடுக்க - அன்னை தன் காதணியாக அணிந்து கொண்டாள்.

குழற்கற்றைகள் அக்னி ஜூவாலைகளாக பரந்து விரிந்திருக்கின்றன. 
எட்டுத் திருக்கரங்களுடன் முண்டமாலை அணிந்த திருக்கோலம்.
ப்ரயோகச் சக்கரம். ஓங்கிய வாளும் ஊன்றிய சூலமும் அச்சம் தீர்க்கின்றன.
கபாலமும் மணிகள் பொருந்திய கேடயமும் வில்லும் ஏந்தியிருக்கின்றனள். 

நடராஜப் பெருமானின் குஞ்சித பாதம் குறிக்கும் பொருளாக - 
ஸ்ரீவக்ரகாளி - தன் இடது திருவடியினைச் சுட்டிக் காட்டுகின்றனள்.

பௌர்ணமி ஜோதி தரிசனம்
பௌர்ணமி நடுஇரவிலும் அமாவாசை நடுப்பகலிலும் ஜோதி தரிசனம்.  
சந்நதியின் முன்மண்டபத்தின் மேல் ஜோதி ஏற்றப்படுகின்றது. 
ஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். 
திருக்கோயிலின் அருகில் -  மயானம் ஒன்று அமைந்துள்ளது.

அன்னை அமர்ந்திருக்கும் திருவக்கரை -  தேவாரத் திருத்தலமாகும்.

ஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் பாடியுள்ளார். அப்பர் சுவாமிகள் பல பதிகங்களிலும் திருவக்கரையைப் புகழ்கின்றார்.

இறைவன் - ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர்.
அம்பிகை - அமிர்தேஸ்வரி.
தீர்த்தம் - சந்திர தீர்த்தம்.
தலவிருட்சம் - வில்வம்.

இறைவன் - சத்யோஜாதம், வாமதேவம், அகோரம் - எனும் மூன்று திருமுகங்களுடன் பொலிகின்றனன்.

உள்திருச்சுற்றில் குண்டலிமுனிவரின் ஜீவசமாதியுள்ளது. வக்ராசுரன் ஸ்தாபித்து வணங்கிய சிவலிங்கமும் இங்கே விளங்குகின்றது.

திருக்கோயிலினுள் ஸ்ரீ வரதராஜப்பெருமாளின் சந்நிதியும் விளங்குகின்றது பெருமாளின் திருக்கரத்தில் ப்ரயோக சக்கரம் திகழ்கின்றது.

ராகு கிரகத்தின் அதிபதி ஸ்ரீகாளி என்பதாலும், சனைச்சரன் இங்கே வக்ர சனி என  விளங்குவதாலும் அன்பர்கள் தேடி வந்து வழிபடுகின்றனர்.

வக்ரகாளியம்மனுக்கு விசேஷமாக சந்தனக் காப்பு அலங்காரம் நிகழ்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீவக்ரகாளியம்மனை தரிசனம் செய்தபோது மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தேன்.

அன்றைய தினம் அன்னை சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்தாள். பக்தர் நெருக்கடி இல்லாமல் ஏகாந்தமாக இருந்தது - அவள் சந்நிதி.  

சிறுபொழுது அமர்ந்து அவளது திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  

நிவேத்யம் செய்த பால் எனக் கொடுத்தார் - இளம் பெண் ஒருவர். அப்போது அவருடைய விழிகள் அஞ்ச வேண்டாம் என்றன. 

வக்ரகாளியிடம் நேரில் பேசியதைப் போல் - மனம் பரவசமானது.

எழுந்து - குருக்களிடம் சிறிது சந்தனம் கேட்டேன்.  வக்ர காளியின் திருமேனியிலிருந்து - எலுமிச்சம் பழம் அளவுக்கு - எடுத்துக் கொடுத்தார்.

விரைவில் ஒரு மாறுதல்!..

ஸ்ரீகாளி தந்த வரப்ரசாதம் தான் - இப்போதைய குவைத் வாழ்க்கை!..

யாதுமாகி நின்றாய் காளி!.. என்றார் மகாகவி பாரதியார்.

என்றும் அவளை மறப்பதற்கில்லை!.. 
சமயத்தில் -  அவளை நான் மறந்தாலும் 
அவள் என்னை மறப்பதேயில்லை!..

ஓம் சக்தி ஓம்!..
ஸ்ரீவக்ர காளி சரணம்!..
* * *

12 கருத்துகள்:

  1. திருவக்கரை ஒரு முறை சென்றுள்ளேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஸ்ரீவக்ரகாளியிடம் வரம் பெற்ற தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அழகிய படங்களுடன் திருவக்கரை பற்றிய சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    உடலும் உணர்வும் சிலிர்க்க வக்ரகாளியைப் பற்றி
    இவ்வளவு வரலாறு, அதிசயங்களை இன்றறிந்தேன்.

    என்ன சொல்வது? இதையெல்லாம் படிக்கும்போது வாழ்வில் எதுவுமே கிட்டாத பாவியானேனோ என ஏக்கம் பீறிட்டெழுகிறது ஐயா!..

    எனினும் அந்த இறையருள் தந்த கொடை நீங்கள் இடும் பதிவுகளையேனும் கண்டுணர்ந்து கொள்ள எனக்குக் கிட்டியது.

    உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் கருத்துரையைக் கண்டு மனம் நெகிழ்கின்றது.
      வரம் தந்து வாழ்வளிப்பாள் வக்ரகாளி!..
      வாழ்க நலம்..

      நீக்கு
  4. வக்ரகாளியைப்பற்றி வரமாய் வந்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை,
    ஐயா தங்களது வலைப்பூவை எனது டாஸ்போர்டில் இணைக்க முடிவதில்லை என்ன காரணம் அதனால் எனக்கு உடன் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் குறிப்பிடும் குறையை சரி செய்ய வேண்டும்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..

      நீக்கு
  6. இது வரை சென்றிராத பல தலங்களில் ஒன்று. உங்கள் பதிவு மூலம் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..