நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூலை 30, 2014

சூடிக் கொடுத்த கோதை

திங்கட்கிழமை (ஜூலை/28). மாலை நேரம்.

திருஅரங்கத்தில் கோலாகலம்.

பட்டுப்புடவை, பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், மாலைகள், கற்கண்டு, பழவகைகள்,  பேரீச்சம்பழம் - என இருபது தட்டுகளில் மங்கலப்பொருட்கள்!..

திருஅரங்கனின் சார்பாக - திருக்கோயிலின் ஸ்ரீரங்க விலாஸ மண்டபத்தில் இருந்து மேளதாளத்துடன் அனுப்பி வைக்கப்பட்டன.

எங்கே!?... 

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு!?..

யாருக்கு!?..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடிக்கும் ரங்கமன்னாருக்கும் கருடாழ்வானுக்கும்!..


இன்று - புதன் கிழமை. ஆடிப்பூரம்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் அல்லவா!..

அதை முன்னிட்டுத் தான் இந்த வஸ்திர மரியாதை!..

ஆடிப்பூர தேரோட்டத்தின் போது - ஆண்டாள் இந்த மங்கலங்களுடன் தேரேறி திருநாள் காண்பாள். 

ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கும் வஸ்திர மரியாதை எனப்படும் மங்களப் பொருள்கள் பரிவர்த்தனை ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டத்தின்போது  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகள், வஸ்திரங்கள் மற்றும் மங்கலப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அனுப்பி வைக்க -

அவ்வண்ணமே - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் கோயிலிருந்து மங்கலப் பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைப்பர்.

இதேபோல -

சித்ரா பௌர்ணமிக்கு ஸ்ரீகள்ளழகர் சூடிக் கொள்வதற்கு ஸ்ரீஆண்டாள் சூடிக் களைந்த மங்கலப் பொருட்கள் இங்கிருந்து மதுரை செல்லும்.

இதற்கு சீதனமாக இருமுறை சித்ரா பௌர்ணமிக்கும், ஆடிப்பூரத்திற்கும் ஸ்ரீஆண்டாளுக்கு கள்ளழகர் சூடிக் களைந்த மாலையும்  பரிவட்டமும் வரும்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரத் திருவிழாவிற்காக ஜூலை/22 கொடியேற்றம் நடந்தது.


முதல் நாளில் இருந்தே - ஆண்டாளும் வடபெருங் கோயிலுடையானும் -.

பதினாறு கால் சப்பரம், தங்கப்பல்லக்கு, தந்தப்பல்லக்கு, கோவர்த்தன கிரி , ஹனும வாகனம், சேஷ வாகனம் - என  திருவீதி எழுந்தருளினர்.

ஜூலை/26 - ஐந்தாம் திருநாளன்று சிறப்பு மிக்க ஐந்து கருட சேவை.

பெரியாழ்வார் அன்ன வாகனத்தில் முன் செல்ல  ரங்கமன்னார் கருட வாகனத்திலும் ஆண்டாள் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.

தொடர்ந்து - பெரிய பெருமாள், சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீநிவாஸப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் - தனித்தனியே கருட வாகனங்களில் ஆரோகணித்து சேவை சாதித்தனர்.

ஜூலை/28 ஏழாம் திருநாளன்று சயன சேவை!.. 


ஆண்டாள் மடியில் அனந்தன் தலைசாய்த்த சயனத் திருக்கோல வைபவம் கோலாகலமாக நிகழ்ந்தது.

இன்று ஆடிப்பூரத் தேரோட்டம்!..

கலியுகாதி 98.  நள வருடம் - ஆடிமாதம். சுக்லபட்சம் எனும் வளர்பிறையின் சதுர்த்தசி திதி. பூர நட்சத்திரம் கூடிய நன்னாள். செவ்வாய்க் கிழமை.


ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையானின் திருத்துழாய் வனத்தில் - பூமாதேவி - குழந்தையாய் திருஅவதாரம் செய்தாள்.

அவளைக் கண்டெடுத்து உச்சி முகந்தவர் விஷ்ணு சித்தர்.
இவரே பின்னாளில் பெரியாழ்வார் எனப்பட்டார்.

குழந்தைக்குக் கோதை எனத் திருப்பெயர் சூட்டிக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். கோதையும்  - கண்ணன் மேல் கருத்தும் காதலுமாக வளர்ந்தாள்.

வடபத்ர சாயிக்கு என - தந்தையார் தொடுத்த மாலைகளை - தான் அணிந்து அழகு பார்த்துக் களித்தாள். அரங்கனின் அன்பெனும் வாரிதியில் நீந்திக் குளித்தாள்.


மாதவனுக்கெனத் தொடுத்த மாலையை மகள் அணிந்து களைவதைக் கண்டு ஆழ்வார் அதிர்ந்தார். சினந்தார். முகம் சிவந்தார். அதனை அனந்தனுக்கு அளிக்கப் பயந்தார்.

அனந்தனோ - கோதை சூடிக் களைந்த மாலையைத் தான் உகந்தான். 

சூடிக் களைந்த மாலையைக் கேட்டு - உலகளந்த வேளையில் மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு ஒற்றைக் காலில் நின்றதைப் போல இப்போதும் நின்றான்!..

அன்று முதல் கோதை - தோளில் பூமாலையை சூடிக் கொடுத்தாள். அத்துடன் செந்தமிழில்  பாமாலையும்  பாடிக் கொடுத்தாள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்யும்!..

- என்று, பாவை நோன்பின் நோக்கத்தை வலியுறுத்தி ஊருக்காகப் பாடினாள்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..

- என்று, மாரி பெய்து மண் செழிக்க வேண்டி  உலகுக்காக வாடினாள்.

கருப்பூரம் நாறுமோ!.. கமலப்பூ நாறுமோ!..
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ!..
மருப்பொசித்த மாதவன்றன் வாய்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!..

- என்று தனக்காக பாஞ்சசன்னியத்திடம் கேட்டாள்.

மகள் கேட்டதை தந்தையும் கேட்டார்.

என்னம்மா.. சேதி!?.. என்று மகளிடமே கேட்டார். 

ஆண்டாள் நாயகியாகி நாரணனை அடையத் துடிக்கின்ற நிலையில் -

மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்!..

- என்று தீர்க்கமாகச் சொல்லி விடுகின்றாள். 

இஃது எங்ஙனம் கை கூடும்?.. - என்று  ஆழ்வார் அயர்ந்த வேளையில் அரங்கன் அவரது கனவில் தோன்றி -

கோதையைக் கோயிலுக்கு அழைத்து வருக. அவளை யாம் ஏற்போம்!.. - என அருளினன்.

அவ்வேளையில் கோதை நாயகியும் - மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றுவதாக - கனாக் கண்டாள்..

அவ்வண்ணம் தான் - கனாக் கண்டதை தோழிக்கு உரைப்பதாக திருப்பாசுரம் அருளினாள்.


வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்!..

ஆண்டாள் அருளிய திருப்பாசுரத்தினை பக்தியுடன் பாராயணம் செய்யும் கன்னியர்க்கு விரைவில் நல்ல வரன் அமைந்து திருமணம் கைகூடும் என்பதும் நன்மக்கட்பேறு வாய்க்கும் என்பதும் நிதர்சனம்.


ஆண்டாள் அருளிய சங்கத் தமிழ் மாலை முப்பது எனும்  திருப் பாசுரங்களே திருப்பாவை!..

நாச்சியார் அருளிய திருமொழிப் பாசுரங்கள் வரலாற்றுச் சிறப்புக்குரியவை.  

அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை. தமிழரின் வழிபாட்டு நெறிகளையும் வாழ்வியல் முறைகளையும் நம்முன் காட்டுபவை. 

தனது கனவினை உரைத்து அருளிய திருப்பாட்டுகள் அன்றைய தமிழரின்  திருமண முறைக்கு அற்புதமான எடுத்துக்காட்டுகளாவன. 

இளங்காலைப் பொழுதில் ஆய்ச்சியர் தயிர் கடைகின்ற வேளையில் - 

நோன்பு நோற்க வேண்டி, ஆய்ப்பாடியின் செல்வச்சிறுமிகள் - வீடு வீடாகச் சென்று தோழிகளைத் துயில் எழுப்புதல் - தான் பெற்ற இன்பத்தினை இவ்வையகமும் பெறவேண்டும் எனும் தகைமையினைக் காட்டுகின்றது. 

மண்ணும் மனிதமும் இன்ன பிற உயிர்களும் வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வதற்குத் திங்கள் மும்மாரி பொழிய வேண்டும் - எனக் கேட்கும் பண்பினில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் சிகரம் என உயர்ந்து நிற்கின்றாள்.

அதனால் அன்றோ -


அவள் குடியிருக்கும் கோபுரம் தமிழக அரசின் முத்திரையானது.

அன்னவள் - ஆடிப் பூரத்தன்று கோலாகலமாகத் தேரோட்டம் காணுகின்றாள்.

வானில் காரோட்டம் மிக வேண்டும். மழை பொழிந்து ஆற்றில் நீரோட்டம் நிறைய வேண்டும். அது கொண்டு ஏரோட்டம் தழைக்க வேண்டும். சீரோட்டம் அதுவாகி தரணியெங்கும் செழிக்க வேண்டும். 

தேரோட்டம் காணும் தெய்வமகள் பெயர் போற்றி
பாரெல்லாம் துதிக்க வேண்டும்!..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் வாழ்க!..

திருஆடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே!..

ஆண்டாள் திருவடிகளே சரணம்!..
* * *

17 கருத்துகள்:

  1. கோதை ஆண்டாளைப்பற்றி
    கோலாகலமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் பாராட்டுரைக்கு நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. வணக்கம் ஐயா!

    ஆண்டாள் சரிதம் அறிந்திருந்தாலும்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
    அத்தனை பக்திப் பரவசமாக இருக்கும்.
    இங்கும் உங்கள் இப்பதிவு அத்தகைய உணர்வினையே
    எனக்குத் தோற்றுவித்தது. அழகிய படங்களுடன் அருமை ஐயா!

    நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  3. அருமையான பாடல்களும், படங்களும் பகிர்வு அருமை.
    சிவாசியில் இருக்கும் போது உறவினர்களுடன் அடிக்கடி ஸ்ரீவில்லிபுத்தூர் போய் கோதையை தரிசிப்போம்.
    அந்தக்கால நினைவுகளை மீட்டு வந்தது பதிவு.
    வாழ்த்துக்கள்.
    ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்,
      அழகான திருக்கோயில். ஆண்டாள் தோன்றிய துளசி வனம். முகம் பார்த்த கிண்று என்று நினைத்தாலே பரவசமாகும்.
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. சூடிக் கொடுத்த கோதை = துரை செல்வராஜூ

    ஆஹா. எங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பற்றிய அற்புதமான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு துரை செல்வராஜூ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும்
      இனிய கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி ஐயா..

      நீக்கு
  5. Kindly provide - Feed Burner Widget - enabling register Email id for getting your Blog.
    My email id:
    rathnavel.natarajan@gmail.com
    I am @ Srivilliputtur.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      Feed Burner Widget இணைப்பதற்கு முயற்சிக்கின்றேன் ஐயா.. நன்றி.

      நீக்கு
  6. ஸ்ரீவல்லிப்புத்தூருக்குச் சென்றிருக்கிறோம். சூடிக் கொடுத்தவர் கதைகளையும் கேட்டுள்ளோம். இருந்தாலும் பலரது வாய்மொழிமூலமும் எழுத்து மூலமும் படிப்பது திகட்டுவதில்லை. பக்தியா தமிழா என்று விளங்குவதில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் - என்று சொல்வார்கள்..
      எனவே தான் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாளைப் பற்றிப் படித்தாலும் கேட்டாலும் திகட்டுவதேயில்லை.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.
      தங்களின் வாழ்த்துரைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  7. ஆண்டாளைப் பற்றி அற்புதப் பதிவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    ஐயா.
    ஆண்டாள் பற்றி அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. ஆஹா,,, கோதை ஆண்டாளுக்கு கோலாகல விழா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..