நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 11, 2014

மாங்கனித் திருவிழா

மாத்ரு தேவோ பவ 
பித்ரு தேவோ பவ 
ஆசார்ய தேவோ பவ 
அதிதி தேவோ பவ!..

அன்னையை, தந்தையை, ஆசிரியரை தெய்மாகப் போற்ற வேண்டும்.  அத்துடன் - இல்லம் நாடி வரும் விருந்தினரையும் தெய்வமாகப் போற்ற வேண்டும்!.. - என்பது வேதம்.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை என்பது ஐயனின் அருளுரை. அதிலும் மலர்ந்த முகத்துடனும் நிறைந்த மனத்துடனும் செய்யும் அறம் எனில் - அங்கே தெய்வம் தேடி வந்து நிற்கும் என்பது நீதி!..

இயற்கையின் பல்வேறு கோலங்களில் விரவிக் கிடக்கும் அழகு   மகிழ்ச்சியை அளிக்கின்றது!.. அதனைப் புற அழகு எனக் கொண்டால், 

மனித மனங்களில் மலரும் கோலாகல குணங்களின் அழகு - அக அழகு!..

ஆணுக்கும் பெண்ணுக்கும் பல்வேறு விதமான அழகு பொலிந்திருப்பினும் கொடை என்பதே - குன்றாத அழகு!.. நல்ல மனமே - பேரழகு.

அத்தகைய அழகு - 

பெண்மையில் குடி கொள்ளும்போது  - திருமகள் எனப் பெயர் கொள்கின்றது.

திருமகளைப் போலப் பேரழகு வாய்க்கப் பெற்ற ஒரு பெண், தனக்கு இந்த அழகு வேண்டாம் !.. என்றால்,

அப்படியும் சொல்வார்களா!?... என்ன!...

சொல்லியிருக்கின்றார்களே!...

அப்படிச் சொன்னதால் தானே - எல்லாம் வல்ல எம்பெருமானாகிய சிவப் பரம்பொருள் - அம்மையே!.. என்றழைத்தது!... 

அதனால் தானே -

செயற்கரிய செய்த சிவனடியார்களாகிய - நாயன்மார் திருக்கூட்டத்துள் தான் மட்டும் அமர்ந்திருக்கும் தனிப்பெரும் பேற்றினைப் பெற்றார் - பின்னை நாட்களில்!..

யார் அவர்!?..


எங்கள் அன்னை புனிதவதியார்!...

''..தாயும் தந்தையும் இல்லாதவன்!..'' எனும் பெருமைக்குரிய ஈசனே - இவர் திருக்கரத்தினால் அமுதூட்டிக் கொள்ள விரும்பி வந்தார் எனில் - 

மெய்யாகவே புனிதத்துவம் நிறையப் பெற்றிருந்த பெண்ணில் நல்லாள் - புனிதவதி அம்மையாரின் திருப்பாதங்களை நாம் - நம் தலையில் சூட்டிக் கொள்ள என்ன தவம் செய்தோமோ!.. 

ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் -

மானம் மிகுந்து ஊனமில்லாத வாய்மை வழியினில் நின்று வணிகம் செய்யும் உயர் வணிகர் நிறைந்து விளங்கிய திருநகர் காரைக்கால்.

அந்நகரில், பெருவணிகராக சிறந்து விளங்கியவர் தனதத்தர். அவருடைய அன்பு மனைவி - தர்மவதி.

அவர்கள் செய்த தவத்தின் நற்பயனாக திருமடந்தை என அவதரித்தது ஒரு பெண் குழந்தை. அகமும் முகமும் மலர ஆனந்த வெள்ளத்தில் களித்து புனிதவதி என திருப்பெயர் சூட்டி பாராட்டி சீராட்டி வளர்த்தனர் அன்பு மகளை.

நற்கல்வி பயின்று நல்லொழுக்கத்துடன் அஞ்செழுத்தை நெஞ்சில் நிறுத்தி சிவக்கொழுந்து என வளர்ந்தார் - புனிதவதி.  காலம் கனிந்தது. புனிதவதி திருமணப் பருவம் எய்தியதும் -

காரைக்காலுக்குத் தெற்கே  விளங்கிய மற்றொரு கடற்கரைப் பெருநகராகிய நாகப்பட்டினத்தில் பெருஞ்சிறப்புடன் வணிகம் செய்து வந்த நிதிபதி எனும் பெருமகன்  - புனிதவதியின் அருங்குணங்களைக் கேள்விப்பட்டு -  தம் திருமகனாகிய பரமதத்தனுக்கு, மணமுடித்து வைக்க விரும்பினார். 

அவ்வண்ணமே - பெரியவர்கள்  கூடிப் பேசி மங்கலகரமான மணவினைகளை சீருடனும் சிறப்புடனும் நிறைவேற்றி வைத்தனர். திருமணநாளில் பெருஞ் செல்வத்தினை - வறியோர்க்கு வாரி வழங்கினர்

தம் கண்ணுக்குக் கண்ணாகிய அருமை மகளைப் பிரிய மனமில்லாத - தனதத்தர், தன் அன்பு மருகனை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டார் - 

''..இங்கேயே - காரைக்காலில் எம் மகளுடன், தாம்  தனி மனையில் தங்கி இல்லறம் எனும் நல்லறத்தினை நாடாத்துங்கள்!...'' - என்று!..

அதற்கு பெரியோர்களும் மனம் உவந்து அளித்த அனுமதியின் பேரில்,  பரமதத்தனும் இசைந்து - தன் வணிகத்தினை காரைக்காலிலும் விரிவு செய்து கொண்டு அன்பு மனையாளுடன் இனிதிருந்தான் . 

தனதத்தர் தனது அன்பு மருகனுடன்,  தாம் பெற்ற செல்வம் நடத்தும் நல்லறத்தைக் கண்டு பெருமகிழ்வெய்தி உவந்திருந்த வேளையில் -

எல்லாம் வல்ல சிவம், உலகோர் உணரும்படி - ஒரு திருவிளையாடலை நிகழ்த்துதற்கு - சித்தம் கொண்டது., 

பாருக்கெல்லாம் படியளக்கும் பரமசிவம்  - வயோதிக அடியாராக தானும் ஒரு பாத்திரம் ஏற்று - ஆடுகளமாகிய - பரமதத்தனின் வீடு தேடி வந்து நின்றது.


''..சிவாய திருச்சிற்றம்பலம்!..''

தேனாகப் பாய்ந்த குரல் கேட்டு வாசல் வந்த புனிதவதி - அடியாரைக் கண்டு அகமகிழ்ந்து - பாதமலர்களைப் பணிந்து அமுது உண்ண அழைத்தார்.

நாளும் அடியார்களுக்கு நல்லமுது செய்வித்து - அவர் தமக்குத் தேவையின் பொருட்டு செம்பொன்னும் நவமணியும் செழுந்துகிலும் மற்றும் வேண்டுவன கொடுத்து உபசரிக்கும் பெருங்குடும்பம் அது.

அத்தகைய குடும்பத்தில் - குணக் குன்றாக விளங்கிய புனிதவதியாரின் அழைப்பினை ஏற்று இல்லம் நுழைந்தார் அடியவராய் வந்திருக்கும் அருட்கடல்.

அடியார் தம் பாதங்கழுவி வணங்கி - மிகுந்த மரியாதையுடன் அவருக்கு ஆசனம் அளித்து தலைவாழையிலையில் தயிர் அமுது அளித்ததோடு,

சற்று முன் தன் கணவன் ஆள் மூலம் கொடுத்து அனுப்பியிருந்த மாங்கனிகள் இரண்டனுள் ஒன்றினை பக்குவமாக அரிந்து அளித்தார்.

அதனை  அடியார் விருப்புடன் உண்ணுவதைக் கண்டு - கண் பெற்ற பேறு எனக் களித்திருந்தார்.

வயிறார உணவருந்திய அடியார், மனமார வாழ்த்தி திருநீறு வழங்கிச் சென்றார். அது நிகழ்ந்த பின்  - சிறு பொழுதில் -

மதிய உணவருந்த வீடு திரும்பினான்  - பரமதத்தன்.

மணாளனை வரவேற்ற புனிதவதி,  கணவனின் களைப்பு தீர உபசரித்து அன்பும் ஆதுரமும் மீதூற - உணவு பரிமாறினார்.

கணவன் கொடுத்தனுப்பிய  மாங்கனியை  அரிந்து இலையில் இட்டார்.

ஆவலுடன் அதனை உண்ட பரமதத்தன் - ''..நல்ல சுவையாக இருக்கின்றதே!..   இன்னொன்றையும் கொடு!..'' - எனக் கேட்டான். 

அதிர்ச்சியடைந்த புனிதவதி - உள்ளே ஓடிச் சென்று,  சிக்கலான சூழ்நிலை சீராக வேண்டி - கயிலாய நாதனிடம் கையேந்தி நின்றார். 

ஏந்திய கரங்களில் திருவருட் துணையால் ஒரு மாங்கனி கிடைத்தது. 

ஈசனின் பேருதவியை வியந்த வண்ணம் - அதனை கணவனுக்கு அளித்தார். அதனை உண்ட பரமதத்தன் - வியப்பின் எல்லைக்குச் சென்றான். காரணம் - முன்பு எப்போதும் உண்டறியாத சுவையுடன்  இருந்தது அந்தக்கனி..

தான் பெற்ற அனுபவத்தை வியந்து  - தன் மனதில் உண்டான சந்தேகத்தையும் கூறினான். இதற்கு மேல் உண்மையை மறைக்க விரும்பாத புனிதவதி நடந்தவற்றினை விளக்கினார்.

அதிர்ச்சியடைந்த பரமதத்தன் - ''..அங்ஙனமாயின்  வேறு ஒரு மாங்கனியைப் பெற்று என் கண் முன்னே காட்டுக!..'' - என்றான். 

அன்னையும் அவ்வண்ணமே - ஐயனைச் சரணடைந்து கையேந்தி நின்றார்.


ஏந்திய கரங்களில் ஈசன் மீண்டும் ஒரு மாங்கனியினை அருளினான்.

அன்புடன் அதனை கணவனின் கையில் கொடுத்தார் - அன்னை .

விழிகள் வியப்பால் விரிய  - விந்தையினும் விந்தையாக பரமதத்தன் தன் கையினில் வாங்கினான்.

மாங்கனியைக் கண்டான். கண்ட மாத்திரத்தில் மாங்கனி மறைந்து விட்டது. 

அதிர்ந்தான். அஞ்சினான். அடுத்துப் பேச மொழியின்றி அடங்கினான்.

அப்போதைக்கு அந்த அருஞ்செயலை வியந்தாலும் - தெய்வாம்சம் பொருந்திய புனிதவதியுடன் வாழ்தல் இனி தகாது!.. என - தனக்குள் தானாக முடிவு செய்து -  

சில நாட்கள் கழித்த நிலையில் வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்வதாகப் பொய்யுரைத்து வேண்டிய பொருளுடன் மதுரையம்பதியை சென்றடைந்தான்.

நாட்கள் கழிந்தன - மாதங்கள் , வருடங்கள் - என.

வெளியூர் சென்ற கணவனைப் பற்றிய விவரம் ஏதும் அறிய முடியாமல் - சித்தம் எல்லாம் சிவமயமே! - என அறவழியில் நின்றார் புனிதவதியார்.

அங்கும் இங்கும் சென்று வணிகம் செய்வோரால் அறியப்பட்டது - பரமதத்தன் மதுரையில் பெரும் வணிகனாக இன்னொரு திருமணம் செய்து கொண்டு குழந்தையுடன் வாழும் செய்தி!...

அதிர்ச்சியடைந்த உற்றாரும் உறவினரும் புனிதவதியாரை அழைத்துக் கொண்டு - மதுரைக்கே சென்றனர்.  ஊர் எல்லையில் தங்கினர்.

அவர்கள் வந்திருக்கும் செய்தி அறிந்த பரமதத்தன், தன் மனைவியுடனும் தன் மகளுடனும் ஓடோடி வந்து எதிர்கொண்டு வணங்கி அழைத்தான். 

''..தம்முடைய  கருணையால் நலமுடன் வாழ்கின்றேன். என் மகளுக்கும் தங்கள் திருப்பெயரையே சூட்டியுள்ளேன்!...''

- எனக் கூறியபடி புனிதவதியாரின் கால்களில் விழுந்து வணங்கினான்.

இதனைக் கண்ட அத்தனை பேரும் நடுநடுங்கிப் போயினர். பின்னே!...

மனைவியின் கால்களில் கணவன் விழுந்து வணங்குவதாவது?....

அதிர்ச்சி அடைந்த அவர்கள் மனம் தெளியும்படி,  அன்று நடந்த மாங்கனி அதிசயத்தை விவரித்தான்.

மானுடம் தாங்கி, பெண் என வந்த பெருந்தெய்வம். ஆதலின் பணிந்தேன்  அவர் பொற்பதம்!.. - என்றான்.

இதைக் கேட்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

புனிதவதியார் - கணவனின் செயல் கண்டு மிகுந்த வேதனையடைந்தார்.


மனம் கலங்கிய அவர் - ''தன் கணவனுக்கு ஆகாத அழகும் இளமையும் தனக்கு எதற்கு?.. அழகும் இளமையும் என்னை விட்டு நீங்குக!.'' - என தன் பேரழகை தானாகவே நீத்தார்.

எவரும் விரும்பாத - எலும்பும் தோலுமான பேயுருவினை ஈசனை வேண்டிப் பெற்றார். விரும்பி ஏற்றார்.

''..காண்பதெல்லாம் என்ன!..'' - என வியந்து நின்றனர் அனைவரும். மகளின் கோலங்கண்டு ஆற்ற மாட்டாமல் கண்ணீர் வடித்தனர் தாய் தந்தையர்.

திருவருள் கூடி வந்தது என அவர்களைத் தேற்றினார் - புனிதவதியார்.

இறைவனிடம் உருகி நாளும் பொழுதும் - மனம் ஒன்றி இருந்த திருக்கயிலாய தரிசனம் பெற வேண்டி நடந்தார்.

காலங்கள் சென்றன . திருக்கயிலாய மாமலையினை நெருங்கிய வேளையில் வழியெங்கும் சிவலிங்கங்களாகத் தோன்றின. திருமலையில் கால் பதிக்க அஞ்சிய அம்மையார் தலையைத் தரையில் வைத்து கைகளால் ஊர்ந்து சென்றார்.

ஐயனின் உடனிருந்து அனைத்தையும் நடத்தும் பாகம் பிரியாதவளாகிய பராசக்தி - ஏதும் அறியாதவளைப் போல வியந்து  இறைவனை நோக்கி,

''..பெருமானே தலையினால் நம்மை நோக்கி ஊர்ந்துவரும் இவர் யார்?..'' என வினவினாள்.

சிவபெருமானும்,  ''..அன்பினால் நம்மைப் பேணும் அம்மையாவாள். பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றனள்!..''  எனக் கூறி,

''..அம்மையே... வருக!..'' என இன்முகத்துடன் செந்தமிழ் கொண்டு புனிதவதியாரை அழைத்தருளினார். 

''..அப்பா!..'' என்றபடி  இறைவனையும் இறைவியையும் தொழுது அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினார் புனிதவதியார்.

இறைவன் அவரை நோக்கி, ''..நீ நம்மிடம் வேண்டுவது என்ன?...'' எனக் கேட்க 


இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்.
(60)
சேக்கிழார் அருளிய பெரிய புராணம்

அவ்வண்ணமே நல்கிய பெருமான்,  ''..ரத்ன சபை எனும் திருஆலங்காட்டில் யாம் அருளும் திருக்கூத்தினைக் கண்டு  இன்புறுக!..'' - என அருளினார். 


கயிலாய நாதனின் தரிசனம் கிடைக்கப் பெற்ற காரைக்காலம்மையார் - பேய்கள் ஆடிக்களிக்கும் ஆலங்காட்டின் பெருங்காட்டில்  ஐயனின் ஆடலைக் கண்டு மகிழக் காத்திருந்தார்.  

அங்கே குழுமியிருந்த - முன்னைப் பேய்களிடம்  - தன்னை காரைக்கால் பேய் எனக் கூறிக் கொண்டார்.

அற்புதத் திருஅந்தாதி, திருஇரட்டை மணிமாலை - எனும் பாமாலைகளைக் கொண்டு ஈசனைத் துதித்தார்.

நாளும் கோளும் கூடிய நல்வேளை. பங்குனி மாத சுவாதி!.. 

காரைக்கால் அம்மையார் பொருட்டு - தேவரும் மூவரும் காணற்கரிய திருநடனத்தை ஐயனும் அம்பிகையும்  நிகழ்த்தினர். 

ஐயனின் திருநடனத்தை காரைக்காலம்மையார் கண்டு இன்புற்று, செந்தமிழால் பாடித் துதித்தார். அந்நிலையில்  -

ஐயனின் திருவடித் தாமரையின் கீழ் சிவநிலையினைப் பெற்றார்.

ஆலங்காட்டு மயானத்தில் அம்மையார் அருளிய கொங்கை திரங்கி நரம்பெழுந்து  எனும் திருப்பதிகமும்  எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும் எனும் திருப்பதிகமும்  மூத்த திருப்பதிகம் எனப்படுவவை. 

மாங்கனித் திருவிழா

அம்மையாரின் புகழைப் போற்றும் வண்ணமாக - காரைக்காலில் மாங்கனித் திருவிழா நேற்று மாலை (ஜுலை10) மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது.

இன்று  ஜூலை11 (வெள்ளி ) காலையில் புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு  எழுந்தருள, பரம தத்தன் குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்துக்கு வருவார்.

பகல் பத்து மணியளவில் புனிதவதியார் - பரமதத்தன் திருக்கல்யாணம் நிகழ்கின்றது. ஆயிரக் கணக்கான மக்கள் கூடி திருக்கல்யாணம் காண்பர்.

இரவு மணமக்கள் முத்து சிவிகையில் திருவீதியுலா எழுந்தருள்வர்.

நாளை (ஜூலை12) அதிகாலை பிக்ஷாடனர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை.

பரம தத்தன் காசுக்கடை மண்டபத்தில் இருந்து இரு மாங்கனிகளை தனது இல்லத்திற்கு கொடுத்து அனுப்பும் வைபவம் நிகழும்.


பின்னர் பிக்ஷாடனர் வெள்ளை சாற்றி திருவீதி எழுந்தருள புனிதவதியார் ஸ்வாமியை எதிர்கொண்டு அழைத்து அமுது படைக்கும் நிகழ்ச்சி.

மங்கல வாத்யங்கள் முழங்க  திருமுறை  வேத பாராயணத்துடன், பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளும் ஸ்ரீபிக்ஷாடனருக்கு - நேர்ந்து கொண்டவர்கள் பட்டுத் துண்டும் ஒரு மாம்பழமும் படைப்பார்கள்.

பிக்ஷாடனர் வீதிவலம் வரும் போது தான் - ஸ்வாமியைத் தொடர்ந்து வரும் பக்தர்களை நோக்கி மாங்கனிகள் வீசப்படும். கூடைகூடையாக மாம்பழங்களை இறைப்பர்.



வீட்டு வாசலில் இருந்தும் மாடிகளிலில் இருந்தும் வீசப்படும் மாங்கனிகளை போட்டி போட்டுக் கொண்டு பிடித்து மகிழ்வர்.

இப்படி வீசப்படும் மாங்கனிகளைப் பிடித்து உண்பது நன்மைகளை அளிக்கும் என்பது நம்பிக்கை.

திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானம் சிறப்புற நிகழும்.

பின் அடுத்தடுத்த நிகழ்வுகளுடன்  - புனிதவதியார் பேயுரு வேண்டிப் பெற்று கயிலாயம் செல்லும் வைபவம் சிறப்புடன் நிகழும்.

மாங்கனித் திருவிழாவின் சிகரமாக - ஜூலை13  அதிகாலையில்  சாலையில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில்  தீவட்டி வெளிச்சத்தில் பேய் வடிவுடன் அம்மையார் வரும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கும்.

அச்சமயம் பெருமாள் கோவில் எதிரில் கைலாயநாதனும் உமையம்மையும் அம்மையார்க்கு திருக்காட்சி நல்குவர்.

காரைக்கால் அம்மையார் நமக்குக் காட்டிய வழியில்
அகமும் முகமும் மலர அனைவரையும் உபசரித்து - 

இறைவா!.. உன்னை என்றும் மறவாதிருக்க வரம் தருக!.. 
என வேண்டித் தொழுவோம்!.. 

மற்ற அனைத்தையும் ஐயன் அவன் பார்த்துக் கொள்வான்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

25 கருத்துகள்:

  1. புனிதவதியார் அறியாதன அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  2. அன்னை புனிதவதியார் பற்றிய தகவல்கள் அனைத்தும் அற்புதம்...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் அன்பான வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. காரைக்கால் அம்மையாரின் சரிதத்தை மிக அழகாய் சொன்னீர்கள்.
    ஆனி மாதம் நடக்கும் காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா ஒருமுறை பார்த்து இருக்கிறேன். மக்கள் வீடுகளிலிருந்து கூடை கூடையாக பழங்களை வீசி ஏறிவார்கள். கிடைத்த மக்கள் பேறு பெற்றவர்களாக மகிழ்ந்து போவார்கள்.
    இத் திருவிழாவை இன்று நேரடி தரிசனம் பெற்றேன் உங்கள் பதிவின் மூலமாக.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      காரைக்கால் எனக்கு இன்னொரு தாய்வீடு. ஆம். எனது சின்னம்மா வீடு காரைக்காலில் தான்!..

      கோடை கொண்டாட்டம் அவர்கள் வீட்டில் தான். அம்மையார் கோயில் தரிசனமும் நுங்கும் பதநீரும் தர்கா கடை அல்வாவும் - இனி மீண்டும் அந்த சந்தோஷம் எப்போது கிட்டுமோ!?..

      சிறிய வயதில் அவர்கள் அம்மையாரின் வரலாற்றை தான் சொன்னார்கள்..அத்துடன் எனது தரிசன அனுபவத்தையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  4. வணக்கம் ஐயா!

    எத்தனை அருமையான அந்த மாங்கனிபோன்றே தித்திக்கின்ற வரலாறு.
    புனிதவதி அம்மையாரின் வரலாறு ஏற்கனவே அறிந்ததுதான். ஆயினும் இத்தனை சிறப்பாக, விரிவாக இப்போதுதான் அறிந்துகொண்டேன்.

    மாங்கனித் திருவிழா அற்புதம் தான் ஐயா!
    நல்ல பதிவு. படங்களும் அழகு! அருமையான தரிசனம்.

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மாங்கனித்திருவிழா பற்றி சுவையான
    பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  6. காரைக்காலம்மையார் பற்றியா கதை தெரிந்தது தான் என்றாலும், புதிதாக படிப்பது போன்ற பிரமை உண்டாக்கி விட்டீர்கள். நிறைய தகவல்கள் அடங்கிய பதிவு. திருவாலங்காடு செல்ல எத்தனயோ முறை பிரயத்தனப்பட்டும் இன்னும் எனக்கு தரிசனம் கிடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      திருஆலங்காடு இன்னும் சென்றதில்லை..
      எனக்கும் அது மனக்குறைதான்.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  7. மாங்கனி விழா பற்றிய சுவையான பதிவு ஐயா, அனைத்தும் எமக்கு புது கருத்துக்கள், பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு!..
      தங்களின் முதல் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. மாங்கனித் திருவிழா அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  9. நேற்று (12.7.2014) மாங்கனித்திருவிழா சென்றுவந்தோம். கண்கொள்ளாக் காட்சி. தங்களின் கட்டுரையும் எங்களது பயணத்திற்கு உந்துதலாக இருந்தது. காரைக்கால் சென்று வந்ததைப் பற்றிய பதிவை நானோ, என் மனைவியோ விரைவில் எழுதவுள்ளோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பரமன் திருவருள் தான் முதற்காரணம்.
      காரைக்காலில் தரிசனம் செய்து விட்டு - நமது தளத்திற்கு வந்து கருத்துரை வழங்கியமை கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  10. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-காவிய கவி


    பார்வையிட முகவரி-வலைச்சரம்


    அறிமுகம்செய்த திகதி-24.07.2014



    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்.
      வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்ட செய்தியினை அளித்து - வாழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி!.. வாழ்க நலம்!..

      நீக்கு
  11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

    வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.
      வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ள செய்தியினைக் கூறி - வாழ்த்திய தங்களுக்கு மனமார்ந்த நன்றி!.. வாழ்க நலம்!..

      நீக்கு
  12. ஐயா ,

    நான் "Saints of Hinduism "( https://saintsofhinduism.blogspot.com) என்கிற தளத்தில், ஆன்மீகத்தை ஆங்கிலத்தில் எழுத ஒரு சிறு முயற்சி மேற்கொண்டுள்ளேன். தற்பொழுது காரைக்கால் அம்மையாரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய இந்தப் பதிவில் அதற்கானப் படங்கள் அருமையாக இருக்கின்றன.
    இந்தப் படங்களை என்னுடைய ஆங்கிலப் பதிவில் உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.
    அனுமதி கிடைக்கும் பட்சத்தில்,படங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக உங்கள் பதிவிற்கு இணைப்பு கொடுத்து விடுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் கேட்பதே எனக்கு மகிழ்ச்சி.. இவையெல்லாம் இணையத்தில் இருந்து பெறப்பட்டவை..

      காரைக்கால் அம்மையாரைப் பற்றி நினைப்பதே புண்ணியம்.. தாங்கள் தாராளமாக இந்தப் படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்..

      வாழ்க நலம்..

      நீக்கு
    2. தங்கள் உதவிக்கு நன்றி ஐயா.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..