நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூலை 03, 2014

ஆனந்த தரிசனம்

ஆனித் திருமஞ்சன திருவிழா.

தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய ஸ்ரீசிதம்பரத்தில் திருத்தேரோட்டம்.

எம்பெருமானாகிய சிற்றம்பலக்கூத்தன் சிவகாமசுந்தரியுடன் திருத்தேரில் எழுந்தருளினன்.

ஸ்ரீதில்லைத் திருச்சிற்றம்பலத்தில் ஜூன்/25 அன்று துவஜாரோகணத்துடன் ஆனித் திருமஞ்சன உற்சவம் தொடங்கியது.

ஒன்பதாம் நாளான இன்று (ஜூலை/3) தேரோட்டம் நடைபெற்றது.

திருவிழாவின் மகுடமாக - வெள்ளிக்கிழமை (ஜூலை/4) அதிகாலையில் மகாபிஷேகம், பிற்பகல் இரண்டு மணிக்கு திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகின்றது.

சித்சபையில் இருந்து பொற்சபைக்கூத்தனும்  சிவகாமவல்லியும் - ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகியோருடன் தனித்தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர்.

தேவ உபசார தீபாரதனைகளுக்குப் பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து காலை எட்டு மணி அளவில்  தேர்கள் புறப்பட்டன.


ஆயிரக்கணக்கான பக்தர்கள் - பேரானந்த சிவகோஷத்துடன் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.

ரத வீதிகளில் - இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர், தில்லைத் திருமுறைக் கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தின் சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் ரதவீதிகளில் உழவாரப் பணியுடன் நீர் தெளித்து கோலமிட்டு திருப்பணி மேற்கொண்டனர்.


தேர்களுக்கு முன்பாக திருமிகு எம்.பொன்னம்பலம் அவர்கள் தலைமையில் ஓதுவார்கள் - தேவார திருவாசக திருமுறைப் பதிகங்களை ஓதியவாறு இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர்.

அன்னை பராசக்தி - மீனவப் பெருங்குலத்தில் கயற்கண்ணியாகப் பிறந்து எம்பெருமானை மணவாளனாக அடைந்தார் என்பது ஐதீகம்.

அதன்படி தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு ஆண்டும்  தேர் திருவிழாவின் போது மீனவப்பெருங்குலத்தினர்  சீர் வரிசை அளிப்பது வழக்கம்.

தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் மரபினை ஒட்டி - மீனவப் பெருங் குலத்தைச் சேர்ந்தவர்கள் அறங்காவலர் குழுத் தலைவர் தலைமையில் -

ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரிக்கும் சீர்வரிசை அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனையுடன் மரியாதை செய்து மகிழ்ந்தனர்.

இந்த மகத்தான வைபவம் மாலை நான்கு மணியளவில்  மேல ரதவீதியில் நிகழ்ந்த பின் - தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தேர்கள் - மாலைப் பொழுதில் தேரடியில் நிலைக்கு வந்தன.

முன்னிரவுப் பொழுதில்  - திருத்தேர்களிலிருந்து  ஸ்ரீநடராஜப் பெருமானும் ஸ்ரீசிவகாமசுந்தரியும் ஆயிரங்கால் மண்டபத்திற்குச் செல்வர்.

அங்கு அம்மைக்கும் அப்பனுக்கும் ஏககால லட்சார்ச்சனை நிகழும்.


ஜூலை/4 - வெள்ளிக்கிழமை  சூர்யோதயத்திற்கு முன் - ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபத்தில்  ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கும் ஸ்ரீசிவகாம சுந்தரிக்கும் மகாபிஷேகம் நடைபெறுகிறது.

தொடர்ந்து - புஷ்பாஞ்சலி நிகழும்.

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரம்.

சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது.

அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா எழுந்தருளல்.

பின்னர் பிற்பகல் 2.00 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வர்.


ஸ்ரீநடராஜப் பெருமானும் ஸ்ரீசிவகாமசுந்தரியும் ஆனந்தத் தாண்டவம் நிகழ்த்தி திருமஞ்சன தரிசன காட்சியளிக்கின்றனர். 

சித்சபா பிரவேசம் ஆகிய பின் மகாதீபாராதனை தரிசனம்.

ஜூலை/5 சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு தரிசனம். திருவீதி உலா.

ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழாவை முன்னிட்டு  தேரோடும் வீதிகளில் தேரோட்டத்திற்கு முன்பு சித்தர் ஸ்ரீசந்துரு சுவாமிகள்  அங்கப் பிரதட்சணம் செய்தார்.

ஸ்ரீசந்துரு சுவாமிகள் மனித நல்லிணக்க ஒற்றுமை வேண்டி ஸ்ரீநடராஜர் திருக் கோயிலின் - உள் பிரகாரம், வெளிப் பிரகாரம் மற்றும் ரத வீதிகளில் 2840 நாட்களை கடந்து தொடர் அங்கப் பிரதட்சணம் மேற்கொண்டுள்ளார்.


நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்து மின்ப மின்பமே!..
(1/80)
திருஞான சம்பந்தப்பெருமான்

அரியானை அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!.. (6/1)
திருநாவுக்கரசு சுவாமிகள்


உய்த்தாடித் திரியாதே உள்ளமே 
ஒழிகண்டாய்ஊன்கண் ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் 
பரஞ்சோதி பாவந் தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச் சிற் றம்பலத்தெம் 
பெருமானைப் பெற்றா மன்றே!.. (7/90)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!..
மாணிக்கவாசகப் பெருமான்


கூத்தன் கலந்திடும் கோல்வளை யாளொடும்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஆனந்தம்
கூத்தன் கலந்திடும் கோதிலா ஞானத்துக்
கூத்தனும் கூத்தியும் கூத்ததின் மேலே!..
திருமூலர் 

அருட்சோதி தெய்வம்எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும்  தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்!..
இராமலிங்க சுவாமிகள்

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கேபல்லாண்டு கூறுதுமே!.. 

சேந்தனார்

திருச்சிற்றம்பலம்!..
* * *

16 கருத்துகள்:

  1. ஆனி திருமஞ்சனத் திருவிழா
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி துரை செல்வராஜூ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. இன்று காலை நடந்த தேர் திருவிழா கண்டு களித்தேன்.
    இன்று இரவு திருமஞ்சனம் நிகழும். நாளை தரிசனம். முன்பு எல்லாம் அடிக்கடி போவோம் ஆனி திருமஞ்னத்திற்கு. இப்போது போக முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவில் தேர் திருவிழா பார்த்து விட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என்ன பேறு பெற்றனம்.. தில்லையில் தேரும் திருமஞ்சனமும் காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழாபற்றி அருமையான பகிர்வுகள்.. சிறப்பான படங்கள்.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. ஆனித் திருமஞ்சனம் குறித்தும் தேர் திருவிழா பற்றியும் சிறப்பான பகிர்வு... படங்களுடன் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. ஆனித் திருமஞ்சனம் - தரிசனம் கண்டேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. ஆனித் திருமஞ்சனம் கொடியேற்றம் முதல் தேர் வரை எதாவது ஒரு வருடம் காணக் கொடுத்து வைத்தவன் இந்த முறை தவறவிட்டது சற்று வருத்தமே. உங்கள் பதிவினைப் படிக்கும்போது நாங்கள் கலந்து கொண்ட போதைய நினைவுகள் வந்து மோதுகின்றன. தேரின் போது தேரையும் நடராஜரையும் புகைப் படம் எடுக்க விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நடப்பவை எல்லாம் நன்மைக்கே!..
      ஒரு அளவில் மனம் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு - ஈசன் எந்த உருவிலும் தேடி வந்து காட்சியருள்வான் - என்பர் பெரியோர். அது மிகவும் தங்களுக்குப் பொருந்தும்.

      தங்களைப் போன்ற பெரியோர்கள் - வருகை தந்து கருத்துரைப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..