புதன், செப்டம்பர் 24, 2025

அன்பில திவ்ய தேசம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை

இன்று
அன்பில் 
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் தரிசனம்..

காவிரி தீரத்தில்
பெருமாள் பள்ளி கொண்டு  விளங்குகின்ற தலங்களில்  அன்பில் திவ்ய தேசமும் ஒன்று..

திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருக்கோலம். பெருமாள் தாரக விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக சயனத் திருக் கோலம் கொண்டுள்ளார்..

மூலவர் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள்

தாயார் அழகிய வல்லி
உற்சவர் வடிவழகிய நம்பி
மண்டூக தீர்த்தம்
தல விருட்சம் தாழம்பூ

மண்டூக மகரிஷியின் சாபம் தீர்ந்த தலம்..
திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்..

மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.
தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை -  திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..













ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
**

திங்கள், செப்டம்பர் 22, 2025

நிவேதனம் 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
புரட்டாசி
முதல் திங்கள்

புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..

எல்லாருக்கும் தெரிந்தவை தான்... 

எனினும் கண்டதும் கொண்டதும் இனி வரவிருக்கின்ற திங்கள்
பதிவுகளில்..

சர்க்கரைப் பொங்கல் 

தேவையான பொருள்கள்

பச்சரிசி 
வெல்லம்
நெய் தேவையான அளவு
முந்திரிப் பருப்பு 100 gr
உலர் திராட்சை 100 gr
ஏலக்காய்  5 
பச்சைக் கற்பூரம் ஒரு சிட்டிகை 

பச்சரிசியை நன்றாக அலசி விட்டு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
 
அடுத்து வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை இட்டு. 

வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். 

வெல்லம் கரைந்து கொதித்த பிறகு  தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 

வெல்லம் சுத்தமாக இருப்பின் பாகாக ஆக்கிக் கொள்ளவும். 

பச்சரிசி வெந்து குழைந்து வருகின்ற பக்குவத்தில்   சாதத்துடன் வெல்லப்பாகு சேர்த்து கிளறி. ஏலக்காயைத் தூளாக்கி  சேர்க்கவும்.

சுத்தமான வாணலியில் தரமான நெய் விட்டு முந்திரிப் பருப்பு  உலர் திராட்சை இவற்றை வறுத்துக் கொள்ளவும்.

இதனை சர்க்கரை பொங்கலில் சேர்த்து தேவையெனில்  மேலும் சிறிது நெய் சேர்த்து பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்..

பாரம்பரிய
சர்க்கரை பொங்கல் .

ஒரு பங்கு - 
கொதிக்கின்ற பாலைச்  சேர்த்தும் 
சிலர் செய்வர்.

ஓம் ஹரி ஓம்
**

சனி, செப்டம்பர் 20, 2025

புரட்டாசி 1

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
முதல் கிழமை


ராம ராம ராம ராம 
ராம நாம தாரகம்
ராம க்ருஷ்ண வாசுதேவ 
பக்தி முக்தி தாயகம்
ஜானகி மனோஹரம் 
சர்வ லோக நாயகம்
சங்கராதி சேவ்யமான 
திவ்ய நாம கீர்த்தனம்
**

இன்று
குழந்தைகளின்
ஸ்ரீ ராமநாம பஜன்


காணொளிக்கு நன்றி
ஜெய் ஸ்ரீராம்
ஓம் நம சிவாய
**

சனி, செப்டம்பர் 13, 2025

அழகு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை


இன்றொரு 
அழகான காட்சி..

காணொளிக்கு நன்றி


அப்பாடா!..
பத்திரமாய் தரை (!)
இறங்கியாயிற்று..

ஓம் சிவாய நம
**

வெள்ளி, செப்டம்பர் 12, 2025

பேராயிரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை



இன்று
புள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)
 திருப்பதிகப் பாடல்
**

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-


ஆயிரம் திருப் பெயர்களைப் புகழ்ந்து தேவர்கள் துதிக்கின்ற பெருமானாகவும்

தன்னை விட்டு நீங்காத அடியவர்களுக்கு  வீடுபேறு எனும் செல்வத்தை வழங்குபவனாகவும்

மந்திரங்களும் அவற்றின்  முறைகளும் மருந்துகளும்  தானேயாகி - தீராத நோய்களைத் தீர்த்தருள வல்ல வைத்திய நாதனாகவும் 

திரிபுரங்கள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகுமாறு வலிமையான வில்லைக் கையில் கொண்டு போரிட முனைபவனாகவும் விளங்குகின்ற -

புள்ளிருக்கு வேளூர் பெருமானைப் போற்றி வணங்காமல்  நாட்களைப் போக்கி விட்டேனே!..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், செப்டம்பர் 09, 2025

புள்ளிருக்கு வேளூர்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

உடல் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த செவ்வாய் அன்று வைத்தீஸ்வரன் கோயிலில் தரிசனம்.. 

வெளித் திருச்சுற்றில் எடுக்கப்பட்ட படங்கள் இவை..












பேரா யிரம்பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025

விழிப்பு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
ஞாயிற்றுக்கிழமை

இன்று 
நம்ம ஸ்ரீராம் அவர்களது பதிவு

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!..


சென்னையைச் சேர்ந்த, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் செந்தில் மணிகண்டன்: 

"இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் வழியாக, உடல் உறுப்புகளுக்கு ரத்தம் அனுப்பப்படும். இந்த ரத்த ஓட்டம் இதயத்துக்கு வரும் போது, ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது, வேறு ஒரு வேகத்திலும் செல்லும். 

இப்படிச் செல்லக்கூடிய, இந்த வேகத்துக்குப் பெயர் தான், ரத்த அழுத்தம்.  பொதுவாக, ரத்த அழுத்தத்தை, 120/80 என்ற அளவில் குறிப்பிடும்போது, இதில், 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் - இதயத்தை சுருங்கி ரத்தத்தை வெளியில் தள்ளும்போது, ஏற்படும் அழுத்தம். 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் - இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பின், தன் அளவில் விரிந்து உள்ளே வரும் ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது, ஏற்படும் அழுத்தம்.


ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதில், சிறுநீரகம், அட்ரினல் சுரப்பி, மூளை மற்றும் நரம்பு மண்டலம், முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தொடர் சங்கிலி அமைப்பில் சிக்கல் ஏற்பட்டால், ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். 

இது சிலருக்கு தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கக்கூடும்.

ஒருவருக்கு, 100/70 முதல், 140/90 வரை உள்ள ரத்த அழுத்தத்தை, 'நார்மல்' என, உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது. 140/90க்கு மேல் அதிகரித்தால், அது உயர் ரத்த அழுத்தம் - ஹை பிரஷர் 90/60க்கு குறைவாக இருந்தால், அது குறைந்த ரத்த அழுத்தம் - லோ பிரஷர்.

ரத்த அழுத்தம் வராமல் இருக்க, தினமும், 30 முதல், 45 நிமிடம் நடைப்பயிற்சி, சமச்சீர் உணவு, தினமும், 6 - 9 மணி நேரத் துாக்கம் அவசியம். மன அழுத்தம் தவிர்க்க வேண்டும். புகை, மதுப்பழக்கம் கூடவே கூடாது.
மேலும், 30 வயதுக்கு மேற்பட்டோர், குடும்பப் பின்னணியில், உயர் ரத்த அழுத்தம் உள்ளோர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 30 - 50 வயதுடையவர்களில் தான், 90 சதவீதம் பேருக்கு, ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்பதால், அவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த, மருந்து, மாத்திரை, சிகிச்சைகள் வந்து விட்டன என்றாலும், வரும்முன் காப்பதும், நோய் கண்டபின் தொடர் பரிசோதனைகள், சிகிச்சைகளில் தவறாது இருப்பதும் மிக அவசியம்.

(தினமலர்  2013
- சொல்கிறார்கள் - )

 நன்றி
ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் Fb

நலங்கொண்டு
வாழ்வோம்

ஓம் சிவாய நம ஓம்
**

வெள்ளி, செப்டம்பர் 05, 2025

அஞ்செழுத்து

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
வெள்ளிக்கிழமை


இன்று
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த 
நம சிவாயத் திருப்பதிகம்

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண் 22

துஞ்சலும் துஞ்சல்
  இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து
  நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்று அடி
  வாழ்த்த வந்தகூற்று
அஞ்ச உதைத்தன
  அஞ்செ ழுத்துமே.  1  

மந்திர நான்மறை
  யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர்
  தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய
  செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம்
  அஞ்செ ழுத்துமே.  2  

ஊனிலு யிர்ப்பை
  ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை
  யேற்றி நன்புலத்
தேனைவ ழிதிறந்
  தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன
  அஞ்செ ழுத்துமே.  3  

நல்லவர் தீயர்
  எனாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ
  முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர்
  கொண்டு போமிடத்
தல்லல்கெ டுப்பன
  அஞ்செ ழுத்துமே.  4  

கொங்கலர் வன்மதன்
  வாளி ஐந்தகத்
தங்குள பூதமும்
  அஞ்ச ஐம்பொழில்
தங்கர வின்படம்
  அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல்
  அஞ்செ ழுத்துமே.  5  

தும்மல் இருமல்
  தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம்
  விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த்து
  எய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை
  அஞ்செ ழுத்துமே.  6  

வீடு பிறப்பை 
 அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன
  பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன
  மன்னு மாநடம்
ஆடி யுகப்பன
  அஞ்செ ழுத்துமே.  7 

 வண்டம ரோதி
  மடந்தை பேணின
பண்டை இராவணன்
  பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு
  துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன
  அஞ்செ ழுத்துமே.  8 

 கார்வணன் நான்முகன்
  காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி
  செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப்
  பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன
  அஞ்செ ழுத்துமே.  9  

புத்தர் சமண்கழுக்
  கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள்
  தெளிந்து தேறின
வித்தக நீறணி
  வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன
  அஞ்செ ழுத்துமே.  10 

 நற்றமிழ் ஞானசம்
  பந்தன் நான்மறை
கற்றவன் காழியர்
  மன்னன் உன்னிய
அற்றமில் மாலையீ
  ரைந்தும் அஞ்செழுத்
துற்றன வல்லவர்
  உம்ப ராவரே.. 3/22/11


அனைவருக்கும்
திரு ஓண நல்வாழ்த்துகள்

ஓம் ஹரி ஓம்
ஓம் சிவாய நம 
**

புதன், செப்டம்பர் 03, 2025

பனை மரம்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
புதன் கிழமை


இன்று நமது மண்ணிற்கே உரிய பனை மரத்தைப் பற்றிய சிறு காணொளிச் சுருள்..

நமது தளத்தில் 
பனை மரத்தைப் பற்றிய பதிவுகள் வந்திருக்கின்றன...

இது Fb ல் கிடைத்தது... 

காணொளியை
உருவாக்கிய அன்பருக்கு நெஞ்சார்ந்த நன்றி


வாழ்க பனை

ஓம் சிவாய நம ஓம்
**

செவ்வாய், செப்டம்பர் 02, 2025

வீழிமிழலை

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
செவ்வாய்க்கிழமை

கோகுலாஷ்டமி பதிவில் அன்பின் நெல்லை அவர்கள் வழங்கியிருந்த கருத்துகள்..

1
இரண்டு படங்களும் மிக அழகு.

உங்களுக்குத் தெரியுமா? கோகுலத்தில், ஸ்ரீகிருஷ்ணன் வளர்ந்ததாக நம்பப்படும் நந்த பவனில் முக்கிய சன்னிதி சிவன் சன்னிதி. அங்குதான் பிரசாதங்களை வைத்து கண்டருளப் பண்ணுகிறார்கள்..

2
எதற்காக முந்தைய கருத்து என்றால், கிருஷ்ணனை மடியில் வைத்திருக்கும் யசோதை நெற்றியில் முழுமையாக விபூதி இருப்பதைப் பார்த்ததும் தோன்றியது..

அன்றைய பதிவில் இருந்த படங்களுள் ஒன்று தான் இங்கே..


திரு.நெல்லை அவர்களது கருத்திற்குப் பிறகே பதிவிட்டிருந்த படத்தைக் கவனித்தேன்... பரவசமானேன்...

ஸ்ரீ நாராயண மூர்த்தி சக்ராயுதத்தைப் பெறுவதற்காக (திருநீறு பூசி) சிவ வழிபாடு செய்ததாக அப்பர் ஸ்வாமிகள் குறிப்பிடுகின்றார்... 

ஸ்ரீ நாராயண மூர்த்தி  சிவ வழிபாடு செய்த தலங்கள் திருவீழிமிழலை, திருமாற்பேறு...

இத்தலங்களில் தலபுராணங்களும் ஒன்றே..

நாராயணர் திருநீறு பூசி சிவவழிபாடு செய்த புராணம் அறிந்து தான் யசோதையும் நெற்றியில் திருநீறு பூசிய வண்ணம் காட்சி தருகின்றனள் போலும்..

திருமலையில் பெருமான் சிவராத்திரி 
மூன்றாம் காலத்தின் போது நெற்றியில் விபூதிப் பட்டையுடன் உள் வீதி வலம் வருகின்றார் என்று கேள்விப்பட்டுள்ளேன்...


நீற்றினை நிறையப் பூசி 
  நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாளொன்று 
  குறையக்கண் நிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி 
  அவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி 
  மிழலையுள் விகிர்தனாரே. 4/64/8
-: திருநாவுக்கரசர் :-


திருநீற்றை நிறையப் பூசி  நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு மலர் குறையவே அப்பூவினுக்கு இணையாக தனது விழிகளில் ஒன்றினை தாமரை மலராகக் கொண்டு அர்ச்சித்த பக்தி உடைய திருமாலுக்குச் சக்கரத்தை வழங்கி -  திருமால் விண்ணிலிருந்து கொணர்ந்து திருவீழிமிழலையில்
நிறுவிய விமானத்தின் கீழ் வீற்றிருந்து  விகிர்தனார் அனைவருக்கும் அருள் செய்கிறார் ..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஈசனிடம் திருமால் சக்ராயுதம் பெற்றததை ஞானசம்பந்தப் பெருமானும்  குறித்திருக்கின்றார்..

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

திங்கள், செப்டம்பர் 01, 2025

தேங்காய்ப் பால்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
திங்கட்கிழமை


தேங்காய்ப் பால் இல்லாத தமிழ்ச் சமையல் மிகவும் அரிது..

தேங்காய்ப் பால் என்றால் என்ன?.. என்று  கேட்பர் - இன்றைய அந்நிய உணவுப் பிரியர்கள்.. 

இன்றைய தலைமுறையினருக்கு தேங்காய்ப் பாலைப் பற்றித் தெரியுமா என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்..


சின்ன வயதில் இருந்தே எங்கள் வீட்டில் வாரத்தில் சில நாட்கள் தேங்காய்ப் பால் அருந்துவது வழக்கம்..

தேங்காய்ப் பாலில் நிறைவுற்ற கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது.. 
நாகரிக வாழ்வில் வாழ்கின்ற
பெரும்பாலானவர்களுக்கு இது ஆகாது என்பது இன்றைய மருத்துவம்..

வயிற்றில் சூட்டினை குறைப்பதிலும்  புண்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் தோல் திசுக்களுக்கும் தோலின் பளபளப்புக்கும் தேங்காய் பால் முக்கிய பங்காற்றுகின்றது என்பது சித்த மருத்துவம்..

இன்று வரை எனக்கு வயிற்றில் வலி போன்ற எதுவும் ஏற்பட்டதே இல்லை.. 

வெறும் வயிற்றில் தேங்காய்ப் பால் அருந்துவதால் செரிமானம் செம்மையாகின்றது, அத்துடன் இதய ஆரோக்கியமும் மேம்படுகின்றது, 

உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைகின்றது . 

நிறைந்த பல ஊட்டச் சத்துகளைக் கொண்டுள்ளது தேங்காய்.. தேங்காய்ப் பாலும் அப்படியே.. 

நவீன உரங்களால் தென்னையும் தேங்காயும் பாதிப்பு எய்தியிருந்தாலும் நவீனத்தைப் புறந்தள்ளி விட்டு இயற்கை எருக்களுடன்  தென்னை விவசாயமும் நடைபெறுகின்றது..


இருப்பினும், தேங்காய்ப் பாலில்  கொழுப்பும்  கலோரிகளும் அதிகம் என்றும் அதிகப்படியான பயன்பாட்டினால் இதய நோய்கள் வரலாம் - என்றும் உடல் எடை அதிகரிக்கலாம் என்றும் இன்றைய
அச்சுறுத்தல்கள்..

உடல் உழைப்பு இல்லாதோருக்கு எல்லாமும் இடையூறுகள் தான்..

எனினும், இதனைக் கவனத்தில் கொள்வது நல்லதே...

தேங்காயும்  துருவலும் பாலும் எண்ணெயும் ஆபத்து மிக்கவை என்று மேலை மருத்துவம் சொல்வதைக் கேட்பதும் அதன்படியே நடப்பதும் அவரவர் விருப்பம்..


கையளவு அவலுடன் தேங்காய்த் துருவல்  சிறிதளவு சேர்த்து தண்ணீர் தெளித்துக் கிளறி செவ்வாழைப் பழம் ஒன்றுடன் சாப்பிட சிறப்பான காலை உணவு .. இனிப்பு அவரவர் தேர்வு..

சமீப காலமாக இது எனது வழக்கத்தில்... 

அதிக உடல் உழைப்பு உடையோருக்கும் அவல் உணவு பொருந்தும்.. 

இன்றைய நாகரிக வாழ்வில் வாரம் ஒரு நாளாவது தேங்காய்ப் பால் அருந்துதல் நல்லது...

தேங்காய்ப் பால் இல்லாத
தமிழ்ச் சமையல் மிகவும் அரிது.. 

தேங்காய்ப் பால் குழம்பில் வற மிளகாயின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பது பொது... மிளகாய்த் தூளை அதிகமாக  சேர்த்துக் கொள்வது அவரவர் விருப்பம்..

தேங்காய்த் துருவல் பூரணம் (கொழுக்கட்டை), தேங்காய்ப் பால் சோறு, தேங்காய்ப் பால் குழம்பு, ரசம், 
தேங்காய்ப் பால் கலந்த அவியல் - என,  சிறப்புகள்..

அரைத்து விட்ட 
தேங்காய்ப் பால் 
 சாம்பார் என்பது தஞ்சை வட்டாரத்தில் சிறப்பு..

தேங்காய்ப் பால் ஆப்பம், இடியாப்பம் இவற்றையும்
தேங்காய்ப் பாறை, தேங்காய் பால் திரட்டு  ஆகிய இனிப்பு வகைகளையும் மறக்கத் தான் முடியுமா!?..

நமது ஆரோக்கியம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
**

சனி, ஆகஸ்ட் 30, 2025

ஸ்ரீமுஷ்ணம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி
சனிக்கிழமை

கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்து - ஸ்ரீ முஷ்ணம் தரிசனம் (உத்தேசமாக 25 கிமீ)..

ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோயிலுக்குப்  பயணம்..

மேற்கு நோக்கிய ஸ்வயம்வியக்த க்ஷேத்திரம்.. 

ஸ்ரீ மகாவிஷ்ணு, இத்தலத்தில் வராக மூர்த்தியாக ஸ்ரீதேவி, பூதேவியருடன் இரு திருக்கரங்களுடன்  திகழ்கின்றார்...
கைகளை இடுப்பில்
வைத்த திருக்கோலம்..

 நன்றி இணையம்

திரு மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற திருமேனி.. தெற்கு நோக்கிய திருமுக மண்டலம்..

தாயார் அம்புஜவல்லி.. கிழக்கு நோக்கியவாறு தனிச் சந்நிதி..

கருட மண்டபம் அற்புத கலா நிலையமாகப் பொலிகின்றது.. 

சிற்பங்களின் அழகினைக் காண்பதற்கு போதுமான வெளிச்சம் அமையாதது நமது துரதிர்ஷ்டம்..

இயன்ற வரை படம் பிடித்துள்ளேன்.. 




திருப்பதியில் இருக்கின்ற மாதிரி - சாலை நடுத்திட்டில் கருடன் சிற்பம்..

















திருக்கோயிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீ சப்த கன்னியர் சந்நிதி..









திருக்கோயிலுக்கு எதிரில் கிழக்கு முகமாக ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோயில்..

சந்நிதி தரிசனம் மட்டுமே.. ராமர் கோயிலை வலம் வருவதற்கு இயலாதவாறு முட்புதர்கள்.. 

அவனருளாலே அவன் தாள் வணங்கிய பிறகு ஜெயங்கொண்டம் கீழப் பழுவூர் வழியே நல்லபடியாக தஞ்சை வந்து சேர்ந்தோம்..


ஓம் ஹரி ஓம்
**