புதன், ஜனவரி 10, 2024

தமிழமுதம் 25

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 25 
புதன்கிழமை

 குறளமுதம்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.. 110
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓரிரவில் 
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் 
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த  
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே 
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி  வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.. 25
**

நப்பின்னை காணில் மெல்ல நகும்!..

ஓர் இரவுப் பொழுதில் தேவகியின் மைந்தனாகப்  பிறந்து  யசோதையின் மகனாகச் சென்றவனே.. 

அவ்வாறு சென்று வளர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று எண்ணம் பிழையாகும் வகையில், அவனது வயிற்றில் அச்சத்தின்  நெருப்பாக நின்ற பெருமானே.. 

உன்னருளை வேண்டி  வந்தோம்.  

உனதருளால் உனது  செல்வச் சிறப்பையும் உனது பணிகளையும் புகழ்ந்து பாடுகின்றோம். 

உனது பெருமைகளைப் பாடுவதனால் என்றும்  மகிழ்ந்திருப்போம்..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


மையார்தடங் கண்ணி பங்கா கங்கை யாளும்
மெய்யாகத்து இருந்தனள் வேறிட மில்லை
கையார்வளைக் காடு களோடும் உடனாய்க்
கொய்யார்பொழிற் கோடியே கோயில் கொண்டாயே.. 7/32/5
-: சுந்தரர் :-
**

 தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு வேதாரண்யம்)


கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்
காலனையுங் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழைமானின் தோலான் கண்டாய்
புலியுரிசேர் ஆடைப் புனிதன் கண்டாய்
வெள்ளிமிளிர் பிறை முடிமேற் சூடி கண்டாய்
வெண்ணீற்றான் கண்டாய்நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 4
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
அருட்பத்து


கமலநான் முகனும் கார்முகில் நிறத்துக்
கண்ணனும் நண்ணுதற் கரிய
விமலனே எமக்கு வெளிப்படா யென்ன
வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்
திமிலநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே விய சீர்
அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.. 4
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

  1. படித்தேன் ரசித்தேன், ருசித்தேன்!

    பதிலளிநீக்கு
  2. பிரபந்த பாடல், பன்னிரு திருமுறை பாடல் விளக்கம் எல்லாம் படித்தேன். தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..