செவ்வாய், ஜனவரி 09, 2024

தமிழமுதம் 24

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 24
செவ்வாய்க்கிழமை

 குறளமுதம்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த 
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.. 109
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி  சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி  கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்  இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.. 24
**

இவ்வுலகங்களை இரண்டடியால் 
அளந்தவனே போற்றி..
 
தென் இலங்கையை அழித்த திருத்தோள் 
உடையவனே போற்றி..

வண்டிச் சக்கரம் என வந்த அசுரனை 
உதைத்தவனே போற்றி.. 
 
கன்றாக வந்த அரக்கனையும் 
விளா மரமாக நின்ற மூர்க்கனையும் 
அழித்தவனே போற்றி..   

கோவர்த்தன மலையை குடை எனப் பிடித்து 
கோகுலத்தைக் காத்தவனே போற்றி.. 

பகைவரை அழிக்கும் வேலினை 
உடையவனே போற்றி..

எப்பொழுதும் உன்னைப் புகழ்ந்து பணி செய்து 
எமது விருப்பங்களை நிறைவேற்றிக் 
கொள்ள  இங்கு வந்தோம். 

எங்களுக்கு நல்லருள் புரிவாயாக!..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
    வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்
அன்னமாம் காவிரி அகன்கரை உறைவார்
    அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக்
    குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா எம்பெரு மானை
    யென்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.. 7/74/1
-: சுந்தரர் :-
**

தரிசனத்
திருத்தாண்டகம் 6/23
(திருமறைக்காடு வேதாரண்யம்)


சிலந்திக்கு அருள் முன்னஞ் செய்தான் கண்டாய்
திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்
நிலந்துக்க நீர்வளிதீ ஆனான் கண்டாய்
நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்
தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய்
மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 3
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
(அருட்பத்து)


எங்கள் நாயகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்கநற் காமன்
தனதுடல் தழலெழ விழித்த
செங்கண் நாயகனே திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அங்கணா அடியேன் ஆதரித்து அழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.. 3
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

  1. பாசுரங்கள் படித்தேன், மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  2. திவ்யப்ரபந்தம், பன்னிரு திருமுறை பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..