புதன், மே 31, 2023

வெயில்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 17
 புதன் கிழமை

Fb ல் வந்த காணொளி


டேய்.. தென்ன மரத்துல என்னடா பண்ணிக்கிட்டு இருக்கே??...

சரியான வெயில்.. தாங்க முடியலை!.. 


சரி.. அதுக்காக!..

ஒரே ஒரு குரும்பைய மட்டும் குடிச்சேன்..
வேற எதும் தப்பா நெனச்சு 
தோப்புக்கார அண்ணன்.. கிட்ட 
போட்டு உட்டுடாதீங்க!.. 
கிக்கீ.. கிக்கீய்!..

வாழ்க வையகம்..
***

செவ்வாய், மே 30, 2023

தரிசனம் 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 16
 செவ்வாய்க்கிழமை

இந்த வருடம் நானும் பாலகுடம் எடுத்ததால் தொடர்புடைய படங்கள் பதிவில் இல்லை..

சனிக்கிழமை மாலை எங்கள் மண்டகப்படி ஆராதனையின் படங்களும் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த சந்தனக் காப்பு அலங்காரமும் ஊஞ்சல் திருக்காட்சியும் பதிவில் இடம் பெற்றுள்ளன..







முளைப்பாரியும் சீர்வரிசைகளும்..















ஆயுளொடு ஆரோக்ய ஐஸ்வர்யம் அருள்கவே
அன்னை வீரமாகாளி உமையே!..

சுபம் சுமங்கலம்
சௌபாக்கியம்.

ஓம் சக்தி ஓம்
***

திங்கள், மே 29, 2023

தரிசனம் 1

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 15
திங்கட்கிழமை

வைகாசி 11 வியாழக் கிழமை காலை பூர்வாங்க வேள்வி - விநாயக  வழிபாடுகளுடன்
ஸ்ரீ வீரமாகாளியம்மனின்
சித்திரைத் திருவிழா தொடங்கியது..

வெள்ளி இரவு அம்பாள் சிம்மவாஹினியாக வீதியுலா..

எதிர்பாராத விதமாக கும்பகோணம் வட்டாரத்தில் சூறைக் காற்று.. பலத்த மழை.. 

அசாதாரணமான சூழ்நிலையில் வீதியுலா புறப்பட்ட அம்பிகை நடுநிசிக்குப் பின் இரண்டு மணியளவில் ஆலயம் திரும்பினாள்.. அதுவரைக்கும் கோயிலில் தான் நான் இருந்தேன்.. 

ஆலயம் திரும்பிய அன்னைக்கு ஆரத்தி, நிவேத்யம் ஆன பிறகு நடை அடைப்பு..

சனிக்கிழமை மாலை எங்களது மண்டகப்படி.. குளிரக் குளிர அபிஷேகமும் அலங்காரமும் அன்னையின் ஆஞ்ஞைப்படி கைத்துணைக்கு ஒருவருடன் எளியேன் இயற்றினேன்..

அன்னைக்கு பஞ்சமுக ஆரத்தியுடன் புஷ்பாஞ்சலி செய்யப் பெற்றது..

ஞாயிற்றுக்கிழமை (வைகாசி 14) காலை பால்குட வைபவம்..
நூற்றுக்கணக்கான வேண்டுதல்கள்.. 

மாலை - கிராம வழக்கப்படி  மக்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர்..

மூலஸ்தானத்தில் அன்னையின் திருமேனிக்கு சந்தனக்காப்பு..
உற்சவ நாயகிக்கு ஊஞ்சல் வைபவம்..
புஷ்பாஞ்சலியுடன் ஆனந்த தரிசனம்..

நிறைவாக நிவேதனம், மங்கல ஆரத்தி, பிரசாத விநியோகம்.. 

வியாழன் வெள்ளி இரு நாட்களின் படங்கள் இந்தப் பதிவில்..













சுபம். சௌபாக்கியம்.
சுமங்களம்..

ஓம் சக்தி ஓம்
***

ஞாயிறு, மே 28, 2023

பாலோடு குடம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 14
ஞாயிற்றுக்கிழமை

கடந்த 
வெள்ளிக்கிழமை (வைகாசி 12) இரவு 
ஸ்ரீ வீரமாகாளியம்மன் சிம்ம வாகனத்தில் 
எழுந்தருளி வலம் வந்த நிலையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை  பால்குட உற்சவம்.. 

எளியேன் அவ்வப்போது கோயில் பணியில்.. 
எனவே திருவிழா காட்சிகளை அடுத்து 
வரும் பதிவுகளில் தருகின்றேன்..

இங்கு உள்ளவை 
நேற்று எடுக்கப்பட்ட  படங்கள்..

செவ்வாய்க்கிழமை 
காலையில் எழுந்த பாட்டு இது..
**

பாலோடு குடம் எடுத்து 
பாதவழி வருகிறோம்..
பட்சமுடன் பாலரையும்
பார்த்து அருள் காட்டுமம்மா..
சேலோடும் நதிக்கரையில்
கோயில் கொண்ட காளியம்மா..
மேலாடும் பழி தீர்த்து 
மேன்மையிலே வைப்பவளே.. 1

கோலமிகு ஐங்கரனை
கொஞ்சி வரும் தேவியம்மா
வேலெடுத்த முருகனுக்கு
வெற்றிப் பொட்டு வைத்தவளே
கங்காள  ஈசனுடன் 
கலந்தாடும் ஈஸ்வரியே
கார்மேக வண்ணனுக்கு
அன்பான சோதரியே.. 2 


வேப்பமர நிழலுக்குள்ளே
வீற்றிருக்கும் காளியம்மா
வீரனுடன் கருப்பசாமி
ஆடிவர வாருமம்மா
வேண்டி நிற்கும் அடியார்க்கு
வேதனையை தீருமம்மா
ஆயுளொடு ஐஸ்வர்யம்
ஆரோக்கியம் தாருமம்மா.. 3

ஆயிரமாய் பழிபாவம்
அத்தனையும் நீயறிவாய்..
ஆதரவு காட்டி நல்ல
அடியாரைக் காத்திடுவாய்..
அம்மா நீகோபங் கொண்டால்
ஆதரிக்க யாரும் இல்லை
அன்பெடுத்து வருகின்றோம்
அருளெடுத்து காத்திடுவாய்.. 4


தெருவோடு கிடந்தாலும்
தேவி உந்தன் பிள்ளையம்மா
விழிகொண்டு பார்த்திடுவாய்
வேதனையை தீர்த்திடுவாய்
நீதியென்று வரும் போது
நெற்றிக் கண்ணைத் திறப்பவளே
நீங்காத பாசத்துடன் 
எங்களையும் காத்திடுவாய்.. 5

உன் வாசல் வருவதற்கும்
உத்தரவு தாருமம்மா
உள்ளத்திலே ஒளிவீச
உத்தமியே பாருமம்மா..
ஊர்கூடி உனைப் போற்ற
ஓரத்திலே நானிருந்து
உன் முகத்தைப் பார்ப்பதற்கு
ஓர்வரமும் தாருமம்மா.. 6


ஏழை எந்தன் மனக்குறையும்
ஏந்திழைக்குக் கேட்கலையோ
பாருலகில் பட்டதெல்லாம் 
பார்வதியும் பார்க்கலையோ..
நானடைந்த இன்னலெல்லாம்
நானுரைக்க ஆகாதே..
நாலுவழி வாழ்க்கையிலே
நல்லவழி காட்டுமம்மா.. 7

காளியெனும் பெயர் எடுத்து
காரிருளைத் தீர்ப்பவளே
கை வணங்கும் மானிடர்க்கு
கை விளக்காய் வருபவளே
அம்மா நீ ஆதரிக்க
அரும் பிணிகள் ஓடாதோ
கோலத் திருவிழி இருக்க 
கோடி நலம் சேராதோ.. 8


நோய் நொடிகள் வாராமல்
நொந்து மனம் வாடாமல்
தாயே உன் சந்நிதியே
நாடி வந்தேன் சரணமம்மா
மாகாளி நீ யிருக்க
மக்களுக்கு ஏது குறை
வாழ்க மனை வாழ்க என்று
மகராசி வந்திடம்மா.. 9

என்வார்த்தை தமிழ் கேட்டு
ஈஸ்வரியே வாருமம்மா
எல்லாப் பிழை பொறுத்து
இன்முகத்தைக் காட்டுமம்மா
நல்லார்க்கு நல்வரமாய்
மாகாளி வாருமம்மா..
பொன்மாரி பொழிந்து நல்ல
மங்கலங்கள் தாருமம்மா!.. 10

 ஊஞ்சல் வைபவம் (2022)
ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம்
***

சனி, மே 27, 2023

கங்கையிற்..

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13
சனிக்கிழமை


பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேறே  ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான்போய்  இந்திர லோகம் ஆளும் 
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே!.. 873

விரும்பி நின்று ஏத்த மாட்டேன் 
விதி இலேன் மதி ஒன்று இல்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறை 
இறை உருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா 
கோயில் கொண்ட 
கரும்பினைக் கண்டு கொண்டு என்கண் 
இணை களிக்கு மாறே.. 888


கங்கையிற் புனிதமாய காவிரி 
நடுவு பாட்டு 
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் 
அரங்கம் தன்னுள் எங்கள் 
மால் இறைவன் 
ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் 
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் 
ஏழையேனே.. 894

வெள்ளநீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள் கள்வனார் கிடந்தவாறும் கமல நன்முகமும் கண்டும் 
உள்ளமே வலியை போலும் ஒருவன் என்றுணர மாட்டாய்
கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே.. 895


போதெல்லாம் போது கொண்டுன் 
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்ச மன்பு கலந்திலேன் 
அதுதன் னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே 
என் செய்வான் தோன்றி னேனே!. 897
-: தொண்டரடிப் பொடியாழ்வார் :-

ரங்கா.. ரங்கா
ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, மே 26, 2023

திரு அருணை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 12
வெள்ளிக்கிழமை

இன்று
திரு அருணைத் திருப்புகழ்


தனனா தனனத் தனனா தனனத் 
தனனதா தனனத் ... தனதான

அருமா மதனைப் பிரியா தசரக் 
கயலார் நயனக் ... கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத் 
தணையா வலிகெட் ... டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் 
றிளையா வுளமுக் ... குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக் 
கிருபா தமெனக் ... கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட் 
டுரமோ டெறிபொற் ... கதிர்வேலா
உறைமா நடவிக் குறமா மகளுக் 
குருகா றிருபொற் ... புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற் 
றெரியா வரனுக் ... கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற் 
றிருவீ தியினிற் ... பெருமாளே..
-: அருணகிரி நாதர் :-


அழகனாகிய மன்மதனை விட்டுப் 
பிரியாத பூங்கணைகளைப் போன்றதும் கயல் போன்றதுமாகிய கண்களை உடைய 
பொல்லா மங்கையரின்

அழகுடன் பூரித்து புனுகு மணம் கமழும், 
மலை போன்ற மார்பகங்களில்
அணைந்து இணைந்து
வலிமை இழந்து உடல் நலிந்து 
இருமலில் வீழ்ந்து பேச்சும் உணர்வும் அற்று

இளைத்து 
உள்ளம் மெலிந்து உயிர் சோர்வடைந்து
எரியும் நரக நெருப்பில் புகாத வண்ணம்
எனக்கு உன் திருவடிகளைத்
 தந்தருள்வாயாக..

பெரியதாய் நின்ற கிரெளஞ்ச மலை 
சிறு சிறு துகளாகும் படிக்குச் செய்த
வலிமை மிக்க கதிர் வேலினை உடையவனே

மான்கள் துள்ளித் திரிகின்ற 
வனத்தில் குறமகள் வள்ளிக்கு உருகிய 
பன்னிரு தடந்தோள் பெருவீரா

திருமாலும் 
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும் 
காண்பதற்கு அரியவராகிய 
சிவபெருமானின் திருக்குமாரனே

நீர் நிறைந்த செழுமையான வயல்களால் 
சூழப்பட்டிருக்கும் திருஅண்ணாமலையின் 
திருவீதிகளில் மகிழ்ச்சியுடன் 
உலா வருகின்ற பெருமாளே!..
**

முருகா.. முருகா..
***

வியாழன், மே 25, 2023

கதம்பம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 11
வியாழக்கிழமை

இன்றைய பதிவில்
தஞ்சை நகர் படங்கள் மேலும் சில.. 
ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் எனது கை வண்ணம்..






ஒரு காலத்தில் மிகச்சிறப்புடன் திகழ்ந்த ஸ்ரீ சுதர்சன சபா - தஞ்சை ராமநாதன் ஹால்.. 

இதன் சிறப்பு 1950 களுக்கு முன்பிருந்தே இங்கு நடைபெற்ற நாடகங்கள்..  ஆறாம் வயதில் என் தந்தையுடன் நான் நாடகம் பார்த்த நினைவுகள்.. பிறகு தான் தெரியும் இவர் தான் TR மகாலிங்கம்.. இவர் தான் MR ராதா என்பதெல்லாம்.. 

கல்லூரி நாட்களில் இங்கே பற்பல விற்பன்னர்களின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைக் கேட்டிருக்கின்றேன்..

 நன்றி விக்கி

சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தால் இந்தக் கட்டடம் முற்றாக தரை மட்டம் ஆக்கப்பட்டு விட்டது..

அடுத்து,
நவீன மின் அடுக்கு கார் நிறுத்துமிடம்..




மாநகராட்சிக்குச் சொந்தமான திருவள்ளுவர் திரையரங்கம் இருந்த இடத்தில் புதிய வணிக வளாகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது...














சுமைதாங்கிக் கல்- பிருந்தாவனம் அருகில்.








இனிவரும் நாட்களில். என்னென்ன மாற்றங்களோ!..

நலம் வாழ்க
வாழ்க நலம்
***