நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 14
ஞாயிற்றுக்கிழமை
கடந்த
வெள்ளிக்கிழமை (வைகாசி 12) இரவு
ஸ்ரீ வீரமாகாளியம்மன் சிம்ம வாகனத்தில்
எழுந்தருளி வலம் வந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பால்குட உற்சவம்..
எளியேன் அவ்வப்போது கோயில் பணியில்..
எனவே திருவிழா காட்சிகளை அடுத்து
வரும் பதிவுகளில் தருகின்றேன்..
இங்கு உள்ளவை
நேற்று எடுக்கப்பட்ட படங்கள்..
செவ்வாய்க்கிழமை
காலையில் எழுந்த பாட்டு இது..
**
பாலோடு குடம் எடுத்து
பாதவழி வருகிறோம்..
பட்சமுடன் பாலரையும்
பார்த்து அருள் காட்டுமம்மா..
சேலோடும் நதிக்கரையில்
கோயில் கொண்ட காளியம்மா..
மேலாடும் பழி தீர்த்து
மேன்மையிலே வைப்பவளே.. 1
கோலமிகு ஐங்கரனை
கொஞ்சி வரும் தேவியம்மா
வேலெடுத்த முருகனுக்கு
வெற்றிப் பொட்டு வைத்தவளே
கங்காள ஈசனுடன்
கலந்தாடும் ஈஸ்வரியே
கார்மேக வண்ணனுக்கு
அன்பான சோதரியே.. 2
வேப்பமர நிழலுக்குள்ளே
வீற்றிருக்கும் காளியம்மா
வீரனுடன் கருப்பசாமி
ஆடிவர வாருமம்மா
வேண்டி நிற்கும் அடியார்க்கு
வேதனையை தீருமம்மா
ஆயுளொடு ஐஸ்வர்யம்
ஆரோக்கியம் தாருமம்மா.. 3
ஆயிரமாய் பழிபாவம்
அத்தனையும் நீயறிவாய்..
ஆதரவு காட்டி நல்ல
அடியாரைக் காத்திடுவாய்..
அம்மா நீகோபங் கொண்டால்
ஆதரிக்க யாரும் இல்லை
அன்பெடுத்து வருகின்றோம்
அருளெடுத்து காத்திடுவாய்.. 4
தெருவோடு கிடந்தாலும்
தேவி உந்தன் பிள்ளையம்மா
விழிகொண்டு பார்த்திடுவாய்
வேதனையை தீர்த்திடுவாய்
நீதியென்று வரும் போது
நெற்றிக் கண்ணைத் திறப்பவளே
நீங்காத பாசத்துடன்
எங்களையும் காத்திடுவாய்.. 5
உன் வாசல் வருவதற்கும்
உத்தரவு தாருமம்மா
உள்ளத்திலே ஒளிவீச
உத்தமியே பாருமம்மா..
ஊர்கூடி உனைப் போற்ற
ஓரத்திலே நானிருந்து
உன் முகத்தைப் பார்ப்பதற்கு
ஓர்வரமும் தாருமம்மா.. 6
ஏந்திழைக்குக் கேட்கலையோ
பாருலகில் பட்டதெல்லாம்
பார்வதியும் பார்க்கலையோ..
நானடைந்த இன்னலெல்லாம்
நானுரைக்க ஆகாதே..
நாலுவழி வாழ்க்கையிலே
நல்லவழி காட்டுமம்மா.. 7
காளியெனும் பெயர் எடுத்து
காரிருளைத் தீர்ப்பவளே
கை வணங்கும் மானிடர்க்கு
கை விளக்காய் வருபவளே
அம்மா நீ ஆதரிக்க
அரும் பிணிகள் ஓடாதோ
கோலத் திருவிழி இருக்க
கோடி நலம் சேராதோ.. 8
நோய் நொடிகள் வாராமல்
நொந்து மனம் வாடாமல்
தாயே உன் சந்நிதியே
நாடி வந்தேன் சரணமம்மா
மாகாளி நீ யிருக்க
மக்களுக்கு ஏது குறை
வாழ்க மனை வாழ்க என்று
மகராசி வந்திடம்மா.. 9
என்வார்த்தை தமிழ் கேட்டு
ஈஸ்வரியே வாருமம்மா
எல்லாப் பிழை பொறுத்து
இன்முகத்தைக் காட்டுமம்மா
நல்லார்க்கு நல்வரமாய்
மாகாளி வாருமம்மா..
பொன்மாரி பொழிந்து நல்ல
மங்கலங்கள் தாருமம்மா!.. 10
ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
***
துதிப்பாடல் அருமை. பட்சமுடன் என்கிற வார்த்தையை எந்தப் பொருளில் உபயோகித்திருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ள ஆவல்.
பதிலளிநீக்குபட்சமுடன் என்பதை பிரியத்துடன் என்ற அர்த்தத்தில் வைத்திருக்கின்றேன்..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..
நலம் வாழ்க..
சிறப்பான பாடல்
பதிலளிநீக்குவாழ்க வையகம்.
மகிழ்ச்சி...
நீக்குநன்றி ஜி..
படங்களும் துதிப்பாவும் மிகவும் சிறப்பு. அன்னை ஈஸ்வரி அனைவருக்கும் அருள் புரியட்டும்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது.அன்னைக்கு சூட்டிய பாமாலை அற்புதமாக உள்ளது. அதை கண்டிப்பாக அன்னை கேட்டு மகிழ்ந்திருப்பாள். எங்களுக்கும் தங்கள் தயவால், நல்ல பக்திப் பெருகச் செய்யும் பாமாலையோடு அன்னையின் அழகு முக தரிசனமும் கிடைத்தது.
பதிவின் இறுதி படத்தில் ஊஞ்சல் வைபவத்தில் அன்னையின் அருகில் தாங்கள் தானே?
/ஊர்கூடி உனைப் போற்ற
ஓரத்திலே நானிருந்து
உன் முகத்தைப் பார்ப்பதற்கு
ஓர்வரமும் தாருமம்மா.. /
உங்கள் பாடல் கேட்டு மகிழ்ந்து அன்னை அவளுக்கு அருகாமையில் ஊஞ்சல் ஆட்டி விட உங்களை அழைத்திருக்கிறாள் . அன்னை அனைவருக்கும் நல்லருள் தர நானும் மனதார வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகுந்த பரவச நிலையில் இருக்கின்றேன்..
நீக்குபிறகு விவரம் தருகின்றேன்..
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் சக்தி ஓம்..
அன்னையின் பால் குட பவனி அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஓம் சக்தி ஓம்..
மிக நல்ல வாய்ப்பு. பாடலை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅன்னையின் சிற்பம், மூக்கு கண்கள், வாய் போன்றவை கும்பகோணத்தின் சிற்பக்கலையைப் பறைசாற்றுகிறது. நிறைய தெய்வத் திருவுருவங்கள் தீர்க்கமான மூக்கு, புன்னகைக்கும் அதரத்துடன் இருக்கும்.
அன்னையின் அழகே அழகு..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..
ஓம் சக்தி ஓம்..
பாமாலை பாடி அன்னையைத் துதித்திருக்கும் உங்களுக்கு நன்றி. அதன் மூலம் நாங்களும் பயன் பெற்றோம். படங்கள் எல்லாம் மிக அழகு.
பதிலளிநீக்குயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியக்கா..
ஓம் சக்தி ஓம்..
மிக அருமையான பாமாலை அன்னைக்கு.
பதிலளிநீக்குஉள்ளம் மகிழ்ந்து பரவச நிலையில் கவிதை .
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
விழி கொண்டு பார்த்து வேதனையை தீர்ப்பவளை உங்கள் பாமாலையை பாடி துதித்து கொண்டேன்.
அனைவருக்கும் நலங்களை அருள வேண்டும் அன்னை.
கோவில் விழா பணியில் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும்.
பதிலளிநீக்குதுரை அண்ணா முன்பும் இந்தப் புகைப்படம் பகிர்ந்திருந்தீங்கதானே! நீங்கள் இருக்கும் படம்
பதிலளிநீக்குபாமாலை மிக அருமை.
கீதா