வெள்ளி, ஜூலை 31, 2020

வெள்ளி மணி 3

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
மூன்றாவது வெள்ளிக்கிழமை..
ஸ்ரீவரலக்ஷ்மி விரத நன்னாள்


நமஸ்தேஸ்து மஹாமாயே
ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே
மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்..
***
இன்றைய பதிவில்
திருமூலர் அருளிச் செய்த
திருமந்திரத்தில்
அம்பிகையின் புகழ் பாடும்
நான்காம் தந்திரத் திருப்பாடல்கள்..

ஸ்ரீ துர்காம்பிகை - வேதாரண்யம்.. 
தாளணி நூபுரம் செம்பட்டுத் தான் உடை
வாரணி கொங்கை மலர்க் கன்னல் வாளி வில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.. 

ஸ்ரீ அபிராமவல்லி

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறியேனே..

ஸ்ரீ வடபத்ரகாளி - தஞ்சை..
சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மால் அங்கயன் அறியாத வடிவுக்கு
மேலங்கமாய் நின்ற மெல்லியளாளே..


ஸ்ரீ வராஹியம்மன் - தஞ்சை..
ஆன வராகி முகத்தி பதத்தினில்
ஈனவர் ஆகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை
ஊனம் அறஉணர்ந்தார் உளத்து ஓங்குமே..

நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வியாழன், ஜூலை 30, 2020

பால் கொழுக்கட்டை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

கோலக் குழலாட
கொஞ்சும் மணி ஆட
குழந்தை கணேசன்
குதித்தாடி விட்டு தாயிடம்
வருகிறான்.

அம்மா!..

வா.. கணேசு!..


தூக்கம் வருது..ம்மா!..

பால் குடிச்சுட்டு படு.. ராசா!..


போ..ம்மா.. எப்ப பார்த்தாலும்
பால் தானா!...

வேற என்ன வேணும் கண்ணு!?..

பாயாசம் வேணும்..
பால் கொழுக்கட்டை வேணும்!..

பால் கொழுக்கட்டையா!..
அதுக்கு இன்னும் நாள் இருக்கே!..
***
காணொளிகள் தங்களை
கவர்ந்திருக்கும் என
நம்புகிறேன்..

நலமெலாம் வாழ்க..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

திங்கள், ஜூலை 27, 2020

சுந்தரர்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!..

என்று அப்பர் பெருமானால் வியந்து புகழப்பெற்ற திருத்தலம்..

பஞ்ச பூதங்களுள் மண்ணின் தொகுப்பாகத் திகழும் திருத்தலம்..

திருஆரூர்...

வெயில் சற்றே குறைந்திருந்த மதியப் பொழுது...

பூங்கோயில் எனப்பட்ட திருக்கோயிலின் தெற்கு வாசற்கோபுரத்தைக் கடந்ததாக - கிழக்கு நோக்கிப் பொலியும் இல்லம்..

இல்லத்தின் தலைவாசலில் சிவசின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன....

அந்த இல்லத்தில் மங்கலம் பொங்கித் ததும்பிக்கொண்டிருந்தது..   

இல்லத்தினுள் - 

தலை வாழையிலையில் பரிமாறப் பெற்றிருந்த அமுது மற்றும் கறி வகைகளை ஒருகணம் கண்ணுற்று - கை கூப்பி வணங்கினார்...

சிவாய திருச்சிற்றம்பலம்!...

அருகே - வெட்டி வேர் விசிறி கொண்டு மெல்லென வீசிக் கொண்டிருந்தாள் - மங்கை நல்லாள்..

அவள் - பரவை நாச்சியார்!..

ஆம்!..

சங்கிலியார் - சுந்தரர் - பரவையார் 
வன்தொண்டர் என்றும் தம்பிரான் தோழர் என்றும் புகழப்பெற்ற -
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் இல்லம் தான் - அது!..

தனது திருக்கரத்தினால் உணவைப் பிசைந்து,
முதல் கவளத்தை - இலையின் மேல் ஓரத்தில் வைத்தார்..

மறு கவளத்தை - அன்பு மீதூற - பரவை நாச்சியாரிடம் வழங்கினார்...

அதனை இருகரங்களால் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்ட பரவை நாச்சியார் - 

மூன்றாவது கவளத்தை ஸ்வாமிகள் உண்பதைக் கண்ணாரக் கண்டு களித்தவளாக தானும் உண்டாள்..

பரவை!..

ஸ்வாமி!..

கடந்த சில நாட்களாகவே - தூதுவளைக் கூட்டு, தூதுவளைத் துவையல், தூதுவளைப் பச்சடி, தூதுவளைப் பருப்பு, தூதுவளை ரசம் - என்று வகை வகையாக சமைத்து அளித்திருக்கின்றாயே!..

பரவை நாச்சியார் தம் திருமுகத்தில் நாணத்துடன் புன்னகை..

நமது புழக்கடை வாவியின் அருகே கூட தூதுவளையைக் கண்டேனில்லை.. எவரும் தலைச்சுமையாகக் கொண்டு வந்து வீதியினில் விற்கின்றனரோ?..

ஸ்வாமி!.. இது விலை கொடுத்துப் பெற்றது அல்ல!..

என்ன!?..  - சுந்தரர்க்கு ஆச்சர்யம்..

அன்பர் ஒருவர் சில நாட்களாக இதனைத் தங்களின் பொருட்டு வழங்கி வருகின்றார்... நான் முதலில் மறுத்துரைத்தேன்.. அது கேட்டு கல்லும் கரையும் வண்ணம் கலங்கி நின்றார்.. நெஞ்சம் இளகி நின்றார்... என் மனம் கேட்கவில்லை.. இதற்கான விலையைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினேன்!..

நடந்ததை விவரித்தார் பரவை நாச்சியார்.

பிறகு!...

ஆரூரனுக்கு ஆளாகி ஸ்வாமிகள் செய்யும் திருத்தொண்டிற்கு ஈடு இணையும் உண்டோ!.. தம்பிரான் தோழருக்காக - நாம் புரியும் இந்த கைங்கர்யத்தை மறுத்துரைக்காதீர்கள்!.. - என்று மனம் உருகி நின்றார்.. அதனால் தான் - இந்தக் கீரையைப் பெற்றுக் கொண்டேன்.. பிழை தனைப் பொறுத்தருளவும்!..

இப்படியும் ஒருவர் நம்மிடம் அன்பு மழை பொழிகின்றார் எனில் எல்லாம் ஆரூரனின் அருள்!.. பரவை... அவர் தம் பெயரினைக் கேட்டாயோ?.. எந்த ஊரினர் என்று கூறினாரா?..

ஆரூரின் வடக்கே இருக்கும் அம்பர் எனும் திருவூரினின்று வருவதாகக் கூறினார்.. வயதில் பெரியவரான அவரிடம் - அவரது பெயரை வினவுவதற்குத் தோன்றவில்லை.. எனினும், அவரது தோற்றத்தால் அந்தணர் என அறிய முடிகின்றது!...

நல்ல உள்ளம் படைத்த அவரைக் காண வேண்டுமே!... என்ன செய்யலாம்!..

தங்களைக் காண்பதற்குத் தவமிருப்பதாக அவரே கூறினார்.. இன்று அந்தி சாயும் வேளையில் நமது இல்லத்திற்கு வருவதாகக் கூறிச் சென்றார்!.. தாம் உண்டு களைப்பாறிய பின்னர் இந்தச் செய்திகளைத்
தெரிவிக்கலாம் - என நான்
இருந்தேன்..

இப்படியும் ஒரு தோழர் - நம் வாழ்க்கையில்.. அவரது வருகைக்காக இப்போதே என் மனம் ஏங்குகின்றது.. பரவை!.. அவரை நாம் சிறப்பாக உபசரிப்பது அவசியம்.. வேண்டுவன செய்து வைக்கவும்..

ஆகட்டும்.. ஸ்வாமி!..

உண்ட களைப்பு தீர - ஆங்கிருந்த கட்டிலில் சற்றே ஓய்வு கொண்டார் சுந்தரர்..

தியாகேசர் திருமுன்பாக சுந்தரர் - பரவை நாச்சியார்
அவரருகில் அமர்ந்த பரவை நாச்சியார் - சுந்தரரின் மேனியை மெல்லெனெ வருடியபடி -

உறக்கம் கொள்கின்றீர்களா?.. - என்று வினவினாள்..

அம்பரிலிருந்து வரவிருக்கும் அன்புத் தோழரைப் பற்றிய எண்ணங்கள் தான்.. பொழுது விரைவாக நகரவில்லையே.. என்றிருக்கின்றது..

காலங்களைக் கடந்த நட்பின் மேலைத் தொடர்பு போலிருக்கின்றது.. தாங்கள் சற்றே ஓய்வில் இருங்கள்.. நம் இல்லந்தேடி வருபவரை உபசரிப்பதற்கு ஏதுவாக இனிப்பு வகைகளைச் செய்து வைக்கின்றேன்..

சற்றைக்கெல்லாம் -

கொல்லைப் புறம் தொழுவில் கிடந்த கன்றுக்குப் பசியெடுக்கவே -
அம்மா!.. என, துள்ளிக் கொண்டு தாய்மடியை நோக்கி ஓடிய வேளையில் -

தலைவாசற்புறத்தில் -

ஸ்வாமி!.. எளியேன் வந்திருக்கின்றேன்.. அம்பரில் இருந்து அடியேன் மாறன் வந்திருக்கின்றேன்!..

அம்மாத்திரத்தில் -

தாய் மடியினைத் தேடி ஓடிய கன்றினைப் போல -
துள்ளிக் குதித்து விரைந்தார் - சுந்தரர்..

வாசலில் சிவப்பழமாக - அம்பரான் மாறன்..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்ட வேளையில் - இருவரது கண்களும் சந்தோஷத்தினால் பனித்தன...

அடுக்களையினிலிருந்து - பரவை நாச்சியாரும் ஓடோடி வந்து, முகமன் கூறி வரவேற்றாள்..

எமது இல்லத்திற்குள் எழுந்தருள வேண்டும்!..

அம்பரான் மாறனாருக்கு - பாதம் துலக்க நீர் அளிக்கப்பட்டது...

இப்பெருந்திண்ணையில் இருப்போமே!..

அகன்றிருந்த திண்ணைகளைக் காட்டினார் - அம்பரான் மாறன்..

அவரது எண்ணம் - இளம் பிள்ளைகள் இருக்கும் இல்லமாயிற்றே!.. - என்பதாக இருந்தது..

அவரது உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்ட சுந்தரர் -

தாம் எமது தந்தைக்கு நிகரானவர்.. உள்ளே வந்து அமர்ந்து சிறப்பிக்க வேணும்!..

- என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டார்..

அவரது அன்பினில் கட்டுண்ட மாறனார் - ஆரூரன் திருப்பெயரை உச்சரித்தபடி இல்லத்தினுள் நுழைந்தார்..

அவரை - பட்டுத் துகில் விரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்த சுந்தரர் -
அவரிடம் திருநீற்று மடலை அளித்தார்..

சிவாய நம!..  -  என்றுரைத்தபடி திருநீற்றைத் தரித்துக் கொண்ட மாறனார் - அன்புடன் சுந்தரர்க்கும் பரவை நாச்சியாருக்கும் அளித்தார்..

எளியோமும் உய்வதற்கு என, உண்ணக் கொடுத்த பாங்கு போற்றத் தக்கது.. இவ்வுலகில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது ஆன்றோர் தம் அருளுரை.. மிகவும் கடமைப்பட்டுள்ளோம்!.. இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்திடக் கூடும்?..

சுந்தரர் - அம்பரான் மாறனாரிடம் அன்பு பாராட்டினார்..

அதற்குள் -

தான் செய்த இனிப்பு வகைகளையும் பதமாகக் காய்ச்சப்பட்ட காராம் பசுவின் பாலையும் தளதளக்கும் வெற்றிலையுடன் களிப்பாக்கினையும் முன் வைத்து அந்த சூழ்நிலையை மேலும் களிப்பாக்கினாள் - பரவை நாச்சியார்..

இப்படியோர் அன்பின் உபசரிப்பு ஆன்றோர் தமக்கே உரியது.. தம்பிரான் தோழர் எனும் பேர்பெற்ற தமது சொல்லும் செயலும் தகைமை உடையனவாகத் திகழ்கின்றன.. தமது திருமனையாள் நம்மிடத்தே காட்டும் அன்பு வேறெங்கும் யான் காணாதது..

தேவரீர்.. தமது திருமனையாளையும் நமது இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கலாம்.. அவர்களைத் தரிசிக்கும் பேறு எங்களுக்கு கிட்டியிருக்குமே!..

மென்மையாக மொழிந்தாள் - பரவை நாச்சியார்..

ஆகா!.. இதுவல்லவோ விருந்தோம்பல்!.. வள்ளுவன் வகுத்த வழியில் நின்று வருவிருந்து பார்த்திருக்கும் நீங்கள் அல்லவோ நல்விருந்து வானத்தவர்க்கு!..

அம்பரான் மாறனார் பரவசமானார்..

ஐயனே!.. எத்தனைக் காலம் இப்படி நட்புணர்வில் சேர்ந்திருந்தோமோ?.. யார் அறியக்கூடும்!..

எம்பெருமான் ஆரூரன் அறிவான் அன்றோ!.. ஆரூரன் அன்றி
நமக்கெல்லாம் ஆருளர்?.. ஆகும் சமயம் இது அந்திக் காப்பிற்கு.. வாருங்கள் பூங்கோயில் சென்று ஆரூர் அகலாத எம்பெருமானைத் தரிசிப்போம்!..

சுந்தரர் அழைத்தார்..

அந்த அளவில் பரவை நாச்சியாரிடம் விடை பெற்றுக் கொண்ட, அம்பரான் மாறனார் - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடன் ஆரூர்த் திருக்கோயிலை நோக்கி விரைந்தார்...

பூங்கோயிலினுள் நுழைந்து திருமூலத்தானத்தின் முன்பாக மனம் உருகி வழிபட்டனர்..

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையெலாம் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வெண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்துஅணி
ஆரூரனை மறக்கலும் ஆமே!..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பாடலைப் பாடினார்..

ஆங்கே திரண்டிருந்த அடியவர் குழாம் அமுதத் திருப்பாட்டினைக் கேட்டு ஆனந்தம் கொண்டது..

மகா தீபாராதனை நிகழ்ந்த பின் அனைவருக்கும் திருநீறு வழங்கப்பெற்றது...

அந்த அளவில் மனமகிழ்வுடன் திருச்சுற்றில் வலம் வந்தனர்..

மாறனாரே!.. தங்கள் அன்புக்குக் கடமைப்பட்டுள்ளேன்.. ஏது செய்து என் அன்பினைக் காட்டுவேன்.. சொல்லுங்கள்!..

சுந்தரர் வியந்தார்..

மிகவும் மெல்லிய குரலில் - மாறனார் கூறினார்

அங்ஙனமாயின் - ஆரூர் எம்பெருமானிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது.. தாம் விருப்புற்று அதனை ஈடேற்றித் தருதல் வேண்டும்.. தங்களால் அது ஆகக்கூடும்!..

என்ன அது?.. - சுந்தரர் வினவினார்..

தவறாக ஏதும் கொள்ளவேண்டாம்.. எளியேன் இயன்ற அளவில் சோம யாகங்களை செய்து எம்பெருமானை ஆராதித்து வருகின்றேன்.. யாகத்தில் அவிர் பாகம் வழங்கும் போது எம்பெருமான் எழுந்தருளி பெற்றுக் கொள்வதைக் கண்ணாரக் கண்டு தொழுவதற்கு ஆவலுள்ளவனாக இருக்கின்றேன்..

அப்படியா!..

ஐயனின் தரிசனத்திற்கு விதியுடையவன் எனில் ஆகட்டும்.. இல்லையேல் இதனை மனதில் கொள்ளவேண்டாம்...

அழைப்போர் அழைத்தால் ஆங்கே அன்புடன் வருபவன் ஆரூரன்!.. இதில் தமக்குத் தயக்கம் எவ்விதம் உண்டாயிற்று?..

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுரைத்திருக்கின்றனர் ஆன்றோர்.. அந்த விதம் தம்மைக் குருவாகக் கொண்டேன்..

தாயாய் வந்த தத்துவனை - தந்தையாய் வந்த வித்தகனைத் தாம் எனக்கு காட்டியருளல் வேண்டும்!..


நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே!..

- என்று திருப்பாட்டு அருளிய தாங்களே - எம்பெருமானை எனக்குக் காட்டியருளல் வேண்டும்!..

பணிவுடன் கூறி நின்றார் - அம்பரான் மாறனார்..

இந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் குளிர்ந்த - சுந்தரர்,
மாறனார் நிகழ்த்தும் யாகத்திற்கு எழுந்தருளி திருக்கோலம் காட்டியருளல் வேண்டுமென ஆரூர் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார்...

அவ்வண்ணமே ஈசனும் ஏற்றுக்கொண்டார்..

அம்பரான் மாறனாரும் பெருமகிழ்வு எய்தினார்..

தாமும் யாகத்திற்கு வரவேண்டும்!.. - என, சுந்தரரை அழைத்து விட்டு
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தமது இல்லத்திற்கு ஏகினார்..

இந்த நிகழ்வுக்குப் பிறகே அம்பர் மாகாளத்தில் மாறனார் சோமாசி யாகத்தைத் தொடங்கினார்..

அந்த யாகத்தின் போது தான் - 

ஈசன் தமது குடும்பத்தினருடன் புலையன் வேடங் கொண்டு எழுந்தருளி மாறனார்க்கும் அவர் தம் மனைவியாருக்கும் அங்கிருந்த சுந்தரர்க்கும் மற்றையோருக்கும் திருக்கோலம் காட்டியருளினன்..

அத்துடன் மாறனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் முக்திப் பேறு நல்கினன்....

மாறனார் - சோமாசி மாற நாயனார் எனும் சிறப்பினை எய்தினார்..

எவருக்கும் கிட்டாத பெரும்பேறு அம்பரான் மாறனாருக்குக் கிட்டியது..

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கடனாவது தான்!..

- என்று அப்பர் ஸ்வாமிகள் வியந்துரைப்பார்..

தம்மை அடைந்தார்க்கு நலம் அருளும் பாங்கு பரமனுக்கே உரித்தானது..

அவ்வண்ணம் - இறைவனது அடியார்க்கும் உண்டு!..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் நிகழ்த்தியதும் - அவ்வண்ணமே!..


அம்பரான் மாறனார்க்கு நிகழ்த்தியதைப் போலவே - பின்னாளில் தாம் வெள்ளை யானையின் மீதேறி திருக்கயிலாய மாமலைக்கு ஏகியபோது
சேரமான் பெருமாள் நாயனாரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்..

திருக்கயிலாய மாமலையின் திருவாசலில் சேரமான் பெருமாள் தடுத்து நிறுத்தப்பட்டார்..

இப்போது உமக்கு அழைப்பில்லையே!.. - என்று..

திருமாமணி மண்டபத்தின் உள்ளே சென்ற சுந்தரர் -
அம்மையப்பனை வலம் வந்து வணங்கி தொழுது எழுந்தார்..

சேரமான் எனது நண்பர் ஆயினார்..  அம்மையப்பனைத் தொழுதெழும் ஆவலினால் இங்கு வந்தனர்.. கருணை கூர்ந்து அவரையும் அனுமதித்தருளல் வேண்டும்!.. 

- என விண்ணப்பித்து நின்றார்..

அந்த அளவில் சேரமான் பெருமாளும் ஈசன் திருமுன் அனுமதிக்கப்பட்டு
சிவ தரிசனம் கண்டு இன்புற்றார்..

தாம் பெற்ற இன்பத்தைத் தரணிக்கும் வழங்கி மகிழ்ந்தவர் - சுந்தரர்..

இன்று ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திரம்..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் திருக்கயிலை மாமலைக்கு ஏகிய நாள்..


சிவாலயங்களில் உள் நிகழ்வாக சுந்தரர்க்கு ஆராதனைகள் நிகழ்கின்றன..

சுந்தரர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே!..

நம்பி ஆரூரன் என்பது இயற்பெயர்.. திருநாவலூரர் என்பதும் வழக்கம்..

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர்..


மேலை வினையினால் -
திரு ஆரூரில் பரவை நாச்சியாருடனும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாருடனும் திருமணம் நிகழ்ந்தது..

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை 100..
ஸ்வாமிகள் தரிசித்த திருத்தலங்கள் - 83

சுந்தரர் வாழ்ந்த காலம் முழுதும் மக்களுக்கு பேருதவிகளைப் புரிந்திருக்கின்றார்..


சுந்தரர் - இறையடியார்களுக்குக் காட்டிச் சென்ற நலன்கள் பலப்பல...

அவற்றை ஏற்றுக் கொண்டு இலங்கும் அடியார்கள் -
தம் வாழ்வில் நலம் பல பெறுவது நிதர்சனம்..
***
மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்ன முதாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே!.. (7/27)

வாழி திருநாவலூர் 
வன்தொண்டர் திருப்பதம் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூலை 26, 2020

வெற்றிவேல்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று உலக முழுதும்
முருக பக்தர்கள் ஒன்று கூடி
கொடும்பகை அகல வேண்டுமென
ஸ்ரீ கந்த சஷ்டி கவசத்தினைப்
பாராயணம் செய்கின்றனர்..


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழ வைப்போன் வெய்ய வாரணம்போல்
கைதான் இருபதுடையான்
தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள்
பயந்த இலஞ்சியமே.. (24)
-: கந்தர் அலங்காரம் :-

இதற்குமேலொரு விளக்கத்தை
எவராலும் கொடுக்க இயலாது..

முருகன் யார்?..
அவன் எத்தன்மையானவன்!..
என்பதை உணர்ந்தவர்களிடத்து
வெறும் பேச்சுக்கு இடம் இராது..

உமையாள் பயந்த இலஞசியம்
என்கிறார் அருணகிரிநாதர்..

உமையவள் பெற்றெடுத்த சிங்கம்..
உலகாள வந்த பசுந்தங்கம்...

இப்பசுந்தங்கம்
ஸ்ரீ ஹரிபரந்தாமனின் மருகன்..

ஸ்ரீ ஹரிபரந்தாமன்
இருபது கைகளை உடைய
இராவணனின்
பத்ததுத் தலைகளையும் 
கத்தரித்துத் தள்ளுவதற்காக
ஸ்ரீராமன்  எனத் திரு அவதாரம் 
செய்தவன்...

ஸ்ரீ ராமபிரானால்
வீழ்த்தப் பெற்ற இராவணன்
ஈசன் எம்பெருமான் வீற்றிருக்கும்
மா மலையை அசைத்த
பராக்கிரமத்தை உடையவன்..

ஈசனிடமிருந்து
சந்திர காந்தம் எனும் வாளையும்
என்றும் குன்றாத வாழ் நாளையும்
பெற்றவன் இராவணன்..

அப்படியாகப் பட்ட
இராவணனின்
தலைகளை அறுத்துத் தள்ளிய
ஸ்ரீராமசந்திரனின் மருமகன்
எப்படிப்பட்டவனாக இருப்பான்!...



அண்ட பகிரண்டங்களையும்
உருட்டி விளையாடிய
அருளிளங்குமரன்
தன்னை முத்தமிழால் வைதவரையும்
வாழ வைத்து அருள்கிறான் எனில்
அவனது பெருமை தான் என்னே!...

எம்பெருமான் முருகவேளின்
திருக்கரத்தில் இலஙகும் வேலும்
அவனது திருவடிகளுக்கு அருகில் விளங்கும் யிலும்
அவனது திருக்கொடியில் இருந்து
அவன் புகழைப் பாடிக் கொண்டிருக்கும் சேவலும்
அன்பருக்கானவை..

அன்பர் தமக்கு
ஆனந்தத்தைக் கொடுப்பவை..
அவர்தமைச் சூழும்
அல்லல்களை அறுப்பவை...
ஆணவத்தில் உழல்வோர்க்கு
அனலாகத் தகிப்பவை...
ஆகாத கொடியோர் தம்
ஆதியந்தம் கெடுப்பவை...



ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம்
 வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம்
வாழ்க செவ்வேள்
ஏறிடும் மஞ்ஞை வாழ்க யானைதன்
அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க
சீர் அடியார் எல்லாம்...

வெற்றி வேல்.. வீர வேல்!..
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 24, 2020

வெள்ளி மணி 2

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று மங்கலகரமான நாள்..

ஆடி மாதத்தின் பூர நட்சத்திரம்..
அம்பிகை - பொங்கும் மங்கலத்தில் பூத்து நின்ற நாள்!..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி - திருவையாறு
ஊழிகளின் தொடக்கத்தில் -
புவனம் முழுதையும் பூத்து அருள்வதற்காக - ஜகத் ஜனனியாகிய அம்பிகை - புஷ்பவதியாக பூத்து நின்றருளினள்.

அந்த மங்கலம் அனுசரிக்கப்படும் நாளே - ஆடிப் பூரம்!..

அம்மன் சந்நிதிகள் கோலாகலமாக விளங்கும் நாள் - ஆடிப்பூரம்!..

ஸ்ரீநீலாயதாக்ஷி

திருமயிலை ஸ்ரீ கற்பகவல்லி நாகை ஸ்ரீ நீலாயதாக்ஷி
திருச்சி ஸ்ரீ மட்டுவார்குழலி, திருஆனைக்கா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லி, இராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தனி

- என தமிழகம் எங்கும் அம்பிகைக்கு சிறப்பான வைபவங்கள் திருக் கோயிலின் உள்ளேயே நிகழ்கின்றன..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
திருவையாற்றில் - ஐயாறப்பருடன் இனிது உறையும் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகிக்கும் ஆடிப்பூர விழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது..

நாளும் சிறப்பு அலங்கார ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன..

ஒவ்வொரு நாளும் காலையில் பல்லக்கில் எழுந்தருளிய அம்பிகை - இரவில் ரிஷபம், சேஷம், கிளி, காமதேனு - என வாகனங்களில் வீதி வலம் கண்டாள்.

ஆடிப்பூரத்தன்று - திருத்தேரில் பவனி வருகின்றாள்..

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
முந்தைய ஆண்டின் திருவிழாப் படங்கள் இவை..
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ மட்டுவார்குழலி - திருச்சி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
ஸ்ரீ அபிராமவல்லி
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவாமுகுந்தர்க்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!..(013)
-: அபிராமி பட்டர் :-

அன்னை ஸ்ரீ காந்திமதி
நெல்லையில் ஆடிப்பூர வைபவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் சிறப்புடன் நடைபெறுவது..

திருவிழாவின் நான்காம் நாளன்று நண்பகலில் காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு வைபவம்..



வளையல்கள் மற்றும் மங்கலங்களைச் சமர்ப்பித்து - காந்திமதியம்மனை பக்தர்கள் வழிபடுவர்.

திருவிழாவின் பத்தாம் நாள் அம்மன் சந்நிதியின் முன்னுள்ள ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கொட்டு வைபவம்...

இந்த வைபவங்கள் எல்லாம் தற்போது நிலவும் சூழ்நிலையால் திருக்கோயில் வளாகத்திலேயே நிகழ்கின்றன..

நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மையின் திருக் கோலங்கள் நெல்லை பக்தர் பேரவையினரால் வெளியிடப்பட்டவை..

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
மங்கலங்களுடன் மங்கலமாக -
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருஅவதாரத் திருநாளாகவும் திகழ்கின்றது - ஆடிப்பூரம்!..







ஸ்ரீ வில்லிபுத்தூர் திருவிழாவின் ஒன்பதாம் திருநாள் திருத்தேரோட்ட்ம்.. 

அன்றைய தினம்- ஸ்ரீரங்கத்திலிருந்து -
ஸ்ரீ ஆண்டாளுக்கும் ஸ்ரீ ரங்க மன்னாருக்கும் வஸ்திர மரியாதை செய்யப்படுவது வழக்கம்...

வஸ்திர மரியாதையை ஏற்றுக் கொண்டு - ஆண்டாள் ஸ்ரீரங்கமன்னாருடன் திருத் தேரில் எழுந்தருளும் திருக்காட்சியைத் தரிசிக்க ஆயிரக் கணக்கில் பக்தர்கள் திரள்வது வழக்கம்....

அந்த கோலாகலம் எல்லாம் இனி வரும் ஆண்டுகளில் தான்...

ஆடித் தள்ளுபடி!..
அந்தத் தள்ளுபடி!.. இந்தத் தள்ளுபடி!.. 
-  என அலைவோர் மத்தியில் - ஐயனையும் அம்பிகையையும் 
வழிபட்டு உய்வடைவோர் ஆயிரம்.. ஆயிரம்..

எத்தனை எத்தனையோ மங்கலங்களுக்கு இருப்பிடம் ஆடி மாதம்!..

இந்த நாட்களில் - ஒருவருக்கொருவர் முகமன் கூறி - அன்பினைப் பரிமாறிக் கொள்ளுவதே சிறந்த நலன்களுக்கு அடிப்படை என்கின்றனர் ஆன்றோர்.

ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் - வீண் ஆடம்பரமின்றி -
ஏழை எளியவர்க்கு கூழ் வார்த்து வேண்டுதல் செய்வது அன்பின் வெளிப்பாடு..

மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல் இவற்றுடன் தாம்பூலம் வைத்து அக்கம்பக்கம் அண்டை அயலாருடன் நட்பைப் பேணுதல் சிறப்பு..

அதிலும் முக்கியமாக -

ஏழைப் பெண் குழந்தைகளுக்கு இயன்றவரை புத்தாடை வளையல்களை வழங்கி மகிழ்வித்தால் - அம்பிகையை மகிழ்வித்ததாக ஆகின்றது..

அம்பிகை மனம் மகிழ்ந்தால் -
நிலையான செல்வம் நமது வீட்டில் குடி கொள்ளும் என்பது திருக்குறிப்பு...

சூழ்நிலையை அனுசரித்து
பழைய பதிவு ஒன்றினை ஒழுங்கமைத்து
இன்று வெளியிட்டுள்ளேன்...

ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் பெருகி - இல்லத்தில்
மகிழ்ச்சி நிலையாக குடிகொள்வதில் அனைவருக்கும் விருப்பம்!..

அவ்வண்ணம் நிகழ்வதற்கு அம்பிகையை வேண்டுவோம்!..

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து..

ஓம் சக்தி ஓம்..
* * *

திங்கள், ஜூலை 20, 2020

கண்டேன் கயிலை..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று அமாவாசை..
ஆடி அமாவாசை..

அப்பர் ஸ்வாமிகள்
திரு ஐயாற்றில்
திருக்கயிலாய தரிசனம்
கண்ட நாள்..

இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
திருக் கயிலாய தரிசன
திருப்பதிகம்..
***
நான்காம் திருமுறை
மூன்றாவது திருப்பதிகம்

இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி..
***

அம்மையும் அப்பனும்
சகல உயிர்களிலும்
பொலிந்து நிற்பதைக்
கண்ணாரக் கண்ட ஸ்வாமிகள்
அருளிய திருப்பதிகம்..

காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன க
ண்டேன்!..(1)

போழிளங் கண்ணியினானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றி என்றேத்தி வட்டம்
இட் டாடா வருவேன்
ஆழி வலவன் நின்றேத்தும் ஐயா
றடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (2)

கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
எரிப்பிறைக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடி 
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந்தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்றபோது
வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(3)

சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
பிறை இளங் கண்ணியினானைப்
பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயிலாலும் ஐயா
றடைகின்றபோது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல்
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (4)

ஏடு மதிக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடிக் 
காடொடு நாடு மலையுங் கைதொழுதாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (5)

 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து..

தண்மதிக் கண்ணியி னானைத்

தையல் நல்லா ளொடும் பாடி
உண்மெலி சிந்தையன் ஆகி உணரா
உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்துறை கின்ற ஐயா
றடைகின்றபோது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி
வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (6)

கடிமதிக் கண்ணியி னானைக்
காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயா
றடைகின்றபோது
இடிகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (7)

விரும்பு மதிக் கண்ணியானைத் மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலைஎழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயா றடைகின்றபோது
கருங்கலைப் பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(8)

நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
முற்பிறைக் கண்ணியினானை
மொய்குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும்
ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா
றடைகின்றபோது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (9)

திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி 
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினியென்னா வருவேன்
அங்கிள மங்கையராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(10).

இளமண நாகு தழுவி வரும் ஏறு
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்

கண்டறி யாதன கண்டேன்!.(11)



பொல்லா வினையின் காரணத்தால்
இவ்வருடம் காவிரிக் கரையில்
அமாவாசை தர்ப்பணம்
செய்வதற்குத் தடை விதிக்கப்
பட்டுள்ளது.

அருள்மிகு ஐயாறப்பர்
அருள்தரு அறம் வளர்த்த நாயகியுடன் 
எழுந்தருளும் வைபவம் திருக்கோயிலின்
உள்ளேயே நிகழும் என சொல்கிறார்கள்..

கைத் தொலைபேசியில் எல்லாமும்
 செய்ததால் ஒழுஙகமைவு சரியாக
 இல்லை... பொறுத்தருளவும்...

கயிலாய நாதனைக் கண்ணில்
நிறுத்தித் தரிசிப்போம்!..  
மங்கலமும் மனையறமும்
விளங்கப் பெறுவோம்!.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

ஞாயிறு, ஜூலை 19, 2020

சிவ தரிசனம்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
நேற்று பிரதோஷம்..
சனி மஹா பிரதோஷம்..

தஞ்சை பெரிய கோயிலில்
மிகச் சிறப்பாக நடைபெறுவதை
அனைவரும் அறிந்திருப்பீர்கள்..

திருக்கோயிலுக்கு
இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும்
இரண்டு கி.மீ . தொலைவுக்கு
போக்குவரத்து நெரிசலாகி விடும்.

ஆனால் தற்போதைய ஊரடங்கினால்
பக்தர்கள் திரள் இன்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..

நேற்றைய நிகழ்வுகள் Fb ல்
கிடைத்தவை..
வலையேற்றிய ன்பர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..






இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!..
-: திருநாவுக்கரசர் :-


உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவ லிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!..
-: திருமூலர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ