திங்கள், ஜூலை 27, 2020

சுந்தரர்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!..

என்று அப்பர் பெருமானால் வியந்து புகழப்பெற்ற திருத்தலம்..

பஞ்ச பூதங்களுள் மண்ணின் தொகுப்பாகத் திகழும் திருத்தலம்..

திருஆரூர்...

வெயில் சற்றே குறைந்திருந்த மதியப் பொழுது...

பூங்கோயில் எனப்பட்ட திருக்கோயிலின் தெற்கு வாசற்கோபுரத்தைக் கடந்ததாக - கிழக்கு நோக்கிப் பொலியும் இல்லம்..

இல்லத்தின் தலைவாசலில் சிவசின்னங்கள் சித்திரங்களாகத் தீட்டப்பட்டிருந்தன....

அந்த இல்லத்தில் மங்கலம் பொங்கித் ததும்பிக்கொண்டிருந்தது..   

இல்லத்தினுள் - 

தலை வாழையிலையில் பரிமாறப் பெற்றிருந்த அமுது மற்றும் கறி வகைகளை ஒருகணம் கண்ணுற்று - கை கூப்பி வணங்கினார்...

சிவாய திருச்சிற்றம்பலம்!...

அருகே - வெட்டி வேர் விசிறி கொண்டு மெல்லென வீசிக் கொண்டிருந்தாள் - மங்கை நல்லாள்..

அவள் - பரவை நாச்சியார்!..

ஆம்!..

சங்கிலியார் - சுந்தரர் - பரவையார் 
வன்தொண்டர் என்றும் தம்பிரான் தோழர் என்றும் புகழப்பெற்ற -
சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் இல்லம் தான் - அது!..

தனது திருக்கரத்தினால் உணவைப் பிசைந்து,
முதல் கவளத்தை - இலையின் மேல் ஓரத்தில் வைத்தார்..

மறு கவளத்தை - அன்பு மீதூற - பரவை நாச்சியாரிடம் வழங்கினார்...

அதனை இருகரங்களால் பெற்று கண்களில் ஒற்றிக் கொண்ட பரவை நாச்சியார் - 

மூன்றாவது கவளத்தை ஸ்வாமிகள் உண்பதைக் கண்ணாரக் கண்டு களித்தவளாக தானும் உண்டாள்..

பரவை!..

ஸ்வாமி!..

கடந்த சில நாட்களாகவே - தூதுவளைக் கூட்டு, தூதுவளைத் துவையல், தூதுவளைப் பச்சடி, தூதுவளைப் பருப்பு, தூதுவளை ரசம் - என்று வகை வகையாக சமைத்து அளித்திருக்கின்றாயே!..

பரவை நாச்சியார் தம் திருமுகத்தில் நாணத்துடன் புன்னகை..

நமது புழக்கடை வாவியின் அருகே கூட தூதுவளையைக் கண்டேனில்லை.. எவரும் தலைச்சுமையாகக் கொண்டு வந்து வீதியினில் விற்கின்றனரோ?..

ஸ்வாமி!.. இது விலை கொடுத்துப் பெற்றது அல்ல!..

என்ன!?..  - சுந்தரர்க்கு ஆச்சர்யம்..

அன்பர் ஒருவர் சில நாட்களாக இதனைத் தங்களின் பொருட்டு வழங்கி வருகின்றார்... நான் முதலில் மறுத்துரைத்தேன்.. அது கேட்டு கல்லும் கரையும் வண்ணம் கலங்கி நின்றார்.. நெஞ்சம் இளகி நின்றார்... என் மனம் கேட்கவில்லை.. இதற்கான விலையைப் பெற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினேன்!..

நடந்ததை விவரித்தார் பரவை நாச்சியார்.

பிறகு!...

ஆரூரனுக்கு ஆளாகி ஸ்வாமிகள் செய்யும் திருத்தொண்டிற்கு ஈடு இணையும் உண்டோ!.. தம்பிரான் தோழருக்காக - நாம் புரியும் இந்த கைங்கர்யத்தை மறுத்துரைக்காதீர்கள்!.. - என்று மனம் உருகி நின்றார்.. அதனால் தான் - இந்தக் கீரையைப் பெற்றுக் கொண்டேன்.. பிழை தனைப் பொறுத்தருளவும்!..

இப்படியும் ஒருவர் நம்மிடம் அன்பு மழை பொழிகின்றார் எனில் எல்லாம் ஆரூரனின் அருள்!.. பரவை... அவர் தம் பெயரினைக் கேட்டாயோ?.. எந்த ஊரினர் என்று கூறினாரா?..

ஆரூரின் வடக்கே இருக்கும் அம்பர் எனும் திருவூரினின்று வருவதாகக் கூறினார்.. வயதில் பெரியவரான அவரிடம் - அவரது பெயரை வினவுவதற்குத் தோன்றவில்லை.. எனினும், அவரது தோற்றத்தால் அந்தணர் என அறிய முடிகின்றது!...

நல்ல உள்ளம் படைத்த அவரைக் காண வேண்டுமே!... என்ன செய்யலாம்!..

தங்களைக் காண்பதற்குத் தவமிருப்பதாக அவரே கூறினார்.. இன்று அந்தி சாயும் வேளையில் நமது இல்லத்திற்கு வருவதாகக் கூறிச் சென்றார்!.. தாம் உண்டு களைப்பாறிய பின்னர் இந்தச் செய்திகளைத்
தெரிவிக்கலாம் - என நான்
இருந்தேன்..

இப்படியும் ஒரு தோழர் - நம் வாழ்க்கையில்.. அவரது வருகைக்காக இப்போதே என் மனம் ஏங்குகின்றது.. பரவை!.. அவரை நாம் சிறப்பாக உபசரிப்பது அவசியம்.. வேண்டுவன செய்து வைக்கவும்..

ஆகட்டும்.. ஸ்வாமி!..

உண்ட களைப்பு தீர - ஆங்கிருந்த கட்டிலில் சற்றே ஓய்வு கொண்டார் சுந்தரர்..

தியாகேசர் திருமுன்பாக சுந்தரர் - பரவை நாச்சியார்
அவரருகில் அமர்ந்த பரவை நாச்சியார் - சுந்தரரின் மேனியை மெல்லெனெ வருடியபடி -

உறக்கம் கொள்கின்றீர்களா?.. - என்று வினவினாள்..

அம்பரிலிருந்து வரவிருக்கும் அன்புத் தோழரைப் பற்றிய எண்ணங்கள் தான்.. பொழுது விரைவாக நகரவில்லையே.. என்றிருக்கின்றது..

காலங்களைக் கடந்த நட்பின் மேலைத் தொடர்பு போலிருக்கின்றது.. தாங்கள் சற்றே ஓய்வில் இருங்கள்.. நம் இல்லந்தேடி வருபவரை உபசரிப்பதற்கு ஏதுவாக இனிப்பு வகைகளைச் செய்து வைக்கின்றேன்..

சற்றைக்கெல்லாம் -

கொல்லைப் புறம் தொழுவில் கிடந்த கன்றுக்குப் பசியெடுக்கவே -
அம்மா!.. என, துள்ளிக் கொண்டு தாய்மடியை நோக்கி ஓடிய வேளையில் -

தலைவாசற்புறத்தில் -

ஸ்வாமி!.. எளியேன் வந்திருக்கின்றேன்.. அம்பரில் இருந்து அடியேன் மாறன் வந்திருக்கின்றேன்!..

அம்மாத்திரத்தில் -

தாய் மடியினைத் தேடி ஓடிய கன்றினைப் போல -
துள்ளிக் குதித்து விரைந்தார் - சுந்தரர்..

வாசலில் சிவப்பழமாக - அம்பரான் மாறன்..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொண்ட வேளையில் - இருவரது கண்களும் சந்தோஷத்தினால் பனித்தன...

அடுக்களையினிலிருந்து - பரவை நாச்சியாரும் ஓடோடி வந்து, முகமன் கூறி வரவேற்றாள்..

எமது இல்லத்திற்குள் எழுந்தருள வேண்டும்!..

அம்பரான் மாறனாருக்கு - பாதம் துலக்க நீர் அளிக்கப்பட்டது...

இப்பெருந்திண்ணையில் இருப்போமே!..

அகன்றிருந்த திண்ணைகளைக் காட்டினார் - அம்பரான் மாறன்..

அவரது எண்ணம் - இளம் பிள்ளைகள் இருக்கும் இல்லமாயிற்றே!.. - என்பதாக இருந்தது..

அவரது உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்ட சுந்தரர் -

தாம் எமது தந்தைக்கு நிகரானவர்.. உள்ளே வந்து அமர்ந்து சிறப்பிக்க வேணும்!..

- என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொண்டார்..

அவரது அன்பினில் கட்டுண்ட மாறனார் - ஆரூரன் திருப்பெயரை உச்சரித்தபடி இல்லத்தினுள் நுழைந்தார்..

அவரை - பட்டுத் துகில் விரிக்கப்பட்ட ஆசனத்தில் அமரச் செய்த சுந்தரர் -
அவரிடம் திருநீற்று மடலை அளித்தார்..

சிவாய நம!..  -  என்றுரைத்தபடி திருநீற்றைத் தரித்துக் கொண்ட மாறனார் - அன்புடன் சுந்தரர்க்கும் பரவை நாச்சியாருக்கும் அளித்தார்..

எளியோமும் உய்வதற்கு என, உண்ணக் கொடுத்த பாங்கு போற்றத் தக்கது.. இவ்வுலகில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது ஆன்றோர் தம் அருளுரை.. மிகவும் கடமைப்பட்டுள்ளோம்!.. இதற்கெல்லாம் என்ன கைமாறு செய்திடக் கூடும்?..

சுந்தரர் - அம்பரான் மாறனாரிடம் அன்பு பாராட்டினார்..

அதற்குள் -

தான் செய்த இனிப்பு வகைகளையும் பதமாகக் காய்ச்சப்பட்ட காராம் பசுவின் பாலையும் தளதளக்கும் வெற்றிலையுடன் களிப்பாக்கினையும் முன் வைத்து அந்த சூழ்நிலையை மேலும் களிப்பாக்கினாள் - பரவை நாச்சியார்..

இப்படியோர் அன்பின் உபசரிப்பு ஆன்றோர் தமக்கே உரியது.. தம்பிரான் தோழர் எனும் பேர்பெற்ற தமது சொல்லும் செயலும் தகைமை உடையனவாகத் திகழ்கின்றன.. தமது திருமனையாள் நம்மிடத்தே காட்டும் அன்பு வேறெங்கும் யான் காணாதது..

தேவரீர்.. தமது திருமனையாளையும் நமது இல்லத்திற்கு அழைத்து வந்திருக்கலாம்.. அவர்களைத் தரிசிக்கும் பேறு எங்களுக்கு கிட்டியிருக்குமே!..

மென்மையாக மொழிந்தாள் - பரவை நாச்சியார்..

ஆகா!.. இதுவல்லவோ விருந்தோம்பல்!.. வள்ளுவன் வகுத்த வழியில் நின்று வருவிருந்து பார்த்திருக்கும் நீங்கள் அல்லவோ நல்விருந்து வானத்தவர்க்கு!..

அம்பரான் மாறனார் பரவசமானார்..

ஐயனே!.. எத்தனைக் காலம் இப்படி நட்புணர்வில் சேர்ந்திருந்தோமோ?.. யார் அறியக்கூடும்!..

எம்பெருமான் ஆரூரன் அறிவான் அன்றோ!.. ஆரூரன் அன்றி
நமக்கெல்லாம் ஆருளர்?.. ஆகும் சமயம் இது அந்திக் காப்பிற்கு.. வாருங்கள் பூங்கோயில் சென்று ஆரூர் அகலாத எம்பெருமானைத் தரிசிப்போம்!..

சுந்தரர் அழைத்தார்..

அந்த அளவில் பரவை நாச்சியாரிடம் விடை பெற்றுக் கொண்ட, அம்பரான் மாறனார் - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுடன் ஆரூர்த் திருக்கோயிலை நோக்கி விரைந்தார்...

பூங்கோயிலினுள் நுழைந்து திருமூலத்தானத்தின் முன்பாக மனம் உருகி வழிபட்டனர்..

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னை என்பிழையெலாம் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறி வெண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற் பழனத்துஅணி
ஆரூரனை மறக்கலும் ஆமே!..

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் திருப்பாடலைப் பாடினார்..

ஆங்கே திரண்டிருந்த அடியவர் குழாம் அமுதத் திருப்பாட்டினைக் கேட்டு ஆனந்தம் கொண்டது..

மகா தீபாராதனை நிகழ்ந்த பின் அனைவருக்கும் திருநீறு வழங்கப்பெற்றது...

அந்த அளவில் மனமகிழ்வுடன் திருச்சுற்றில் வலம் வந்தனர்..

மாறனாரே!.. தங்கள் அன்புக்குக் கடமைப்பட்டுள்ளேன்.. ஏது செய்து என் அன்பினைக் காட்டுவேன்.. சொல்லுங்கள்!..

சுந்தரர் வியந்தார்..

மிகவும் மெல்லிய குரலில் - மாறனார் கூறினார்

அங்ஙனமாயின் - ஆரூர் எம்பெருமானிடம் எனக்கு ஒரு விண்ணப்பம் உள்ளது.. தாம் விருப்புற்று அதனை ஈடேற்றித் தருதல் வேண்டும்.. தங்களால் அது ஆகக்கூடும்!..

என்ன அது?.. - சுந்தரர் வினவினார்..

தவறாக ஏதும் கொள்ளவேண்டாம்.. எளியேன் இயன்ற அளவில் சோம யாகங்களை செய்து எம்பெருமானை ஆராதித்து வருகின்றேன்.. யாகத்தில் அவிர் பாகம் வழங்கும் போது எம்பெருமான் எழுந்தருளி பெற்றுக் கொள்வதைக் கண்ணாரக் கண்டு தொழுவதற்கு ஆவலுள்ளவனாக இருக்கின்றேன்..

அப்படியா!..

ஐயனின் தரிசனத்திற்கு விதியுடையவன் எனில் ஆகட்டும்.. இல்லையேல் இதனை மனதில் கொள்ளவேண்டாம்...

அழைப்போர் அழைத்தால் ஆங்கே அன்புடன் வருபவன் ஆரூரன்!.. இதில் தமக்குத் தயக்கம் எவ்விதம் உண்டாயிற்று?..

மாதா, பிதா, குரு, தெய்வம் என்றுரைத்திருக்கின்றனர் ஆன்றோர்.. அந்த விதம் தம்மைக் குருவாகக் கொண்டேன்..

தாயாய் வந்த தத்துவனை - தந்தையாய் வந்த வித்தகனைத் தாம் எனக்கு காட்டியருளல் வேண்டும்!..


நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்
கூறணி கொடுமழு ஏந்தியோர் கையினன்
ஆறணி அவிர்சடை அழல்வளர் மழலைவெள்
ஏறணி அடிகள்தம் இடம்வலம் புரமே!..

- என்று திருப்பாட்டு அருளிய தாங்களே - எம்பெருமானை எனக்குக் காட்டியருளல் வேண்டும்!..

பணிவுடன் கூறி நின்றார் - அம்பரான் மாறனார்..

இந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் குளிர்ந்த - சுந்தரர்,
மாறனார் நிகழ்த்தும் யாகத்திற்கு எழுந்தருளி திருக்கோலம் காட்டியருளல் வேண்டுமென ஆரூர் இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டார்...

அவ்வண்ணமே ஈசனும் ஏற்றுக்கொண்டார்..

அம்பரான் மாறனாரும் பெருமகிழ்வு எய்தினார்..

தாமும் யாகத்திற்கு வரவேண்டும்!.. - என, சுந்தரரை அழைத்து விட்டு
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு தமது இல்லத்திற்கு ஏகினார்..

இந்த நிகழ்வுக்குப் பிறகே அம்பர் மாகாளத்தில் மாறனார் சோமாசி யாகத்தைத் தொடங்கினார்..

அந்த யாகத்தின் போது தான் - 

ஈசன் தமது குடும்பத்தினருடன் புலையன் வேடங் கொண்டு எழுந்தருளி மாறனார்க்கும் அவர் தம் மனைவியாருக்கும் அங்கிருந்த சுந்தரர்க்கும் மற்றையோருக்கும் திருக்கோலம் காட்டியருளினன்..

அத்துடன் மாறனாருக்கும் அவர்தம் மனைவியாருக்கும் முக்திப் பேறு நல்கினன்....

மாறனார் - சோமாசி மாற நாயனார் எனும் சிறப்பினை எய்தினார்..

எவருக்கும் கிட்டாத பெரும்பேறு அம்பரான் மாறனாருக்குக் கிட்டியது..

தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ
தலையாயவர் தங்கடனாவது தான்!..

- என்று அப்பர் ஸ்வாமிகள் வியந்துரைப்பார்..

தம்மை அடைந்தார்க்கு நலம் அருளும் பாங்கு பரமனுக்கே உரித்தானது..

அவ்வண்ணம் - இறைவனது அடியார்க்கும் உண்டு!..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் நிகழ்த்தியதும் - அவ்வண்ணமே!..


அம்பரான் மாறனார்க்கு நிகழ்த்தியதைப் போலவே - பின்னாளில் தாம் வெள்ளை யானையின் மீதேறி திருக்கயிலாய மாமலைக்கு ஏகியபோது
சேரமான் பெருமாள் நாயனாரையும் தம்முடன் அழைத்துச் சென்றார்..

திருக்கயிலாய மாமலையின் திருவாசலில் சேரமான் பெருமாள் தடுத்து நிறுத்தப்பட்டார்..

இப்போது உமக்கு அழைப்பில்லையே!.. - என்று..

திருமாமணி மண்டபத்தின் உள்ளே சென்ற சுந்தரர் -
அம்மையப்பனை வலம் வந்து வணங்கி தொழுது எழுந்தார்..

சேரமான் எனது நண்பர் ஆயினார்..  அம்மையப்பனைத் தொழுதெழும் ஆவலினால் இங்கு வந்தனர்.. கருணை கூர்ந்து அவரையும் அனுமதித்தருளல் வேண்டும்!.. 

- என விண்ணப்பித்து நின்றார்..

அந்த அளவில் சேரமான் பெருமாளும் ஈசன் திருமுன் அனுமதிக்கப்பட்டு
சிவ தரிசனம் கண்டு இன்புற்றார்..

தாம் பெற்ற இன்பத்தைத் தரணிக்கும் வழங்கி மகிழ்ந்தவர் - சுந்தரர்..

இன்று ஆடி மாதத்தின் சுவாதி நட்சத்திரம்..

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் திருக்கயிலை மாமலைக்கு ஏகிய நாள்..


சிவாலயங்களில் உள் நிகழ்வாக சுந்தரர்க்கு ஆராதனைகள் நிகழ்கின்றன..

சுந்தரர் இவ்வுலகில் வாழ்ந்த காலம் பதினெட்டு ஆண்டுகள் மட்டுமே!..

நம்பி ஆரூரன் என்பது இயற்பெயர்.. திருநாவலூரர் என்பதும் வழக்கம்..

இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர்..


மேலை வினையினால் -
திரு ஆரூரில் பரவை நாச்சியாருடனும்
திரு ஒற்றியூரில் சங்கிலி நாச்சியாருடனும் திருமணம் நிகழ்ந்தது..

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை 100..
ஸ்வாமிகள் தரிசித்த திருத்தலங்கள் - 83

சுந்தரர் வாழ்ந்த காலம் முழுதும் மக்களுக்கு பேருதவிகளைப் புரிந்திருக்கின்றார்..


சுந்தரர் - இறையடியார்களுக்குக் காட்டிச் சென்ற நலன்கள் பலப்பல...

அவற்றை ஏற்றுக் கொண்டு இலங்கும் அடியார்கள் -
தம் வாழ்வில் நலம் பல பெறுவது நிதர்சனம்..
***
மறையோர் வானவரும் தொழுதேத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கின்ன முதாயவனே
கறையார் சோலைகள்சூழ் திருக்கற்குடி மன்னிநின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சலென்னே!.. (7/27)

வாழி திருநாவலூர் 
வன்தொண்டர் திருப்பதம் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

24 கருத்துகள்:

  1. சுந்தரர் அற்புதங்களை படித்ததில்லை.  இன்று படித்து இன்புற்றேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...
      ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரைப் போல சுந்தரரும் முதலை உண்ட பாலகனை மீட்டுத் தந்திருக்கின்றார்... அதையெல்லாம் இங்கு சொல்லவில்லை...

      கொடுமைகளைக் களையவில்லை எனில் நீர் எதற்காக இங்கு இருக்கின்றீர்?...

      என்று இறைவனையே கேள்வி கேட்டவர்..

      அப்பெருமகனைப் போற்றுவோம்...
      ஓம் நம சிவாய...

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் துரை அண்ணா.

    சுந்தரனார் பற்றிய கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். உங்கள் அழகான மென்மையான தமிழ் நடையில் கதை மிளிர்கிறது. மிக்க நன்றி துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சுந்தரனார் புராணம் அறிந்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நால்வரில் சுந்தரர் பற்றிய புராணத்தை மிகவும் அழகாக பாடல்களுடன் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்கள். இன்று கைலயங்கிரிக்கு அவர் பூத உடலோடு ஏகிய நாள் என அறிந்ததும் மெய் சிலிர்த்தது. என்ன ஒரு பக்தி...! அந்தப்பக்தியின் சிறப்பை இன்னமும் விரிவாக படித்து மனம் நிரம்ப ஏற்றிக் கொண்டு மீண்டும் வருகிறேன். என் பதிவுக்கு அன்புடனே நீங்கள் முதலாவதாக வந்து கருத்து தெரித்தமைக்கும் மிக்க நன்றி சகோதரரே..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      இங்கே சொல்லப்பட்டது ஒரே ஒரு நிகழ்வு தான்...

      ஈசனிடம் பொன்னும் பொருளும் வேண்டிப் பெற்று ஏழை எளியவர்க்கு வாரி வழங்கியிருக்கின்றார் - சுந்தரர்...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சுந்தரர் குரு பூஜையில் இன்று அவர் வரலாறு படித்தது அருமை.

    சுந்தரர் குரு பூஜையை முன்னிட்டு நடந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டேன்.(இணையவழியில்)
    மூன்று நாளாய் "மூவர் தேவாரத்தில் இசைக்கருவிகள்" என்ற தலைப்பில் பாடல்களை படித்தோம்.
    நேற்று முழுவதும் சுந்தரர் தேவாரம்.
    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி..

      தேவாரத்தில் இசைக் கருவிகள் என்பது பற்றி நானும் கொஞ்சம் அறிந்திருக்கிறேன்..

      காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகத்தில் வரிசையாக சொல்லியிருப்பார்கள்..

      பயனுள்ள தகவல்களுடன்
      கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையான பதிவுக்கு வாழ்த்துகள். சுந்தரர் கேட்ட மாதிரி," இந்தக் கொடிய அசுரனைக் களையவில்லை எனில் இறைவன் என்ன செய்கிறான்!" என்று தான் கேட்கத் தோன்றுகிறது. விரைவில் ஈசன் அருள் புரியட்டும். சுந்தரர் குருபூஜை என்பதை அறிந்து மகிழ்ச்சி. அனைவருக்கும் ஈசன் அருள் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கொரானா விஷயத்தில் ஈசனின் சித்தம் என்னவோ யாரறியக்கூடும்!..

      இறைவன் அனைவரையும் காத்தருளட்டும்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்பின் தனபாலன்..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. சுந்தரர் பெருமையினை உங்கள் பாணியில் கூறியவிதம் அருமை. எவருக்கும் கிட்டாத பேற்றினைப் பெற்றவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      மெய்யுடலோடு திருக்கயிலாய மாமலையில்
      சாயுஜ்யம் பெற்றவர் சுந்தரர்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அருமை அருமை. வேறு வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அஹா. அருமை அற்புதம். சிறார்களுக்கு இவர் கதையை எப்படி எழுதுவது எனத் தவித்துக் கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. சுந்தரரின் சரிதம் உங்களின் அருமையான எழுத்தில் படிக்கப் படிக்க மிகவும் ரசனையாக இருந்தது. அதற்குப்பொருத்தமான ஓவியங்களும் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..
      சுந்தரரின் வாழ்க்கையில் ஒரு சம்பவத்தை மட்டுமே சொல்லியிருக்கிறேன்...

      காலம் துணை செய்யட்டும்..நன்றி..

      நீக்கு
  12. பணிவுடன் பல அரிய தகவல்களை வாசித்து தெரிந்துக் கொண்டேன் ....

    இக்கடலில் மூழ்கி மூழ்கி பல முத்துக்களை கண்டு , வாசித்து , அறிந்துக் கொள்ள அவன் அருள் புரிய வேண்டும் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி...

      தங்களது தளத்திலும் சிறப்பான பதிவுகளைத் தருகின்றீர்கள்..

      அனைவருக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. சிறப்பான பகிர்வு. தகவல்கள் அனைத்தும் நன்று.

    அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..