ஞாயிறு, ஏப்ரல் 26, 2020

சிவமே சரணம் 15

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

அன்பின் அக்கா ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்கள்
அன்பின் திரு வெங்கட் நாகராஜ் அவர்களது தளத்தில்
தனது கண்பார்வையைப் பற்றிச்
சொல்லியிருந்தார்கள்...

அது கண்டு மனம் வருந்தினேன்..
அவர்களது இன்னல் தீர
அனைவரும் வேண்டிக் கொள்வோம்...

அக்கா அவர்களுக்காக
இன்றைய பதிவில்

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த
காஞ்சித் திருப்பதிகம்...

இத்திருப்பதிகத்தைப் பாராயணம்செய்வதால்
கண்நோய்கள் தீர்வதாக ஐதீகம்...

இருப்பினும் வயது கூடும் அளவில்
இன்னல்கள் கூடாதிருக்க
அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பிகை
கருணைக் கண் கொண்டு நோக்குவாளாக!..

ஏழாம் திருமுறை
திருப்பதிக எண் - 61

திருத்தலம்
திருக்கச்சி ஏகம்பம்


இறைவன் - ஸ்ரீஏகாம்பரேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீகாமாக்ஷி, ஏலவார்குழலி

தலவிருட்சம் - மா
தீர்த்தம் - கம்பை நதி..


ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 1

உற்ற வர்க்குத வும்பெரு மானை
ஊர்வ தொன்று டையான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றை வார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 2


திரியும் முப்புரந் தீப் பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல்திகழ் வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக்
காமனைக் கனலால் விழித் தானை
வரிகொள் வெள்வளை யாள் உமைநங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 3

குண்டலந் திகழ் காதுடை யானைக்
கூற்றுதைத்த கொடுந் தொழிலானை
வண்டலம் பும்மலர்க் கொன்றை யினானை
வாளரா மதிசேர் சடையானைக்
கெண்டை யந்தடங் கண் உமை நங்கை
கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ட நஞ்சுடைக் கம்பன் எம்மானைக் 
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 4

ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி - தஞ்சை 
வெல்லும் வெண்மழு ஒன்று டையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறை அவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமைநங்கை 
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 5 

திங்கள் தங்கிய சடை உடையானைத்
தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிது (உ)கப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
கங்கை யாளானைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 6


விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதந் தான் விரித்த் தோத வல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணு மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 7

சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள்
சிந்தையில் திகழுஞ் சிவன் தன்னைப்
பந்தித்த வினைப் பற்று அறுப்பானைப்
பாலொடு ஆனஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமைநங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 8


வரங்கள் பெற்றுழல் வாளரக்கர்தம்
வாலிய புரம் மூன்றெ ரித்தானை
நிரம்பிய தக்கன் தன் பெருவேள்வி
நிரந்தரஞ் செய்த நிர்க்கண் டகனைப்
பரந்த தொல்புகழாள் உமைநங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 9

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமைநங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.. 10


பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார்
நன்னெறி உலகு எய்துவர் தாமே.. 11
- திருச்சிற்றம்பலம்-

கை கொடுக்கும் காமாக்ஷி
கண் கொடுப்பாளாக!..
ஓம் காமாக்ஷ்யை நம: 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. கீதா அக்காவின் இன்னல் தீர நானும் பிரார்த்திக்கின்றேன். ஓம் நமச்சிவாய.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. கீதாம்மாவின் கண் பிரச்சனைகள் தீர எனது பிரார்த்தனைகளும்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      நலமே விளைக...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. எல்லோரும் நலமாக இறைவனை பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ..

      அவ்வண்ணமே பிரார்த்திப்போம்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. எனக்காகப் பிரார்த்தித்துக் கொண்ட அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இது முன்னரும் வந்துவிட்டுப் பின் சில வருடங்கள் இல்லாமல் இருந்து இப்போது மறுபடியும் வந்துள்ளது. கண்களின் கீழ்ப்பார்வையில் மின்னல் ஒளியெல்லாம் தெரிகிறது. நீண்ட நேரம் கணினியையோ, அல்லது புத்தகங்களோ படித்தால் சிறிது நேரம் வேறே எதையும் பார்க்காமல் இருக்க வேண்டும். பூத்தொடுத்தாலும் சிறிது நேரம் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் கண் மருத்துவர் பார்வைக்கோளாறு ஏதும் இல்லை, எப்போதும் இருக்கும் + - பவர் பிரச்னை கூட மாறவில்லை என்று சொல்லிவிட்டார். நானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் பதிகம் தான் படித்து வருகிறேன். அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      மேலதிக செய்திகள் ஆறுதலானவை...

      நலமே விளையட்டும்...
      மகிழ்ச்சி.. நனறி..

      நீக்கு
  5. பதிகம் படித்தேன், கீதா சாம்பசிவம் அவர்கள் கண்பிரச்சனைகள் நீங்க நானும் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

    கண்களை மூடி மூடி திறந்து சிறு பயிற்சியை தினம் செய்ய வேண்டும்.

    இறைவனை தரிசனம் செய்து அனைவரும் நலமாக இருக்க வேண்டிக் கொண்டேன்.
    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      நானும் புதிய செய்தி அறிந்து கொண்டேன்..
      வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. அழகான படங்களும், பதிகங்களும். இத்தனை எளிமையான பதிகங்களை இத்தனை நாட்கள் நாம் ஏன் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. நன்றி. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      தேவாரமும் திருவாசகமும் திவ்யப்ரபந்தமும் திருப்புகழும் நம்முடையவை.. நாம் தான் அவற்றைக் கைக்கொள்ள வேண்டும்..

      நம்பிக்கை நலங்கொடுக்கும்...

      நலமே வளர்க...
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதிகங்கள் வாசித்துக் கொண்டோம். தரிசனம் பெற்றோம். கூடவே சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கண் பிரச்சனை விரைவில் சரியாகிட பிரார்த்தித்துக் கொள்கிறோம்

    துளசிதரன்

    படங்கள் சிறப்பு. பதிகமும். அக்காவின் பிரச்சனை நலமாகிட பிரார்த்தனைகள்.

    எல்லோரும் நலமுடன் மகிழ்வுடன் இருந்திட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு வருகைக்கு மகிழ்ச்சி..

      தங்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி...
      நலமே வளர்க.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..