சனி, டிசம்பர் 07, 2024

சரணம் சரணம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 22
சனிக்கிழமை


ஐயப்பனை மனதில் கொண்டு மாலை அணிந்து கொள்கின்ற பக்தனும் ஐயப்பன் என்று அழைக்கப்படுவதே ஐயப்ப விரதத்தின் சிறப்பு..

ஐயப்ப விரதத்தின் நெறிமுறைகள் மிகக் கடுமையானவை.. 

ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொண்டிருக்க,

மற்றவர் விவாதிக்கவேண்டிய அவசியமில்லை

விவாதங்களுக்கு அப்பாற்பட்டது - சபரி மலை..

விவாதங்களை விடுத்து  - எனது குருசாமிகள் எனக்குப் பயிற்றுவித்த - பூஜை முறைகளை மட்டும் ஓரளவுக்கு (நானறிந்தவரை) ப்பதிவில் காண்போம்..

சபரிமலைக்கு விரதம் ஏற்பவர்கள் ஒரு மண்டல காலம் (கேரளக் கணக்கில் நாற்பத்தொரு நாட்கள் நமது கணக்கில் நாற்பத்தெட்டு நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்..

நாற்பத்தொரு நாட்கள் அல்லது 

நாற்பத்தெட்டு நாட்கள் - விரதம் இல்லையெனில் இருமுடி கட்டுவதற்கு மறுக்கப்பட்ட காலமும் இருந்திருக்கின்றது..

கருப்பு, நீலம், பச்சை, காவி  போன்றவற்றில் ஏதாவது ஒன்று என்றாலும் கருப்பு அல்லது நீல நிற உடைகளே ஏற்றவை .. 

கருப்பு வேஷ்டியும்  துண்டும் உடுத்து வெள்ளை அல்லது சந்தன மஞ்சள் நிறங்களில் சட்டை அணியலாம்.. 

கரிய நிறத்தில் மேல் சட்டை அவசியமில்லை..

கார்த்திகை முதல் நாள் மாலை அணிவது எனில் நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை..

கார்த்திகை முதல் நாளை விட்டு விட்டால் நாள் நட்சத்திரம் அவசியம் பார்க்க வேண்டும்..

பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

முதல் முறையாக மாலை அணிந்து கொள்பவர் கன்னிச் சாமி எனப்படுவார்..

சூரிய உதயத்திற்கு முன்பாக  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி -  நூற்றெட்டு சரணம் சொல்லி ஐயப்பனை வணங்க வேண்டும். இதே போல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி நூற்றெட்டு சரணத்துடன் ஐயப்பனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.. 

கன்னிச்சாமி தனியே பூஜை செய்வதற்கு அனுமதி இல்லை..

தனியாக பூஜை அறை இல்லையெனில் பெரியவர்களைக் கலந்து பேசி வீட்டின் தனியிடத்தில் நித்ய வழிபாட்டினைச் செய்தல் வேண்டும்..

பூஜையில் வைப்பதற்கு ஐயப்பனின் சித்திரமே ஏற்றது.. சுதை அல்லது பஞ்சலோக வடிவங்கள் எனில் குருசாமிகளின் அனுமதியும்  மூன்று முறைக்கு மேல் மலைக்குச் சென்று வந்தவர்களது வழிகாட்டுதலும் அவசியம்..

வீட்டில் பூஜைக்கு என - தனியறையோ தனி மாடமோ இருந்தால் மட்டுமே  - பட்ட பந்தனத்துடன் சின்முத்திரை காட்டிய வண்ணம் யோக பீடத்தில் ஐயப்பன் அமர்ந்திருக்கின்ற சித்திரத்தை வைத்துக் கொள்ளலாம்..

அப்படியான  சூழல் இல்லை எனில் மணிகண்டப் பிரபு  புலியின் மீது  வருகின்ற திருக்கோலத்தினைசித்திரமாக வைப்பது சாலச் சிறந்தது....

தனிப்பட்ட மடங்கள் கோயில்கள் எனில் பதினெட்டுப் படிகளையே விரத காலத்தில் வைத்துக் கொள்ளலாம்..

சமீப காலமாக கிராமங்களில் ஐயனார் கோயில்களில் பதினெட்டுப் படிகளுடன் சுதை சிறபங்களை மக்களுக்காக வடிவமைக்கின்றனர்..

வழிபாட்டிற்கென தனி இடத்தைக் கூட ஒதுக்க இயலாத  - 

சூழ்நிலையில் அருகிலுள்ள கோயில் சந்நிதியில்  நூற்றெட்டு சரணங்களைச் சொல்லி வணங்கலாம்..

முதல் முறையாக மாலை அணிந்திருக்கின்ற கன்னிமார்கள் தனியாக வணங்குவதை விடுத்து கூட்டாக வழிபடுவதே சிறப்பு..

முறையாகச் செய்வதென்றால் மூன்று வேளையுமே பூஜைக்கு உகந்தவை.. 

மூன்று வேளையுமே பூஜை செய்வது உத்தமம்..

காலை மாலை வேளையில் சிறு நிவேதனஙகளுடனும் மதியத்தில் சுத்த அன்னத்துடன் சத்தி பூஜையும் செய்வது ம் குருசாமிகள் பலரது வழக்கம்..

சத்தி பூஜை எனப்படுவது - 

மதிய வேளையில் ஐயப்ப மாலை அணிந்தவர் யாராவது ஒருவரை வீட்டிற்கு அழைத்து அவருக்கு அன்னமிடுதல்..

இத்தகு நிலையில் நித்ய வழிபாட்டில் நமக்கேற்ற எளிய முறைகள் பற்றி சிந்திப்போம்..

வழிபாட்டில் எப்போதும் நறுமணம் மிக்க மலர்களைச் சூட்ட வேண்டும்..

நமது பொருளாதார த்திற்கு ஏற்ப - இதமாகக் காய்ச்சப்பட்ட பால், அவல் சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது பழங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.. 

இத்துடன் தாம்பூலம் அதாவது வெற்றிலை பாக்கு அல்லது சீவல் வைக்க வேண்டும்... 

எக்காரணம் கொண்டும் பாக்குப் பொட்டலங்களை வைக்கக் கூடாது..

விளக்குகளுக்கு சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. 

தீப எண்ணெய், விளக்கு ஏற்றும் எண்ணெய் என்பது மாதிரியான எவையும் கூடவே கூடாது..

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியும் ஏனைய பரிவார மூர்த்திகளும்  நமது பூஜையில் எழுந்தருளி இருப்பதாக மனதார பாவித்து  ஸ்ரீ கணபதியையும் முருகப் பெருமானையும் வணங்கி ஐயப்பனை நூற்றெட்டு சரணங்களால் துதிக்க வேண்டும்.. 

இயன்றால் நூற்றெட்டு முறை மலர்களைத் தூவியும் வணங்கலாம்..

தூப தீப கற்பூர ஆரத்தியுடன் மங்கலம் பாடி நிறைவு செய்ய வேண்டும்..

கற்பூர ஆரத்தியுடன் மங்கலம் பாடி நிறைவு செய்தல் என்பது இடத்திற்கு இடம் வேறுபடும்...

ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கன்னி ஐயப்பமார்களை அழைத்து அவர்களை வழிபடுதல், சத்தி பூஜை, படி பூஜை, விளக்கு பூஜை, ஆழி பூஜை என -  பல படிநிலைகள் இருக்கின்றன....

இங்கே அவற்றை விவரித்தல் இயலாது.. குருசாமிகளை அணுகி தெரிந்து கொள்ளவும்...

மாலையணிந்து மூன்று வாரங்கள் கழிந்த நிலையில்  ஏனைய ஐயப்பன்மார்கள் சிலருக்காவது மதியத்திலோ மாலைப் பொழுதிலோ உணவு அளித்தல் வேண்டும்...

ஐயப்ப பூஜை, சத்தி பூஜை, அன்னதானம் இவற்றுக்கு என்று எவரிடத்தும் கடன் வாங்கக் கூடாது.. 

கையில் இருக்கின்ற பணத்தைக் கொண்டு எளிமையான முறையில் செய்வதே ஐயப்பனுக்கு மகிழ்ச்சி..

இப்படியாக வழிபாடுகளை  விரத நாட்களில் மேற்கொண்டு ஐயன் அருளால் இருமுடி கட்டுதற்கு ஆயத்தமாக வேண்டும்..

எல்லாவற்றிற்கும் அருகிலுள்ள குருசாமிகளின் வழிகாட்டுதல் மிகவும் அவசியம்..

1989 ல் நான் கற்றுக் கொண்டவைகளில் ஒரு சிலவற்றைத் -

தெரிந்த வரையில் இங்கே பணிவுடன் சொல்லி இருக்கின்றேன்..

 ஃஃ

ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா

ஓம் சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. கன்னி சாமிகள் சித்திரம்தான் வைக்க வேண்டும் என்பதும், அதை வைப்பதற்கும் உள்ள நெறிமுறைகளை எல்லாம் இப்போதுத்தான் அறிகிறேன்.

    பிற சாமிகளை அழைத்து அன்னமிட வேண்டும் என்பது சிறப்பு. எல்லோரும் பின்பற்றுகிறார்களா, முடியுமா என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// எல்லோரும் பின்பற்றுகிறார்களா, முடியுமா என்று யோசிக்கிறேன்.//.

      நானும் இவ்விதம் யோசிப்பதுண்டு...

      நாம் சரியாக இருந்து கொள்வோம்

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்
      நலம் வாழ்க

      நீக்கு
  2. இந்தக் காலத்தில் இவ்வளவு கடுமையாக விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்களா என்று தேடவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் ஐயப்பன் அருள்..

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. பதினெட்டு வருடங்கள் தொடர்ந்து மலைக்கு சென்று வ்நதவர்கள் குருசாமி ஆக தகுதி அடைகிறார்கள், இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைத் தாங்களே அப்படி அறிவித்துக் கொள்ள முடியாது..

      ஐயப்பனின் அநுக்கிரகம் வேண்டும்..

      ஸ்ரீ கோயில் தந்திரி அவர்களிடம் மூல மந்திர உபதேசம் பெற்றாக வேண்டூம்..

      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. ஐயப்பா சரணம்.

    ஓம் சுவாமியே சரணம்.

    அனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி
      சரணம் ஐயப்பா

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சபரி மலை சுவாமி ஐய்யப்பனை வழிபட வேண்டிய முறைகளை விவரித்து கூறியமைக்கு மிக்க நன்றி விளக்கங்களை படித்து தெரிந்து கொண்டேன். ஸ்ரீ ஐய்யப்பனின் அருளால்தான் நாங்கள் (என் அண்ணாவும், நானும்.) பிறந்தோமென எங்கள் அப்பா அடிக்கடி கூறியுள்ளார். எங்கள் பிறந்த வீட்டு குலதெய்வமும். ஐய்யப்பன்தான். சபரிமலை சாஸ்தா அனைவரையும் நலமுடன் வைத்திருக்க வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அவன் செயல்

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி
      சரணம் ஐயப்பா

      நீக்கு
  6. ஐயப்ப விரத சிறப்பை விரிவாக அருமையாக சொன்னீர்கள்.

    சாரின் அண்ணா நிறைய முறை போய் இருக்கிறார்கள்.
    சாரையும், மகனையும் போக சொல்ல வேண்டும் என்று வேண்டினேன். அவர்கள் சேர்ந்து செல்ல நேரம் கைகூடி வரவில்லை.
    ஐயப்பா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..