வெள்ளி, டிசம்பர் 06, 2024

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 21
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-

தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன தனனதன ... தனதான


அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென அமுதமொழி பதறியெழ ... அணியாரம்

அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக அமுதநிலை யதுபரவ ... அதிமோகம்

உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு முறுகபட மதனில்மதி ... யழியாதே

உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு னுபயநறு மலரடியை ... அருள்வாயே..

வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு மருதினொடு பொருதருளு ... மபிராமன்

வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன் மருகஅமர் முடுகிவரு ... நிருதேசர்

தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற தகனமெழ முடுகவிடு ... வடிவேலா

தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ சகலகலை முழுதும்வல ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


கருங்கூந்தல் கலையவும்  தடங்கண்கள் குவியவும் கைவளையல்கள் கலகல என்று ஒலிக்கவும் 

அமுதம் போல் மொழிகள் பெருகவும் 
அணிந்துள்ள முத்து மாலைகள் அழகுடன்
அசையவும், 
பூரித்த அங்கங்கள்  அசைந்து நெகிழவும்

அதி மோக நிலை பெருகி மனம் உருகும்படியாகவும் செய்கின்ற பெண்களின்
கொடும் சூழ்ச்சிகளில் எனது புத்தி அழிந்து போகாமல்,

மயில் மீதேறி உலகம் முழுவதையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த முருகா உனது நறுமலர்ப் பாதங்களை அருள்வாயாக..

நெளிகின்ற அலை கடல் வற்றிப் போகும்படி  கணையைச் செலுத்தியவனும்  
 மருத மரங்கள் இரண்டைத் தகர்த்தவனும் அடியார்களுக்கு
வரங்களைத் தருபவனுமாகி 

வரிகளை உடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையில் துயின்று 
விஜயலக்ஷ்மியின் மணாளனாகிய  
ஹரி பரந்தாமனின் மருகனே,

போர்க் களத்தில்  முடுகி நின்று சண்டையிட்ட அசுர
சேனைகள் சிதறி ஓடவும் கிரெளஞ்ச மலை தூள்பட,வும் அசுரர்பதியாகிய
சூரனுடைய தலை சிதறி விழவும், தீக்கனல் மூண்டு எழவும் கூர்வேலினைச் செலுத்திய வேலவனே, 
 
மணி மாலைகள் இலங்கும் குறவர் குலத்தின் அழகு மகளான வள்ளி நாயகியின் கணவனே,
சகல கலைகளிலும்
வல்லவனாகிய எம்பெருமாளே..
ஃஃ

முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வழக்கமாக வெளியாகும் நேரத்தைத் தான் பதிவு காட்டுகின்றது..

      அன்பின் வருகைக்கு
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. அனைவருக்கும் முருகனருள் பரிபூரணமாக கிடைத்திட வேண்டுமென அந்த கதிர்வேலவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி
      நலம் வாழ்க

      நீக்கு
  3. ஓம் வடிவேலா சரணம்.

    பாடல்பாடி முருகனை வணங்கிக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள்
      அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி
      முருகா முருகா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..