திங்கள், ஜூன் 24, 2024

கூட்டாஞ்சோறு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 10 
திங்கட்கிழமை

கூட்டாஞ்சோறு..

நமது பாரம்பரிய கலாச்சாரங்களுள் ஒன்று...  இன்றைய சூழலில் நடைமுறையில் இருப்பது சந்தேகமே!..


தேவையான பொருள்கள் :
பொன்னி அரிசி 500 gr
துவரம் பருப்பு 150 gr
உருளைக்கிழங்கு ஒன்று
காரட் ஒன்று
பீன்ஸ் 15
மஞ்சள் பரங்கி சிறு துண்டு
காலிஃப்ளவர் சிறியதாக
முருங்கைக்காய் 2
பச்சைப் பட்டாணி கையளவு
சின்ன வெங்காயம் 15
பச்சை மிளகாய்  3
பூண்டு 5 பல்

மஞ்சள் பொடி 1⁄2 Tbsp
சாம்பார் பொடி ஒரு Tbsp
கல் உப்பு - தேவைக்கு

அரைப்பதற்கு :
தேங்காய் ஒரு மூடி
சீரகம் ஒரு Tbsp 
மிளகு ஒரு Tbsp 

தாளிப்பதற்கு :
கடுகு ஒரு tsp
சீரகம் ஒரு tsp
உளுத்தம் பருப்பு - ஒரு tsp
பெருங்காயம் 1⁄2 tsp
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
மல்லித் தழை - தேவைக்கு

நெய் - தேவைக்கு


செய்முறை :
காய்கறிகள் அனைத்தையும் 
கழுவி வழக்கப்படி நறுக்கிக் கொள்ளவும்.. பச்சை மிளகாயைத் தூளாக அடிக்காமல் நெடுக்காக கீறிக் கொள்ளவும்..

வெங்காயத்தை உரித்து வைக்கவும்.. நறுக்க வேண்டாம்.

தேங்காயைத் துருவி அதனுடன் குறித்துள்ள
 பொருட்களைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில்
துவரம் பருப்பினை அலசி விட்டு அளவான தண்ணீருடன் மஞ்சள் பொடி  இட்டு அடுப்பில் ஏற்ற வேண்டும்..

தண்ணீரில் ஆவி படரும் போது மேலாக சிறிது எண்ணெய் விட்டு தேவையான  உப்பு போட்டுக் கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில்
பருப்பை அலசி விட்டு , அதனுடன் மஞ்சள் பொடி சாம்பார் பொடி சேர்க்கவும்..

அரை வேக்காட்டில்
 பருப்பை சற்று மசித்து அதனுடன்  நறுக்கிய காய்கறிகளையும் தேங்காய் விழுதையும் சேர்க்கவும். 

வேறொரு பாத்திரத்தில் ஒன்றுக்கு இரண்டு என தண்ணீர் வைத்து அரிசியை வேக வைக்கவும்.. 

அரிசி முதல் கொதி வந்ததும் சிறிது உப்பு இட்டு - கிளறி வேகவிடவும்..

அரை வேக்காட்டில் அடுப்பை நிறுத்தி வெந்திருக்கும் பருப்பு காய்களை இதனுடன் கூட்டி  -
கண்களால் பதம் பக்குவம் பார்த்து - தளதளத்து வரும் போது - 

வாணலியில் சிறிது கடலெண்ணெய் விட்டு , உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்துச் சேர்த்து -

நெய் விட்டுக் கிளறி - மல்லித் தழை தூவி இறக்கி வைக்கவும்...

அந்த நாட்களில் அறுவடை முடிந்ததும் 
கன்னியர் சுமங்கலிப் பெண்கள் கூடி நின்று மரபு வழக்கப்படி பழ வகைகளுடன் அம்மனுக்கு 
கூட்டாஞ்சோறு படையல் இடுவர்..

இங்கே சொல்லப்பட்ட காய்கள் தான் என்றில்லை..
சூழ்நிலைக்கு ஏற்றபடி தான்...


உதிரியாக இல்லாமலும் பொங்கல் மாதிரி குழைவாக  இல்லாமலும் தளர்வாக இருத்தல் வேண்டும் - கூட்டாஞ்சோறு..

கூட்டாஞ்சோறு ஆக்கும்போது  ஒவ்வொன்றையும் சேர்ப்பதில் முன் பின் இருந்தாலும் அம்மன் வழிபாட்டில் வேறுபாடு இருக்காது...

 கூட்டாஞ்சோறு - இதன் நோக்கம் உயர்வு தாழ்வு இன்றி ஊர் நன்றாக இருக்க வேண்டும் உறவு நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்..

அவ்வண்ணமே 
ஊரும் உறவும் நன்றாக இருக்கட்டும்..

வாழ்க வளம்
வளர்க நலம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. நாங்கள் கூட்டாம் சோறு செய்யும் போது காளிபிளவர் சேர்க்க மாட்டோம், மாங்காய், முருங்கை, உருளை, பீன்ஸ், வாழைக்காய், கொத்தவரை, அவரை, சேனைகிழங்கு போடுவோம்.

    நீங்கள் சொல்வது போல சூழ்நிலைக்கு ஏற்றார் போல கிடைப்பதை வைத்து செய்யலாம்.

    மிளகாய் வற்றல், பூண்டு, சீரகம் அரைத்து சேர்ப்போம். சாம்பார் பொடி போட மாட்டோம்.
    வெங்காய வடகம் வறுத்து பொடி செய்து போடுவோம்.

    முன்பு விருந்தினர் வந்தால் கூட்டாம் சோறு, உளுந்தம் சோறு , செய்வது உண்டு. காய்கறிகள் அனைத்தும் இருந்தால் மாங்காய் கிடைக்கும் போது செய்து விடுவோம்.
    வற்றல் , வடகம் அப்பளம் வறுத்து வைத்து விடுவோம் .
    உறவுகள் நன்றாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பதிவின் தொடக்கத்தில் ஏதோ குறைகிறது.  வார்த்தைகள் குறைகின்றன.

    பதிலளிநீக்கு
  3. கூட்டாஞ்சோறு பற்றி படித்திருக்கிறேனே தவிர சுவைத்ததில்லை,. செய்முறை ரொம்ப இருக்கிறது என்பது போல இருந்தாலும் செய்யும்போது எளிதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. கூட்டாஞ்சோறு பற்றிய குறிப்பு நன்று. முயற்சித்துப் பார்க்கத் தோன்றுகிறது. பதிவின் ஆரம்ப வார்த்தை - ”ரகளுள் ஒன்று” - ஏதோ குறைகிறது.

    பதிலளிநீக்கு
  5. கூட்டாஞ்சோறு தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  6. "கூட்டாஞ்சோறு - இதன் நோக்கம் உயர்வு தாழ்வு இன்றி ஊர் நன்றாக இருக்க வேண்டும் உறவு நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்" நல்ல எண்ணம். வாழ்க.

    நாங்களும் செய்வோம் . நீங்கள் சொன்னதுபோல "கிடைக்கும் காய்கள்.' மரவள்ளிக் கிழங்கு கத்தரி காராமணிக்காய், சேர்ப்போம்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..