ஞாயிறு, மார்ச் 15, 2026

மகமாயி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மாசி
 ஞாயிற்றுக்கிழமை



தஞ்சை மாரியம்மன்
பேரில் 
அடியேன் தொடுத்த மாலை


 வழி கேட்டு நிற்பவர்க்கு
விழி காட்டி அருள்பவளே
பழி அஞ்சி வாழ்பவர்க்கு
பால் நிலவாய் திகழ்பவளே..

நிறை கொண்ட மனம் கண்டு
வளர் நலத்தைத் தரும் தாயே
சிறை கொண்ட துயர் மாற்றி
மறு வாழ்வும் தருவாயே...

ஆனபடி அத்தனையும் 
அம்மா நீ அறிவாயே 
ஆயிரங்கண் உடையவளே
அகலத்தை  ஆள்பவளே..

நிறை எது குறை எதுவோ 
நிகழ்ந்ததுவும் விதி வழியே
போனதெலாம் போகட்டும்
நலங்காட்டு விழி வழியே..

பொன்னாட பூவாட 
அனலாடப் புனலாட
வேம்பாட கனியாட 
காற்றாடி வருபவளே..

செந்தூர நெற்றியிலே 
பூங்குழலும் சேர்ந்தாட
சிந்து மணி தானாட
சேர்ந்தாடி வருபவளே..

சிங்கம் உந்தன் வாகனமாம்
அன்னத்துடன் பூ ரதமாம்
தங்கப் பரி மேல் அமரும்
வித்தகியே வாருமம்மா..

வேம்பு எனும் விருட்சத்திலே
விருப்பமுடன் வாழ்பவளே
வழி கேட்டு வருபவர்க்கு
வசந்தம் என வாருமம்மா..

தங்கம் என்னும் குணத்தழகு
தாமரையின் நிறத்தழகு
குங்குமத்துப் பொட்டழகு
மஞ்சள் மதி முகத்தழகு..

தங்க நிறத் தாமரையே
தாள்மலர்கள் சரணமம்மா
தான் உதித்த வடிவழகே
சரணம் சரணம் சரணமம்மா..
*

ஓம் சக்தி ஓம்
***

10 கருத்துகள்:

  1. செல்வா கவி பாடி துதிக்கிறேன்.
    நல் வளங்களும்
    சொல் வளமும்
    தந்தருள்வாய் தாயே


    ​செல்வா தரும் கவி அழகு
    கவி போற்றும் நீ அழகு
    உன் அருள் அழகு
    அன்பு அழகு
    கருணை அழகு
    __/\__

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னை அவள் அல்லால் ஏது கதி?..

      மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. பாடலை மிகவும் ரசித்தேன். அவளுடைய அருள் உங்களுக்குக் கிட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அன்னைக்கு ஒரு துதி - சிறப்பு.

    இன்றைக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு இரண்டாம் வார பூச்சொரிதல் நிகழ்வு. இன்னும் மூன்று ஞாயிறுகளில் பூச்சொரிதல் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. சமயபுரம் மாரியம்மன் பாமலை அருமை.
    அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓம் சக்தி
      ஓம் சக்தி ஓம்

      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  5. தஞ்சை மாரியம்மன் அன்னைக்கு நீங்கள் படைத்த பாடல் அருமை. அன்னை உங்கள் நலனைக் காப்பாள்.

    பாடல் பாடி வணங்கினோம்.

    அம்மாதாயே சரணம் அம்மா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..