திங்கள், அக்டோபர் 28, 2024

பஜ்ஜி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 ஐப்பசி 11
திங்கட்கிழமை


வாழைக்காய் பஜ்ஜி 

அந்த காலத்தில்
இதனை தஞ்சாவூர் கைப்பக்குவம் என்பார்கள்..

தேவையான பொருட்கள் :

முற்றிய மொந்தன்
வாழைக்காய் ஒன்று
கடலை மாவு 200 கி
அரிசி மாவு 100 கி
மிளகுத் தூள் 1 tsp
மஞ்சள் தூள் சிறிதளவு
பெருங்காயத் தூள்  சிட்டிகை
கல் உப்பு தேவைக்கு
கடலெண்ணெய் தேவையான அளவு

செய்முறை :
மொந்தன்
வாழைக் காய்கள் தனித்துவமானவை..
முற்றிய காய்களை சுட்டு விரலால் தட்டினால் நங் நங் என்று சத்தம் வரும்..

முற்றிய மொந்தன்
வாழைக்காய்களின் தோலை நீக்கி விட்டு குறுக்காகவோ நெடுக்காகவோ ஓரளவுக்கு மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

கடலைமாவு, அரிசி மாவு இரண்டையும் தனித்தனியே  இளஞ்சூட்டில் சற்றே புரட்டி எடுத்துக் கொள்ளவும்..

மாவு ஆறியதும் அத்துடன் நுணுக்கி வைத்துள்ள கல் உப்பு,  மிளகாய்த் தூள் பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசறிக்   கொள்ளவும்.

இந்த மாவில் ஒரு டீ ஸ்பூன் கடலை எண்ணெயுடன்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து பதமாக கரைத்துக் கொள்ள வேண்டும்.. 

வாணலியில் எண்ணெயை மிதமான சூட்டில் காய வைக்கவும்..

கரைத்த மாவில் வாழைக்காய் வில்லைகளைத் தோய்த்து எடுத்து எண்ணெயில் இட்டு பக்குவமாகப் பொரித்தெடுக்கவும்.

வாழைக்காய் பஜ்ஜி தயார்..

 நன்றி இணையம்

இப்படியான சூழ்நிலையில் இளங்குளிர் காற்று 
வீசினால்...

ஆகா!..

இளங்காற்று 
வீசுவதோடு இருக்க வேண்டும்..
பெருமழையாகி வீட்டுக்குள் சாலைத் தண்ணீர் வந்து விட்டால் -

என்னத்த சொல்றது!?..

வாழைக்காய் பஜ்ஜி.. இதற்கு தேங்காய்ச் சட்னி நல்ல துணை..

சோடா உப்பு, நிறமி போன்றவை சேர்க்கப்படவில்லை. இவற்றைச் சேர்க்கவும் வேண்டாம்..

தரமான
உணவுகளை
ஆதரித்தல் நல்லது..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
***

14 கருத்துகள்:

  1. ஆஹா... 

    வாழைக்காய் பஜ்ஜி... 

    சிலருக்குதான் இந்த வாழைக்காயை மெல்லிசாய் நீளநீளமாய் அழகாய் சீவும் கலை கைவரும்.  அதை அந்த பஜ்ஜி மாவில் முக்கி -  ஊ... ஹூம்...   பஜ்ஜி மாவில் வருடி  எண்ணெயில் போட்டு எடுக்கும் அழகும், அதில் கருப்பு ஒட்டாமல் தூய பொன்நிறத்தினதாய் பஜ்ஜியை எண்ணெய் வடிப்பானில் இட்டால்..
     
    பறந்து விடாதோ...

    பதிலளிநீக்கு
  2. அதுசரி..  வெறும் பஜ்ஜியை எப்படி சாப்பிட?  சட்னி வேண்டுமே...  சிலர் சாம்பாரும் வேண்டும் என்பார்கள்.  எனக்கு அந்த அழகான பஜ்ஜியை நனைத்து தண்ணீரில் நனைந்த காகிதம் போல ஆக்குவதில் இஷ்டமில்லை.  சட்னி போதும்.

    பதிலளிநீக்கு
  3. அரிசி மாவையும், கடலை மாவையும் வதக்கி என்று சொல்வதை விட வறுத்து என்று சொல்லலாம். அல்லது வாணலியில் இரண்டு புரட்டு புரட்டி..... !

    பதிலளிநீக்கு
  4. மொறுமொறுவென்று உப்பிக்கொண்டிருக்கும் அந்த அழகான பஜ்ஜியை எடுத்து எண்ணெயைப் பிழிகிறேன்  என்று சிலர் தினத்தந்தி பேப்பரில் வைத்து அதை அமுக்குவார்கள்.  மூச்சுத்தி திணறிப்போகும் அந்த பஜ்ஜிக்கு. 

    பேப்பரை விலக்கிப் பார்த்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ்க்  கதாநாயகி போல பொன்னிறமிழந்து, உருக்குலைந்து இருக்கும் அந்த பஜ்ஜி. 

    ஆரோக்கியமா இல்லையோ...  பஜ்ஜி சாப்பிடுகிறேன் என்று வந்தாயிற்று..  அதை ஒழுங்காய்ச் சாப்பிடலாமே...

    பதிலளிநீக்கு

  5. ///மூச்சுத் திணறிய பஜ்ஜி...///

    அடடா...

    தங்கள் அன்பின் வருகையும் கருத்துகளும்
    மகிழ்ச்சி..

    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  6. குறிப்புகள் நன்று. இப்பொதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்கள் மீது அத்தனை ஈடுபாடு இருப்பதில்லை. முன்பும் இருந்ததில்லை என்றாலும் இப்போது இன்னும் குறைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரமான எண்ணெயில் நாமே நம் வீட்டில் தயாரிப்பதில் பிரச்னை ஏதும் இல்லை..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துகளும்
      மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்

      நீக்கு
  7. பஜ்ஜி +சட்னி சுவைக்கிறது.

    எங்கள் வீட்டில் மதிய சாதத்துடன் சட்னி இல்லாமல் சும்மாவே சாப்பிடுவோம். இப்பொழுது எண்ணை உணவுகள் குறைத்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எண்ணெய் உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துகளும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி..

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பஜ்ஜி செய்முறை மற்றும் படங்கள் மனதை கவருகிறது. வாழைக்காய் பஜ்ஜிக்கு வேறு நிகர் கிடையாது என்பது என் அபிப்பிராயம். வருடந்தோறும் தீபாவளி காலை டிபனுடன் கண்டிப்பாக எப்போதும் பஜ்ஜி உண்டு. இந்த தடவையும் இறைவன் அருளால் செய்ய வேண்டுமென நினைத்துக் கொண்டுள்ளேன்.

    முன்பு வாரந்தோறும் ஞாயறில், ஏதோ ஒரு வகை மாலை டிபனுக்கு செய்கையில் இந்த பஜ்ஜியும் வந்து விடும். இப்போதுதான் எண்ணெய் வகை செய்முறைகளை குறைத்துள்ளோம். உங்கள் பதிவில் பஜ்ஜி படத்தைப் பார்த்ததும் சாப்பிட்ட திருப்தி உண்டாகி விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. /// பஜ்ஜி படத்தைப் பார்த்ததும் சாப்பிட்ட திருப்தி உண்டாகி விட்டது///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
    மகிழ்ச்சி..

    நன்றி
    நலம் வாழ்க

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..