ஞாயிறு, ஜூலை 21, 2024

தேங்காய்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 5  
ஞாயிற்றுக்கிழமை


இயற்கை நமக்கு வழங்கியுள்ள கொடைகளில் ஒன்று தேங்காய்... 

வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் மகத்தான பங்கு தேங்காய்க்கு..

மகத்துவம் மிக்கது தேங்காய்.. 

அதனால் தான் ஒற்றைத் தேங்காயை 
விநாயகப் பெருமானிடம் - சூறை - என்று கொடுத்து விட்டு ஓராயிரம் நன்மைகளைப் பெற்றுக் கொள்கின்றோம்..

விடியற்காலையில் இதைத் தட்டச்சு செய்கின்றபோது தொலைக்காட்சியில்  விநாயகரைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கின்றனர்..

அன்றைக்கு தெங்கு என்ற தலைப்பில் நமது தளத்தில் ஒரு பதிவு.. அங்கே எபியில் சிறுகதை ஒன்று..  

சகோதரி கீதா அவர்கள் இரண்டையும் இணைத்து ' தேங்காய் மிட்டாய் ஒன்றும் இல்லையா!.. ' - என்று  கேட்டிருந்தார்... 

அவரது அன்பிற்காக இந்தப் பதிவு..

மகிழ்ச்சி.. நன்றி..

1) தேங்காய்ப் பால் 


தேங்காய்ப் பால் பிழிவதற்கு
அரைத் தேங்காயாகப் பார்த்து எடுத்துக் கொள்ளவும்..

அதென்ன அரைத் தேங்காய்?..

முற்றிய தேங்காய் என்பது எண்ணெய் திரள்கின்ற நிலை.. ஆகவே தான் அரைத் தேங்காய்.. 

கடையில் கேட்டால் இந்த மாதிரி எடுத்துத் தருவார்களா?...

உங்கள் அதிர்ஷ்டம்!..

தேங்காயை உடைத்துத் துருவி வெதுவெதுப்பான நீர் விட்டு இரண்டு முறையாக பிழிந்து எடுத்துக் கொள்வதே  முதல் நிலை.. தரமான பால்..


வாரம் இரு முறை தேங்காய்ப் பாலுடன் கருப்பட்டி சேர்த்து அருந்துவது மிக மிக நல்லது..

கூடுதல் இனிப்பு சேர்க்காமல் அப்படியே அருந்துவதும் சிறப்பு..

வைட்டமின் C, வைட்டமின் E, B1, B3, B5, B6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ்... இவை எல்லாம் தேங்காய்ப் பாலில் நிறைந்துள்ளன..

ஆனாலும் நவீன மருத்துவம் தேங்காயிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கின்றது..
ஃஃஃ

2) தேங்காய் மிட்டாய் 


தேவையானவை :
பழுப்பு சர்க்கரை 150 gr
தேங்காய் ஒரு மூடி 
முந்திரி 10
ஏலக்காய் 3
நெய் தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துருவலை சற்றே வதக்கிக் கொள்ள வெண்டும்.

மறுபடியும்  வாணலியில் நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ள வெண்டும்.

சர்க்கரையை அடுப்பில் வைத்து பாகாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். 

தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும்.

கலவை கெட்டி ஆனவுடன் இறக்கி, நெய் தடவிய தட்டில்  ஊற்றி ஆறிய பின்னர் தேவைக்கேற்ப துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..  


எவ்வித ரசாயனமும் இல்லாத
தேங்காய் மிட்டாய்..
ஃஃஃ

3) தேங்காய் கடலை சட்னி

தேவையானவை :
தேங்காய் ஒரு மூடி
வறுத்த நிலக்கடலை 150 gr
சின்ன வெங்காயம் 10
மிளகு ஒரு tsp

தாளிப்பதற்கு :
கடுகு சிறிதளவு
சீரகம் சிறிதளவு
உளுத்தம் பருப்பு சிறிதளவு
கறிவேப்பிலை ஒரு இணுக :

தேங்காய் ஒரு மூடியைத் துருவிக் கொள்ளவும்

சின்ன வெங்காயத்தை உரித்துக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..

மிளகை வறுத்துப் போட்டு தேங்காய்த் துருவலுடன் கடலையைச் சேர்த்து அதிக தண்ணீர் விடாமல் தளர்வாக அரைத்துக் கொள்ளவும்..

இருப்புச் சட்டியில் கடலெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு சீரகம் உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து உடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி தேங்காய் விழுதைப் போட்டு ஒரு சுழற்று சுழற்றி இறக்கவும்..


ஆரோக்கியமான
தேங்காய் கடலைச் சட்னி..
ஃஃஃ

4) தேங்காய் சாதம்

பாசுமதி அல்லது சீரகச் சம்பா அரிசியில் நாலு பேருக்கான அளவில் பக்குவமாக பொலபொல என்று சோறு வடித்துக் கொள்ள வேண்டும்..

இந்தப் பக்கம் ஒரு மூடி தேங்காயில் பாதியளவு துருவி வைத்துக் கொள்ளவும்...

இருப்புச் சட்டியில் 
மிதமான சூட்டில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை முந்திரிப் பருப்பு தாளித்து -


அத்துடன், எடுத்து வைத்திருக்கின்ற சோற்றையும் தேங்காய்த் துருவலையும் சேர்த்து பக்குவமாகக் கிளறிக் கொண்டால் அருமையான தேங்காய் சாதம்...
ஃஃஃ

குறும்பை, இளநீர், தேங்காய், நெற்று, கொப்பரை - என, பல நிலைகளைக் கொண்டது தேங்காய்.. 

இளநீர் - தனது வளர்நிலையில் திரட்சி அடையாமல் இருந்து விட்டால் அதுதான் ஒல்லி எனப்படும்..

வளர்ந்த - வாழ்ந்த தடங்களுடன் நம் முன்னே சாட்சியாகத் திகழ்வது தென்னை... 

தென்னையில் - முதல் பாளை முகங்காட்டுகின்ற போதில் இளங்கன்றுக்குப் பட்டு வஸ்த்ரம் சாற்றி மஞ்சள் சந்தனத்துடன் நிவேதனம் சமர்ப்பித்து வழிபடுவர் - பட்டுக்கோட்டை வட்டாரத்தில்!... நான் தரிசித்திருக்கின்றேன்.

பிள்ளை எனப் பெயர் பெற்ற 
தென்னை நமக்குத் தருகின்ற நன்மைகள் பலப்பல!..
பாடங்களும் பலப்பல!..


தென்னம் பாளை பூஜைகளில் வைத்து வழிபடுவதற்குரியது..

பாளை போல் சிரிப்பிருக்கு
பக்குவமாய் குணம் இருக்கு...

ஆளை மயக்கும் 
பாளைச் சிரிப்பில்.. - என்றெல்லாம் கவிஞர்களால்  புகழப்பட்ட சிறப்பினை உடையது..

தென்னையைப் போற்றுவோம்!..
தென்னையைப் போற்றுவோம்!..

காளை யாகி வரையெடுத்தான் தன்
கைகள் இற்றவன் மொய்தலை எல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தியை முதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத்தை மறந்து என்நினைக்கேனே.. 7/57/9
-: சுந்தரர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. சூப்பர். செய்முறைகள் படங்கள் அழகு. ஜீனி போட்ட தேங்காய் பர்பிதான் இடிக்குது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஏன் இடிக்கின்றது?...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி நெல்லை..

      நீக்கு
  2. அருமையான விவரங்கள்.   மூன்று ரெசிப்பியும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  3. தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி என்னும் பாடலை டெடிகேட் செய்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி...

      வேறொன்றும் காத்திருக்கின்றது..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி

      நீக்கு
  5. விநாயகருக்கு அறுகும், தேங்காயும் வணக்கத்துக்குரியது.

    தென்னை பல நல்ல தகவல்களுடன். ருசியான உணவுகளும். தந்துள்ளீர்கள்.
    எங்கள் சமையலில் தேங்காய் இல்லாமல் விடிவே இல்லை.

    தேங்காய்சாதம், தேங்காய் மிட்டாய் செய்வோம்.

    தென்னையைப் போற்றுவோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் தேங்காய் இல்லாத சமையல் இல்லை..

      தேங்காயில் தான் ஆரோக்கியம் உள்ளது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி மாதேவி..

      நீக்கு
  6. தென்னைபிள்ளையின் நன்மைகள், பயன்கள், மற்றும் சமையல் குறிப்புகள் எல்லாம் அருமை. படங்களும் நல்ல தேர்வு.
    சுந்தரர் தேவாரம் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு
  7. விவரங்களும் குறிப்புகளும் சிறப்பு. முன்பெல்லாம் அடிக்கடி தேங்காய் பர்ஃபி செய்வார்கள் அம்மா. தில்லி வந்த பிறகு தேங்காய் பர்ஃபி செய்வதெல்லாம் இல்லை. அலுவலகத்தில் கூட செய்து விற்பனை செய்வார்கள் - ஆனால் அத்தனை சுவை இருக்காது.

    பதிலளிநீக்கு
  8. நம் வீட்டில் நாமே செய்வது தான் சிறப்பு..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி வெங்கட்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..