நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 26
வியாழக்கிழமை
சிவபெருமானின் திருக்கோலங்கள்
அறுபத்து நான்கு..
அவற்றுள் தக்ஷிணாமூர்த்தி எனும் திருக்கோலமும் ஒன்று.. தென்முகக் கடவுள் என்பர்..
தக்ஷிணாமூர்த்தி தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் அற்றவர்..
கல்லால் எனப்பட்ட ஆலமரத்தின் கீழ் அமர்ந்து நான்மறைகளுடன் ஆறு அங்கங்களையும் சனகர் சனந்தனர் சனாதனர் சனற்குமாரர் என்ற நான்கு பிரம்ம ரிஷிகளுக்கும் உணர்த்துபவர் - தக்ஷிணாமூர்த்தி..
எனவே ஞான குரு எனும் போற்றுதலுக்கு உரியவர்..
இவரது யோகநிலையைக் கலைப்பதற்கும் குலைப்பதற்கும் தேவர்கள் முயன்றனர்..
காரணம்?..
தட்சப் பிரஜாபதி நிகழ்த்திய யாகத்தில் தேவர்கள் தருக்குடன் கலந்து கொண்டதும் அதனால் கிடைத்த சாபமும் தான்..
ஈசன் எம்பெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் அவரை அவமதிப்பு செய்கின்றான் தட்சன் என்பது தெரிந்ததும் யாகத்தைப் புறக்கணித்து அங்கிருந்து வெளியேறவில்லை..
அதனால் ஸ்ரீ வீரபத்திரர் விடுத்த சாபத்தின்படி மாயையின் புத்திரர்களான சூரபத்மாதியர்களிடம் அடிமையாகிக் கிடந்த
நிலையில் -
இன்னல் தீர்வதற்கு -
சிவபெருமானின் அம்சத்துடன் குமாரன் தோன்றியாக வேண்டும்..
எல்லாம் வல்ல பரம்பொருள் சக்தியுடன் கூடி திருக்குமாரனைத் தந்தருள வேண்டும்..
இதற்காகவே மன்மதனைத் தூண்டி - அனுப்பி வைத்தனர்..
அதன் முடிவு அங்கனாகத் திகழ்ந்த மன்மதன் அனங்கனாகி விட்டான்..
யோக நிலையில் இருந்த பெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ஜோதிப்பிழம்பில் எரிந்து சாம்பலாகி விட்டான்..
அதன் பின் ஈசன் யோலநிலை கலைந்து எழுந்ததும் -
பர்வதபுத்ரியுடன் மணக்கோலம் கொண்டதும் நெடுங்கதை..
சிவாலயங்கள் சிலவற்றில் வேறு கோலங்களிலும் திருமேனி திகழ்கின்றது..
சுருட்டப் பள்ளி திருக்கோலம் |
ஈசன் ஆலின் கீழ் தவம் இருப்பதையும் மன்மதன் சாம்பலாகியதையும் திருமுறைகள் போற்றிப் பாடுகின்றன..
இந்த உண்மைகளை மனதில் இருத்தி - சிவ தக்ஷிணாமூர்த்தி திருக்கோலத்தைப் போற்றி வணங்கி நலமெலாம் பெறுவோம்!..
திருவீழிமிழலை
ஏரிசையும் வட ஆலின் கீழ் இருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கி நின்று
நேரிய நான்மறைப் பொருளை உரைத்து ஒளிசேர் நெறியளித்தோன் நின்றகோயில்
பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு
வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலையாமே.. 1/132/1
-: திருஞானசம்பந்தர் :-
திருப்பழனம்
ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்றவர்க் கருளிச் செய்து
நூலின் கீழ் அவர்கட்கெல்லா நுண் பொருள் ஆகி நின்று
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே.. 4/36/6
-: திருநாவுக்கரசர் :-
திருக்கடவூர்
அன்றாலின் நிழற்கீழ் அறம்
நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான்
கன்றா ருங்கரவா கட
வூர்த்திரு வீரட்டத்துள்
என் தாதைபெருமான் எனக்
கார்துணை நீயலதே.. 7/28/3
-: சுந்தரர் :-
நன்றாக நால்வர்க்கு
நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங்கு
அறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங்கு
அறமுரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண் புரமூன்றுங்
கூட்டோடே சாழலோ...16
திருச்சாழல்
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
சிவபெருமான் கிருபை வேண்டும்... இந்தப் புவியில் வேறென்ன வேண்டும்... சிவபெருமான் கிருபை வேண்டும்!
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
தட்சணாமூர்த்தி பற்றிய விவரங்கள் அருமை.
பதிலளிநீக்குநீங்கள் பகிர்ந்த பாடல்களை பாடி சிவ தட்சணாமூர்த்தியை வணங்கி கொண்டேன்.
அன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ...
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வளமுடன்..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி ஜி
தட்சிணா மூர்த்தியை வணங்கிக் கொண்டோம்.
பதிலளிநீக்குஅன்பின் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி மாதேவி..