வியாழன், ஏப்ரல் 18, 2024

திருவீழிமிழலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மக நட்சத்திரம்
சித்திரை 5
வியாழக்கிழமை

திருத்தலம்
திருவீழிமிழலை


இறைவன்
ஸ்ரீ வீழிநாதர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை
தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்
தலவிருட்சம் வீழி எனும் செடி

இது கல்யாணத் திருத்தலம்..
காத்தியாயன முனிவருக்கு மகள் - என,  அம்பிகை தோண்றியபோது ஈசன் திருமணம் கொண்ட  தலம்..


சலந்தராசுரனை அழித்த சக்கரத்தை வேண்டி நாளும் ஆயிரம் தாமரை கொண்டு ஸ்ரீ மஹா விஷ்ணு -  ஈசனை வழிபடும் போது ஒருநாள் ஒரு மலர் குறைந்தது.. அவ்வேளையில் தனது 
கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்து சக்கரத்தைப் பெற்றார் என்பது தலவரலாறு..

யம பயம் தீர்க்கின்ற தலம்:

உத்தால முனிவரின் குமாரன் சுவேதகேதுவின்  உயிரைப் பறிப்பதற்காக  கால தேவனாகிய - யம தர்ம ராஜன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால சம்ஹாரம் செய்ததாக  ஸ்தலபுராணம்..

செம்பொற்காசு அருளப் பெற்ற தலம் :

ஞான சம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் இவ்வூருக்கு வந்தபோது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் வறுமையில் தவிக்கின்றனர்.. 

இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது..

மக்களின் துயர் தீர்வதற்கு சான்றோர் இருவரும் பதிகம் பாடி ஈசனை வணங்குகின்றனர்.. 

மறுநாள் இரவு - இருவரது கனவிலும் தோன்றிய இறைவன் - விடியற்காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு காசும் இருக்கும்.. - என, அறிவிக்கிறார் ..

அவற்றைப் பொருளாக்கி   சான்றோர் இருவரும் திருமடங்கள் அமைத்து மக்களின் பசி தீர்த்தனர் என்பது சமய வரலாறு...

அங்கு வறுமை தீரும் வரை இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.. 

இருப்பினும், அப்பருக்கு செம்பொற் காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்திருக்கின்றார்.. 

ஏனென்று கேட்க அப்பர் ஸ்வாமிகளின் உழவாரத் தொண்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.. 

அதைக் கேட்ட சம்பந்தர்,
 "வாசி தீரவே காசு நல்குவீர்" எனத் திருப்பதிகம் பாடி பிறகு அவருக்கும் செம்பொற்காசு அளித்து அருளப் பெற்றது..

"வாசி தீரவே காசு நல்குவீர்" எனும் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்தால் வீட்டில் வளம் நிறைந்து தங்கும் என்பது நம்பிக்கை..

இத்தகு மேன்மை நிறைந்த திருத்தலத்தில் பங்குனி 29 (11/4) முதல் சித்திரை 9 (22/4) வரை சித்திரைப் பெருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.. 

நான்காம் திருநாளில் ஸ்வேதகேதுவிற்காக கால சம்ஹாரம்..

ஆறாம் திருநாளாகிய இன்று (சித்திரை 5 வியாழன்) மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம்..

இப்பொன்னான நாளில்  அம்மையப்பனை மனதார சிந்தித்து நலமும் வளமும் பெறுவோமாக..


ஆறாடு சடைமுடியன் அனலாடு 
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் 
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி 
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழி 
நற்பண்பாடும் மிழலையாமே.. 1/132/7
-: திருஞானசம்பந்தர் :-

பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழி மிழலையே.. 5/12/10
-: திருநாவுக்கரசர் :-

பரந்த பாரிடம் ஊரிடைப் பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்றம் ஆயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கு 
இடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் 
அடியேற்கும் அருளுதிரே..
7/88/8
-: சுந்தரர் :-

ஏக நாயகனை இமையவர்க் கரசை
    என்னுயிர்க்கு அமுதினை எதிர் இல்
போக நாயகனைப் புயல்வணற்கு அருளிப் 
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேக நாயகனை மிகு திரு வீழிமிழலை 
விண்ணிழி செழுங் கோயில்
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் 
உண்டென உணர்கிலேன் யானே.. 9/5/1
-: திருவிசைப்பா சேந்தனார் :-

திருப்பாடல் தொகுப்பு
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. திருவீழிமிழலை பற்றிய பதிவொன்று முன்னரும் வந்திருக்கிறதோ....   படித்த நினைவு...    அது வேறுவகைப் பதிவோ?  அங்கு சில உறவுகள் முன்பு இருந்தன.   ஊர்ப்பெயர் மனதில் பரிச்சயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவீழிமிழலை பற்றிய பதிவொன்று முன்னரும் வந்திருக்கிறதோ..

      வந்திருக்கலாம்...
      எனக்கு நினைவில் இல்லை..

      ஆனாலும் திருவீழிமிழலை என்பதே நினைவில் இருக்கின்றது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருவீழிமிழலை பதிவு முன்னர் இரண்டு மூன்று முறை வந்து இருக்கிறது.
    திருவீழிமிழலை பற்றிய செய்திகள் எப்போது படித்தாலும் நன்மைதான்.
    தேவார பதிகம் பாடி வீழிநாதர் , சுந்தர குஜாம்பிகையை வனங்கி கொண்டேன். அனைவருக்கும் எல்லா நலங்களும் அருள வேண்டும்.
    முன்பு பார்த்த நினைவு மனதில் வந்து போகிறது.

    பதிலளிநீக்கு
  3. திருவீழிமிழலை திருத்தலம் சிறப்புகள் பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..