நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 15
ஞாயிற்றுக்கிழமை
குறளமுதம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.. 80
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில் என்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.. 15
**
" எல்லே.. இளங்கிளியே!..
இன்னுமா உறங்குகின்றாய்?.. "
" சில்லென்று சத்தமிடாதீர்களடி..
இதோ வருகின்றேன்!.. "
" உனது பேச்சு மட்டுமே உனக்கு பலம்.
உன்னைப் பற்றித் தான் முன்பே அறிவோமே..
வாயாடி!.. "
" நீங்கள் தான் வாயாடிகள்!
என்னையா வாயாடி என்கிறீர்கள்?.. "
" ஆமாம்!.. "
" என்ன வேண்டும் என்றாலும் சொல்லி
விட்டுப் போங்கள்!.. "
" சீக்கிரமே நீ வருவாயடி..
உனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?!.. "
" சரி.. சரி.. எல்லாரும் வந்து விட்டார்களா?.. "
" ம்ம்.. நீயே வந்து எண்ணிப் பார்த்துக் கொள்!.. "
" குவலயாபீடம் எனும் யானையைக் கொன்றவனை,
பகைவர் படை முடித்த பரந்தாமனை மாயனை மாதவனைப் பாடுவோம்.. வாராய் கிளியே!.."
**
திருப்பாசுரம்
குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்நெஞ்சே என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறன்உரையே சிந்தித் திரு.. 2122
-: பொய்கையாழ்வார் :-
**
சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-
**
போற்றித்
திருத்தாண்டகம்
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னும் அவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 4
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத்து அடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 4
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***