செவ்வாய், டிசம்பர் 26, 2023

தமிழமுதம் 10

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 10
செவ்வாய்க்கிழமை

 குறளமுதம்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.. 34
**
இன்று

உத்தரகோசமங்கை
மஹா அபிஷேகம்.


வேத நாயகன் வேதியர் நாயகன் 
மாதின் நாயகன் மாதவர் நாயகன் 
ஆதி நாயகன் ஆதிரை நாயகன் 
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 5/100/1
-: திருநாவுக்கரசர் :-
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்  மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்  போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.. 10
**

நோன்பு நோற்று சுவர்க்கம் புகுவேன் என்று சொன்னவளே!.. வாசல் கதவைத் திறக்காத நீ மறுமொழியாவது 
சொல்லக் கூடாதா?..

நறுந்  துளசியைத் திருமுடியில் சூடியுள்ள ஸ்ரீமந்நாராயணன் நாம் வேண்டியதை 
எல்லாம் தந்தருள்வான். 

அந்தப் புண்ணியனிடம்
முன்பு ஒரு நாள் தோற்று 
யமன் உலகில் விழுந்த கும்பகர்ணன் - தான்  அங்கு செல்வதற்கு முன்பாக அவனது தூக்கத்தை உனக்குத் 
தந்து விட்டுச் சென்றானோ?..

பெருந்தூக்கத்தை உடையவளே! பொற்கும்பம் போன்று அழகுடையவளே!.. தூக்கம் தெளிந்து வந்து கதவை திறப்பாயாக!..
**

திருப்பாசுரம்


மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை 
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திரு அரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.. 901
:- தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்

திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்



வகையெலாம் உடையாயும் நீயே என்றும்
வான்கயிலை மேவினாய் நீயே என்றும்
மிகையெலாம் மிக்காயும் நீயே என்றும்
வெண்காடு மேவினாய் நீயே என்றும்
பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே என்றும்
பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்
திகையெலாந் தொழச் செல்வாய் நீயே என்றும்
நின்றநெய்த் தானா என் நெஞ்சு ளாயே.. 6/41/1 
:- திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி

புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.. 10
-: மாணிக்கவாசகர் :-

இந்த அளவில்
திருப்பள்ளி எழுச்சி நிறைவடைகின்றது..
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 17 - 18


செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்..


அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.. 18
-: மாணிக்கவாசகர் :-
**
வீட்டிற்கு அருகிலுள்ள ஸ்ரீ சிறை காத்த ஐயனார் திருக்கோயிலில் நடைபெற்ற  மண்டல பூஜையின் காட்சிகள்..












ஓம் 
ஸ்வாமியே சரணம் ஐயப்பா..
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. மனத்துக்கண் மாசு இல்லாமல் இன்றைய நிலையில் யார்தான் இருக்கிறார்?!!  நாவுக்கரசரும் மாணிக்க வாசகரும் இன்றுடன் விடைபெறுகிறார்களா?  புகைபபடங்களில் காவல் தெய்வத்தை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாவுக்கரசரும் மாணிக்கவாசகரும் விடை பெறுவது என்பது ஏது?..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. பாடல்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
    ஐயணார் கோவில் மண்டல பூஜை படங்கள் மூலம் தரிசனம் செய்து கொண்க்டேன், சந்தன காப்பு அலங்காரம் அருமை.
    மலர்ந்த முகமாய் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..