புதன், நவம்பர் 08, 2023

ஆதுரசாலை

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 22
புதன்கிழமை

இணையத்தில்
சேகரிக்கப்பட்ட செய்திகளுடன்..
நன்றி - விக்கி.
 

ஸ்ரீ ராஜராஜ சோழரின் தமக்கையான குந்தவை நாச்சியார் மிகச்சிறந்த ஆளுமை உடையவர்.. சோழப் பேரரசின் அடையாளமாகத் திகழ்ந்த மாதரசி..

நற்குணவதியாகிய இவர் - தனது தந்தை சுந்தர சோழர் பெயரில் தஞ்சையில் ஆதுர சாலை எனப்பட்ட மருத்துவ மனை 
ஒன்றை அமைத்திருக்கின்றார்..

மேலும், பற்பல அறங்களையும் செய்திருக்கின்றார்.. 

இதற்கான சான்றுகள் தஞ்சை கோயிலிலும் தாராசுரம் கோயிலிலும் கல்வெட்டுகளாக இருக்கின்றன..


அதன் வழியே -
தஞ்சையின் பெருமைமிகு  அடையாளமாக - இன்றளவும் சிறப்புடன் திகழ்கின்ற - ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை குறித்த தகவல்களுடன் இன்றைய பதிவு..

தஞ்சை நகரின் மத்தியில்  அமைந்துள்ள  இந்த மருத்துவமனை 1876 ​​ல்  நிறுவப்பட்டது.. 

இந்த மருத்துவ மனைக்கான 
முந்தைய வரலாறு சிறப்புடையதாகும்..

இசை, கலை, கல்வி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் வல்லுநராக இருந்த 
மன்னர் சரபோஜி - II மருத்துவத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

இவரது நிர்வாகத்தில்
தஞ்சை அரண்மனைக்குள் தன்வந்திரி ஆரோக்கிய சாலை  - என்ற பெயருடன் மருத்துவமனை ஒன்று நாட்டு மக்களுக்காக  இருந்திருக்கின்றது..

சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யுனானி ஆகியவற்றை ஆதரித்த இவர் 1810 ல் தஞ்சையில் மேற்கத்திய மருத்துவ முறையை அறிமுகம் செய்தார்..

1827 ல் நவ வைத்திய கலாநிதி சாலையைத் தொடங்கினார். 

அரசருடைய மருத்துவ மையமாகிய தன்வந்திரி ஆரோக்கிய சாலை  - மருத்துவ ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டிருக்கிறது.

சரஸ்வதி மஹால் நூலகப் பதிவுகளின்படி, 1828 ல், அந்த மருத்துவ மனையில் - கண்புரை  அறுவை சிகிச்சை  செய்யப்பட்டிருக்கின்றது.. சிகிச்சைக்குப் பின் சிறந்த உணவுடன்
நேரடி கவனிப்பும் இருந்திருக்கின்றது.. சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போது பொருள் உதவியும் செய்யப் பட்டிருக்கின்றது..

மன்னரின் காலத்திற்குப் பிறகு, ஆரோக்ய சாலையின் சேவைகளை இளவரசி காமாட்சி அம்பா பாய் சாஹேப் அவர்கள் (ஐம்பது ஆண்டுகள்) நடத்தியிருக்கிறார்..

தனது குடிமக்களின் நலன் மற்றும் நாட்டின் நலனுக்காக - என்று  பெரிய கோயிலுக்கு எதிரில் 40 ஏக்கர் நிலத்தை வழங்கி 30,000 பணத்தையும் இளவரசி கொடை அளித்தார்..

அத்துடன்,
திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் ஆதீனகர்த்தர் மற்றும் தஞ்சையின் மிராசுதாரர்கள் - 
திரு பூண்டி வீரையா வாண்டையார், திரு கபிஸ்தலம் துரைசாமி மூப்பனார், திரு பொறையார் தவசிமுத்து நாடார் ஆகியோரும் பொருளுதவி செய்தனர்..

இதனாலேயே இந்த மருத்துவமனைக்கு - ராஜா மிராசுதார் மருத்துவமனை -  என்ற பெயர் அமைந்தது..

காமாட்சி அம்பா பாய் சாஹேப் அவர்களுக்குப் பிறகு அரண்மனையின் ஆரோக்கிய சாலைக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை..

1875 ல் இந்தியாவிற்கு வருகை தந்த வேல்ஸ் இளவரசர் - ஏழாம் எட்வர்ட் - தஞ்சாவூர், மதுரை, ராயபுரம் (சென்னை) நாக்பூர்,  விசாகப்பட்டினம் மற்றும் கோழிக்கோடு உட்பட ஆறு நகரங்களில் மருத்துவப் படிப்பை 'Licentiate Medical Practioner' (LMP) தொடங்குவதற்கு உத்தரவு இட்டதன்படி, தஞ்சையில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் (LMP) மருத்துவப்பள்ளி செயல்படத் தொடங்கியது..

1879 ல் சர் சல்லிவன் தாமஸ், மருத்துவ மனை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் அவசர,  அறுவை சிகிச்சை கூடங்களைக் கட்டினார்..

தாமஸ் ஹால்



இன்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு 'தாமஸ் ஹால்' என்றே  பெயர்..

1919 ல் மருத்துவ மனை வளாகத்தின் கிழக்குப் பகுதியில் - கண் சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை  நீதிபதி EH வாலஸ், ICS நாட்டினார்.. அதன்பின் 1926 ல் திறக்கப்பட்டது.. 




மருத்துவமனை வளாகத்தில் (RMH) உள்ள கண் மருத்துவ பிரிவு நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமை உடையது..

மேலே உள்ள கட்டிடங்கள் பழைமையானவை..

தற்போது மண்டல கண் சிகிச்சைப் பிரிவு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடத்தில் சிறப்புடன் இயங்கி வருகின்றது..

மூன்று புறங்களிலும் இருந்த பெரிய பெரிய இரும்புக் கதவுகள் கால சூழ்நிலையில் மாறிவிட்டன.. சிரத்தையுடன் கட்டப்பட்டிருந்த பழைமையான கட்டிடங்களும் நவீனம் என்ற பெயரில் மாற்றப்பட்டு விட்டன..

நாற்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட குந்தவை நாச்சியார் மகப்பேறு பிரிவு - மேலும் சில வசதிகளுடன் இயங்கிக் கொண்டு இருக்கின்றது..

தற்போது 
ராஜா மிராசுதார் மருத்துவ மனை தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக விளங்குகின்றது..

தஞ்சை மருத்துவமனை வளாகத்தில் - சில காட்சிகள்..

படங்கள்: தஞ்சையம்பதி..








புதிதாக ஸ்ரீ சாயி



மேல் திசையில் பிரம்மாண்டமான ஆலமரம்..

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட இந்த ஆலமரத்தடியில் ஸ்ரீ முனீஸ்வரர் விளங்குகின்றார்..







வேண்டுதலின் பேரில் நடப்பட்ட திரிசூலங்கள் நூற்றுக்கணக்கில்!.. 

சுகப் பிரசவத்துக்காக 
வளையல் மாலைகள்!..



வெள்ளையர் காலத்திற்கு முன்பிருந்தே இங்கு முனி ஐயா இருப்பதாக
நம்பிக்கை..

அறுபது ஆண்டுகளுக்குப் 
பின் அன்றைக்குத் தான் சென்று வணங்கினேன்..

கிழக்கிந்தியக் கம்பெனி வருவதற்கு முன்பே இங்கிருந்த  அரண்மனை தன்வந்திரி ஆரோக்கிய சாலையின் விரிவாக்கமே இன்றைய மருத்துவ மனை..

இத்தனைக்கும் அடிப்படை ஆதாரமான ராணி காமாட்சி அம்பா சாஹேப் அவர்களது பெயர் எங்கேயாவது விளங்குகின்றதா?.. 
என்றால் -

தெரியவில்லை!..

நாம் தான் செந்தமிழர்கள் ஆயிற்றே!..

வாழ்க நலம்
***

14 கருத்துகள்:

  1. இந்த மருத்துவமனையிலும் என் அப்பா பணிபுரிந்திருக்கிறார்.  நானும் சென்று வந்திருக்கிறேன்.  பேயர்க்காரணம் இன்று அறிந்தேன்.

    // ராணி காமாட்சி அம்மா சாஹேப் அவர்களது பெயர் எங்கேயாவது விளங்குகிறதா என்றால் இல்லை  //

    தேவர் மகன் சிவாஜி கமலிடம் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நல்வரவு

      என் தந்தை ஸ்ரீ துரைராஜன் அவர்கள் இடைநிலை ஊழியராக வாழ்க்கையைத் துவங்கியது இந்த மருத்துவமனையில் தான்.. நான் பிறந்தது கூட இங்கு தான்.. எனது இரு பிள்ளைகளும் இங்குதான் பிறந்தனர்.. 1967 வரை இங்கே கண் மருத்துவப் பிரிவில் தான் என் தந்தை வேலை செய்தார்.. அதன் பிறகு கிராமப் புற சுகாதார திட்டத்துக்கு மாற்றப் பட்டார்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. அரிய ஆனால் மிகவும் அருமையான தகவல்கள். விரிவாகத் தந்திருக்கிறீர்கள். இத்தனை தகவல்களையும் திரட்டித் தந்தமைக்கு மிக்க நன்றி. எல்.எம்.பி படிப்பு அந்தக் காலத்தில் மிகப் பிரபலம் என்பார்கள். என் சித்தப்பா ஒருவர் கூட எல்.எம்.பி தான். நாளாவட்டத்தில் இவை எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. நாளாவட்டத்தில் இவை எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது..

      உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி அக்கா..

      நீக்கு
  3. சிறப்பான தகவல்கள். தொகுத்து அளித்தமை நன்று. பல அரிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    அலுவல் சம்பந்தமாக இந்த மருத்துவமனையில் 90-களின் தொடக்கத்தில் ஒரு வாரம் நடந்த பயிற்சி ஒன்றில் மேற்பார்வையாளராக வந்திருக்கிறேன். தினம் தினம் காலையில் திருச்சியிலிருந்து வந்து மாலை வரை மருத்துவமனை வளாகத்தில் இருந்திருக்கிறேன். இன்றைக்கும் அந்த நாட்களின் மருத்துவமனை நினைவுகள் வந்தன.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே வந்திருக்கிறேன். அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவரும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகள்..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. வரலாற்றுடன் விரிவாக தந்துள்ளீர்கள் .

    படங்களும் கட்டுரைக்கு சிறப்பு சேர்க்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி ..

      நீக்கு
  5. ஆதுரசாலை பற்றிய விவரம் வரலாற்று தகவல்கள் மூலம் அறிந்து கொண்டேன். படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு
  6. மிக அருமையான வரலாற்றுத் தகவல்கள் துரை அண்ணா.

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      .நன்றி சகோ..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..